பதிவுகள்

போருக்குப் பின்னைய சிறிலங்காவில் துரித மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் அவற்றில் சில வேறுபாடுகளும் தெரியவே செய்கின்றன. பின்னர் பொருத்தமான இடங்களில் அவை பற்றிப் பார்க்கலாம். சிறிலங்கா தலைநகர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால்பதிக்கும் புதிய நபருக்கு அந்த விமான நிலைய நடவடிக்கைகளில் எந்தவித வித்தியாசத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.

அவ்வளவு இயல்பாகவிருக்கிறது. சில வருடங்களுக்குள் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளமையால், பல வசதிகளைக் கொண்டுள்ளது விமான நிலையம். இலவச இணைய வசதியுடன் வைக்கப்பட்டிருக்கும் கணினிகளில் தமிழ் மொழியிலும் இணைப்பு ஏற்படுத்த முடிகிறது. விமான நிலையத்தின் பாதுகாப்பு, விமானப்படையினரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய தொகையினரைத் தவிர ஏனைய படையினர் ஆயுதம் தரிக்காதவர்களாகவே காணப்படுகின்றனர்.

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடு அவர்களது      வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

எல்லா விமான நிலையங்களிலும் உள்ளது போன்றே குடிவரவு குடியகல்வுப் பகுதியில் சிறிலங்கா கடவுச் சீட்டுக்குரியவர்களுக்கு தனியாகவும், வெளிநாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தனியாகவும் சோதனைகள் நடைபெற்று முத்திரையிடப்படுகிறது. இது இயல்பாகவே நடைபெறுவது போலத் தெரிகின்ற போதும், அங்கிருந்துதான் விசாரணைக்குரியவர்கள் என சந்தேகிக்கப்படுவர்கள் தெரிவு செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

நாம் சென்ற போதும் ஒரு தமிழ் இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அதற்கு மேல் அவர் குறித்த விபரங்கள் எதுவும் அங்கு வெளிப்படவில்லை. அவர் எதாவது ஒரு நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவரா? அல்லது விடுமுறைக்குத் திரும்பி வந்தவரா..? எதுவும் தெரியவில்லை. அது குறித்து எந்தவித பரபரப்புக்களும் இல்லை. எல்லாம் இயல்பாக நடப்பது போலவே இருந்தது.

இது குறித்து ஊடகவியலாளர் ஒருவரிடம் பின்னர் விசாரித்த போது, அன்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 பேர், விமான நிலையம் வந்திறங்கிய போது, அவர்களில் குறிப்பிட்ட சிலர் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை எனவும், விமானநிலையத்தில் விசாரணைகள் முடிக்கப்பட்டவர்கள் கூட ஊடகங்களிடம் விபரம் தெரிவிக்க மறுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.

விமானநிலையச் சோதனைகள் முடிந்து வெளியேறிவிட்டால், உள்நாட்டு யுத்தம் நடந்து முடிந்த ஒரு தேசத்துக்குள் பிரவேசித்த உணர்வே தெரியாதவாறு இயல்பாக இருக்கிறது தலைநகர் கொழும்பு. ஆங்காங்கே வீதிகளில் தெரியும் சிறு சிறு இராணுவக் காவலரண்கள் மட்டும் சற்று உறுத்தலாக இருக்கிறது. பயணிக்கும் வாகனங்களில் அவர்களுக்கு உறுத்தலாகத் தெரிபவை திடீரென மறிக்கப்பட்டுச் சோதிக்கப்படுகிறது.

புதிதாக எழுந்திருக்கும் வணிக வளாகங்கள், ஒருவழிப்பாதையாக அகலம் பெற்றிருக்கும் காலிமுக வீதி, என புதிய தோற்றத்தில் தெரிகிறது கொழும்பு. வீதியெங்கும் நிறைந்திருக்கும் மக்கள். அதைவிட அதிகமாத் தெரிகிறது வீதிகளை நிறைத்திருக்கும் வாகனங்கள். வெளிநாட்டு பதிய மாடல் வாகனங்கள் தாராளமாய் பவனி வருகின்றன.

தமிழகத்தைவிடவும் வீதிகள் சற்றுத் தூய்மையாகத் தெரிகின்றன. விபரம் கேட்டால், பொது இடங்களில் குப்பை போட்டால் ஆயிரக் கணக்கில் குற்றப்பணம் அறவிடப்படுவதாகச் சொல்கிறார்கள். வாகனப் பயணங்களின் போது முன்னிருக்கையில் இருப்பவர்கள் பாதுகாப்புப் பட்டி அணியாவிட்டால், சாலைகளின் குறுக்கே கடப்பதற்கு உரிய கடவைகள் தவிர்ந்து குறுக்கே சென்றால், என்பவற்றுக்கும் உடனடிக் குற்றப்பணம் அறவிடப்படுகிறது. இவற்றால் சாலை ஒழுங்ககள் சற்று சீராகவே உள்ளன. ஆனால் ஆசிய நாடுகளுக்கே உரிய வாகனப் புகையும், ஒலியெழுப்பியவாறு ஓட்டப்படும் வாகனங்களும் இன்னமும் மாறவேயில்லை.

