பதிவுகள்

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன்.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடும், அவ்ரகளது வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர்.

அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

வாழும் பிரபாகரன் !

கட்டுரைக்கான இந்தத் தலைப்பு வாசகக் கவர்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டது என நீங்கள் கருதுவீர்களானால் அதற்கான மறுப்பினை முதலிலேயே தெரிவித்து விடுகின்றோம். இந்தச் சுற்றுப் பயணங்களின் போது நாம் சந்திதுத்துப் பழகிய மனிதர்களின் மன உணர்வுகளில், விருப்பங்களில், ஏக்கங்களில், தொக்கி நின்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்தத் தலைப்பு என்பதனைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றோம்.

இது ஓரு குறுகிய காலப் பயணசுற்று என்பதால், அவசியம் செல்ல வேண்டிய இடங்கள், சந்திக்க வேண்டிய நபர்கள் குறித்து மிகச் சிறிதாகவே திட்டமிட்டிருந்தோம். செய்தியாளர்கள் என்றில்லாது, மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டு உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வது என்பது செயல்வழி நோக்கமாகவும் இருந்தது. அதனால் எங்கள் சந்திப்புக்களும் பயணங்களும் அதிகம் மக்கள் சார்ந்ததாகவும் இருந்தது.

தமிழகத்துக்குள் தரையிறங்கும் விமானப் பயணங்களின் போது, அறிமுகமாகும் நட்புக்கள் சில வேளைகளில் பெரும் அவஸ்தையாகிவிடும். நன்றாகப் பேசியபடி இருப்பார்கள். நாமும் நாலு விடயம் அறிந்து கொள்ளும் ஆவலில் அக்கறையாகப் பேசியபடி இருப்போம். திடீரென விமானத்துள் விற்பனைச் செய்யப்படும் வரியற்ற வெளிநாட்டு மதுபாணப் பாட்டில்கள் சிலவற்றை வாங்கி, எங்கள் இருக்கைகளின் கீழ் வைத்துவிட்டு, 'சார் வெளியில் கொண்டு வந்து விடுங்கள். வாங்கிக் கொள்கின்றேன்... ' என்பார்கள். இதற்காக எந்த முன் அனுமதியும் அவர்கள் கேட்பதில்லை. போதாக்குறைக்கு விமானப் பணியாளரிடம் அவற்றை வாங்கும் போதே அவை எமக்காக வாங்கப்படுவது போலவே போக்குக் காட்டி விடுவார்கள். அதனால் அவற்றை விமானத்துக்குள் விட்டுச் செல்லவும் முடியாது.

கதியே என்று வெளியில் எடுத்து வந்தால் சுங்கப் பரிசோதகர்கள், பாட்டில்களின் தொகை அடிப்படையில் வரி விதிப்புக்கு அடையாளமிடுகின்றார்கள். அட இதற்கான கட்டணம் நமது கையால் போகப் போகின்றதே எனக் கவலைப்படுகையில், அதிலிருந்து மீட்பது முதல், வெளியே வந்து அவற்றைப் பெற்று, விமான நிலைய வளாகத்துக்குள் வைத்தே சந்தைப்படுத்துவது வரை அவர்களது வலைப்பின்னல் அசத்தலாகவே இருக்கிறது. இலாபத்தைப் பாக்கெட்டிலும், சிரிப்பை நமக்கும் செலுத்தியவாறு கையசைத்துப் பிரிந்து செல்கிறார்கள்.

இது ‘ஜெண்டில்மேன்’ ஷங்கரின் உண்மைக் கதை !

இத்தகைய நகர மாந்தர்களிடம் இருந்து நழுவி, கிராமங்களைச் சென்றடைந்துவிட்டால், பார்த்துப் பார்த்துக் கவனிக்கும் பவ்வியமான அன்பு. ஆனால் அரசுகளாலும், அரசியற்கட்சிகளாலும் அந்த மக்கள்தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பதுதான் தொடர் துயரம்.

தமிழக எல்லைக் கிராமங்களில், சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் நாம் சந்தித்தபோது, கேரள அரசு தமக்கிழைத்த துரோகங்கள் குறித்துச் சொல்லியவற்றை மீள்நினைவூட்டியாறே பேசுகின்றார்கள் அம் மக்கள். தமிழகத்தில் ஆட்சி மாறியிருப்பது ஆறுதலாக இருக்கிறது என்கின்ற போதும், முல்லைப் பெரியாறு விடயத்தில் இன்னமும் மாற்றங்கள் காணப்படாதிருப்பதும், தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாகவும் குறைப்படுகின்றார்கள்.

