பதிவுகள்
Typography

ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி, ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. 

புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட மறுநாள், யாழில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில், விக்னேஸ்வரனை அடுத்த தேசியத் தலைவராக கடந்த காலத்தில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் மட்டத் தலைவர் ஒருவர், “…விக்னேஸ்வரன் அமைத்திருப்பது நாற்காலிக்கான கூட்டணி. பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குள் அந்தக் கூட்டணி கலைந்துவிடும்.” என்று சவால் விட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு காணொலி ஊடகமொன்றில், விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் வரையில் கருத்துருவாக்கத்தைச் செய்து வந்த சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர், “விக்னேஸ்வரன் அமைத்திருக்கிற கூட்டணியில் சமத்துவம் இல்லை. அதுவொரு தேர்தல் கூட்டு. வெற்றிகளை ஈட்டாது…” என்று கூறிக்கொண்டிருந்தார்.

புதிய கூட்டணி ஆரம்பமான அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் 56வது பிறந்ததினம். அன்று சமூக ஊடகங்களில் சுமந்திரனின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் ‘வாழ்த்துப்பா’ இசைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கும் இல்லாத அளவுக்கு அது அதிகரித்தும் இருந்தது. ஆனால், ஒருசில இடங்களில், புதிய கூட்டணி, சுமந்திரனுக்கான பிறந்தநாள் பரிசு என்று எள்ளல் தொனியிலான பகிர்வுகளையும் காணக் கிடைத்தது.

விக்னேஸ்வரன் அமைத்திருக்கிற புதிய கூட்டணி, அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும், கடந்த காலத்தில் அவரை நம்பியோருக்கும் நன்மை அளித்திருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம், ஒரு பருமட்டான முடிவுக்கு வரலாம். அதுவொன்றும், ஒருவருக்கும் தெரியாத முடிவு அல்ல. ஆனால், அந்த முடிவின் பின்னாலுள்ள பெரும் அவலத்தினைப் பேச வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு தன்னை மீள்பரிசோதனை செய்து கொள்ளும் போது, பரிசீலிக்க வேண்டிய கட்டங்களைக் கொண்டிருக்கின்றது.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத நபரொருவரை சமூகத்தின் முக்கிய ஆளுமையாகவும், அரசியல் தலைவராகவும் முன்னிறுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதற்காக அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். ஏனெனில், உண்மையான ஆளுமைகளினதும், தலைவர்களினதும் எழுச்சியைத் தடுத்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அப்படி மன்னிப்புக் கோரவேண்டிய தரப்பினர் ஏதும் அறியாதவர்கள் போல இன்றைக்கு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள், அனைவரும், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையாக விக்னேஸ்வரனை கடந்த காலத்தில் முன்மொழிந்தவர்கள்.

விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தரப்புக்கும் இடையிலான முட்டல் மோதல் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாகிறது. இந்தக் காலப்பகுதிக்குள் தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பொன்று தமிழ்த் தேசியப் பரப்பில் எழுந்து அடங்கிவிட்டது. அதுபோலலே, மாற்றுத் தலைமைக்கான கோசமும் என்றைக்கும் இல்லாதளவுக்கு எழுந்து, மெல்ல மெல்ல காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் ஏகநிலை வெற்றியின் பின்னரான நாட்களில், இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட சிலர், “…கூட்டமைப்பின் ஏக நிலைக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை இனிவரப்போகும் நாட்களில் அதிகரிக்கும். அந்த அதிருப்தியாளர்களை சரியான ஒருபுள்ளியில் இணைக்கின்ற ஆளுமைத்தரப்புக்களினால் மாற்றுத் தலைமைக்கான வெளியை நிரப்ப முடியும்…” என்று கூறிவந்தார்கள். கடந்த அரசாங்கத்தோடு கூட்டமைப்பு காட்டிய அதிகளவான இணக்கம், அதனை மெய்ப்பிக்கவும் செய்தது. கூட்டமைப்புக்கு எதிரான ஒரு திரட்சியை காட்டியது. ஆனால், அந்தத் திரட்சி பெரிய திரட்சியாக மாறுவதற்கு முன்னரேயே அது கலைக்கப்படுவதற்கான காட்சியும் அரங்கேறியது. அதாவது, பேரவையின் (இணைத்) தலைவராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்க வேண்டும் என்று யாழ். மையவாத அரசியல் தரப்பு காத்திருந்தபோதே அது ஆரம்பித்தது. அத்தோடு, விக்னேஸ்வரனுக்காக பேரவை தேர்தல் சார் அமைப்பு அல்ல என்று பொய்யான அறிக்கையை வெளியிடும் போதே, அது எதிர்காலங்கள் குறித்த சிந்தனையற்ற, தனிநபர்களில் தங்கியிருக்கின்ற அமைப்பென்று அம்பலப்பட்டுவிட்டது.

முள்ளிவாய்க்கால் முடிவு போன்றதொரு பேரழிவுக்குப் பின்னாலுள்ள சமூகத்தில், தோற்றம் பெறுகின்ற சிவில் சமூக அமைப்புக்களோ, செயற்பாட்டாளர்களோ மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆனால், பேரவை, விக்னேஸ்வரனுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தது. அதனால், பேரவை மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புக்கள் குறித்த எதிர்கால நம்பிக்கைகளையே சமூகத்திடம் இருந்து காணாமல் ஆக்கிவிட்டிருக்கின்றது. ஆக, விக்னேஸ்வரனை நம்பி முன்னிறுத்தி, பேரவை தோல்வியடைந்திருக்கின்றது; சிவில் சமூக அமைப்புக்களுக்கான வெளியை காணாலாக்கியிருக்கின்றது.

