பதிவுகள்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ் மக்கள் எதிர்கொண்டு பத்து ஆண்டுகளாகிறது. ஏழு தசாப்தங்களைத் தாண்டிய தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், முதல் மூன்று தசாப்த காலத்தை அஹிம்சை அரசியல் வழியிலும், அடுத்த மூன்று தசாப்த காலத்தை வெற்றிகளும் தோல்விகளும் நிறைந்த ஆயுதப் போராட்டத்தின் வழியேயும் தமிழ் மக்கள் கடந்திருக்கிறார்கள். அதில் சொல்லிக் கொள்ளும் படியான அடைவுகளுக்கான தருணங்கள் தவற விடப்பட்டிருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அதன் நியாயப்பாடுகளை உலகம் உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னரான, கடந்த ஒரு தசாப்தகாலம் என்பது, தமிழர்களையும், தமிழ்த் தேசிய அரசியலையும் பொறுத்தளவில் எந்தவிதமான அடைவுகளையும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழ்ந்தாமல், கன நேரத்தில் கடந்து போயிருக்கிறது.

இன்றைய நவீன தொழிநுட்ப உலகில், ஒரு தசாப்த காலம் என்பது, பெரிய கால வெளி. தலைமுறை மாற்றத்தின் கால எல்லையையே, நவீன உலகு, சில ஆண்டுகளாக சுருக்கிக் கொண்டுவிட்டது. அப்படியான தருணத்தில், ஒரு தசாப்த காலத்தினை எந்தவித அடைவுகளுமின்றி ஒரு தரப்பு கடந்திருக்கின்றது என்றால், அது மிகவும் ஏமாற்றமானது.

பேரவலம் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தினை, சம்பிரதாயபூர்வமாக நினைவேந்தும் ஒரு களமாக தமிழர் மனநிலை வரையறுத்துவிட்டதோ என்கிற சந்தேகம் ஏற்படுகின்றது. ஏனெனில், முள்ளிவாய்க்காலோ, அது சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளோ அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட வேண்டிய களங்கள் மாத்திரமல்ல. அதனையும், தாண்டிய கடப்பாட்டினை ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் வெளிப்படுத்த வேண்டிய இடங்கள். பலிவாங்கப்பட்ட உறவுகளுக்காக ஏற்றப்படும் தீபங்களின் எழுச்சியையும், அங்கு சொரியப்படும் கண்ணீரில் வெளிப்படும் வெம்மையையும் நீதிக்கான கோரிக்கைகளாகவும், விடுதலைப் போராட்டத்திற்கான ஓர்மமாகவும் வாழ்வின் ஒரு பகுதியாக தமிழ் மக்கள் கொண்டு சுமக்க வேண்டும். அதுதான், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு முள்ளிவாய்க்காலை சந்திக்காது, அரசியல்- சமூக- பொருளாதார வெற்றிகளைப் பெறுவதற்கான வழிகளைத் தேடுவதற்கான விடயங்களை எம்முன்னால் கொண்டு வரும். அவற்றைத் தாண்டி, எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை இராஜதந்திர அரசியல் வழி நின்று பெறுவதற்கான உத்வேகத்தை வழங்கும்.

ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகளை தமிழ்த் தரப்புக்கள் கடந்த தசாப்த காலத்தில் நிகழ்த்தியிருக்கின்றனவா என்றால், பதில் பெரும்பாலும் ‘இல்லை’ என்பதாகவே இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரடியாக எதிர்கொண்ட மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் இன்னமும், முள்ளிவாய்க்காலோடு தரித்து நிற்கிறார்கள். அவர்களின் வாழ்வில், சொல்லிக் கொள்ளும்படியான மாற்றங்கள் நிகழவேயில்லை. சமூக- பொருளாதார ரீதியிலான பின்னடைவு மாத்திரமல்லாமல், அரசியல் வெற்றிடமும் நீடித்திருக்கவே செய்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது, அதன் உண்மையான கடப்பாடுகளையேல்லாம் மறந்து தேர்தல் அரசியலாகச் சுருங்கிவிட்டதான குற்றச்சாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக உண்டு. தென் இலங்கையின் பௌத்த மேலாதிக்க அரசியலை எதிர்கொண்டு எமது உரிமைகளை நிலைநாட்டுவது சார்ந்த உரையாடல்கள், உளப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், அதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. மாறாக, பருவகால நிகழ்வுகளுக்குள் மாத்திரம் சுருங்கிக் கொண்டுவிட்ட தன்மையை தமிழ்த் தேசிய அரசியல் களமும், அதனை முன்னிறுத்தும் ஊடகப் பரப்பும் வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரும், மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளாக மாத்திரம் எதிர்கொள்ளப்படுகின்றன.

