பதிவுகள்

தமிழ் மக்கள் ‘முள்ளிவாய்க்கால்’ என்கிற இன அழிப்புக் களத்தைச் சந்தித்து பத்து ஆண்டுகளாகிறது. தேசிய இனமொன்றின் பல தசாப்தகால விடுதலைக்கான கோரிக்கைகளும், அதற்கான அர்ப்பணிப்பும் சர்வதேசத்தினாலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தினாலும் கருவறுக்கப்பட்ட களம், முள்ளிவாய்க்கால். தமிழர் செங்குருதியால் நிறைந்திருப்பது முள்ளிவாய்க்கால். நீதிக்கான கோரிக்கை மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் களம் முள்ளிவாய்க்கால். இழந்த உறவுகளுக்காக ஒவ்வொரு முறையும் முள்ளிவாய்க்காலில் தீபங்களை ஏற்றும் போது, அதில் இழப்பின் பெரும் வலி மாத்திரமல்ல, விடுதலைக்கான ஓர்மமும் சேர்ந்தே எழுந்திருக்கின்றது. இப்படி முள்ளிவாய்க்காலுக்கு தமிழர்களைப் பொறுத்தளவில் பல பரிணாமங்கள் உண்டு. 

ஆனால், முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற பெரும் கடப்பாடு என்கிற விடயத்தை தமிழ் மக்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறார்களா, அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்களா?, என்கிற கேள்வி பெரும்பாலும் பதில்கள் இன்றியே தொடர்கின்றது. இந்தக் கட்டத்திலிருந்துதான், பத்தாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. உண்மையில் அஞ்சலிப்பதற்கான களம் மட்டுந்தானா முள்ளிவாய்க்கால்? அல்லது இன அழிப்பின் அடையாளப் பரப்பு மாத்திரந்தானா முள்ளிவாய்க்கால்? இல்லை, நிச்சயமாக இல்லை. முள்ளிவாய்க்காலை, தோல்வியின் மீளெழுச்சிக் அடையாளமாகவும் தமிழ் மக்கள் அடையாளப்படுத்த வேண்டும். அதுதான், முள்ளிவாய்க்காலில் ஏற்றப்படும் தீபங்களுக்கும், முள்ளிவாய்க்காலுக்காக எங்கெல்லாம் தீபங்கள் ஏற்றப்படுகின்றனவோ அவற்றுக்கும் செய்யப்படுகின்ற பெரும் கடப்பாடு.

ஈழத் தமிழர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாயகத்திலும், ஏனையவர்கள் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கிறார்கள். இன அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தரப்பாக, தமிழ் மக்களின் சமூக கட்டமைப்புக்களில் குறிப்பிட்டளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, உள்ளக இடப்பெயர்வும், (நாடு கடந்த) புலம்பெயர்வும் வாழ்வியலின் கட்டங்களும் அனைத்துப் படிநிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், சமூகத்தை மீள ஒழுங்குபடுத்துவதற்கான கட்டங்களோ, யுத்த கால விளைவுகளை எதிர்கொண்டிருக்கின்றவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கோ பெரியளவிலான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்றால், அது பெரும்பாலும் இல்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து தோல்வி மனநிலையோடு வெளியேறிய மக்களை வெற்றிமனநிலையின் பக்கம் திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதிக தருணங்களில், மாஜாயாலங்கள் பற்றிய பேச்சுக்களை அரசியலாக பேசுவதோடு விடயங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. அரசியல் உரையாடல் என்பது, சமூகத்தின் அனைத்துக் கட்டுமானங்களின் தன்மைகளையும் அதன்போக்கில் உணர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும். மாறாக, உணர்ச்சிபூர்வ அரசியல்களில் வழி அனைத்துக் கட்டங்களையும் அடைய முடியாது. உணர்ச்சி அரசியல் என்பது, தேர்தல் அரசியலுக்கு வேண்டுமானால், வலுச்சேர்க்கலாம். ஆனால், அது சமூக மீளெச்சிக்கோ, தோல்வி மனநிலையிலிருந்து மீள்வதற்கோ பெரியளவில் உதவாது. உணர்ச்சி அரசியல் மக்களை தோல்வி மனநிலையிலிருந்து மீட்டிருக்குமானால், கடந்த பத்து ஆண்டுகளில் அது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டிருக்கும். ஆனால், அது இங்கு நிகழவில்லை. இனியும் நிகழ வாய்ப்பில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது நியாயமான கோரிக்கைகளோடு நீடிக்கும் ஒன்று. ஆனால், அதன் வெளிப்பூச்சாக உணர்ச்சி அரசியல் அடையாளம்பெறும் போது, அதனால், ஒரு கட்டத்தைத் தாண்டி சிந்திக்கவே முடிவதில்லை. நாளாந்த சம்பவங்களுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதோடு சரி என்கிற அளவில் உணர்ச்சி அரசியல் கடந்துவிடுகின்றது. அதற்கு, தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு அரசியல் கட்சியோ, தலைமையோ விதிவிலக்கல்ல. முள்ளிவாய்க்கால் போன்ற பேரழிவுக் களங்களில் இருந்து மீள்வதென்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அது, அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்போடும், நீண்ட திட்டமிடல்களின் வழியும், செயற்பாட்டுக்கான அர்ப்பணிப்பின் வழியும் கடக்கப்பட வேண்டியது. ஆனால், அந்தக் கட்டத்தை தமிழ்த் தரப்பு கடந்த பத்து ஆண்டுகளில் அடையவே இல்லை. சிவில் சமூக அமைப்புக்களாக தம்மை அடையாளப்படுத்தும் தரப்புக்களும், புலமையாளர்களும்கூட மழைக்கால காளான்களாகவே முளைக்கிறார்கள். அந்தத் தரப்புக்களின் ஆயுட்காலம் என்பது சில நாட்களோடு முடிந்து போகின்றன. அல்லது, அந்தத் தரப்புக்களினால் மக்களின் உண்மையான பிரச்சினைகயோடு தொடர்ந்தும் பயணிக்க முடியவில்லை. அவ்வாறான நிலைமை மக்களிடையே எந்தவிதமான நம்பிக்கையையும் அந்தத் தரப்புக்கள் மீது ஏற்படுத்துவதில்லை.