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தாமே என்று 2010 முதல் முழங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் போன்ற ஒருவரிடம் எந்தவித அடிப்படைகளும் இன்றி சரணடைந்து, தங்களின் இடத்தை பறிகொடுத்திருக்கின்றது. மாற்றுத் தலைமைக்கான கோசக்காரர்களின் முதல் தெரிவாக ஒருகட்டம் வரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். ஆனால், அதனை அவர், விக்னேஸ்வரனிடம் சில நாட்களுக்குள்ளேயே இழந்தார். இன்றைக்கு கூட்டமைப்புக்கு எதிரான உண்மையான மாற்றுத் தலைமை தாங்கள்தான் என்று பேச வேண்டிய கட்டத்துக்கு முன்னணி வந்திருக்கின்றது. பொதுத் தேர்தல் நேரத்தில், கூட்டமைப்புக்கு எதிராக பேசுவதைக் காட்டிலும் விக்னேஸ்வரன் கூட்டணிக்கு எதிராக அதிகமாக முன்னணி பேச வேண்டிய அபத்தம் நிகழ்ந்திருக்கின்றது.

கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை ஒரு பக்கத்தில் இணைப்பதற்குப் பதிலாக விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் வருகை, இரண்டாக உடைத்திருக்கின்றது. முன்னணியிடம் ஒரு பங்கும், விக்னேஸ்வரனிடம் இன்னொரு பங்கும் என்று பிரியப்போகின்றது. அத்தோடு, அதிருப்தி வாக்குகளில் குறிப்பிட்டளவானவற்றை மீண்டும் கூட்டமைப்பிடமே கொண்டும் சேர்ந்திருக்கின்றது; மாற்றுக் கோசக்காரர்களின் இந்தப் பிடுங்குப்பாடு.

இன்னொரு பக்கம், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையை உண்மையாக கட்டியெழுப்ப முயன்றவர்களும், அதற்கு ஒத்துழைத்த ஊடகங்களும் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்திருக்கின்றது. ஏனெனில், விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி, என்பது ஒரு கட்டத்தில் போக்கிடமற்றவர்களின் கூட்டாகவே காட்சியளிக்கின்றது. அதில், அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அமைப்பைத் தவிர ஏனைய தரப்புக்கள் அனைத்தும், கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் வரை, விக்னேஸ்வரனை கடுமையாக சாடியிருக்கின்றன. அதுவும், தமிழ்த் தேசியக் கட்சியின் என்.சிறிகாந்தா, விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் ‘பீ ரீமை’ அமைக்க முயற்சிப்பதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

விக்னேஸ்வரன் அமைத்திருக்கின்ற புதிய கூட்டணியின் திராணி, எந்த எல்லைவரை நீள்கின்றது என்றால், அதற்கான பதிலை உண்மையில் காண முடியாது. ஏனெனில், அந்தக் கூட்டணியில் ஈபிஆர்எல்எப்புக்கே வவுனியாவில் ஓரளவு வாக்குப் பலம் உண்டு. மற்றைய தரப்புக்கள் எல்லாமுமே யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தரப்புக்கள். ஆனால், அவர்களினால் கூட்டமைப்பு போன்ற கட்டமைப்புள்ள அமைப்புக்குக்கு எதிராக பெரியளவில் வாக்குச் சேர்க்க முடியுமா? என்றால், அது இல்லை. அப்படியானால், எவ்வாறான தரப்பின் வாக்குகளை நம்பிக் கொண்டு புதிய கூட்டணி உருவாகியிருக்கின்றது என்ற கேள்வி வரும். அதற்கான விடையை, விக்னேஸ்வரனால்கூட கூற முடியாது.

ஏனெனில், கூட்டமைப்பை துரோகிகள் கட்டத்துக்கு விமர்சித்துக் கொண்டு புதிய கூட்டணியை ஆரம்பித்திருக்கும் விக்னேஸ்வரன், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றால், கூட்டமைப்போடு சேர்ந்து இயங்குவேன் என்கிறார். பாராளுமன்றத்துக்குள் கூட்டமைப்போடு இணங்கி இயங்குவதற்கு தயாராக இருக்கும் ஒருவர் தலைமையேற்றிருக்கும் கூட்டணிக்கு, ஏன் மக்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்வி எழும். அதற்கு நேரடியாகவே கூட்டமைப்புக்கு வாக்களித்துவிடலாம். இப்படியான கட்டங்களில் நின்றுதான், விக்னேஸ்வரன் புதிய கூட்டணியை அமைத்திருக்கின்றார்.

ஒப்பீட்டளவில் விக்னேஸ்வரன் அமைத்திருக்கின்ற கூட்டணி, கூட்டமைப்புக்கே அதிகளவான பலன்களை அளிக்கப்போகின்றது. அது, கூட்டமைப்புக்கு எதிரான பரந்துபட்ட ஆளுமையுள்ள தரப்புக்களின் இணைவை தடுத்திருக்கின்றது. எதிர் வாக்குகளின் திரட்சியை பிரித்திருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீதான விமர்சனங்களை பெரியளவில் குறைத்திருக்கின்றது. அப்படிப் பார்க்கும் போது, விக்னேஸ்வரன் தன்னுடைய முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அவரது முன்னாள் மாணவர் சுமந்திரனுக்கும் மறைமுகமாக நன்மையே செய்திருக்கின்றார். அது, ஏதேவொரு வகையிலான நன்றி விசுவாசமாக இருக்குமோ என்னவோ?!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்