விடுதிகளில் முன்னர் தங்குவதற்கு இருந்த கெடுபிடிகள், பதிவு முறைகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. உணவகங்கள் முன்னரைவிடச் சற்றுத் தூய்மையாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. தமிழர்கள் அதிகமா வாழக் கூடிய வெள்ளவத்தை பம்பலப்பிட்டிப் பகுதிகளை நிறைத்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் வடபகுதி திரும்பியிருப்பது, அப்பகுதி வணிக நிலையங்களிலும், கோவில்களிலும் கூட்டம் குறைவாக இருப்பதில் தெரிகிறது.

ஆட்டோக்கள் எனப்படும் முச்சக்கர வண்டிகளின் பாவனை அதிகரித்திருக்கிறது. அவற்றில் சில மீட்டர் பொருத்திக் கட்டணம் அறவிடும் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. ஒரளவுக்கு நியாமான கட்டணத்தையும் அவர்கள் அறவிடுவதால் அநேகமானவர்கள் அதனையே தெரிவு செய்கின்றார்கள். அதன் காரணமாக அந்த நடைமுறைக்குள் வராத ஆட்டோக்களும் முகப்பில் அவர்களைப் போன்றே வெவ்வேறு பெயர்களில் பெயர் தகட்டினைப் பொருத்தி வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிக்கின்றார்கள்.

வீதிகளில் வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாக, NGO பணியாளர்களாக, தூததரக அதிகாரிகளாக, பணியாளர்களாக, மாணவர்களாகச் சுற்றித் திரிகின்றார்கள். பெட்டிக்கடைகளில் கூட ஆங்கிலத்தில் உரையாடி, தங்கள் கைத் தொலைபேசிகளுக்கு றீசார்ஜ் செய்து கொள்கின்றார்கள். காலிமுகத்திடலில் காதலர்கள் முன்பு போன்றே குடைநிழல் காதல் செய்கின்றார்கள். மறுசீரமைக்கப்பட்ட அப்பிரதேசம், மேலும் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பணகிளைக் கவரவும் செய்கிறது. அதன் முன்னபாக இராணுவத் தலைமையகம் இருப்பதனால் முன்பு படம் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலை மாறி, விரும்பியவர்கள் படம்பிடித்துக் கொள்கின்றார்கள்.

அன்மையில் இடம்பெற்ற சிறைச்சாலைக் கலவரம் குறித்து, அதற்குச் சமீபமாக உள்ள பகுதிகளில் சரியான விபரங்கள் தெரியாத போது, சம்பவம் நடந்த அரை மணிநேரத்தில் முறையான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மீடியாக்கள் போட்டி போட்டுத் திறமையாகச் செயற்படுகின்றன. கொழும்பு வாழ் தமிழர்கள் பலரது வீடுகளையும் இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் வானொலிகளைப் பொறுத்தவரை, அநேகமானோரின் ரசணைத் தெரிவு உள்ளுர் வானொலிகளாகவே இருக்கின்றன.

வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு பொழுது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு காவல்ர்கள் வீதிகளில் வாகனங்களை ஒரங்கட்டியபடியே வந்தார்கள். எம்முடனிருந்த ஊடக நண்பர் சொன்னார் சரத் பொன்சேகா வருகின்றார் என்று. திரும்பிப்பார்த்தால் சிறைச்சாலை வாகனத்தில் நான்கு ஐந்து ஆயுதம் தரித்த காவலர்களின் பாதுகாப்புடன் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.

சிறிலங்காவின் பல்வேறு இராணுவத் தளபதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகளினாலேயே குறிப்பிடத்தக்க இராணுவத் திறன் மிக்கத் தளபதியாகக் கணிக்கப்பட்டிருந்த சரத்பொன்சேகா, தூய வெண் ஆடையில் வாகனத்திலிருந்து எதிர்ப்படும் மக்களுக்கு அரசியல்வாதியாகக் கையசைத்தார். சிலர் கையசைத்தும், பலர் புன்கைத்தும் வழியனுப்பினர். இராணுவத் தளபதியாக அவர் வரும்போது சலூட் அடித்து மரியாதை செய்திருக்கக் கூடிய இராணுவ வீரன் ஒருவன், அவரது அரசியல் கையசைப்பினைச் சலனமின்றி வீதியோரம் நின்று வேடிக்கை பாரத்தவாறிருந்தான்.

சிறைச்சாலை வாகனத்துக்குள் இருந்து சிறு குழந்தை போல் எல்லாப் பக்கங்களிலும் திரும்பித் திரும்பிக் கையசைத்துச் சென்ற அந்த முன்னாள் இராணுவத் தளபதியைப் பார்க்கும் போது சிறைப்பட்ட சிங்கம் ஒன்று முயலாகிப் போனது போலிருந்தது...

(இன்னும் வரும்)

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்


வாழும் பிரபாகரன் ! : பகுதி 1 : பகுதி 2

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'