முன்னைய திமுக ஆட்சிக்கு, தற்போதைய ஆட்சி பரவாயில்லை எனக் கருத்துதத் தெரிவிக்கின்ற போதும், அதிமுக ஆட்சி குறித்த நம்பிக்கை இன்னமும் மக்கள் மத்தியில் வலுக்கவில்லை என்பது அவர்கள் கருத்துக்களில் வெளிப்படுகின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்ததைச் செய்யக் கூடியவர் எனச் சொல்லும் அதே மக்கள், அரசியலுக்காக அவர் தடம்புரண்டுவிடக் கூடும் என்று அவநம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

திமுக என்ற பாரம்பரியத்தில் அக்கட்சிக்கான ஆதரவு இன்னமும் இருந்த போதும், திமுக தலைவர் கருணாநிதி செல்வாக்கிழந்த தலைவராகவே காணப்படுகின்றார். ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவே பலரும் நம்புவதும், இந்தச் செல்வாக்கிழப்புக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது.

சுவிற்சர்லாந்தின் 15 எல்லைக் கடவைகள் இன்று திறக்கப்பட்டன !

காங்கிரஸ் கட்சி தொடர்பில் கடும் விமரசனங்களை முன் வைக்கும் இந்த மக்களோடு உரையாடினால் , தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்ற கோஷங்கள் எவ்வளவு கற்பனா வாதம் என்பது தெரிந்து போகும். சீமானின் நாம் தமிழர், வை.கோவின் மதிமுக, மே 17 இயக்கம் என்பன, தமிழுணர்வாளர்களிடம் ஆதரவு பெற்றுள்ளன. ஆனால் என்ன..? சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கு மாறாக, போராட்ட குணம் மிக்க ஒரு மக்கள் சமூகப் பெருவெள்ளம், சிறுதுளிகளாக மாறிப் போகவே இவர்களது ஆளுமை பயன்படுகிறது என்பது வேதனையான உண்மை.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளப் பகுதிகளில் காணப்படும் அச்சம் மற்றொரு வகையானது. இதனை ஒருவகையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர் தரப்பில் உருவாக்கப்படும் அச்சத்துக்குச் சமமானதாகக் கொள்ளலாம். நாளாந்த உணவுத் தேவைகள் பலவற்றுக்குத் தமிழகத்தில் இருந்து வரும் லாரிகளை எதிர்பாரத்திருக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தீவிரம் காட்டுவது, தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்துவதற்கு அல்லது நிலைநிறுத்துவதற்கு என்பதாகக் கொள்ளலாம். இது தமிழர்களுடன் இயைந்து வாழ விரும்பும் சிங்கள மக்களும், அரசியல் அதிகாரம் என வரும் போது, அது தமக்கானதாக இருக்க வேண்டும் எனக் கொண்டிருக்கும் சிந்தனைக்கு ஒப்பானது போல் தெரிகிறது.

நடைமுறையில் சமாதான விருப்பாளர்களாகவும் அவ்வப்போது அறிவிப்புக்களில் காட்டிக் கொள்கிறது கேரளம். தமிழகத்திலிருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால், அவ்வாறான வருகையாளர் தொகை வீழ்ச்சி கண்ட போது, குமுளியில் கேரளக் காவல்துறை வருக வருக எனப் பதாகை கட்டி தமிழக பக்தர்களை வரவேற்றுக் கொண்டது. ஆனால் சபரிமலை யாத்திரீகர் தரிப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும் பதாகையில், கேரள முதல்வர் மலையாளத்தில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஒன்றுபட்டுப் போராட மலையாளிகளுக்கு அழைப்புவிடுக்கையில் சாயம் வெளுத்துவிடுகிறது.

நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !

இந்த விவகாரத்தின் பாதிப்புகளால், கேரளத்தின் உள்ளகத்தில் ஏற்படக்கூடிய எதிர்பலைகளை, சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் போலவே இனஅரசியல் மயப்படுத்தி வருகிறது கேரளம் என்பதும் ஆங்காங்கே தெரிகிறது. இது தொடர்பில் சிங்களப் புத்திஜீவிகள் பலர் மௌனம் சாத்தித்து வந்தது போலவே, கேரள அறிவுஜீவிகள் பலரும் கண்டும் காணாதிருப்பது போலவும் தெரிகிறது.

கேரளத்தின் இளைய தலைமுறையை இனம் சாரந்த பற்றாளர்களாகவும், கேரளத்துக்கான கலைச் சிறப்புக்கள் மிக்கவர்களாகவும் பயிற்றப்படுவதில் காட்டப்படும் அக்கறை, தமிழகத்தைப் பொறுத்தவரையில் காட்டப்படுவது இல்லை என்றே சொல்லாம். இளைய தமிழகம் சினிமா சார்ந்தே அதிகம் சிந்திப்பதாகப்படுகிறது.

எல்லைக் கிராமங்களிலிருந்து தஞ்சாவூர் கும்ப கோணம் பகுதிகளுக்கு நகர்ந்தால், இலக்கு வைத்த துப்பாக்கியுடன், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழர் திருநாள் வாழ்த்துக் கூறி வரவேற்று ஆச்சரியம் தருகின்றார்...

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.