கடந்த பத்து வருடங்களில் தமிழ்த் தரப்புக்களின் இயங்கு நிலை எப்படி இருக்கின்றது என்பதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலம் ஒவ்வொரு முறையும் சான்று பகிரும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் கையகப்படுத்துவது, அதிலிருந்து அரசியல் அடையாளத்தினைப் எப்படி பெறுவது என்கிற போட்டிக்கு அப்பால், எந்தவிதமான பொறுப்பான நடவடிக்கைகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் இதுவரை எடுக்கப்படவில்லை. நினைவேந்தலுக்கான பொதுக்குழுவொன்றை அனைத்துத் தரப்புக்களின் பங்களிப்போடும் ஏற்படுத்த முடியவில்லை என்கிற தமிழர் தரப்பின் தோல்வியை, பௌத்த சிங்களப் பேரினவாதம் பெருமளவு இரசித்துக் கொண்டிருக்கின்றது.

சில வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கையகப்படுத்திய வைத்திருந்த வடக்கு மாகாண சபை, கடந்த ஆண்டு அதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடமும், அதன்பின்னால் இயங்கிய புலம்பெயர் அமைப்புக்களிடமும் இழந்தது. ஆனால், பத்தாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் முன்னின்று வழிநடத்தப்போகிறார்கள் என்கிற சிக்கல் மீண்டும் எழுந்திருக்கின்றது. கடந்த ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் களத்தில் அரங்கேற்றிய வேடிக்கைக் காட்சிகள் மக்களை வெகுவாகப் பாதித்தன. அப்படியான கட்டத்தில், மாணவர் ஒன்றியம் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையைப் பெறுவது என்பது அவ்வளவு சாத்தியமான ஒன்றல்ல.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தளவில் முள்ளிவாய்க்காலை தனித்துத் தனித்து கையகப்படுத்துவது சார்ந்துதான் ஆர்வம் காட்டுகிறன. மாறாக, நினைவேந்தல் களத்திலாவது ஒருங்கிணைந்து நிற்போம் என்கிற எந்தவொரு அறத்தினையும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. இன்னொரு பக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் உள்ளிட்ட யுத்தப் பாதிப்புக்களை நேரடியாக எதிர்கொண்டு நீதிக்காக போராடும் அமைப்புக்கள், இயக்கங்களிடமும் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இல்லை. சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து நின்று, தங்களின் போராட்டத்தின் வலுவையே குறைத்துக் கொண்டிருக்கின்ற குறு அரசியல் காட்சிகளையே பதிவு செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், அவர்களிடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இறுதியாக இன்றைக்கு, முள்ளிவாய்க்கால் பகுதிக்குரிய பிரதேச சபை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கையகப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்கிற சுயநல அரசியலுக்கு அப்பாலான களத்தில் கூட ஒருங்கிணைய முடியாத ஒரு தரப்பாக தமிழர்கள் இருக்கின்றார்கள். அப்படியான கட்டத்தில், அவர்களிடத்தில் இருந்து, பொறுப்பான அர்ப்பணிப்புள்ள செயற்திட்டங்களை எப்படி எதிர்பார்க்க முடியும் என்கிற சாதாரண தமிழ் மகனின் கேள்வி புறந்தள்ள முடியாதது.

