பதிவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை. கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முன்னருங்கூட எழுந்த கோரிக்கைதான். ஆனால், இம்முறை கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துமளவுக்குச் சென்றிருக்கின்றன. இதனை, மனோ கணேசன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். 

கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில், வடக்கு - கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்கள், குறிப்பிட்டளவில் வாழ்கிறார்கள். ஒரு சீரான வாக்களிப்பின் மூலம், ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கானது அது. அதை நம்பி, தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் கடந்த காலங்களில், கொழும்பில் தனித்துப் போட்டியிட்டிருக்கின்றன. ஆனால், வெற்றிபெற்றிருக்கவில்லை.

கொழும்பிலுள்ள தமிழ் மக்கள், கடந்த பல தசாப்தங்களாக ‘யானை’க்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். யானையில் வந்தால்தான், மனோ கணேசனுக்கும், மகேஸ்வரனுக்கும் கூட வாக்களிப்போம் என்கிற நிலை காணப்பட்டிருக்கின்றது. ஆனால், கூட்டமைப்பின் உருவாக்கத்துக்குப் பின்னரான காலம், கடந்த காலத் தேர்தல் வரலாறுகளை மாற்றும் அளவுக்கு இருப்பதாக, தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை உள்ளிட்ட தரப்புகள் நம்புகின்றன. குறிப்பாக, கூட்டமைப்பால் தனித்துப் போட்டியிட்டே, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெற்றிகொள்ளக் கூடியளவான வாக்குகளைப்பெற முடியும் என்ற அடிப்படை சார்ந்தது. ஆனால், கொழும்பிலுள்ள தமிழ் மக்களை, வடக்கு - கிழக்குத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்கிற பிரிவினைக்கு வித்திட்டுவிடும் என்கிற அபாய நிலை இருக்கின்றது. இதைக் கருத்தில் கொண்டே, கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை இரா.சம்பந்தன் நிராகரித்து வந்திருக்கின்றார்.

கூட்டமைப்புக்குள் ஏகநிலையை அடைந்துவிட்டிருக்கின்ற தமிழரசுக் கட்சி, தன்னுடைய அனைத்துத் தளங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற விடயத்தில், மிகுந்த கரிசனையோடு இருக்கின்றது. வடக்கு - கிழக்கில் மாத்திரமல்லாமல், கொழும்பு அரசியலைக் கையாளுவதற்காக, கொழும்பிலும் தன்னைக் கட்சி ரீதியாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றது. சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான கட்டங்களையெல்லாம், தமிழரசுக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்தில் கொள்கிறார்கள். அதன்போக்கில், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தொடர்ச்சியான கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் போகலாம். அதன்போக்கில், கொழும்பில் போட்டியிடுவது என்கிற கோரிக்கையை உறுதியாகப் பரிசீலிக்க வேண்டி வரலாம்.

இன்னொரு பக்கம், எவ்வளவு கோரிக்கைகளை விடுத்தாலும், கொழும்பிலுள்ள தமிழ் மக்களின் 50 சதவீதமானவர்கள், வாக்களிப்பில் அக்கறை கொள்வதில்லை. குறிப்பாக, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள், வாக்களிப்பு என்பது, ஏதோ வேண்டாத வேலை என்பது மாதிரியான போக்கைக் கடைப்பிடித்து வருபவர்கள். தோற்கப் போகும் யானைக்கு வாக்களிப்பதைக் காட்டிலும், சும்மா இருப்பது மேல் என்கிற எண்ணம்கூட, வாக்களிப்பில் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதற்கான காரணமான இருக்கலாம். அப்படியான கட்டத்தைக் கடப்பதற்காகவேனும், கூட்டமைப்பு களத்தில் இறக்க வேண்டும் என்கிற விடயம் முன்வைக்கப்படுகின்றது. அது, வடக்கு - கிழக்கு மக்களோடு இணைந்து வாக்களித்திருக்கின்றோம் என்கிற விடயத்தை, கொழும்பிலுள்ள தமிழ் மக்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்படுத்தும்; அது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தலாம்.

இவ்வாறான நிலையில்தான், வடக்கு - கிழக்குக்கு வெளியிலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை, பரிசீலனையில் எடுத்திருக்கும் கூட்டமைப்பின் அதிகாரபீடம், மனோ கணேசனோடு ஆரம்பக் கட்டப் பேச்சுகளை முன்னெடுத்திருக்கின்றது. அது, எந்தவொரு தருணத்திலும், கொழும்பிலுள்ள தமிழ் மக்களிடம், பிரிவினையை ஏற்படுத்தாத அளவுக்காக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலானது. அதாவது, மனோ கணேசனோடு இணைந்து தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், கூட்டமைப்பு ஆர்வம் கொண்டது என்பதைப் பதிவு செய்வதற்கானது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, குறிப்பாக மனோ கணேசனின் ‘ஜனநாயக மக்கள் முன்னணி’ ஐக்கிய தேசிய முன்னணியுடனான உறவை முறித்துக் கொள்ளும் கட்டங்கள் தற்போது இல்லை. ஏனெனில், வடக்கு - கிழக்கிலுள்ள தேர்தல் கள நிலைவரமும், அதற்கு வெளியிலுள்ள தேர்தல் கள நிலைவரமும் வேறு வேறானவை. மனோ கணேசன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்பது சம்பிரதாயபூர்வமான பதவிக்கு ஒப்பானது. அவரினால், நுவரெலியாவில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அளவுக்கான தலையீடுகளைச் செய்ய முடியாது. அங்கு, பழனி திகாம்பரமே தீர்மானங்களை மேற்கொள்ளும் நபர். மனோ கணேசனின் இருப்பு கொழும்பை பிரதானப்படுத்தியது; அடுத்து, கண்டி.