இன்னொரு பக்கம், முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னராக முக்கிய பங்காற்றியிருக்க வேண்டிய புலமைத் தரப்பின் செயற்பாடுகளை நோக்கினால், அது இன்னும் மோசமான கட்டங்களையே காட்டுகின்றது. தமிழ்த் தேசியப் போராட்டங்களில் புலமைத் தரப்பினரின் பங்களிப்பு என்பது சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை. அல்லது அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. புலமைத்தரப்பினர் பிரதானப்படுத்தப்பட்ட ஒருசில சந்தர்ப்பங்களிலும், புலமைத்தரப்பினர் ஏதோவொரு தரப்பின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கான முகவர்களாகவே கையாளப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னரும் அந்த நிலைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை. தேர்தல் கூட்டுக்களை கட்டுவதில் இடைத்தரகர்களாகவே புலமைத்தரப்பினர் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். மாறாக, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தார்மீகத்தையும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கோர முகங்களையும் இராஜதந்திர ரீதியில் சர்வதேசத்திடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர்கள் பெரியளவில் பங்களிக்கவில்லை. ஒருசில அறிக்கைகள், உரைகளோடு தமது கடமைகள் முடிந்துவிட்டதாக புலமைத்தரப்புக்கள் நினைக்கும் போது, அதனைத் தாண்டிய அதிக வேலைப்பழுவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்கள் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அத்தோடு, ஆரோக்கியமான உரையாடலுக்கான வெளியை யாழ். மையவதாக சூழலில் தங்கியிருக்கிற புலமைத்தரப்பு அனுமதித்தது இல்லை. பெரும்பாலும் குழும மனநிலையையே அது பிரதிபலித்து வந்திருக்கின்றது. உள்வீட்டு அடிதடிகளை பொது வெளியில், சாயங்கள் பூசிக்கொண்டு, அரசியலாக அல்லது அக்கறையாக பேசிவிட்டு போவதையை புலமைத்தரப்புக்கள் தங்களது அதிகபட்ச அடைவாக வெளிப்படுத்தியிருக்கின்றன. அப்படியான நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையோ, அது கோரி நிற்கும் கடப்பாட்டினையோ புலமைத்தரப்பை முன்னிறுத்திக் கொண்டு நகர முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

மாறாக, முள்ளிவாய்க்காலுக்கான கடப்பாட்டினை தமிழ் மக்களின் சாதாரண தளத்தில் ஒரு கூட்டுணர்வாக கட்டமைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். அதுதான், உரையாடலுக்கான வெளியை திறந்து, கருத்துருவாக்கங்களை செய்யும். அது, ஆரம்பத்தில் குழம்பிய குட்டையை ஒத்த தன்மையை வெளிப்படுத்தினாலும், போகப்போக அதிலிருந்து நல்ல மீன்களைப் பிடிக்கும் உத்தியை மக்களுக்கு வழங்கும். அப்போதுதான், பிரித்தாளும் தந்திரங்கள், பிரதேசவாதங்கள் உள்ளிட்ட தேர்தல் அரசியலின் கறுப்புப் பக்கங்களுக்கு அப்பால் நின்று சிந்திக்கும் கட்டத்தினை மக்கள் அடைவார்கள். அந்தப் புரிதல் அரசியலுரிமைப் போராட்டங்களுக்கு அவசியமானவை. அது, குழப்பக்காரர்களையும், சுயநலவாதிகளையும் அடையாளம் காண உதவும். எமக்குள்ள கடப்பாடுகளை அதன் உண்மையான அர்த்தங்களோடு உணர வைக்கும். போராட்டத்தின் அடிப்படைகளையும், அதன் தர்க்க நியாயங்களையும் உறுதிப்படுத்தி முன்கொண்டுசெல்லவும் உதவும்.

