பதிவுகள்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம் நாட்டை பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடங்கி அரசியலமைப்பு சிக்கல்கள் வரை நாளுக்கு நாள் மேலேழுந்து வருகின்றன. இலகுவாக தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளைக்கூட ராஜபக்ஷக்கள் தேர்தலை இலக்கு வைத்து கையாள முனைவது, பிரச்சினைகளின் அளவை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அது, கொள்ளை நோயினைக் காட்டிலும் நீண்டகால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளைக் காண்பிக்கின்றது. 

எப்போதுமே ‘தனி ஆவர்த்தனம்’ என்ற ஒற்றை நிலைப்பாட்டில் ராஜபக்ஷக்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆட்சியாக இருந்தாலும், அதன் பலனாக இருந்தாலும், பெயர் புகழாக இருந்தாலும் அது, தமக்கானதாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியான நிலையிலேயே கொரோனா அச்சுறுத்தலையும் அவர்கள் கையாள நினைத்தார்கள். போரை வெற்றி கொண்ட இராணுவத்தினரைக் கொண்டு கொரோனாவையும் வீழ்த்திவிடுவோம் என்று நம்பினார்கள். ராஜபக்ஷக்களின் தீவிர பிரச்சாரப் பீரங்கிகள் அதனை ஒவ்வொரு நாளும் ஒப்புவிக்கவும் செய்தார்கள். அதாவது, “விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு, கொரோனாவை அழிப்பதொன்றும் பெரிய வேலையில்லை.” என்றார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கில் கடற்படையினர் கொரோனா தொற்றுக்களோடு அடையாளம் காணப்பட்டார்கள். தெற்கில், தொற்றுக்குள்ளான கடற்படையினரின் குடும்பங்கள் அச்சுறுத்தலுக்குள் தள்ளப்பட்டார்கள். சில குடும்பங்கள் அயலில் உள்ளவர்களினால் தாக்கப்பட்டார்கள்; ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.

நாட்டுக்காக பாரிய சேவையாற்றி வரும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரை மக்கள் அவமானப்படுத்தக் கூடாது, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இறைஞ்சும் நிலை, பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்பட்டது. இது, ராஜபக்ஷக்களின் தனி ஆவர்த்தன நிலைப்பாடுகளினால் ஏற்பட்ட ஒன்றே.

கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான செய்தி வெளியாகி பரபரப்பான நாட்களில் ஒரு வைத்தியர் இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்..., “கொரோனா வைரஸ் தொற்றினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் வைத்தியத்துறையினரே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விடயத்தை அரசாங்கம் பாதுகாப்புத் தரப்பிடம் கையளித்தமை ஏற்கக் கூடியதல்ல. கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களைக் கையாள்கிற இராணுவத்தினருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. பொதுவான அறிவுறுத்தல்களே அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு, அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. பணியில் ஈடுபட்டிருக்கின்ற வைத்தியர்களிடம், முகக் கவசங்களைக் இராணுவத்தினர் இரவல் கோருகின்ற நிலையும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து நூற்றுக்கணக்கில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை பெரிய அதிசயம் இல்லை...”

அவசர நிலையொன்று நீடிக்கும் நேரங்களில், இராணுவமும் பொலிஸாரும் அதிகாரங்களோடு இருப்பார்கள். சட்ட ஒழுங்கு, பாதுகாப்பு மாத்திரமல்ல, அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களில் கூட அவர்களின் தலையீடு இருக்கும். ஆனால், கொரோனா என்பது, ஆயுதங்களைக் கொண்டு அடக்கிய ஆளக்கூடிய விடயமல்ல. அது, மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொள்ளை நோய். அதனைக் குறித்த ஆராய்ச்சிகள் கடந்த சில மாதங்களாகவே ஆரம்பித்திருக்கின்றன. அப்படியான நிலையில், தமது குறுகிய தேவைகளுக்கான இராணுவத்தின் கீழ் அனைத்து விடயங்களையும் கொண்டுவந்து விடயங்களை ராஜபக்ஷக்கள் சிக்கலாக்கி விட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், இராணுவத்தினரை கொண்டாடித் தீர்த்த தென் இலங்கை இன்றைக்கு, அவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கிறது.

இன்னொரு பக்கத்தில், பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த பாராளுமன்றம் இராணுவப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. கடந்த மார்ச் 02ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்ட பாராளுமன்றம், எதிர்வரும் யூன் 03ஆம் திகதிக்குள் கூட்டப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சொல்கின்றது. அப்படிக் கூட்டப்படாதவிடத்து, ஏற்கனவே இருந்த பாராளுமன்றம் மீள் நிறுவப்படும் என்று அரசியலமைப்பு நிபுணர்கள் வாதிடுகிறார்கள். அதுவும், 2015 ஆண்டின் பொதுத் தேர்தலின் பிரகாரம், ஐந்து ஆண்டுகள் கொண்ட பாராளுமன்றத்தை மீள் நிறுவுவதற்கான காலம் இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்றிருக்க வேண்டிய பொதுத் தேர்தல், கொரோனா அச்சுறுத்தலினால், திகதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர், யூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது என்ற அரைகுறை அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. அந்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிவிப்பே அரசியலமைப்புக்கு மீறியது என்ற விடயம் இப்போது பேசு பொருளாகியிருக்கின்றது.

