பதிவுகள்

பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையிலும், பொதுத் தேர்தலுக்கான அரங்கு நாடு பூராவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுக்கள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்கள் அடங்குவதற்குள் மீண்டும் தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முற்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல்களில் முதன்மையானது பொதுத் தேர்தல். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைக் காட்டிலும், பொதுத் தேர்தலை, தமக்கான பேச்சுவார்த்தையாளர்களை (பிரதிநிதிகளை) அடையாளப்படுத்தும் தேர்தலாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள். அதுதான், அதிக தருணங்களில், வாக்களிப்பு என்பது, ஒரு தரப்பை நோக்கி அதிகம் குவியவும் காரணமாகியிருக்கின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் காலத்திலும், அதனை தோற்கடித்த தமிழரசுக் கட்சிக் காலத்திலும், அனைவரும் ஒன்றிணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலத்திலும் அதுவே பிரதிபலித்தது. விடுதலைப் புலிகளின் எழுச்சியின் பின்னரான நாட்களில் தேர்தல்களுக்கான முக்கியத்துவம் தமிழ்ப் பரப்பில் சுருங்கியிருந்தது. அதனையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒருங்கிணைந்ததன் மூலம், புலிகளே மாற்றி அமைத்தார்கள். அதன் பின்னரான காலம் என்பது, கூட்டமைப்பை நோக்கிய திரட்சியாக மாறியது.

இந்தக் கட்டத்திலிருந்துதான், இந்தத் தேர்தலையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈபிஆர்எல்எப் ஆகிய கூட்டமைப்பின் ஆரம்ப பங்காளிகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பல காலமாகின்றது. அதுபோல, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும் கூட்டமைப்பிலிருந்து விலகி விட்டார்கள். ஆனால், கூட்டமைப்பின் அத்திவாரம் என்பது, குறிப்பிட்டளவு உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. அந்த அத்திவாரத்தினை அசைக்கும் வேலைகளை, தென் இலங்கையின் மேலாதிக்க சக்திகளும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் மாற்றுத் தலைமையைக் கோரிய தரப்புக்களும் செய்து பார்த்தன. ஆனாலும், அதில் அவர்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதிகபட்சம், கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சிலர் உதிரிகளாக மாறினார்கள்.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நிலைபெறுகை என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டியதாகவே இருக்கின்றது. அது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏக நிலைக்கும் வழிகோலியிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத்தலைமை என்கிற உரையாடல் இன்றைக்கு தேய்ந்து போய், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமை என்கிற விடயம் மேலொங்கிவிட்டது.

இந்தத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி தலைமையிலான அணிக்கே கூட்டமைப்பு அடையாளம் சூட்டப்பட்டிருக்கின்றது. மாறாக, கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சி தமிழரசுக் கட்சி என்றவாறாக களம் இல்லை. ஏனெனில், கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு மற்றும் ஆசனப் பங்கீடு என்பது, கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளாகவே இருக்கின்றன. பங்காளிக் கட்சிகள் யாரைத் தேர்தலில் களமிறக்க வேண்டும், யாரை களமிறக்கக் கூடாது என்பது வரையில், தமிழரசுக் கட்சி தலையீடுகளைச் செய்கிறது.

அதுபோலவே, கூட்டமைப்புக்கு மாற்றான தலைமையாக எழ நினைத்த தரப்புக்கள் எல்லாமும், தமிழரசுக் கட்சிக்கு மாற்றான தலைமையொன்றை கட்சியெழுப்பும் கட்டத்தை நோக்கி இறங்கியிருக்கின்றன. மாற்றுத் தலைமைக் கோசக்காரர்களிடம் காணப்படும் ஆளுமைக் குறைபாடு மற்றும் தேர்தல் அரசியலை கையாளுவதில் அவர்கள் பெற்ற தோல்வி என்பன, தமிழரசுக் கட்சியின் ஏகநிலை எழுச்சியின் மற்றைய காரணங்கள்.

தைப் பொங்கல் விழாக்கள் தொடங்கி, தேர்தலை இலக்காக் கொண்ட நிகழ்வுகளை கூட்டமைப்பு தொடங்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (காங்கிரஸ்) வரை எல்லாக் கட்சிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த விழாக்களின் அளவைக் கருத்தில் கொண்டாலே, ஒரு கட்சி அல்லது அதன் தலைமை தன்னுடைய தேர்தல் இலக்கை எவ்வளவாக வரையறுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். கூட்டமைப்பு வடக்கு- கிழக்குப் பூராவும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்க, முன்னணி வடக்கிற்குள் மாத்திரம் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது.