முள்ளிவாய்க்காலில் இருந்து மீளெழுதல் என்பது தாயகத்தைப் பிரதானப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். அதில், எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை. ஆனால், தாயகத்துக்குள் மாத்திரம் அதனைச் சுருக்கிக் கொள்ளவும் கூடாது. மீளெழுதலின் உந்துவிசையைாக புலம்பெயர் சமூகத்தின் இராஜதந்திர, பொருளாதார உதவிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும், அவர்களின் அடுத்த தலைமுறைக்குமான இடைவெளி என்பது மிகப்பெரியது. அது, அரசியல் இராஜதந்திர ரீதியாக உணரப்பட வேண்டும். புலம்பெயர் தேசங்களில் இன்றைக்கும் தாயகத்திலுள்ளவர்களுக்காக வீதிக்கு இறங்கும் இளைய தலைமுறையைக் காண்கிறோம். அவர்கள்தான், இராஜதந்திர செயற்பாடுகளின் அடுத்த கட்டங்களில் பங்களிக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை அவசியமானது. ஏனெனில், அது, தாயகத்தின் தேவைகளை, அதன் உண்மையான தன்மைகளை உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களிடம் எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான், தாயகத்திற்கும் புலம்பெயர் தேசங்களுக்குமான புரிதல்- செயற்பாட்டு இடைவெளியைக் குறைக்கும்.

இந்தப் பத்தியாளரிடம் வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தனிப்பட்ட உரையாடலின் போது கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். “…இந்தியாவில் கேரளா கல்வியில் முதன்மை மாநிலம். மலையாளிகளுக்கு தங்களின் புலமை குறித்து பெரும் கர்வம் உண்டு. ஏனைய பகுதி மக்களை மதிக்கவே மாட்டார்கள். ஆனால், அவர்களிடம் உள்ள பெரும் குறைபாடு, ஒன்றுமையின்மை. அதாவது, ஓரிடத்தில் மூன்று மலையாளிகள் இருந்தால், குறைந்தது மூன்று நிலைப்பாடு இருக்கும். மூன்று தரப்பாக பிரிந்திருப்பார்கள். வேறெங்கும் இவ்வாறான நிலைமையக் காண முடியாது என்று நம்பினேன். ஆனால், துரதிஷ்டவசமாக நான் அப்படியான தரப்பொன்றை சில ஆண்டுகளாக சந்திக்கிறேன். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். மலையாளிகளைப்போல அவர்களிடமும் தாங்கள் முதன்மையானவர்கள் என்கிற கர்வம் உண்டு. ஆனால், மலையாளிகளிடம் இருக்கின்ற உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறன் இவர்களிடம் இல்லை. அதனால், தமிழ் மக்கள் தங்களுக்குள் மாத்திரமல்ல, உலகத்திடம் இருந்து பிரிந்தும், தனித்தும் இருக்கிறார்கள்…” என்றார். அந்த இராஜதந்திரியின் கருத்து பத்தியாளருக்கு உவப்பானதில்லை என்கிற போதிலும், அதில் வெளிப்படும் உண்மை என்பது உறைக்கவே செய்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பத்தாவது ஆண்டாக தீபங்களை ஏற்றி அஞ்சலித்துவிட்டு கடந்துவிட நினைக்கும் ஒவ்வொரு தமிழ் மனதும் தன்னை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ் இன அழிப்பைப் புரிந்த தரப்புக்களோடு ஏதோவொரு வகையில் இணங்கியவர்களாக நாமும் மாறுவோம். அது, வரலாறு பூராவும் குற்றவுணர்ச்சிகளைச் சுமக்க வைக்கும். முள்ளிவாய்க்காலில் இருந்து மீளெழுவது என்பது, வேற்றுமைகளைக் கடந்து நின்று தமிழ்த் தரப்புக்கள் ஒருங்கிணையும் புள்ளியிலும், அர்ப்பணிக்கும் புள்ளியிலுமே நிகழ முடியும். அதற்கான கட்டங்களை உண்மையாக உருவாக்க வேண்டும். அதுதான், முள்ளிவாய்க்காலில் நாம் செய்யும் சத்தியமாகவும் இருக்க வேண்டும்.

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'