பதிவுகள்

மக்களின் வாழ்க்கை மீதான இவ்வாறான பற்றற்ற நிலைக்குக் காரணம் காரணம் அவர்களது கடந்த கால அனுபவங்களின் தொடர் சோகங்கள் என அவர்கள் சொல்லாடல்களில் தெரிகிறது. வன்னியில் விடுதலைப்புலிகளின் நிர்வாக இறுதிக் கால நடைமுறைமுறைகள், போரின் உக்கிரமான காலப்பகுதி என்பவற்றின் போது, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் குறித்து காட்டமான விமர்சனங்களை முன் வைக்கின்றார்கள்.

அதேவேளை போரின் முடிவுக்குப் பின்னதாக மக்கள் நலன் என்பதிலும் பார்க்க, மக்கள் தலைவர்களாக முயல்பவர்களின் காட்சிகள் குறித்தும் பேசுகின்றார்கள். எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத தங்கள் கையறு நிலையில், காலத்தின் மௌனமாகிப் போகின்றார்கள்.

போர்க்கால வேளையில் வன்னிப்பகுதியில் சிக்கி மீண்ட சிறுவர்களின் உள, உடல் நிலையில் பாதிப்புக்கள் இன்னமும் தெரிகின்றன. போர்க்காலம், அதன் பின்னதான முகாம் வாழ்வு, என்பன குறித்த நினைவுகள் அவர்களை மிகவும் காயம் படுத்தியுள்ளன. அந்த காயங்களை மீளவும் கீறிப்பார்க்க விரும்பாத வகையிலே எங்கள் உரையாடல்கள் அமைந்திருந்தன. ஆயினும் அந்தக் காயங்களின் வலிகள் அவ்வப்போது அவர்கள் உரைகளில் வந்து விழவே செய்தது. ஏனெனில் அந்தத் துயர்களை அனுபவித்துக் கடந்து வந்தவர்கள். அவர்களின் வாழ்வுக் காலத்தின் ஒரு கூறு அந்த அனுபவங்கள்.

முல்லைப் பெரியாறு விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்த 2012 ம் ஆண்டில், தமிழகத்தின் எல்லைக் கிராமங்கள், கேரளாவின் எல்லைக் கிராமப் பகுதிகள், மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், பகுதிகளில், சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலவரங்களை நேரடியாக அவதானித்து வந்திருந்தனர் 4தமிழ்மீடியாவின் முதன்மைச் செய்தியாளர்கள் நாகன் மற்றும் வேல்மாறன். அதனைத் தொடர்ந்து இலங்கைத் தலைநகர் கொழும்பு, மற்றும் வன்னிப் பிரதேசங்களுக்கும் சென்று வந்த அவர்கள், அந்தப் பயணங்களின் போது, அங்குள்ள மக்களோடு அவர்களது      வாழ்நிலையோடும் இணைந்திருந்து பல்வேறு விடயங்களை நேரடி அனுபவங்களாகப் பதிவு செய்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்த அவதானிப்புகளின் தொகுப்பாக எழுதப்பெற்ற தொடர் அன்றைய நாட்களில் 4தமிழ்மீடியாவின் வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பிட்ட பகுதிகளின் அன்றைய சமகால தரிசனத்தை வாசகர்களுக்குப் பதிவு செய்திருந்த அக் கட்டுரையின் பல்வேறு விடயங்கள் இப்போதும் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகவும், அன்றைய காலத்தினை மீள் தரிசனம் செய்யும் வகையாகவும் அமையும் என்ற எண்ணத்தில் அத் தொடரினை மீள்பதிவு செய்கின்றோம். இதன் பகுதிகள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து வரும்... - 4தமிழ்மீடியா குழுமம்

இவ்வாறான கசப்பான அனுபவங்களின் படிப்பினையில், நிகழ்கால நம்பிக்கையாக எவரையும் இலகுவில் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மக்களாகவே பலரும் காணப்படுகின்றார்கள். நம்பிக்கைகள் தொலைத்து விரக்தியுடன் பேசிய ஒருவர் ".. இங்க இப்ப எல்லாரும் பிரபாகரன் தான்... "என்றார். அவரது அந்த வரிகளில் அங்குள்ள அரசியற் சமகாலம் தெரிந்தது.

