பதிவுகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்குக்கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ‘இதயங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை’ தூக்கிக் கொண்டு தமிழ் மக்களிடம் வந்தது. ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இம்முறை வாக்குக் கோரப்போகிற கூட்டமைப்பு, எப்படியாவது எழுத்துமூல ஆவணத்தை அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்களிடம் எடுத்துவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சந்திப்புக்களைத்தான் இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் ரணில் விக்ரமசிங்கவோடும் சஜித்தோடும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், கோட்டாபய ராஜபக்ஷ எதிர் சஜித் பிரேமதாச என்பதே ஜனாதிபதித் தேர்தலுக்கான களம். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும், அவரை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல், கடந்த நாட்களில் பலவீனமாகிவிட்டது. வழக்கம் போலவே, இருவருக்கிடையிலான போட்டிக்களமாகவே இம்முறையும் ஜனாதிபதித் தேர்தல் களம் விரிந்திருக்கின்றது. கோட்டாவின் குடியுரிமைச் சிக்கல் தொடர்பிலான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நாட்களில் வழங்கப்போகும் தீர்ப்பு சிலவேளை, அவரை ஜனாதிபதித் தேர்தல் களத்திலிருந்து அகற்றிவிடலாம். அப்படியான சூழல் அமையாதுவிட்டால், ‘கோட்டா எதிர் சஜித்’ என்பதே தேர்தல் களம். இங்கு மூன்றாவது வேட்பாளருக்கோ, இரண்டாவது விருப்பு வாக்குக்கோ வாய்ப்புக்கள் இல்லை.

கூட்டமைப்பு எந்தவொரு தருணத்திலும் கோட்டாவையோ, மஹிந்த ராஜபக்ஷவையோ ஆதரிக்கும் நிலைக்கு செல்லாது. குறிப்பாக, சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கிற காலம் வரையில், அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. அது, தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, ரணிலுக்கும், மஹிந்தவுக்கும் கூடத் தெரியும். அதுதான், சம்பந்தனும் சுமந்திரனும் இன்றைக்கு சந்தித்திருக்கிற சிக்கல். அதனால்தான், கோட்டாவோடும் சுமந்திரன் சந்திப்புக்களை நடத்த வேண்டியிருக்கின்றது. ஏனெனில், கோட்டாவோடு சந்திப்புக்களை நடத்துவதன் மூலம், ரணிலிடமும் சஜித்திடமும் தங்களின் பேரம்பேசும் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் என்று அவர்கள் இருவரும் நம்புகிறார்கள். அத்தோடு, கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சி என்கிற உணர்நிலையை, தென் இலங்கையில் கொஞ்சமாகவேனும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அதன்போக்கிலும், கோட்டாவோடு பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில், கோட்டாவோடு பேச்சுக்களை நடத்தியதைக் காட்டி தேர்தல் பிரச்சாரத்தினையும், ஊடக சந்திப்புக்களையும் பெரிய சிக்கல்கள் இல்லாமல் கடக்கலாம் என்பது, கூட்டமைப்பின் எண்ணம். ஆனால், அந்த எண்ணம் தேர்தல் கால பேச்சுக்கள், நாகரீகம் என்கிற அடிப்படைகளுக்கு அப்பால், மக்களினாலோ, ஊடகங்களினாலோ பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாது. ஆனால், சட்டத்தரணிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் தங்களது வாதத்தை வைப்பதற்காக ‘கோட்டாவோடும் பேசினோம்’ என்கிற விடயத்தை சம்பந்தனும் சுமந்திரனும் முன்வைக்கலாம்.

கோட்டாவுக்கு எதிராக யார் நின்றாலும் அவரை ஆதரிக்கும் மனநிலையில்தான் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். ஒரு பேச்சுக்கு ‘கோட்டா எதிர் மஹிந்த’ என்ற நிலை ஏற்பட்டால், மஹிந்தவை வேண்டுமானால் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம். கோட்டாவை ஆதரிக்கும் முடிவுக்கு செல்ல மாட்டார்கள். ஏனெனில், அந்தப் பெயர் கடந்த காலத்தில் ஏற்படுத்திய பயப்பீதி அப்படியானது. அவ்வாறான நிலையில், கோட்டாவை எதிர்த்து வெற்றிபெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ள சஜித்தைத் தவிர்த்து தமிழ் மக்கள் வேறோருவரை சிந்திக்கும் நிலையில் இல்லை. இதுவெல்லாம் வெளிப்படையானவை. ஆனாலும், “நாங்கள் வேட்பாளர்களோடு பேசி, அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே எமது முடிவை அறிவிப்போம்” என்று சம்பந்தனும் சுமந்திரனும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அது, ஒருவகையில் பம்மாத்தே.

இன்றைக்கு சம்பந்தனும், சுமந்திரனும் ரணிலிடமும் சஜித்திடமும் எதிர்பார்க்கும் ஒற்றை விடயம், “நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பினை புதிய ஆட்சியின் கீழ் நிறைவேற்றுவோம்” என்கிற ஒற்றை வாக்குறுதி (வரி) ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையே. அதன்மூலம், தமிழ் மக்களிடம் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்போது, தமிழ் மக்களுக்கான தீர்வு உறுதிப்படுத்தப்படும் என்கிற விடயத்தை கொண்டு சேர்த்துவிடலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனைச் செய்வதில் இருந்துகூட ரணிலும் சஜித்தும் பின்வாங்குகிறார்கள். புதிய அரசியலமைப்பு- தீர்வு குறித்துப் பேசினால், அதனை ஒரு துருப்பாக மஹிந்தவும் தென் இலங்கையும் பிடித்துக் கொண்டு தொங்கும். அதனால், தமக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்பது அவர்களின் வாதம்.

