பதிவுகள்
Typography

ஜனாதிபதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ராஜபக்ஷக்கள், பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன்மூலம், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வெளியேறும் வரையில் தாம் வைத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு அப்பாலான நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையையும் மீண்டும் அடைந்து கொள்ளலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. 

ராஜபக்ஷக்களை தோற்கடித்து வெளியேற்றியதும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை பாராளுமன்றத்தோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் 19வது திருத்தச் சட்டம் ரணில்- மைத்திரி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது. அது, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிரான திருத்தமாக சொல்லப்பட்டாலும், அதன் சரத்துக்களில் ராஜபக்ஷக்களின் அரசியல் எழுச்சிக்கு எதிரான விடயங்களும் மறைமுகமாக சேர்க்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி வேட்பாளர் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற விடயம் அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. அது, 2020 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வேட்பாளராக வந்துவிடக்கூடாது என்கிற அடிப்படையில் முன்வைக்கப்பட்டது.

ஆனால், ரணில்- மைத்திரியின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் தவிடுபொடியாக்கி, பௌத்த சிங்கள பேரினவாதத்தினை பெருந்தீயாக எரியவிட்டுக் கொண்டு ராஜபக்ஷக்கள் மீண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்றார்கள். அதுவும், கட்சியிலிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு ஒதுக்கப்பட்ட கட்டத்திலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்கள், மீள எழுந்திருக்கிறார்கள். பேரினவாதத்தின் மூலம் அதனை அடைய முடியும் என்று அவர்கள் முழுமையாக நம்பிக் கொண்டு புதிய கட்சியை அமைத்து, எழுபது வருட பாரம்பரியம் கொண்ட இரண்டு கட்சிகளைப் புறந்தள்ளி முதலிடத்துக்கு வந்திருக்கிறார்கள். பொதுத் தேர்தலில் அறுதிக் பெரும்பான்மையுடனான வெற்றியை அடைவது தொடர்பில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையீனமும் இல்லை. ஆனால், அவர்கள், அறுதிப்பெரும்பான்மையைத் தாண்டி, அரசியலமைப்பில் மற்றவர்களின் தலையீடுகளின்றி தாம் விரும்பியவாறான மாற்றங்களைச் செய்வதற்கான வெற்றியை நோக்கியே இயங்குகிறார்கள். அதற்காகத்தான், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி தேவைப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ராஜபக்ஷக்களுக்கு ஒருவிதத்தில் உதவியது. அதுபோல, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடையும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக வெளிப்படையாக உதவப்போகின்றன.

நாட்டின் நீண்டகால நலன்களுக்கு ராஜபக்ஷக்களின் அரசியலில் இடமிருப்பதில்லை. அவர்கள், அதிகாரத்தின் குவிப்பு தொடர்பிலேயே நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவும் தயாராக இருப்பவர்கள். 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது முதல், ராஜபக்ஷக்கள் அதனையே நிரூபித்து வந்திருக்கிறார்கள்.

இலங்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுவதுமாக எதிர்ப்பதாக அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட காலம் முதல் ராஜபக்ஷக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில், தேர்தலில் வெற்றிபெற்றால், குறித்த பிரேரணைக்கு வழங்கிய ஆதரவினை விலக்கிக் கொள்வோம் என்றும் அறிவித்திருந்தார்கள். இன்றைக்கு (பெப்ரவரி 26, 2020 புதன்கிழமை) அதற்கான உத்தியோக அறிவிப்பை, மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வெளியிட இருக்கின்றார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால், இந்த நடவடிக்கை இலங்கையின் நீண்டகால நலன்களுக்கு துணையாக இருக்குமா என்றால், இல்லை என்பதே பதில். ஏனெனில், உடலில் காயங்கள் இருக்கும் போது, அதனை மருந்திட்டு குணப்படுத்தாமல், அந்தக் காயங்களை மறைப்பதால் உடலுக்குத்தான் கேடு. நாட்டிலுள்ள பிரச்சினைகளின் முக்கிய கட்டங்களை பொறுப்புக்கூறல் என்கிற நியாயமான நடவடிக்கைகளின் மூலம் கடக்க முடியும். அதனைப் புறந்தள்ளிவிட்டு செய்யப்படுகின்ற எதுவும், குறுகிய நலன்கள் சார்ந்ததுதான். ஐ.நா. பிரேரணையில் இருந்து வெளியேறுவது, தற்போதைக்கு தங்களுக்கு அதிகாரத்தை முழுமையாக அடைவதற்கு உதவும் என்பது ராஜபக்ஷக்களின் நம்பிக்கை. அத்தோடு, தற்போதுள்ள சர்வதேச அரசியலில் கட்டங்களில், தங்களுக்கு எதிரான நெருக்கடிகள் அதிகாரிக்கவும் வாய்ப்பில்லை என்பது, அவர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், கடந்த ரணில்- மைத்திரி அரசாங்கம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விடயங்களை சர்வதேச ரீதியில் நெகிழ்வுப்படுத்தி வைத்திருக்கின்றது. ராஜபக்ஷக்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது சந்தித்த நெருக்கடிகளுக்கு சமமான நெருக்கடிகள், மீண்டும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்பது அவர்களின் உள்ளுணர்வு. அப்படியான கட்டத்தில், எந்த எல்லை வரையிலும் சென்று ஆட முடியும் என்கிற அந்தக் கட்டத்தை நோக்கி ராஜபக்ஷக்கள் மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இராணுவம் இழைத்ததாக சொல்லப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்களில், தற்போதைய இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா முக்கியமானவர். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எதிரான நுழைவுத் தடையின் மூலம் அமெரிக்கா ராஜபக்ஷக்கள் மீது நெருக்கடியை வழங்கும் கட்டத்தை ஆரம்பித்திருப்பதாக சில தரப்புக்கள் நம்புகின்றன. ஆனால், தன்னுடைய நாட்டின் முன்னாள் பிரஜையுடனான இணக்கப்பாட்டின் பிரகாரமே, அமெரிக்கா இலங்கை தொடர்பிலான சில இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. இராணுவத் தளபதிக்கு எதிரான தடை என்பது, ராஜபக்ஷக்களுக்கான வெற்றியின் அளவை அதிகரிக்கும் நோக்கிலான நடவடிக்கை என்று மனோ கணேசனே குற்றஞ்சாட்டுகிறார்.

