பதிவுகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம் தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை நிபந்தனைகள் ஏதுமின்றி கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சிக்’ காலத்தில் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. 

அப்படியான நிலையில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் வெளிக்காட்டிய அக்கறையின் ஒரு பகுதியையேனும், ‘கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும்’ என்கிற அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் மூன்று தசாப்தகாலக் கோரிக்கை தொடர்பில் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது, இல்லாதபோது, மக்கள் கோபம் கொள்வது தவிர்க்க முடியாதது.

கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை இரண்டு தளங்கள் சார்ந்தது. முதலாவது, யாழ். மையவாத சிந்தனைகளில் நின்று தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது. இரண்டாவது, மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது அரசியலை முன்னெடுப்பது.

தமிழ்த் தேசிய அரசியல் அனைத்துத் தரப்பு தமிழ் மக்களின் எண்ணங்களையும் உண்மையாக உள்வாங்கி திரட்சிபெற வேண்டும். ஆனால், அவ்வாறான திரட்சியை தமிழ்த் தேசிய அரசியல் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது, யாழ். மையவாத சிந்தனைகளின் ஒன்றைப்புள்ளியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்றாலும், அவர் யாழ். மையவாத அரசியலின் குறியீடாகவே இருக்கிறார். அவருக்கும் கிழக்கு மாகாண தமிழ் மக்களும், அவர்களின் அபிலாசைகளும் இரண்டாம் பட்சமானதுதான்.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் அளவு அதிகமானது. கிழக்கிலிருந்து வந்த தலைவர்கள் அல்லது இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் வழிதவறிச் சென்றிருக்கலாம். ஆனால், மக்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் வழி, அதன் ஆணிவேரை பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அந்த மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சார்ந்து தமிழ்த் தேசிய அரசியலும், தலைவர்களும் உண்மையாக செயற்பட்டிருக்க வேண்டும். அதுவும், ஏனைய இனத்தவரின் ஆக்கிரமிப்பினால், தமது பாரம்பரிய நிலங்களையே இழந்துவருகின்ற கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் சார்ந்து அக்கறையோடு இயங்கியிருக்க வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலத்தில் அல்லது அதன் பின்னர் உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி, சாய்ந்தமருது உள்ளிட்ட பல உப பிரதேச செயலகங்கள், முழு அதிகாரமுடைய பிரதேச செயலகங்களாக பல காலத்துக்கு முன்னரேயே தரமுயர்த்தப்பட்டுவிட்டன. அப்படியான நிலையில், இனத்துவ அடிப்படையில் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள், தமக்கென இருக்கின்ற பிரதேச செயலகத்தை முழு அதிகாரமுடைய கட்டமைப்பாகக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை.

அரசியல் தீர்வு தொடர்பிலான அனைத்து உரையாடல்களிலும் முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற விடயத்தினை தமிழ்த் தரப்புக்கள் முழு மனதோடு முன்வைத்து வந்திருக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை (நிலத்தொடர்பற்ற நிலையில் இருந்தாலும், அவற்றை) இணைத்து உருவாக்கவேண்டிய தனி அலகு பற்றி பேசப்பட்டு வந்திருக்கின்றன. மறைந்த அஷ்ரப் முதல் ரவூப் ஹக்கீம் வரையில் அந்த உரையாடல்களின் போது, அவர்கள் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், நிலத்தொடர்பற்ற பகுதிகள் என்கிற விடயத்தை சுட்டிக்காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனை, அதிக தருணங்களில் கண்டும் காணாமல் இருந்ததுதான், கூட்டமைப்பு மீதான கோபம் வெளிப்படுவதற்கும், அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, காவிக்கூட்டமும் அரசியல் முகவர்களும் உள்நுழைவதற்கு காரணமாகும்.