தம் வாழ்வின் பெரும்பகுதி உழைப்பினையும், வாரிசுகளையும், வன்னிச் சமரில் தொலைத்து விட்டு, வாழ்வை மீண்டும் அந்த மண்ணிலேயே புதிதாகத் தொடங்கும் அந்த வயதான குடும்பத்தினரின் குடிலுக்குள் நாம் தலைசாய்த்து உள் நுழைந்தது ஒரு மாலைவேளை. வேதனைகளை மறைத்த முறுவலுடன் அழைத்துக் கொண்ட அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த மண்ணுக்கே உரித்தான விருந்தோம்பலில் உணவளித்தும் மகிழ்ந்தனர்.

உழைப்புக்குச் சளைக்காத மக்களும், உழைப்பவர்களுக்கு உயர்வு தரும் வன்னி மண்ணும், ஒரு போதும் தம்மை நாடி வந்தவர்களை வாடிப்போகச் செய்ததில்லை. முன்னர் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகள் காரணமாக, வடபுலத்தில் இருந்து வன்னிக்கு ஓரு சில தினங்களும் இலட்சக் கணக்கில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும், வாரி அனைத்து உணவளித்திருந்த வன்னி நிலம், இப்போது போரின் கொடுமையில் சிதிலப்பட்டுச் சிதைந்து போயுள்ளது. ஆயினும் அந்த மண்ணுக்கே உரிய உழைப்பும் உணவளிப்பும் இன்னமும் ஒழிந்து போகவில்லை என்பதன் சாட்சியமாய் நின்றார்கள் அந்த வயோதிபத் தம்பதியர். அதனை ஆமோதிப்பது போல் குடிசைக்கு வெளியே அவர்கள் சிறிதாய் பயிரிட்டுச் செழித்து வளர்த்திருந்த நிலக்கடலைச் செடிகள் மெலிதாகக் காற்றில் அசைந்தாடின.

நிலக்கடலைச் செடிகளின் மீது படர்ந்திருந்த எமது பார்வை அவதானித்த அந்த முதியவர், " இப்போதைக்கு இவை மட்டும் தான் நமக்கு எல்லாம்... " என்றார். முதுமைப் பருவத்தே தனித்து விடப்பட்ட காலத்தின் வடுக்களெனத் தெரிந்தன அவ்வார்த்தைகள்.

இருப்பதை வைத்து, நாம் சுவைப்பதற்கு புட்டும் சம்பலும் செய்திருந்தார் அந்தத் தாய். அவர் பரிமாறிய அந்த அமுதம் நிகர் உணவினை உண்டுகொண்டிருந்த போது, பல பழைய நினைவுகளை கதைகளாப் பேசியவாறிருந்தார் பெரியவர். சற்று நேரம் எதுவும் பேசாதிருந்த அவர் திடீரென மௌனம் கலைத்து, நாம் சிறிதும் அவரிடமிருந்து எதிர்பார்த்திராத அந்தக் கேள்வியைக் கேட்டார், அமைதியாக உறைந்து போனோம் நாம். இருள் கவ்வியிருந்த அந்தச் சூழலில் எதிரிலிருந்த விளக்கின் சிற்றொளியில், எங்கள் முகத்தை நேர்நோக்கி கேட்டிருந்தார் அக் கேள்வியினை.

" தலைவர் உயிரோட இருக்கிறார் தானே..? " என அழுத்தமாகக் கேட்டார். பெரியவர், உண்மை என்னவெனத் தெரிந்து கேட்கின்றாரா? தெரியாமற் கேட்கின்றாரா..? என்பது எமக்குத் தெளிவாகத் தெரியாவிடினும், அந்தக் குரலுக்குள் ஒரு ஏக்கம் தொனித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

எந்தவிதத்திலும் அவரைச் சங்கடப்படுத்திவிடக் கூடாதென்ற அவதானத்துடன், அவரது கேள்விக்கான பதிலைத் தவிர்த்து, "நீங்கள் தான் இன்று வரை இந்த மண்ணில் வாழ்கின்றீர்கள்.. நீங்கள் தான் அதுபற்றிச் சொல்ல வேண்டும்... " என மற்றுமொரு கேள்வியை பதிலாக வைத்தோம்.

மீண்டும் மௌனமான அவர், சற்றுநேரத்தில் உறுதியாக, " ..தலைவர் இருக்கின்றார்.... "என்றார்.

"அப்படியென்றால் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் வெளிவந்த படங்கள்... " என நாம் முடிப்பதற்கு முன்னரே, "அது தலைவர் இல்ல... " என வேகமாக மறுத்தார்.

