பதிவுகள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை செய்வதே, அந்த ஒன்றுகூடலின் நோக்கமாக இருந்தது. 

பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அந்த ஒன்றுகூடலின் இறுதியில், ஓர் இணக்கப்பாட்டின் கீழ், அறிக்கையொன்றை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், அறிக்கையின் ஒரு பகுதி வரையப்பட்ட போதிலும், அது முற்றுப்பெறவில்லை. இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதில் ஆர்வம் காட்டிய முக்கியஸ்தர்கள், தங்களின் நிலைப்பாடுகளில் இருந்து, அறிக்கை மாறுபடுவதாக எண்ணிக் கொண்டு, அறிக்கை வெளியிடப்படுவதை ஒத்திவைப்பதில் குறியாக இருந்தார்கள். பின்னர், அப்படியான ஓர் அறிக்கை வெளியிடப்படவும் இல்லை.

ஆனால், பத்தியாளர்கள் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்வதில், ஆர்வம் காட்டிய பத்தியாளர்களில் ஓரிருவர், தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவில் அங்கம் வகித்தார்கள். பொது வேட்பாளர் கோசத்தைத் தூக்கிக் கொண்டு, சம்பந்தனிடமும் விக்னேஸ்வரனிடமும் ஏனைய கட்சித் தலைவர்களிடமும் நடந்தார்கள். அந்த முயற்சி, கடுகளவுக்கும் மதிக்கப்படாத புள்ளியில், சுயாதீனக்குழு சோர்வுற்று ஒதுங்கியது.

அடுத்த சில நாள்களில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொண்டு, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில், பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இந்த முயற்சிகளுக்குத் தங்களின் ஆலோசகர்களாக, சுயாதீனக் குழுவில் இயங்கிய சிலரையும் இணைத்துக் கொண்டார்கள். கட்சிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில், அவர்களும் முக்கியமான இடத்தை எடுத்துக் கொண்டார்கள். பொது இணக்கப்பாட்டின் கீழ் அறிக்கை வெளியிடப்பட்டு, அடுத்தகட்ட முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமலேயே அது தூக்கியெறியப்பட்டும் விட்டது.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும், ஒருசில வாரங்களுக்குள் நடந்து முடிந்தவை. பத்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் சுயாதீனக்குழுவில் சங்கமித்ததும், சுயாதீனக்குழு வேலைக்காகவில்லை என்றதும், பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்புக்களில் ஆலோசகர்களாக வலம் வந்தவர்களையும் நாம் கண்டிருக்கிறோம். இங்கு எல்லாத்தரப்பிடமும் ஒரு திட்டம் உண்டு. அந்தத் திட்டத்துக்கு ஆட்களைச் சேர்ப்பதுதான், பிரதான இலக்கு. அந்தத் திட்டத்துக்கு ஆட்களைச் சேர்க்க முடியவில்லை என்றால், சொல்லாமல் கொள்ளாமல் இன்னோர் அடையாளத்தோடு, அந்தத் திட்டத்தை முன்வைப்பது; இதுதான் அரசியல் நெறி என்றொரு போக்கு, தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியாகப் பேணப்படுகின்றது.

அரசியல் கட்சிகளிடமும் அதன் தலைவர்களிடமும் அரசியல் அறத்தை எதிர்பார்க்கும் தரப்புகள், உண்மையிலேயே அரசியல் அறத்தோடுதான் இயங்குகின்றனவா என்றால், ‘இல்லை’ என்பதே பதிலாகும்.

எல்லா இடத்திலும், “நாங்கள் பெரியவர்கள்; முக்கியமானவர்கள்” என்கிற சுயதம்பட்டம், அதை நோக்கிய எதிர்பார்ப்பு, அரசியல் அறத்தையோ, வெளிப்படையான உரையாடல்களையோ மேலேழுவதைத் தடுக்கின்றது. அது, செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் பத்தியாளர்கள் தொடங்கி, எல்லா இடமும் வியாபித்து இருக்கின்றது.

ஒரு விடயம் தொடர்பில் விமர்சிப்பதற்கும், கருத்துரைப்பதற்கும் ஆர்வம் காட்டும் அளவுக்கு, தங்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதில் பெரிய மனத்தடையோடு இந்தத் தரப்புகள் இருகின்றன. அது மட்டுமின்றி, யாரின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் தயக்குகின்றன. அதனாலேயே, எல்லாவற்றையும் இரகசியமாக, ஏதோ சதித்திட்டம் தீட்டுவதைப்போல, செய்ய நினைக்கிறார்கள். மாறாக, செய்ய நினைக்கின்ற விடயங்களின் தார்ப்பரியம், அதன் தற்போதையை சமூக நிலை பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை.

