பதிவுகள்
Typography

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலானது. இவ்வாறான நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று தெரிகிறது. 

ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உயிரிழப்புக்கள், தற்போது இத்தாலியை படுபயங்கரமாக உலுக்கிக் கொண்டிருக்கின்றன. உலகம் பூராவும் 17,000க்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் கொரோனாவால் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ், ஒரு மனிதனை உடனடியாக உயிரிழப்பை நோக்கி தள்ளும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டாலும், அந்த வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மையைப் பொறுத்து, உயிரிழப்பை நோக்கி செலுத்தும் ஊக்கியாக செயற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, கொரோனா வைரஸ், 70 ஆண்டுகளுக்கு முன்னரேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் தற்போதைய வடிவம் தொடர்பிலான சிக்கலும், அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாமையுமே உலகை உலுக்கக் காரணமாகும். அப்படியான நிலையில், தற்காப்பு என்கிற ஒன்றை வார்த்தையே கொரோனாவிடம் இருந்து உலகைக் காப்பாற்றும் பெரிய ஆயுதமாக இன்றைக்கு மாறியிருக்கின்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீனாவில் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்துவதாக செய்தி வெளியானதும், உலகம் ஒரு சில நாட்களுக்கு சில முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கிச் சென்றது. வைரஸ் தொற்றோடு குறிப்பாக, அதிக காய்ச்சல் உள்ளிட்டவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அதிக நடமாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்காமல், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அவை, சில நாட்களோடு கைவிடப்பட்டன. வெளிநாட்டவர்கள் கடந்து செல்லும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் எந்தவித பரிசோதனைகளும் இன்றி பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்று எல்லா நாடுகளையும் நோக்கி கடத்தப்பட்டுவிட்டது. உலக நாடுகளின் அசண்டையீனமொன்று இன்றைக்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ளவர்களை அவரவர் வீடுகளுக்குள் முடக்கிப் போட்டிருக்கின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஆரம்பமாக, வெளிநாட்டவர்கள் உள்நுழையும் விமான நிலையங்களை மூடிவிடுமாறு சில வாரங்களுக்கு முன்னரேயே மருத்துவர்கள் அரசாங்கத்தைக் கோரியிருக்கிறார்கள். ஆனாலும், அதனை ஒரு சரியான ஆலோசனையாக அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல், கடந்த 18ஆம் திகதி வரையில் விமான நிலையங்களை இயங்கியது. அதுவரையில், வெளிநாட்டவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அதுதான், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு அடிப்படைக் காரணியாக இருந்திருக்கின்றது. அ்த்தோடு, கொரோனா தொற்றுள்ளவர்கள், அதனை மறைத்துக் கொண்டு நாட்டுக்கள் வருவதற்கும், மற்றவர்களுக்கு பரப்புவதற்கும் காரணமாகியிருக்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றோடு முதலாவதாக இனங்காணப்பட்டவர் ஒரு சீனப் பெண்மணி. அவர், சிகிச்சை பெற்று குணமாகி நாடு திரும்பினார். இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதி இரு வாரங்களாகும். ஆனால், அதன் பின்னரான கொரோனா தொற்று என்பது, இத்தாலிய சுற்றுலாப்பயணிகளோடு தங்கியிருந்தவரோடு ஆரம்பித்தது. அதன் பின்னர், இத்தாலியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது, அங்கிருத்து தப்பிவந்தவர்களினால் ஏற்பட்டது. இந்தப் பத்தி எழுதப்படும் போது, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 92ஐ தாண்டிவிட்டது. அதில், ஒருவர் சுவிஸ் நாட்டிலிருந்து மத போதனைக்கான யாழ்ப்பாணம் வந்து சென்ற கொரோனா தொற்றுக்கு உள்ளான பாஸ்டர் ஒருவரோடு நெருங்கிப் பழகியவராவார். இப்போது, அந்தப் பாஸ்டரோடும், அவரோடு பழகியதால் தொற்றுக்கு உள்ளானவரோடும் பழகியவர்களை தனிமைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்படுகின்றது. குறித்த பாஸ்டர், இந்த மாதம் 15ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறியிருக்கின்றார். அப்படி, இத்தாலி உள்ளிட்ட தொற்று அச்சுறுத்தலுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழைந்து, சுய தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு இன்றி இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசினால் முறையான கண்காணிப்பு செய்யப்படுகின்றதா என்கிற கேள்வி மக்களிடம் பெரும் அச்சமாக நீடிக்கின்றது. ஏனெனில், இறுதி நேரத்தில் நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் அளவுக்கு, ஆரம்ப கட்டங்களில் வைரஸ் தொற்றோடு வந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிக்கவில்லை. அதனால், அவர்கள் பெரும்பாலும் வைரஸ் காவிகளாக இருக்கிறார்கள். அது, பெரும் அச்சுறுத்தலாகும்.

ஊரடங்கும் சட்டம் என்பது இலங்கை மக்களுக்கு புதிதான ஒன்றல்ல. தொடர்ச்சியாக யுத்தமும், வன்முறைகளும் நீடித்த நாட்டில் அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்திற்கும் வேலையிருந்தது. ஆனால், தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்திற்கும், முன்னையவற்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னைய ஊரடங்குச் சட்ட காலத்தில், அதனை மீறினால் மீறுபவர்களுக்கு மாத்திரமே பாதிப்பு வரும். ஆனால், தற்போதைய ஊரடங்குச் சட்டத்தை மீறி, வைரஸ் தொற்றை வீட்டுக்குள் கொண்டு வருவதானாது, சம்பந்தப்பட்ட நபரை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்தோரையும் பெரும் பாதிப்புக்குள் தள்ளிவிடும். அதனால், நாடு எதிர்கொண்டிருக்கின்ற அவசரகால நிலையை புரிந்துகொண்டு இயங்குவது அடிப்படையானது.

அரசாங்கமும், அதன் நிர்வாகக் கட்டமைப்பும் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை உள்வாங்கி, சுகாதாரத்துறையின் ஆலோசனைகளுக்கு அமைய நடப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒத்துழைப்பின்றி செயற்படுவதானது துரோகத்தனமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்றை ஒரு சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது இன்னும் மோசமான விளைவுளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது மாத்திரமின்றி, நாளாந்தம் வேலை செய்தாலே அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியும் என்கிற கட்டத்தில் வாழும் மத்தியதர மற்றும் அதற்கும் குறைந்த வருமானமுள்ளவர்கள் அதிகமுள்ள இலங்கையில், ஊரடங்குச் சட்டத்தினால் தொழில் முடக்கம் நீடித்தால், அது இன்னும் பாரிய இடர்பாடுகளை ஏற்படுத்தும். அதனால், ஒருசில நாட்களுக்குள், அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்குள் ஒட்டுமொத்தமாக அத்தியாவசிய நடவடிக்கைகளைப் பின்பற்றி வைரஸ் தொற்றிலிருந்து மீளவேண்டும். அதுதான், இப்போதைக்கு அவசியமானது. 

-புருஜோத்தமன் தங்கமயில்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்