பிரபாகரனைத் தம்பி, அண்ணை, எனப் பலரும் விழிக்கும்போது, 'தலைவர் 'என்றே அந்தப் பெரியவர் அழைத்தது, பிரபாகரன் எனும் பெயர் மீது அவர் கொண்ட மரியாதையை, நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. தமிழகத்தின் தஞ்சாவூர் பகுதிகளில் கண்ட இளைஞர்களின் குரலில் தெரிந்த உறுதியை ஒத்ததாக இருந்தது. உண்மைநிலை எதுவாக இருப்பினும், அவர்கள் கொண்டிருக்கும், நம்பிக்கையை, மரியாதையை எதிர்வு கொள்ளக் கூடிய வார்த்தைகள் எம்மிடமில்லை. அதனால் மறுபடியும் மௌனமாகிப் போனோம்.

முதுமையின் தளர்வு, போரின் தாக்கத்தில் இரு கால்களில் பாதிப்பு, என்ற நிலையிலும், தன் சொந்த உழைப்பில், நம்பிக்கையில் வாழ்வின் காலங்களை நகர்த்தத் தொடங்கியிருக்கும் அவரை தளர்ந்து போகச் செய்யும் உரையாடல்களை தவிர்த்து, அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.

நடந்து முடிந்த உரையாடல்களை அசைபோட்டவாறே திரும்பி வந்துகொண்டிருந்தோம். அந்தப் பெரியவரின் நம்பிக்கையும் உறுதியும் மிக்க வாசகங்கள் ஒரு காலத்தின் அடையாளமாகத் தெரிந்தது. பிரபாகரன் குறித்த சிந்தனைகள், செய்திகள், எவ்வாறாக எழுந்த போதும், ஓடுக்கப்பட்ட ஒரு இனத்தின் நம்பிக்கையாக அந்தப் பெயர் இருந்தது, இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது.

அந்த நம்பிக்கை மாற்றப்பட வேண்டும் என எண்ணுவோர், அந்தப் பெயர் ஒரு இனத்தின் நம்பிக்கையாகத் தோற்றம் பெற்றது எவ்வாறு என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. மற்றொரு புறத்தில் பிரபாகரன் பெயரைக் கேட்டதும் சீற்றங் கொள்வோர், பிரபாகரன் மீது தாம் முன் வைக்கும் செயல் விமர்சனங்களை, தமது செயல்களின் மீதான விமர்சனங்களாக முன் வைத்துப் பார்ப்பதற்குத் தவறி விடுகின்றார்கள் அல்லது மறந்து விடுகின்றார்கள். இவற்றின் காரணமாகவே விடுதலைப் புலிகள் மீது வைக்கப்படும் கடும் விமர்சனங்கள் கடந்து, நினைவுகளில் மறக்கப்பட வேண்டும் எனும் அழிப்புக்கள் தாண்டி, இன்றளவும் நம்பிக்கைக்குரிய தலைமைத்துவப் பெயராகப் பிரபாகரன் பெயர் திகழ்கிறது. அப்படியென்றால் அந்த மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர் இன்னமும் ...

சேகுவேரா என்ற பெயரைக் கேட்கும் மாத்திரத்தில் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உத்வேகம் பிறப்பது போல், சேகுவேராவின் கொள்கை நடைமுறைகளில் மாறுபட்ட தெரிகின்றவராயினும், அவரை விரும்பிப் படித்த பிரபாகரன் பெயர், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் மத்தியில் நம்பிக்கை தரும் சொல்லாகவே ஒலிக்கிறது. அதனால் தான் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள், தாம் ஒடுக்கப்படுவதாக உணரும் கணங்களில், அவர்களின் எதிர்கால நம்பிக்கையாக பிரபாகரன் பெயர் எழுகிறது, வாழ்கிறது.

வாழும் பிரபாகரன் ! :  பகுதி 1 : பகுதி 2 : பகுதி3 : பகுதி4  : பகுதி 5

இந்தப் பயணக் குறிப்புக்களில் நாம் நேரடியாகக் கண்ட காட்சிகளை, பெற்றுக் கொண்ட அனுபவங்களை, எந்தவித சேர்க்கைகளுமின்றி இங்கே பதிவு செய்துள்ளோம். ஆதலால் இது ஒரு அரசியற்கட்டுரையோ அல்லது ஆய்வுக்கட்டுரையோ அல்ல. ஆயினும் சிறிலங்காவின் இனப்பிரச்சனை தொடர்பில் அங்குள்ள ஒவ்வொரு பிரதேச மக்களும், அந்தந்தப் பகுதியில் காலத்துக்குக் காலம் செல்வாக்குச் செலுத்தும் அரசியல்வாதிகளால் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள் என்பதே உண்மை. போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் தொடரும் நிலை இதுவே...

- 4தமிழ்மீடியாவிற்காக: நாகன் மற்றும் வேல்மாறன்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.