கல்முனைப் போராட்டக் களத்துக்கு அரசாங்கத்தின் உறுதிப்பத்திரத்தை(!) எடுத்துக் கொண்டு சென்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோசங்களுக்கு மக்களைப் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியதில்லை. அதனைப் புரிந்து கொள்வதற்கு பெரிய புத்திசாலித்தனமும் அவசியமில்லை. அது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்த, அரசியல் முகவர்களினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், முகவர்களின் செயல்களினால் எரிச்சலடைந்து, அதனை மக்கள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு கூட்டமைப்பு செல்லக் கூடாது. அதுபோல, தன்மீதான மக்களின் உண்மையான கோபத்தினை கூட்டமைப்பு சரியாக உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைத்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற விடயத்தினை கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் மீறி, 2012ஆம் ஆண்டு சம்பந்தன் முன்னெடுத்தார். கிழக்கிலும், கொழும்பிலும் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் பல கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றன. முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தையும் விட்டுத்தருவதாக கூட்டமைப்பு வெளிப்படையாகவும் அறிவித்தது. ஆனால், ராஜபக்ஷக்களை எதிர்ப்பதற்குத் திரணியில்லாத நிலையில், ஹக்கீம் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் சென்று, ராஜபக்ஷக்களோடு இணைந்து ஆட்சியமைத்தார்.

அப்படியான நிலையில், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னராக கிழக்கு மாகாண சபையில் ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் ஏமாற்றிவிட்டு ராஜபக்ஷக்களோடு சவாரி செய்த, முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு பெருந்தன்மையோடு செயற்பட்டது. அப்போதும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியமைத்தது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி, நல்லெண்ணம் என்கிற ஒன்றைப்புள்ளியில் நின்று சம்பந்தன் செயற்பட்டார். ஆனால், நல்லெண்ணம் என்பது, ஒற்றைத்தரப்பினால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவது அல்ல என்கிற விடயத்தை அவர், புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றாது தவிர்த்தார். 2015ஆம் ஆண்டு காலத்திலாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை ஒரு நிபந்தனையாக, ஏன் முன்வைக்கவில்லை என்பதுதான், கூட்டமைப்பு மீது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் முன்வைக்கும் கேள்வி.

கூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பதற்கு முடியாது. ஆகவே, இவ்வாறான விடயங்களில் அதிக காலம் தேவைப்படுவது இயல்பானதுதான் என்கிற வாதம் கூட்டமைப்பினால் மக்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது. ஆனால், அரசாங்கத்தோடு, குறிப்பாக ரணிலோடு பேச்சுக்குச் செல்லும் கூட்டமைப்பு, தங்களது கோரிக்கைகள் சார்ந்து உடும்புப்பிடியாக இருப்பதில்லை. எந்தவொரு தருணத்திலும் ராஜபக்ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி செல்லக்கூடாது என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக் கொண்டு, ரணிலின் இழுப்புக்களில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்பை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் நின்று செய்கிறது. சம்பந்தன், தன்னுடைய ஜென்டில்மென் அரசியலை முன்னெடுப்பது சார்ந்து இங்கு யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த அரசியல், மக்களின் அரசியலைப் புறந்தள்ளிச் செல்லும் போது, அது தவிர்க்க முடியாத கோபமாக உருமாறும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான பதற்றமான சூழ்நிலைகளைப் பிடித்துக் கொண்டு காவிக் கூட்டம் தன்னுடைய சதிராட்டத்தை வெற்றிகரமாக ஆடி வருகின்றது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த புத்தனை, நீராவியடி, கன்னியா தொடங்கி தமிழர் நிலங்கள் பூராவும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு காவிக் கூட்டம் செல்கின்றது. அதே, காவிக் கூட்டம், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாக காட்டிக் கொள்ளும் போது, அதற்கு சந்தர்ப்பவாத அரசியல் முகவர்கள் ஒத்தூதுவது அயோக்கியத்தனமானது. அந்த அரசியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பிலுள்ள யாராக இருந்தாலும் அரசியல் மாற்றங்களில் போக்கில் செயற்பட வேண்டியிருக்கும். அது, உலக ஒழுங்கிலும் வழக்கமானதுதான். ஆனால், சொந்த மக்களின் குரலை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உள்வாங்கி அதன் போக்கில், பிரதிபலிக்க வேண்டும். தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல இருந்தாலும், அந்தக்கட்சிகளையெல்லாம் மீறி கூட்டமைப்புக்கான ஆதரவினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதன் கனதியை, எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அது, யாழ்ப்பாணத்தின் குரலை மாத்திரமல்ல, அம்பாறையின் குரலையும் கேட்டு வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் முகவர்களினாலும் தென்னிலங்கையினாலும் இலகுவாக சிதறடிக்கப்பட்டுவிடும்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.