பதிவுகள்

தமிழ்த் தேசிய அரசியலில் ‘மாற்றுத் தலைமை’ என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புக்களினாலேயே ‘நீக்கம்’ செய்யப்பட்டிருக்கின்றது என்பதுதான், வேதனையானது. 

புலிகளுக்குப் பின்னரான காலத்தில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலில் அதிருப்தியுற்ற தரப்புக்களும், அப்படி தங்களை காட்டிக் கொண்ட தரப்புக்களும், புலம்பெயர் தேசமும் மாற்றுத் தலைமை என்கிற உரையாடல் களத்தினை திறந்தன. குறிப்பாக, 2010 பொதுத் தேர்தலில், கூட்டமைப்பிலிருந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், வெளியேறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்த தருணத்திலிருந்து மாற்றுத் தலைமைக்கான பேச்சு எழுந்தது. ஆனால், தாயகச் சூழலில் பெரிய தாக்கங்கள் எதனையும் அது ஏற்படுத்தியிருக்கவில்லை. அதற்கு முள்ளிவாய்க்கால் பேரழிவு மற்றும் ராஜபக்ஷக்களின் ஆட்சி காரணங்களாக இருந்தன. அத்தோடு, கூட்டமைப்பில் இருந்து நெருக்கடியான கட்டத்தில் பிரிந்து சென்றவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கவில்லை.

ஆனால், 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்திலிருந்து மாற்றுத் தலைமைக்கான உரையாடல் களம் மெல்ல மெல்ல தாயக ஊடகங்களில் கவனம் பெற்றது. குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சிவில் சமூக அமையமும், முன்னணியும், சில அரசியல் கட்டுரையாளர்களும் முன்மொழிந்த காரணங்கள், கவனம்பெறுவதற்கு காரணமாகின. குறிப்பாக, தமிழர்கள் மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளும் நிலையொன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதனால் ஏற்படும் என்கிற விமர்சனம்.

ஆனால், 13வது திருத்தச் சட்டத்தையோ, மாகாண சபை முறையையோ தீர்வாக கொண்டு தாங்கள் போட்டியிடவில்லை மாறாக, மக்கள் ஆணையை சர்வதேசத்துக்கு நிரூபிக்கும் நோக்கில் போட்டியிடுவதாக கூட்டமைப்பு அறிவித்தது. அத்தோடு, மாகாண சபை ராஜபக்ஷக்களின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்றும் கூட்டமைப்பு பதிலளித்தது. கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடுகள் தமிழ் மக்களை குறிப்பிட்டளவு திருப்திப்படுத்தியது. அதுவும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான மனநிலையோடு இருந்த மக்களுக்கு அது ஒரு பழிவாங்கும் கட்டத்தைக் காண்பிக்க தருணமாகவும் இருந்தது. அதனால், மாற்றுத் தலைமை பற்றிய உரையாடல் களம் மீண்டும் சுருதியிழந்தது.

2014 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு எடுத்த முடிவுக்கு எதிராக மாற்றுத் தலைமைக்கான களம் மீண்டும் திறந்தது. ராஜபக்ஷக்கள் ஆட்சியில் பிரதான அமைச்சராக, அதுவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரியை, தமிழ் மக்கள் ஆதரிப்பது என்பது இன அழிப்புக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பானது என்று மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் கோசம் எழுப்பினார்கள். அத்தோடு, இலங்கைக்கு எதிரான சர்வதேச பிடி, ராஜபக்ஷக்களை அகற்றுவதோடு நீர்த்துப் போய்விடும் என்றும் சொன்னார்கள். அப்போது, ஜனநாயக இடைவெளியொன்றுக்காகவும், புதிய அரசியலமைப்பினூடான தீர்வுக்காகவும் மைத்திரியை ஆதரிப்பதாக கூட்டமைப்பு சொல்லிக் கொண்டது. தமிழ் மக்கள் ஜனநாயக இடைவெளிக்காகவும், ராஜபக்ஷக்களை பழிவாங்கும் மனநிலையை முன்னிறுத்தியும் மைத்திரிக்கு வாக்களித்தார்கள். அப்போதும் மாற்றுத் தலைமைக் கோசம் அல்லாடியது.

