பதிவுகள்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கருத்திலெடுக்கப்படாத நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக சிவாஜிலிங்கம் கூறுகிறார். அவருக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படுகிறார். 

தமிழ்த் தேசிய அரசியலில் சிவாஜிலிங்கமோ, அனந்தி சசிதரனோ தங்களது கட்சிகளுக்கோ, தலைமைகளுக்கோ கட்டுப்பட்டு நடந்தது கிடையாது. முரண்பாடுகள் மற்றும் தனித்தீர்மானங்களுக்காக அவர்கள் இருவரும் பெயர் பெற்றவர்கள். ஜனநாயக அரசியலில் அதனை பெரும் தவறாக எண்ணிவிட முடியாது. ஆனால், ஒரு சமூகத்தின் அரசியல் இயங்குநிலை என்பது தனித்தீர்மானங்கள், (எதற்கெடுத்தாலும்) அவசரப்படும் நிலை மற்றும் அடம்பிடிக்கும் மனநிலை உள்ளிட்டவைகளினால் வெற்றியை அடைவதில்லை. மாறாக பொறுமையும், சமயோசிதமும், சந்தர்ப்பங்களைக் கணித்து செயலாற்றும் திறனும் முதன்மைபெறும் போதே வெற்றி சாத்தியமாகின்றது.

ஆனால், சிவாஜிலிங்கமோ, அனந்தியோ தாங்கள் நினைப்பது அன்றே நடந்துவிட வேண்டும் என்கிற மனநிலையோடு அரசியலில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். பல நேரங்களில் முன்பள்ளியில் அடம்பிடிக்கும் குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள். இவ்வாறான நடவடிக்கைகளினால், தனிப்பட்ட ரீதியில் அவர்கள் இருவருக்கும் ஏதாவது இலாபம் கிடைக்கிறதோ தெரியாது. ஆனால், அவர்களுக்கு கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து ஆத்திரப்பட்டு இரத்த அழுத்தம் வேண்டுமானால் அதிகரிக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முன்வைத்து, தமிழ்த் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், மாணவர் ஒன்றியங்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சிவாஜிலிங்கத்தோடும், அனந்தியோடும் எதிர்காலத்தில் எந்தவிதமான அரசியல் தொடர்புகளையும் பேணுவதில்லை என்றும் கூறுகின்றன. கிட்டத்தட்ட தங்களது முயற்சிகளை குழப்பிவிட்டதாக இந்தத் தரப்புக்கள் குமுறுகின்றன. ஆனால், உண்மையிலேயே, இந்தத் தரப்புக்கள் சிவாஜிலிங்கம், அனந்தி குறித்து குமுறல்களை வெளியிடுவதற்கான தார்மீகத்தைக் கொண்டிருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனும் நிலைப்பாட்டைத் தூக்கிக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை பத்து நாட்களுக்கு முன்னர் வெளியே வந்தது. பேரவைக்குள் இருக்கின்ற கருத்துருவாக்கிளான அரசியல் கட்டுரையாளர்களும், யாழ். பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களும், மதத் தலைவர்கள் சிலரை இணைத்துக் கொண்டு இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களை தனித்தனியே சந்தித்துப் பேசினர். சம்பந்தனுடனான சந்திப்பில், பொது வேட்பாளராக சம்பந்தனே போட்டியிட வேண்டும் என்றும் கோரினர். ஆனாலும், அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்ட சம்பந்தன், ஏனைய விடயங்கள் குறித்து, வழக்கமான தன்னுடைய பாணியில் தலையை ஆட்டி, “யோசித்து முடிவெடுப்போம், கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறோம்” என்கிற தொனிப்பட பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

வடக்கு கிழக்கு பூராவும் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை முன்வைத்து கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும், கஜேந்திரகுமாரும் பொது வேட்பாளர் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அவர், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்திலிருந்து இன்றும் இறங்கிவரவில்லை. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவருகின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பேரவை மற்றும் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில், தமிழ்த் தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை முன்வைக்கும் கூட்டங்களையும் முன்னணி நடத்திக் கொண்டிருக்கின்றது.

