பதிவுகள்
Typography

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணி தவிர்ந்து, ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் முதற்கொண்டு வேட்பாளர்கள் வரையில் இறுதி செய்துவிட்டு, பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பிணக்கு இன்னமும் முடிந்தபாடில்லை. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சார்ந்து எழுந்த சர்ச்சைகள் பல மாதங்களாக நீடித்து, தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னரேயே, சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அங்கீகரித்தது. அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சஜித்தும் அவரது அணியினரும் ரணிலோடு அதிகமாகவே போராட வேண்டியிருந்தது. அதுவும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டி வந்தது. ராஜபக்ஷக்களின் மாபெரும் வெற்றிக்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து கொண்டே சஜித்துக்கு எதிராக வேலை செய்த தரப்புக்களும் காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவை, அந்தக் கட்சியின் செயற்குழு, பாராளுமன்றக்குழுக் கூட்டங்கள் வரையில் பிரதிபலித்தன. இன்றைக்கும் அந்த நிலை மாறிவிடவில்லை என்று சஜித் அணியினரும், அவருக்கு ஆதரவாக இருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரணில் தலைமையில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களோ, கூட்டணிக் கட்சிகளோ விரும்பவில்லை. அவர்கள், சஜித்தை முன்னிறுத்திச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஆனாலும், 26 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்கும் 70 வயதைத் தாண்டிவிட்ட ரணிலுக்கு, தலைமைத்துவத்தை விட்டுக்கொடுப்பதில் உடன்பாடில்லை. ஆட்சியைப் பிடிப்பதைக் காட்டிலும் தன்னுடைய இறுதிக்காலம் வரையில் ஐக்கிய தேசியக் கட்சி என்பது, தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழேயே இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கின்றார். இந்த நினைப்பை, அவரது சகாக்களும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களும் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கடந்த மைத்திரி- ரணில் ஆட்சிக்காலத்தின் பெரும் சர்ச்சைகளில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் பிரதான இடத்தைப் பிடித்தது. (இன்னொன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்). அது, நாட்டு மக்களிடையே கடந்த அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரணிலுக்கு மிகவும் நெருக்கமான ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் நீண்ட விவாதங்கள் நடந்தன. அதனைப் பிடித்துக் கொண்டும் ராஜபக்ஷக்கள் மேலெழுந்து வந்தார்கள். ஆனால், தற்போது, ரணிலும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினரும், ராஜபக்ஷக்களின் வெற்றியை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மாதிரியான காட்சிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஏனெனில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எந்தவித ஆர்வமுமின்றி, கட்சி துண்டு துண்டாக உடைந்து போனாலும் பரவாயில்லை என்கிற நிலைப்பாட்டோடு இயங்குவதாகத் தெரிகின்றது.

ரணிலுக்கும்- சஜித் அணியினருக்கும் இடையிலான பிணக்கு இன்னமும் தீர்க்கப்படவில்லை. தேர்தலில் என்ன சின்னத்தில் போட்டியிடுவது தொடங்கி, யார் தலைமையேற்பது வரையில் பிரச்சினை நீடிக்கின்றது. ஆனாலும், சஜித்தும் அவரது ஆதரவாளர்களும் கடந்த திங்கட்கிழமை ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்கிற புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ரணில் அறிவித்திருக்கின்றார். செயற்குழு என்பது, கட்சியின் தலைவர் நியமிப்பது; அதில் நியமிக்கப்படுபவர்கள், தலைவரின் நிலைப்பாடுகளை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாட்டோடு இருப்பதாக, அந்தக் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைபடுகிறார்கள். அதனை ஒப்புவிப்பது மாதிரியாக, தன்னை விமர்சிக்கும் உறுப்பினர்களை ரணில் செயற்குழுவில் இருந்து நீக்கியும் வந்திருக்கின்றார். இப்பிடியான கட்டத்தில் நின்றுகொண்டுதான், ராஜபக்ஷக்களுக்கு எதிரான பிரதான தரப்பு தேர்தலை எதிர்கொள்ளக் போகின்றது.

