பதிவுகள்
Typography

செப்டம்பர் 26, 1987… காலை 10.48,

இராசையா பார்த்தீபன் என்கிற 24 வயதுடைய இளைஞன் அஹிம்சையின் அதியுச்ச வடிவத்தை நல்லூரின் வீதியில் தொடர்ச்சியாக 12 நாட்கள் நிகழ்த்திக்காட்டிவிட்டு வித்துடலாக வீழ்ந்த தினம். 

ஒரு மகனாக, சகோதரனாக, நண்பனாக, மருத்துவ மாணவனாக வலம் வந்த பார்த்தீபன், விடுதலைக் கனவினை நெஞ்சிலேந்தி அரசியல் பேச்சாளனாகவும், ஆயுதப் போராளியாகவும் அவதரித்த புள்ளியில் திலீபனாக பிறக்கின்றான். அந்தத் திலீபனின் பிறப்பு, ஆயிரமாயிரம் இளைஞர்களை தமிழ்த் தேசியப் போராட்டத்தின் பக்கம் இழுத்து வந்தது. இன்னமும் அதன்பால் வைத்துக் கொண்டிருக்கின்றது.

அஹிம்சையின் தேசமான இந்தியா, இம்சையின் தேசமாக உருமாறி தென்னிலங்கையின் அரசியல் அதிகார ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து தமிழ் மக்களையும், அவர்களின் போராட்டத்தினையும் அடக்கி ஒடுங்கி அழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் போது, அதற்கு எதிராக திலீபன் களம் காண்கிறான். தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தற்கொடைகள் திலீபனுக்கு முன்னும் பின்னும் நிறையவே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எனினும், திலீபனின் தற்கொடை என்பது 12 நாட்கள் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. தங்களுடைய சொந்த மகனை, சகோதரனை, நண்பனை இழப்பதற்கு உண்டான வலியோடு தமிழர் தேசம் அழுதது. ஆக்ரோசம் கொண்டது. அந்த அழுகைக்குள்ளும், ஆக்ரோசத்துக்குள்ளும் காணப்பட்டது, தமிழ் மக்களின் விடுதலை என்கிற ஓர் இலக்கே.

திலீபனின் 32வது ஆண்டு நினைவு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற இன்றைய நாட்களில் தமிழ்த் தேசியப் போராட்டம் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றது. குறிப்பாக, எங்களை நோக்கிய சதித் திட்டங்கள் எவை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, முறியடிப்பது, வெற்றிகொள்வது என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதிலிருந்து விலகி நின்று, எங்களுக்குள் குடுமிப்பிடி சண்டை பிடிப்பதில் அதிக காலத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தாயகத்திலுள்ள மக்களை நோக்கி தென்னிலங்கையும், இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும் ஒவ்வொரு நாளும் ஏமாற்று நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது என்றால், இன்னொரு பக்கம் அந்த நாடகங்களின் பங்காளிகளாக எமக்குள் இருந்தே சில ஏவலாளிகள் இருந்து கொண்டு, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மீது அச்சுறுத்தலை உருவாக்கும் புற்றுக்களாக பரவுகின்றார்கள். சதித்திட்டங்களை எதிர்கொண்டு வெற்றி கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதனைவிடவும், புற்றுக்களாக உருவாகும் ஏவலாளிகளையும் அடையாளம் காணுவதும் முக்கியமானது. ஏனெனில், தமிழ்த் தேசியப் போராட்டங்களின் தோல்விப் பக்கங்கள், காட்டிக் கொடுப்பவர்களினாலும், புற்றுக்களாக உருவாகும் ஏவலாளிகளினாலுமே நிகழ்ந்து வந்திருக்கின்றது.

திலீபன் என்கிற ஆகுதியாளனினதும், ஆயிரக்கணக்கான மாவீரர்களினதும், இலட்சக்கணக்கான மக்களினதும் உயிர்க்கொடைகளிலுமே தமிழ்த் தேசியப் போராட்டம் எழுந்து நிற்கின்றது. அதன் அத்திவாரங்களைச் சிதைப்பதற்கான முனைப்புக்களை அடையாளம் காணுவதை தாயகத்திலுள்ள மக்கள் மாத்திரமல்ல, புலத்திலுள்ள மக்களும் செய்ய வேண்டிய தருணம் இது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் உள்ளிட்ட நினைவு நாட்களில் மாத்திரமல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டத்தின் வீரியத்தினை வீழ்ந்துவிடாது காப்பாற்றுவது அவசியமானது. அதுவே, அரசியல் இலக்குகளுக்கான போராடுகின்ற சமூகமாக தமிழ் மக்கள் முன்னால் இருப்பது. அதன் குறியீடாக திலீபன் என்கிற தியாகத்தின் உருவம் உணரப்பட வேண்டியது.

திலீபனை நினைவு கூர்வதென்பது, ஒரு சம்பிரதாய நிகழ்வல்ல. ஆன்மாவோடு அந்த ஆகுதியாளனின் அரசியலையும், அர்ப்பணிப்பையும் கொண்டு சுமப்பது. அதுவே, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவாகவும் இருக்கின்றது. அதனையே, ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் உயிர்க்கொடையும் எம்மிடம் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

தியாக தீபம் திலீபனை நாம் அஞ்சலிக்கின்ற தருணங்களில் கண்ணீரை சிந்துவதோடு மாத்திரமல்ல, அவனின் பசியையும் எம்மோடு எடுத்துக் கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்தப் பசியே, எமது அரசியல் இலக்கை இறுதி செய்யும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்