வெளிப்படையான அடைவுகள் சார்ந்து அந்தக் குற்றச்சாட்டில் பாரிய உண்மை இருக்கவும் செய்கின்றது. ஆனால், ஓர் இராஜதந்திர நகர்வு என்பது, வெளிப்படையான அடைவுகளைக் காட்டிலும் மறைமுகமான அடைவுகளிலேயே அதிக அக்கறையோடு இருக்கும். இராணுவத் தளபதிக்கு எதிரான தடையை, தேர்தலொன்று அண்மித்திருக்கின்ற நிலையில், அமெரிக்கா விதித்திருப்பதானது, ஆழமாக நோக்கப்பட வேண்டியதுதான். அது, கடந்த காலத்தில் ராஜபக்ஷக்களுக்கும் அமெரிக்காவுக்கும் இருந்த முரண்பாடுகளை பொது வெளியில் தக்க வைத்துக் கொண்டு, இரகசியமான முறையில் இணக்கமான நிலையொன்றை ஏற்படுத்தும் போக்கிலானதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஏனெனில், குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்ற தலைமைகளைத் தவிர்த்துவிட்டு, இரண்டாம் மூன்றாம் கட்ட நபர்களை குறிவைப்பது என்பது, நீதியின் போக்கிலானது அல்ல. அதனால், ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான நுழைவுத் தடையை வெற்றியாக அறிவிப்புச் செய்யும் தரப்புக்கள், நின்று நிதானித்து அறிக்கையிட வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில், அவசரப்பட்டு வெற்றி அறிவிப்பை வெளியிட்டு புளகாங்கிதப்பட்டு விடயங்களில் கோட்டைவிடாமல், கவனமாக இருக்க வேண்டும்.

ஜெனீவா விடயத்திலும், அதாவது 30/1 ஐ.நா. பிரேணையில் இருந்து இலங்கை வெளியேறுவது ராஜபக்ஷக்கள் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தும் என்கிற நிலை, ஆராயப்பட வேண்டியது. ஏனெனில், தேர்தல் காலங்களில் மேடைகளில் வெளியிட்ட எல்லா அறிவிப்பையும் எந்தக் கட்சியும் முழுவதுமாகச் செய்ததில்லை. அப்படியிருக்கின்ற நிலையில், தேர்தல் வெற்றிகளை இலக்காக வைத்து ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகும் அறிவிப்பை ராஜபக்ஷக்கள் கையாண்டிருக்கிறார்களா என்றும் மறுவளமாக நோக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், சமயோசிதமான தலைவர்களைக் காட்டிலும், துடுக்குத்தனமான தலைவர்களைக் கொண்டு, காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா உள்ளிட்ட வெளித்தரப்புக்கள் இயங்கினால், வெளி வேசங்களைப் பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றமடைய வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், ராஜபக்ஷக்களுக்கும் சர்வதேச இராஜதந்திர நிறுவனங்களுக்கும் இடையிலான வெளிப்படை மற்றும் இரகசியமான உறவுகளைக் குறித்து விழிப்பாக இருப்பது முக்கியமானது.

இலங்கையில் இனி வரப்போகும், பத்து வருட ஆட்சியை ராஜபக்ஷக்கள் தக்க வைப்பார்கள் என்கிற நிலையில், தமக்கான தேவைகளை ராஜபக்ஷக்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பும் எந்தத் தரப்பும், அவர்களைப் பகைப்பது சார்ந்து ஆர்வம் கொள்ளாது. ஏனெனில், கடந்த ஆட்சிக்காலத்தில் நாடுகள் சார்ந்து சார்பு நிலையெடுத்ததாலேயே, தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ராஜபக்ஷக்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். அப்படியான நிலையில், நாடுகளுக்கிடையிலான தொடர்பாடலை சார்பு நிலைகள் தாண்டி நடுநிலையாகக் கையாளப் போவதாகவும் ராஜபக்ஷக்கள் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறான கட்டத்தில், இராணுவத் தளபதிக்கு எதிரான அமெரிக்காவின் தடையும், ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு உற்று நோக்கப்பட வேண்டியவையே. அவை, வெளிப்படையான கட்டங்களைத் தாண்டி, இரகசிய அடைவுகளை அதிகம் கொண்டிருப்பவையாக இருக்கலாம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்