தேர்தல் அரசியல் என்பது, எதிரிகளை உதிரிகளாக உடைத்தும் பிரித்தும் வைப்பதனூடு வெற்றிகளை இலகுவாக்க முடியும் என்கிற சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அதனை, ஒவ்வொருவரும் கைக்கொள்ளவும் செய்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைத்து பாரிய வெற்றியொன்றுக்காக ரணில் காத்திருந்தார். ஆனால், ராஜபக்ஷக்கள் அதனைப் புரிந்து கொண்டு மைத்திரியோடு இணைந்தேதான் தேர்தலில் போட்டியிட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசத்தில் தோற்றார்கள். ஆனால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்திக்கின்ற நிலையை, ராஜபக்ஷக்கள் ஏற்படுத்தவில்லை. மாறாக, ரணிலும் அவரது அணியும் ஏற்படுத்தியிருக்கின்றது. ராஜபக்ஷக்களின் அதிகபட்ச நிலைப்பாடு, சஜித் மேலெழுவதை எப்படியாவது தடுப்பதாகும். அவர், ஒரு கட்சியின் தலைவராக எழுவது, தங்களுடைய எதிர்கால அரசியலை பாதிக்கும் என்பது ராஜபக்ஷக்களின் பெரும் கவலை. அதனைத் தடுப்பதற்காக, ரணில் அணியைப் பாவிப்பதற்கு விரும்புகிறார்கள். தேர்தல் காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தை ராஜபக்ஷக்கள் பேசினாலும் தேர்தலுக்குப் பின்னரான அதனைக் குறித்து பேசுவதுமில்லை, அதனோடு சம்பந்தப்பட்ட விசாரணைகளை முன்னெடுப்பதுமில்லை. அது, ராஜபக்ஷக்களுக்கும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான ஒருவிதமான இணக்கப்பாடாகும்.

19வது திருத்தச் சட்டத்தின் மூலம் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது ராஜபக்ஷக்களுக்கு தவிர்க்க முடியாதது. அப்படியான நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிடுவது தொடங்கி, ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவதான அறிவிப்பு ஈறாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவு வரை அவற்றை தேர்தல் வெற்றிக்கான விடயங்களாக ராஜபக்ஷக்கள் கையாள்கிறார்கள். கட்சிகளை உடைப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பது என்பதெல்லாம் ராஜபக்ஷக்களுக்கு இலகுவான வேலை. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அதன் அனைத்துக் கட்டங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வென்றது போல, பொதுத் தேர்தலிலும் பௌத்த சிங்கள பேரினவாதத் தீயை முன்னிறுத்தி வென்றுவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால், வெளிப்படையாக எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் வேலைகளைச் செய்வதிலிருந்து இம்முறை விலகியிருக்கிறார்கள். தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததும், அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால், எந்தவித சங்கடங்களும் இன்றி, அடுத்த கட்சிகளை உடைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படியான நிலையில், 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஓரளவுக்கு தக்கவைக்கப்பட்ட பாராளுமன்றத்துக்கான அதிகாரம், மீண்டும் பறிக்கப்படாமல் இருப்பதற்கு பலமான எதிர்க்கட்சியொன்று அவசியமாகும். அது, எதிர்காலத்தில் ஆட்சியை அமைப்பதற்கான பலமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இருப்பதும் தவிர்க்க முடியாதது. அது, நாட்டின் அனைத்து இன மக்களிடமும் நம்பிக்கை பெறுவதோடு, கூட்டணிக் கட்சிகளிடமும் இணக்கமாக இருக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களை நோக்கிய நகர்வுக்கு எந்தச் சக்தி, இடையூறாக இருந்தாலும் ஜனநாயகத்தின் கட்டங்கள் மீது மீண்டும் ஏதேச்சதிகாரம் தலையீடுகளைச் செய்வதற்கான சூழல் ஏற்படும்.

ஒரு அரசியல் தலைமைத்துவம் என்பது, ஆட்சி அதிகாரங்களைக் குறித்து மாத்திரம் சிந்திப்பதல்ல. அதனையும் மீறி அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதனூடும் நிலைபெற வேண்டும். 18வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை நிலையான ஒன்றாகவும், குடும்ப ஆட்சிக்கான அடித்தளமாகவும் நிலைநிறுத்திய மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து, ஆட்சியைப் கைப்பற்றுவதற்கு நீண்ட காத்திருப்பும், உழைப்பும் தேவைப்பட்டது. 2015இல் ராஜபக்ஷக்களைத் தோற்கடித்து, 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, நிறைவேற்று அதிகார முறைமையின் சில இறகுகள் பிடுங்கப்பட்டு, பாராளுமன்றத்துக்கான அதிகாரம் பங்கிடப்பட்டது. அதுதான், மைத்திரியின் ஒக்டோபர் சதிப்புரட்சிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கும் காரணமானது. அப்படியான நிலையில், அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தின் வேர்களைப் பலப்படுத்தி, குடும்ப ஆட்சியின் நீட்சிக்கு யார் ஒத்துழைத்தாலும், அது மிகப்பெரிய துரோகமாகும். அது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக ரணிலால் நிகழ்த்தப்படுமாக இருந்தால், அவரினதும் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களினதும் நிரந்தரத் தோல்வியாக முடியும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்