மீண்டும் 2015 பொதுத் தேர்தலோடு மாற்றுத் தலைமைக்கான களம், என்றைக்கும் இல்லாதளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் விரிந்தது. தமிழ் அரசியல் சூழல் என்றைக்குமே ஏகநிலை அங்கீகாரங்களையே கட்சிகளுக்கோ, ஆயுத இயக்கங்களுக்கோ வழங்கி வந்திருக்கின்றது. அதனை என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை. அதற்கு, ஜீ.ஜீ.பொன்னம்பலம் காலம் தொடக்கம், தலைவர் பிரபாகரன் ஈறாக சம்பந்தன் காலம் வரையிலான இன்றைய கட்டத்தினைக் கூட உதாரணங்களாகக் கொள்ளலாம். ஆனால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் என்றைக்கும் இல்லாதளவுக்கு சமூக ஊடகங்களில் அரசியல் பேசப்பட்டது. தேர்தல் பரப்புரை என்பது, சமூக ஊடகங்களுக்குள் நிகழ்ந்தால் மாத்திரம் போதுமானது என்கிற கட்டங்களை பல தரப்புக்களையும் நம்பவும் வைத்து. அதுதான், சிலரை சிக்கல்களுக்குள் சிக்கவும் வைத்து. அப்படி சிக்கியவர்களின், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முக்கியமானவர். சிக்க வைத்த தரப்புக்களில் முன்னணியும், சிவில் சமூக அமையமும், அவற்றின் இணக்கத்தரப்புக்களும் பங்காளிகள்.

கூட்டமைப்பு பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை சமூக ஊடகங்களில் நிகழ்த்தியதைக் காட்டிலும் பல மடங்கு, மக்களை நேரடியாக அணுகுவதனூடாக நிகழ்த்திக் கொண்டிருந்தது. அதற்கு, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட முன்னைய தேர்தல்கள் படிப்பினையாகவும், மக்களை அணுகும் வழிமுறைகளையும் திறந்து விட்டிருந்தது. அதனை ஒரு நூலாகப் பிடித்துக் கொண்டு, பிரச்சாரக் களத்தில் மும்முரமாக இருந்தார்கள். ஒவ்வொரு கிராமங்களுக்குள்ளும், ஒழுங்கைகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் கூட்டமைப்பு பிரச்சாரக்காரர்கள் சென்றார்கள். மக்களோடு பேசினார்கள். ஆனால், கூட்டமைப்புக்கு எதிராக மாற்றாக தங்களை முன்னிறுத்திய தரப்பினரோ, யாழ்ப்பாணத்தின் நகரங்களைத் தாண்டி மக்களிடம் வரவில்லை. அவர்கள், சமூக ஊடகங்களிலும், அரசியல் கட்டுரைகளிலும், ஊடக அறிக்கைகளிலும் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் மக்கள் கிஞ்சித்தும் கணக்கெடுத்திருக்கவில்லை. ஆனால், விக்னேஸ்வரன் கணக்கில் கொண்டார்; சிக்கினார்.

அந்தத் தேர்தலிலும் மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் கோசம் மக்களிடம் எடுபட்டிருக்கவில்லை. ஆனால், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற அடையாளத்துக்குப் பதிலாக புதிய அடையாளமாக விக்னேஸ்வரன் கிடைத்தார். அது, அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஒன்று சேர்ந்து பேசவும் இயங்கவும் வைத்தது. அதுதான், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்தை உறுதிப்படுத்தியது.

‘வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’ என்று கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்று, அவரை அரசியலுக்கு அழைத்து வந்த, அவரது நண்பரான சம்பந்தனிடம் கோபத்தை உண்டு பண்ணியது. அந்தக் கோபம் இன்னமும் அடங்கிவிடவில்லை. அதற்கு அண்மையில் சம்பந்தன் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் தெரிவித்த கருத்தை உதாரணமாகக் கொள்ளலாம்.