அப்படியான நிலையில், மனோ கணேசன், குறிப்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியைப் பொறுத்தளவில், கொழும்பில் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டு, கட்சியை நடத்துவதும், தமிழ் முற்போக்குக் கூட்டணியை வழிநடத்துவதும் சாத்தியமில்லாத ஒன்று. ஏற்கனவே, முற்போக்குக் கூட்டணியிலுள்ள இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, எப்போது பிரிந்து போகும் என்கிற அச்சநிலை காணப்படுகின்றது.

மனோ கணேசனின் அரசியல் எதிர்காலத்துக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைத்திருப்புக்கும் கொழும்பில் தேர்தல் வெற்றி என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில், ஜனநாயக மக்கள் முன்னணி, மனோ கணேசன் என்கிற ஒற்றை மனிதரை நோக்கியே துருவமயப்பட்டிருக்கின்றது. அந்தக் கட்சிக்குள் இருந்து, நம்பிக்கையான அடுத்த கட்டத் தலைவர்கள் இதுவரை உருவாகி இருக்கவில்லை. கடந்த மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள பல வட்டாரங்கள் கொழும்பில் காணப்பட்ட போதிலும், ஒரேயொரு வட்டாரத்திலேயே நேரடியாக வெற்றிபெற முடிந்திருக்கின்றது. ஏனைய உறுப்பினர்களின் வெற்றி, விகிதாசார வெற்றியாகும். அப்படியான நிலையில், ஜனநாயக மக்கள் முன்னணியால், பொதுத் தேர்தலொன்றில் தனித்துப் போட்டியிட முடியும் என்பது, சாத்தியமே இல்லாதது. அதுபோல, ஐக்கிய தேசிய முன்னணிக்கு அப்பாலான கூட்டணியையும் சிந்திக்க முடியாது.

மனோ கணேசனுக்கு முன்னால் ஒற்றைத் தெரிவே உண்டு. அது, யானையில் ஏறி வருவது. அதைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் (கூட்டமைப்போடு) இணைந்து கொண்டு, கொழும்பில் களம் கண்டால், வீட்டிலேயே இருக்க வேண்டி வரலாம். அப்படியான நிலையில், கூட்டமைப்பும் மனோ கணேசனும் கூட்டணிக்கான பேச்சுகளை நடத்துவதெல்லாம், முட்டுச் சந்துகளுக்கு வழி சொல்வதற்கு ஒப்பானது.
நல்லாட்சிக் காலத்தில், கூட்டமைப்புக்கும் மனோ கணேசனுக்கும் இடையிலான முரண்பாடுகள் பொது வெளியில் நிகழ்ந்திருக்கின்றன. ரணிலோடு இரு தரப்பும் நெருக்கமாகப் பணியாற்றி இருக்கின்றன. குறிப்பாக, மைத்திரியின் சதிப்புரட்சிக் காலத்தில், ரணில் அரசாங்கத்தைக் காப்பாற்றியதில், யாருக்கு அதிக பங்கு இருக்கின்றது என்கிற விடயத்தில், கூட்டமைப்பு பாராளுமன்றத்துக்குள்ளும் நீதிமன்றத்துக்குள்ளும் ‘ஸ்கோர்’ செய்தது. அதுபோல, இராதாகிருஷ்ணன் இழுத்துக் கொண்டோட முயன்றாலும், முற்போக்குக் கூட்டணியை ஒருவாறு கட்டிக்காத்து, சதிப்புரட்சியை முறியடிக்க மனோ கணேசன் உதவினார்.

இந்த விடயத்தில், ஊடக வெளிச்சம் யார் பக்கத்தில் அதிகம் அடித்தது என்பது சார்ந்த பிரச்சினைகளோடு, தன்முனைப்பு (ஈகோ) பிரச்சினை கூட்டமைப்பின் அதிகார பீடத்துக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் எழுந்தது. இது, கட்சி ஆதரவாளர்களிடம் மோதலாகவும் மாறியது. இதைக் கட்டுப்படுத்துவது சார்ந்து, இரு தரப்பும் அமைதி காத்தன. அதுமட்டுமின்றி அடிக்கடி, கொழுத்திப்போடும் வேலைகளையும் பார்த்தன. இவ்வாறான கட்டத்தில், கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்கிற பேச்சும், ஜனநாயக மக்கள் முன்னணி வன்னியில் போட்டியிட வேண்டும் என்கிற போட்டி அரசியலும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், இனி வரப்போகின்ற காலத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக்ஷக்கள் பெறுவதிலிருந்து தடுப்பதன் ஊடாகவே, அரசியலின் எஞ்சியுள்ள ஜனநாயகக் கட்டங்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு, தன்முனைப்பு போட்டிகள் இல்லாத, தங்களுக்குள் மோதிக்கொள்ளாத அரசியல் கலாசாரத்துக்குத் தமிழ்த் தலைமைகள் தயாராக வேண்டும். அது, அதிகாரங்களுக்கு அண்மையாக இருந்து, கடந்த காலத்தில் ஆற்றிய சில்லறைத்தனங்களை உணர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.