‘இதயங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்,’ ‘கரையைக் கடக்கும் வரையில் படகைக் கவிழ்க்கக் கூடாது’ என்கிற வசனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் கூட்டமைப்பு அதிகமாகப் பயன்படுத்தியவை. அந்த வசனங்கள், ஒரு கட்டம் வரையில் ஊடக வெளியில் மிகப்பிரபலமாக பேசப்பட்டன. ஆனால், காலம் செல்லச் செல்ல கேலிபொருளாகின. கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டிய எல்லா இடங்களிலும் அந்த வசனங்களை முன்வைத்து நையாண்டி செய்யப்பட்டது. அப்படியான நிலையை மீண்டும் எதிர்கொள்ள முடியாது என்பதுதான் கூட்டமைப்பின் தற்போதைய பிரச்சினை.

ஐக்கிய தேசிய முன்னியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அறிவிக்கப்படும் வரையில், ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடக கவனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த பின்னரும், ரணிலும் சஜித்தும் தென் இலங்கையில் ஏற்படுத்திய ஊடக கவனம் பெரியது. அது ஒரு கட்டத்தில், கோட்டாவை அரங்கில் இருந்து அகற்றும் அளவுக்கானதாக மாறியிருந்தது. சஜித்துக்காக கூட்டப்பட்ட மாநாடுகளில் மக்கள் பெருமளவு திரண்டார்கள். ஒக்டோபர் சதிப்புரட்சி காலத்தில் காலி முகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிய கூட்டமே கடந்த சில தசாப்தங்களில் அந்தக் கட்சி கூட்டிய மிகப்பெரிய கூட்டம். அப்படியான திரட்சியை சஜித்துக்கான ஆதரவுக் கூட்டங்களாக கூட்டப்பட்ட பதுளை, மாத்தறை கூட்டங்கள் பதிவு செய்தன. அது, தென் இலங்கைக் கிராமங்களை ராஜபக்ஷக்களைத் தாண்டி சஜித்தோடு இணைப்பதில் வெற்றியைக் கொடுத்தது. அப்படியான நிலையில், சஜித் வேட்பாளராக வந்ததே பெரிய போராட்டத்தின் பின்னரே என்கிற ஆதரவு அலை தென் இலங்கையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த அலையை ரணிலும், மங்களவும், சஜித்தும் இணைந்து திட்டமிட்டு உருவாக்கியது என்பது ராஜபக்ஷக்களின் எண்ணம். அப்படியான நிலையில், அந்த அலையைத் தாண்டி ஒரு விடயத்தை பிடித்துக் கொள்ள வேண்டிய தேவை, ராஜபக்ஷக்களுக்கு உண்டு. அதற்காகக் காத்திருக்கும் போது, கூட்டமைப்பிடம் எழுத்துமூல உத்தரவாதங்களை வழங்குவது, பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பது ரணில், சஜித்தின் வாதம். அப்படியான கட்டத்தில்தான், சம்பந்தனும் சுமந்திரனும் மாற்று வழியாக தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்துக் கொண்டு வர நினைக்கிறார்கள். அதன்போக்கில்தான், தற்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிற பேச்சுவார்த்தைகள் கவனம் பெறுகின்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போது, மனோ கணேசன் தன்னுடைய பேஸ்புக்கில், “…இதற்கு முன் சிங்கள தலைவர்கள் தமிழ் தலைவர்களுக்கு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தது எல்லாம் சாத்திமாகி விட்டதோ! இல்லையே..!!” என்று எழுதியிருக்கிறார். எழுத்துமூல உத்தரவாதம், உடன்படிக்கை என்று கூட்டமைப்பு விடயங்களைச் சிக்கலாக்க வேண்டாம் என்பது அவரது வாதம். ஆனால், அவர் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் நிலைப்பாட்டையும் முன்வைப்பதைப்போல, வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் உண்டு. ஏனெனில், அவர்களின் அரசியல் எதிர்காலமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கின்றது. மனோ சொல்வது போல், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இதயத்தால் இணைந்தது போல, இம்முறையும் இணைவது சாத்தியமில்லை. அது, கூட்டமைப்பின் எதிர்கால அரசியலை பாதிக்கும். ஏற்கனவே, பின்னடைவுகளைச் சந்தித்து நிற்கிறவர்கள், அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளையே எடுப்பார்கள். அதனையே, சம்பந்தனும் சுமந்திரனும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப்போல பெரிய ஆர்வத்தோடு வாக்களிக்கும் நிலையில் இம்முறை தமிழ் மக்கள் இல்லை. அப்படியான நிலையில், அவர்களை ஆர்வத்தோடு வாக்களிக்க வைக்கும் ஒன்றை கூட்டமைப்பு காட்டியாக வேண்டும். அது, ஐக்கிய தேசிய முன்னணியின் சஜித்துக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இருக்க வேண்டும் என்பதற்காகவே சம்பந்தனும் சுமந்திரனும் தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாது, வேறெந்த புதிய நம்பிக்கைகளை குறித்தும் இல்லை.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.