விக்னேஸ்வரனோ, சுரேஷ் பிரேமச்சந்திரனோ தனித்த முடிவுகள் எதனையும் எடுப்பது மாதிரித் தெரியவில்லை. பேரவையும், மாணவர் ஒன்றியமும் இறுதியில் விடுக்கப்போகும் அறிவிப்புக்கு ஏற்ப தலையை ஆட்டி வைக்கலாம் என்கிற தோரணையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள். இடையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், பூகோள அரசியலில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் சாத்தியமுண்டு என்று தன்னுடைய கேள்வி- பதில் அறிக்கையொன்றை விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (மற்றும் பேரவை) கூட்டியுள்ள கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அவர்கள் இறுதி முடிவுகளை எடுப்பவர்கள் அல்ல. கடந்த காலத்திலும், மாணவர் ஒன்றியத்தினருடனான சந்திப்புக்களில் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். பேச்சுக்களில் மாணவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு தலையையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இறுதி முடிவுகளை எப்போதுமே சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் எடுப்பதாகவே இருந்திருக்கின்றது. இம்முறையும், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாம் என்று கூட்டமைப்பின் தலைமை சொன்னதும், அதனை எடுத்துக் கொண்டு மேடைகளில் முழங்குவதுதான் அவர்களின் வேலை. அதனைமீறிய முடிவுகளை அவர்கள் எந்தக் காலத்திலும் எடுத்ததில்லை. இது, யாருக்குத் தெரியுமோ இல்லையோ தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கு அவர்கள் இசைவாக்கமும் அடைந்துவிட்டார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையான சிவில் அமைப்பொன்றின் தேவைக்கான வெளியை சிதைத்து அழித்த பெருமை தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளில் பேரவையின் நடவடிக்கைகளே அதற்கு சான்று. தோல்வியின் முனையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியலை, வெற்றிகரமான பக்கத்திற்கு நகர்த்துவதற்கு நம்பிக்கையான அரசியல் கட்சிகள், தலைமைகள் மாத்திரமல்ல, புத்திஜீவிகளையும், கருத்துருவாக்கிகளையும், செயற்பாட்டாளர்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் சிவில் அமைப்பின் தேவையும் உண்டு. அது, மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவது மாத்திரமின்றி, அரசியல் கட்சிகளையும், தலைமைகளையும் சரியான பக்கத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் அழுத்தங்களையும் வழங்கும் வலுவைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், பேரவை என்கிற பெயரில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த சிவில் இயக்கமும், அரசியல் கட்டுரையாளர்களும் ஏற்படுத்திய அமைப்பு, கூட்டமைப்புக்கு மாற்றாக கட்சி அரசியலை உருவாக்கும் வேலையையே செய்தது. ஒருகட்டத்தில், விக்னேஸ்வரனுக்கு கட்சியை ஆரம்பித்துக் கொடுப்பதே ஒற்றை நோக்கமாகிப்போனது. அப்படிப்பட்டவர்களினால், உருப்படியான செயற்திட்டங்களை செய்ய முடியும் என்று நம்புவது நீர்மேல் எழுதுவதற்கு ஒப்பானது.

குறிப்பாக, கடந்த ஆண்டு முதலே, 2019, 2020ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக இருக்கப் போகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான சூழலில், ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிற விடயங்களை முன்வைத்து, செயற்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள், தமது வாக்குகளைக் கொண்டு பேரம் பேசும் நிலையை எவ்வாறு உயர்த்திக் கொள்ளப் போகிறார்கள் என்று சிந்தித்துச் செயலாற்றியிருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பேரவையோ, மாணவர் ஒன்றியமோ கடந்த பத்து நாட்களுக்கு முதல் வரையில் செய்திருக்கவில்லை. தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதி நெருங்கும் போதுதான், அவர்களுக்கு திடீரென ஞான ஒளி தோன்றி, பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிற சிந்தனை எழும்; அதனைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு தலைவராக பேசச் செல்வார்கள்; கட்டுரைகளை எழுதுவார்கள்; அதற்கு மக்கள் இணக்கமான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். இந்த நிலைக்கும், சிவாஜிலிங்கம், அனந்தியின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அவர்களைக் குறைகூறும் தகுதியோடும் பேரவைக்காரர்களோ, மாணவர் ஒன்றியமோ இல்லை.

பேரவையும், மாணவர் ஒன்றியத்தினரும் முதலில் திறந்த மனதோடு உரையாடலுக்கு தயாராக வேண்டும். தங்களிடம் உள்ள குறைகள் குறித்து பேச வேண்டும். சிவில் அமைப்புக்கள் மீதான நம்பிக்கையை பேரவை என்ற பெயரில் சிதைத்த தரப்பினர், அதனை இனியாவது சீர்செய்ய வேண்டும். அது, எதிர்காலத்திலாவது நம்பிக்கையான சிவில் அமைப்பொன்றை உருவாக்குவதற்கு வழிவகுக்க வேண்டும். யாழ். மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் நடவடிக்கை என்பது மாணவர்களின் உண்மையான சக்தி, அதன் தாற்பரியங்கள் குறித்து அறிந்ததாக இல்லை. மாறாக, ஒவ்வொரு விடயங்களுக்கும் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலை தொடர்ந்தால், மாணவர் ஒன்றியத்தின் மீதான மதிப்பு இன்னும் இன்னும் அடிபடும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கமும், அவருக்கு ஆதரவு வழங்கும் அனந்தியும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நகைச்சுவைக்கான மீம்ஸ் போன்று பார்க்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட அதே நிலையிலேயே, பேரவையின் நடவடிக்கைகளும், மாணவர் ஒன்றியத்தினரின் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில், மக்களிடம் எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியாது; அவர்களின் தீர்மானங்களில் தாக்கமும் செலுத்த முடியாது. இருப்பதில் யார், ஆபத்துக் குறைந்த வேட்பாளர் என்பதை நோக்கியே மக்கள் வாக்களிக்கப்பார்கள். வேண்டுமானால், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.