தேர்தல் நிலவரம், கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் முதன்மைத் தெரிவில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் சம்பந்தன் அண்மையில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது, யாழ்ப்பாணத்தில் யார் யார் வெற்றிபெறுவார்கள் என்று தன்னோடு பேசிக்கொண்டிருந்தவரிடம் கேட்டாராம். அதற்கு, “கூட்டமைப்புக்கு நான்கு, ஈபிடிபிக்கு ஒன்று, விக்னேஸ்வரனுக்கு ஒன்று....” இப்படி தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் மற்றவர். விக்னேஸ்வரனின் பெயர் வந்ததும், இடைமறித்த சம்பந்தன், விக்னேஸ்வரன் வென்றுவிடுவாரா? அதற்கான சூழல் யாழ்ப்பாணத்தில் இருக்கிறதா? என்று கேட்டாராம். அவருக்கு, கஜேந்திரகுமார் தேர்தலில் வெற்றிபெறுவது தொடர்பில் தற்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், விக்னேஸ்வரன் வெற்றிபெறுவதை அவர் விரும்பவில்லை. ஏனெனில், தன்னால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் தனக்கு விரோதம் செய்ததை அவரினால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் அப்படித்தான் நினைக்கிறார். ஆனால், பொது வெளியில் நாகரீகம் கருதி, விக்னேஸ்வரனைப் பற்றி சம்பந்தன் உரையாடுவது இல்லை.

விக்னேஸ்வரன் கூட்டமைப்போடு முரண்பட ஆரம்பித்து, பேரவையின் தலைவராகிய காலம் முதல், அவரை நோக்கி ஜனவசிய ஒளிவட்டம் முன்னணியின் தலைவர்கள் தொடங்கி பேரவைக்குள் இருந்த அனைத்துத் தரப்பினராலும் வரையப்பட்டது. அந்த ஒளிவட்டம், ஊடகங்களையும் யாழ்ப்பாணத்தையும் தாண்டி செல்லவில்லை என்பது வேறு விடயம். அந்த ஒளிவட்டத்தினை மேலும் மேலும் வளர்க்காமல் விடுவதற்காகவே தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ்பெற வைத்து, சம்பந்தன் விடயங்களைக் கையாண்டார். காலம் கடத்தல் என்பது, ஒளிவட்டத்தினை சிதைக்கும் என்று அவர் நம்பினார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரனைச் சுற்றிய ஒளிவட்டத்தின் சிதைவின் பெருங்கட்டம் அரங்கேறியது. மாற்றுத் தலைமைக்கான வெளியில் விக்னேஸ்வரனைப் பொருத்தியவர்களிடம், மாற்றுத் தலைமைக்கான வெளியைப் பேணுவது தொடர்பிலான வழிவரைபடம் இல்லை. சம்பந்தனுக்கு எதிரான ஒருவர் தேவைப்பாட்டார், அவ்வளவுதான். அதுவே விடயங்களை நீர்த்துப் போகச் செய்தது. பேரவைக்குள் திரண்ட தரப்புக்களை ஒரு புள்ளியில் இணைப்பதற்கு முடியாமல் போனது. முன்னணி ஒருபக்கமாக, விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு பக்கமாக, பொ.ஐங்கரநேசனின் கட்சி இன்னொரு பக்கமாக, பேரவை இருந்த இடம் தெரியாமல், மாற்றுத் தலைமைக்கான கட்டுரையாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தனித்தனித் தீவுகளாக மாறிப்போனார்கள்.

இன்றைக்கு மாற்றுத் தலைமைக்கான வெளி, சுயநலமான, ஒற்றுமையில்லாத, வழி வரைபடமற்ற, ஆளுமையற்ற தரப்புக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்றது. இனி, சில காலங்களுக்கு மாற்றுத் தலைமை பற்றிய உரையாடல் தமிழ் மக்களிடம் எழுவதற்கே வாய்ப்பில்லை. ஏன், அரசியல் கட்டுரைகள், சமூக ஊடகங்களில் கூட அந்த உரையாடல் மொழி குறைந்திருக்கின்றது. ஒரு ஆரோக்கிய அரசியலுக்கு கையாளப்பட வேண்டிய விடயம், ஆர்வக்கோளாறுகளினால் தீண்டத்தகாத ஒன்றாக மாறியிருக்கின்றது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.