இன்னொரு பக்கம், ‘கருத்துருவாக்கிகள்’ என்று தங்களை நோக்கி ‘ஒளிவட்டம்’ வரைந்து கொள்ளும் தரப்புகள், தங்களைத் தேவதூதர்களாகச் சிந்திக்கின்றன; தங்களின் வார்த்தைகள் இறுதியானவை என்று நம்புகின்றன. மக்களை நோக்கிக் கட்டளையிடும் தொனியைப் பிரயோகிக்கின்றன. அதனைக் கேட்காத மக்களை மடையர்களாகக் கருதுகின்றன. ஆனால், அரசியல் என்பதும், அதன் அடிப்படையான நிலைத்திருத்தல் என்பதும் மக்களைச் சார்ந்ததாகும். மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடங்கி, எதிர்காலங்கள் வரையில் சிந்திக்காமல், கனவுலகில் கோட்டை கட்டுவதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

அத்தோடு, அரசியல் என்பது, இன்றைக்கு மக்களால் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்கப்படுவதுடன் ஆராயப்படுவதும் ஆகும். யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கான பட்டறிவைக் காலம் அவர்களுக்கு வழங்கியும் இருக்கிறது. அப்படியான நிலையில், யார் வந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளைப் புறந்தள்ளும் எந்தத் தரப்பையும் புறந்தள்ளுவதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். அது கடவுளாக இருந்தாலும் சரி; கருத்துருவாக்கிகளாக இருந்தாலும் சரி!

பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட தரப்புகள், ஓரிடத்தில் சந்திக்கும்போது, அங்கு பொது இணக்கப்பாடு ஏற்படவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், அந்த உரையாடல்களில் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அந்த வெளிப்படைத் தன்மைதான், தொடர்ச்சியான உரையாடல்களுக்கான உந்துகோலாக இருக்கும். அது, சமூக ரீதியாகவும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். மாறாகத் தங்களின் திட்டங்களை, மற்றவர்களின் மீது திணிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும், குறுகிய மனநிலை கொண்ட சந்திப்புகளால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அவை, மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்றவைதான்.

“பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தரப்புகள் எல்லாமும் இணைந்து, தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்திருக்கின்றன” என்று கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர், பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் கருத்து வெளியிட்டனர்.

அந்தத் தருணத்தில் பேரவையை, மாற்றுத் தலைமைக்கான நம்பிக்கையாகக் கொண்ட வைத்தியர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னார், “...புலிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட, ‘கூட்டமைப்பு’ அடையாளத்துக்குள் இருந்து கொண்டு, யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம். ஆனால், தற்போது இருப்பது உண்மையான கூட்டமைப்பு அல்ல; கூட்டமைப்பின் உண்மையான பங்காளிகள் பேரவைக்குள்ளேயே இருக்கிறார்கள். விரைவில், கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் தோற்கடிக்கப்பட்டுவிடும்...” என்றார். மாற்றுத் தலைமைக்கான கோசக்காரர்கள் எல்லோரும் இணைந்து, பேரவையை ஆரம்பித்த தருணத்தில், அந்த வைத்தியரின் பெரிய நம்பிக்கையாக இந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

இன்றைக்கு அந்த வைத்தியர், பேரவையைச் சீண்டுவதில்லை. அப்போது, அந்த வைத்தியரிடம் நான் கீழ்க்கண்டவாறு சொன்னேன். “…மாற்றுத் தலைமைக்கான வெளி என்பது, தமிழ்த் தேசியப் பரப்பில் தவிர்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், மாற்றுத் தலைமைக்கான வெளியை, எந்தவித அரசியல் தைரியமும் இல்லாத தரப்புகளைக் கொண்டு நிரப்பிவிட முடியாது. பேரவை, தன்னுடைய தைரியத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. விக்னேஸ்வரனை இணைத்துக் கொள்வதற்காக, தங்களைத் தேர்தல் அமைப்பு அல்ல என்று சொல்லி இருக்கின்றது. அப்படியான நிலையில், தேர்தல் அரசியலைக் கையாளும் தரப்பாகப் பேரவை முன்னோக்கி வருவது குழப்பகரமானது. இன்றைக்கு மாற்றுத் தலைமை என்பது, தேர்தல்களைப் புறந்தள்ளிக் கொண்டு உருவாக முடியாது. இன்னொரு பக்கம், கூட்டமைப்பில் அகற்றப்பட வேண்டிய தரப்புகளைத் தமிழரசுக் கட்சி இலகுவாக அகற்றிக் கொண்டு, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தனிக்கட்சியாக வளரும். ஏனெனில், தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் அதனை நோக்கிய செயற்பாட்டைக் கிராமங்களில் இருந்து ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே, பேசுவதும் எழுதுவதும் இலகுவானதுதான். ஆனால், செயற்பாட்டுத்தளமே வெற்றியைத் தேடித்தரும்...” என்றேன்.

மேடைப் பேச்சுகளும், அரசியல் கட்டுரைகளும், பத்திகளும் அரசியலின் முதுகெலும்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. மக்களை ஒருங்கிணைப்பதற்கான சக்தி என்பது, செயற்பாட்டுத் தளத்திலேயே இருக்கின்றது. அது, அந்த மக்களின் மனங்களைப் பிரதிபலிப்பதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது இல்லாத எந்தவொரு கருத்தியலும் அரசியலும் வெற்றிபெறாது. இதைப் புரிந்து கொள்ளாது, என்ன குத்துக்கரணம் அடித்தாலும், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. பொதுத் தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர், மீண்டும் பொது இணக்கப்பாடு எனும் நாடகம் அரங்கேறாமல் இருக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாடகத்தைப் பலமுறை பார்க்க முடியாது. மக்கள் எரிச்சல் அடைவார்கள்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.