இந்தப் பத்தியாளரிடம் வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தனிப்பட்ட உரையாடலின் போது கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். “…இந்தியாவில் கேரளா கல்வியில் முதன்மை மாநிலம். மலையாளிகளுக்கு தங்களின் புலமை குறித்து பெரும் கர்வம் உண்டு. ஏனைய பகுதி மக்களை மதிக்கவே மாட்டார்கள். ஆனால், அவர்களிடம் உள்ள பெரும் குறைபாடு, ஒன்றுமையின்மை. அதாவது, ஓரிடத்தில் மூன்று மலையாளிகள் இருந்தால், குறைந்தது மூன்று நிலைப்பாடு இருக்கும். மூன்று தரப்பாக பிரிந்திருப்பார்கள். வேறெங்கும் இவ்வாறான நிலைமையக் காண முடியாது என்று நம்பினேன். ஆனால், துரதிஷ்டவசமாக நான் அப்படியான தரப்பொன்றை சில ஆண்டுகளாக சந்திக்கிறேன். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். மலையாளிகளைப்போல அவர்களிடமும் தாங்கள் முதன்மையானவர்கள் என்கிற கர்வம் உண்டு. ஆனால், மலையாளிகளிடம் இருக்கின்ற உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறன் இவர்களிடம் இல்லை. அதனால், ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்குள் மாத்திரமல்ல, உலகத்திடம் இருந்து பிரிந்தும், தனித்தும் இருக்கிறார்கள்…” என்றார். குறித்த இராஜதந்திரியின் கருத்து பத்தியாளருக்கு உவப்பானதில்லை என்கிற போதிலும், அதில் வெளிப்படும் உண்மை என்பது உறைக்கவே செய்தது.

புலம்பெயர் தேசங்களிலுள்ள மூத்த தலைமுறை மாத்திரமல்ல, இளைய தலைமுறையும் தங்களின் தனித்தும்- பிரிந்தும் இருக்கும் குணத்தை எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இன்றி கொண்டு சுமக்கின்றது. தனித்திருப்பதும், பிரிந்திருப்பதும் தனித்துவமானது என்கிற சிந்தாந்தம் இன்றைய உலக ஒழுங்கிற்கு உதவாது. உலகத்தைப் புரிந்து கொண்டு அதன்வழி எங்களது அரசியலையும், இயக்கத்தையும் (செயற்பாடுகளையும்) முன்னெடுக்க வேண்டும். தாயகத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தொடர்பில் போட்டி நிலவுகின்றது. இம்முறையும் அதில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. அஞ்சலி நினைவேந்தல்களுக்குள்ளேயே யார் அதிக கூட்டத்தைக் கூட்டுவது, நிதியைச் சேர்ப்பது என்பதில் போட்டி பொறாமை நீடிக்கும் சமூகத்திடம் இருந்து, முன்னோக்கிய கட்டங்களை எதிர்பார்ப்பது என்பது ஏமாற்றமான ஒன்றுதான். ஆனால், அந்த நிலையை அப்படியே விட்டுவிட முடியாது என்பதுதான், திரும்பத் திரும்ப அழுது புலம்ப வைக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பத்தாவது ஆண்டாக தீபங்களை ஏற்றி அஞ்சலித்துவிட்டு கடந்துவிட நினைக்கும் ஒவ்வொரு தமிழ் மனதும் தன்னை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ் இன அழிப்பைப் புரிந்த தரப்புக்களோடு ஏதோவொரு வகையில் இணங்கியவர்களாக மாறுவோம். அது, வரலாறு பூராவும் குற்றவுணர்ச்சிகளைச் சுமக்க வைக்கும். அது இன்னொரு வகையில், சொந்த மக்களுக்கும் இனத்துக்கும் புரிந்த துரோகமாக வரலாறு பூராவும் பதிவு செய்யப்படும். அப்படியான நிலையில், இனியாவது, முள்ளிவாய்க்கால் தோல்வி மனநிலையிலிருந்து மீள்வது குறித்து ஒற்றுமையாகவும் தீர்க்கமாகவும் செயற்பாட்டு அர்ப்பணிப்போடு எழ வேண்டும். அதுதான், இழந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

-ஈகுருவியின் ‘முள்ளிவாய்க்கால்: 10வது ஆண்டு’ நினைவேந்தல் மலரில் வெளியான கட்டுரை.