இன்னொரு தரப்பான, விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் தங்களுக்குள் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவது சார்ந்த குழப்பத்தோடு இன்னமும் இருக்கின்றனர். விக்னேஸ்வரனின் அணியில் ஈபிஆர்எல்எப், ரெலோவில் இருந்து அண்மையில் பிரிந்த சிறிகாந்தா- சிவாஜிலிங்கம் அணி உள்ளிட்டன இருக்கின்றன. இதன் இணைப்புப் புள்ளியாக தமிழ் மக்கள் பேரவை இருக்கின்றது. இதனைத் தாண்டிய மக்களை அணுகும் காட்சிகளை அந்த அணி பெரியளவில் பதிவு செய்யவில்லை. அதிக பட்சமாக, விக்னேஸ்வரனின் ஊடக அறிக்கைகள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோரின் ஊடக சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன.

அப்படியான கட்டத்தில்தான், மழைக்கு முளைக்கும் காளான்களின் முயற்சிக்கு ஒப்பான இன்னொரு முயற்சியாக சுயாதீனக்குழு என்கிற பேச்சுவார்த்தைக் குழுவொன்று மீண்டும் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் கோரிக்கைகளோடும் சுயாதீனக்குழுவொன்று எழுந்து வந்திருந்தது. அந்தக் குழுதான், பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மீண்டும் எழுந்திருக்கின்றதா என்பது தெளிவில்லை. ஆனால், விக்னேஸ்வரனோடு பேசுவதிலிருந்துதான், பேச்சுவார்த்தைகளையே ஆரம்பிப்போம் என்கிற ஒரு வரையைறையை அந்தக் குழு வைத்திருப்பதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த முப்பது ஆண்டுகளில், ஏக ஆளுமை செலுத்திய தரப்பொன்றின் ஏற்பாடுகள் அல்லது ஏவல்களுக்கு அப்பால், சுயாதீனக்குழுக்களோ, செயற்பாட்டாளர்களோ பெரிய சாதனைகள் எதனையும் செய்துவிட்டிருக்கவில்லை. அவர்களை, அரசியல் கட்சிகளும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஒரு சாக்குக்காக அவர்களோடு பேசி அனுப்புவதோடு கடமை முடிந்தது என்கிற தோரணையோ இதுவரை வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சிக் கட்டங்களிலும் அதுவே நிலைமையாக இருந்தது. அப்படியிருக்க, பேரவை செல்லாக்காசாகி விட்டிருக்கின்ற இன்றைய கட்டத்தில், அதன் பின்னணியில் எழும் சுயாதீனக்குழுக்களினால் அதிசயங்களை நிகழ்த்திவிட வாய்ப்பில்லை.

கூட்டமைப்புக்கு எதிரான அணியினரையே ஒன்றாக இணைக்க முடியாதளவுக்கான ஆளுமைக் குறைபாட்டினை பேரவை வெளிப்படுத்திவிட்டதான கருத்து இருக்கின்றது. அப்படியான கட்டத்தில், அந்தப் பேரவையின் பின்னணியில் எழும் சுயாதீனக்குழு, தமிழ்த் தேசியக் கட்சிகளோடு என்ன அடிப்படைகளை முன்வைத்துப் பேசப்போகின்றது என்பதும் முக்கியமான கேள்வியாகும்.

அதுதவிரவும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலவற்றைப்போல பேரவையும் தன்னுடைய சிந்தனை மட்டத்தினை யாழ்ப்பாணத்தை இலக்காக்கியே வைத்துக் கொண்டிருக்கின்றது. அது, கிழக்கு மக்களையோ, அதன் புவியியல் சார் குடிப்பரம்பலையோ கருத்தில் எடுப்பதில்லை. அதனால், ஒரு பிரதேசத்தினைத் தாண்டி, அவற்றினால் கவனம்பெற முடியவதில்லை. வடக்கில் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஈபிஆர்எல்எப் எடுத்தாலும், கிழக்கில் அந்த முடிவில் இருக்க முடியாது என்று ஈபிஆர்எல்எப்பின் கிழக்கு முக்கியஸ்தர் ஒருவர் கூறுகிறார். ஆக, ஒரு கட்சியே, அதன் பிரதேச, பிராந்திய நிலைகளைக் குறித்து யோசிக்காமல், யாழ்ப்பாணத்தை இலக்காக வைத்துச் செயற்படுகின்ற நிலையில், கிழக்கு மக்களின் மனங்களை மாற்றுத்தலைமையாக தங்களை வரிந்து கொள்ளத் துடிக்கும் தரப்புக்கள் வெல்வது கடினமாகும். அப்படியான நிலையில், அது, ஏற்கனவே ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு) இன்னொரு வாய்ப்பினை இலகுவாக வழங்கிவிடும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் பல ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், அறிக்கை வழியாகவுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இயங்கு தளத்தில் இருப்பவர்களினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், ஊடக செய்திகளுக்கும், வதந்திகளுக்கும், அறிக்கைகளுக்கும் ஓரிரண்டு நாட்களே ஆயுள். அப்படியான நிலையில், மக்களோடு மக்களாக நேரடியாக இயங்கும் எந்தத் தரப்பாகினும், மேலேழுந்து வரும். அதனையே, தேர்தல் முடிவுகளும் பிரதிபலிக்கப் போகின்றன.

 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.