யூன் 3ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் தேர்தலொன்றை நடத்தி கூட்டப்படாதுவிடத்து, பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி இரத்தாகும். அப்படியானால், ஏற்கனவே இருந்த பாராளுமன்றம் மீள் நிறுவப்படும். அப்படியான நிலையில், பாராளுமன்றத்தைக் கலைக்காமல், பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. அடிப்படையில் அரசியலமைப்பை தாண்டிய அதிகாரத்தினை தேர்தல் சட்டங்கள் கொண்டிருக்கவில்லை. ஆக, அரசியலமைப்புச் சிக்கலொன்றை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தச் சிக்கலைக் கையாள்வது தொடர்பில், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை ராஜபக்ஷக்கள் உடனடியாக நிராகரித்திருக்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தேர்தலொன்றுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலையில், பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதன் மூலம், ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்பது எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கோரிக்கை. அரசாங்கத்தைக் கவிழ்க்க மாட்டோம், ஊதியங்களைப் பெறமாட்டோம் என்பது தொடங்கி, நியாயமான விடயங்களைக் கூறி, அரசியலமைப்பின் படி ஒழுகுவதற்கான ஆர்வத்தினை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராளுமன்றம் இல்லாத நிலையில், ஒரு இடைக்கால அமைச்சரவையினால் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே நிதி அதிகாரத்தை கையாள முடியும். அவ்வாறான நிலையிலும், பாராளுமன்றமொன்றில் தேவை, யூன் 3ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்படுகின்றது.

ஆனால், இவ்வாறான சிக்கல்களையெல்லாம், வாய்ச்சவடால்களின் வழி கடந்து விடலாம் என்று ராஜபக்ஷக்கள் நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்கினால், கொரோனாவுக்கு எதிரான போரை ராஜபக்ஷக்கள் நடத்தினார்கள் என்கிற பெயர் அடிபடும் என்பது அவர்களின் நினைப்பு. அது, பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான காட்சிகளை சிலவேளை கலைத்துவிடும் என்பதும் அவர்களின் பயம். அதற்காக, பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவது என்கிற நியாயமான கோரிக்கைகளை பௌத்த பீடங்களைக் கொண்டு புறந்தள்ளுவதற்கான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின் அரசியலமைப்புத் தொடர்பிலான சிக்கல்களை பௌத்த பீடங்களைக் கொண்டு தீர்க்க முனையும் ராஜபக்ஷக்களின் செயற்பாடுகள் மூலம் அவர்களின் உண்மையான நோக்கத்தினைப் புரிந்து கொள்ள முடியும். சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் அரசியலமைப்பை மீறிய சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. அதனை ஒரு ஒழுக்கமாகவே இப்போதும் முன்நகர்த்த நினைக்கிறார்கள்.

“கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், தென் கொரியா பாராளுமன்றத் தேர்தலை நடத்தியிருக்கின்றது. அப்படியான நிலையில், எம்மால் ஏன் தேர்தலை நடத்த முடியாது?, டெங்கு நோயினால் 700 பேர் கொல்லப்பட்ட காலத்தில் கூட தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, இப்போது பத்துக்கு குறைவானவர்களே கொரோனாவால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்படியானால் தேர்தலை நடத்த முடியாதா..?” என்று ராஜபக்ஷக்களின் அமைச்சர்கள் ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தென் கொரியா தேர்தலுக்காக முன்னெடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையோ, அதற்காக ஒதுக்கிய நிதியின் அளவையோ இலங்கையினால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அப்படியான நிலையில், கொரோனா அச்சுறுத்தல் என்பது பூச்சியம் என்கிற கட்டத்தை அடைகிற வரையில் தேர்தலொன்றை நோக்கி செல்வதென்பது, மக்களை மரணத்தின் வெளியில் நிறுத்துவதுதான். இப்போது, தேர்தலைக் காட்டிலும் செய்ய வேண்டியது ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது. ஆனால், அதற்கு ராஜபக்ஷக்கள் இணங்க மாட்டார்கள். அதுதான், அவர்களின் கடந்த கால வரலாறு உணர்த்துவது. ஆக, ஆபத்து இன்னும் பெரிய வடிவில் காத்திருக்கிறது. மக்கள்தான் அவதானமாக இருக்க வேண்டும்!

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'