பதிவுகள்

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா...” என்று ஆரம்பிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்றில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், “…தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...” என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். 

அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும், சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தார். யாழ். மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் சுதந்திரக் கட்சி தலைமை என்பது, அங்கஜன் இராமநாதனிடம் இருந்தது; இப்போதும் அவரிடம்தான் இருக்கிறது. அவர், மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்தில், பிரதி அமைச்சராகவும் இருந்தார். அவர் தலைமையில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே புலிகளின் பாடல் ஒலிபரப்பட்டது.

குறித்த பிரச்சாரக் கூட்டம் இடம்பெறுவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர்தான், 2018 புதுவருட பிறப்பை முன்னிட்டு புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் வாழ்த்துக்களை சமூக ஊடகங்களில் பகிந்து கொண்டார்கள் என்கிற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, விடுதலைப் புலிகள் தொடர்பில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதில்லை. புலிகளின் கடந்தகால நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சனங்கள், விவாதங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் அவற்றை அதிகம் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களே புலிகள் என்பதுதான், தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் எண்ணம். அதனால், புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை கடந்த காலத்தில் வெளிப்படுத்திய பல தரப்புக்களும், மக்களை நோக்கி வருவதற்காக அவற்றை நிறுத்திக் கொண்டிருக்கின்றன. அதில், புலிகளுக்கு எதிராக நின்று போரிட்ட தரப்புக்களும், அவர்களோடு ஒத்தோடிய துணைக்குழுக்களும் கூட அடக்கம்.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே, பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்களின் வடக்கு, கிழக்குப் பிரதிநிதிகளாக இருக்கும் நபர்களும் புலிகளை முன்வைத்து தேர்தல் அரசியலை முன்னெடுக்கின்றனர். அதற்கு அங்கஜன் இராமநாதன் மாத்திரமல்ல, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் விதிவிலக்கானவர் அல்ல.

இந்தப் பத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்ட சனக்கூட்டத்தை நோக்கியே எழுதப்படுகின்றது. மாறாக, தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையற்ற தரப்புக்களை நோக்கி அல்ல.

கடந்த பொதுத் தேர்தலில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் விஜயகலா வெற்றி பெற்றிருந்தார். அவர் பெற்ற வாக்குகளில் கணிசமானவை தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்ட மக்களினால் வழங்கப்பட்டவை. அவை, மறைந்த தியாராஜா மகேஸ்வரனின் பெயராலும் விழுந்தன. மகேஸ்வரனின் பெயராலோ, விஜயகலாவின் பெயராலோ, அவர்களின் சொந்த ஊர்ப் பின்னணியாலோ, தமிழ்த் தேசிய வாக்குகள், பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிக்காக பொதுத் தேர்தல்களில் வழங்கப்பட முடியாது. (ஜனாதிபதித் தேர்தல் வேறுவகையானது.) ஏனெனில், தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை கொண்ட மக்களின் ஒரு தரப்பினர், மேற்சொன்ன காரணங்களுக்காக இவர்களுக்கு வாக்களிக்க முனைவது, பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியப் பரப்புக்குள் வைத்துக் கொள்வதற்கு காரணமாகிவிடும்.

கடந்த பொதுத் தேர்தலில் விஜயகலா பெற்ற வெற்றி, உதிரி வாக்குகளினால் நிகழ்ந்தது. அந்த உதிரி வாக்குகளுக்குள் அதிகமானவை தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை கொண்ட வாக்குகளாகும். அதனால், இன்னொரு தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி பறிபோனது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் நிகழும் மோதல்களினால், பேரினவாதக் கட்சியொன்று அங்கு வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய வாக்குகளும் உதிரி வாக்குகளும் முன்னணிக்கு ஒரு ஆசனத்தை வழங்கும் அளவுக்கு இருந்திருக்க வேண்டும். மாறாக, விஜயகலாவுக்கு விழுந்த கணிசமான தமிழ்த் தேசிய வாக்குகளும், அங்கஜனுக்கு விழுந்த 12,000 அண்மித்த வாக்குகளும், முன்னணிக்கான வெற்றியை தட்டிப் பறித்தன.

1994 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர பஸ்தியானின் ஆதரவாளர்கள் சிலரினால் பொலிஸார் சிலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டனர். அது தொடர்பிலான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய அநுர பஸ்தியானின் ஆதரவாளர்களான சதாசிவம் இராமநாதன் உள்ளிட்ட மூவரே வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு 1995இல் வந்தது. வழக்கைத் தாக்கல் செய்த அநுர பஸ்தியானின் ஆதரவாளர்கள் மூவரும் தண்டப்பணம் கட்டினர். துப்பாக்கி காட்டி மிரட்டியமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த சதாசிவம் இராமநாதன், வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் காலத்திலும் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டியமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று எழுந்தது. அப்போது, அந்த இராமநாதன், தன்னுடைய மகனான அங்கஜனின் வெற்றிக்காக துப்பாக்கியைத் தூக்கியிருந்தார். 1990களின் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த இராமநாதனும் அவரது மகனும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி அரசியலொன்றை கட்டியெழுப்ப முனைந்தார்கள். துப்பாக்கி மிரட்டல் அரசியலினால் பெரிய வெற்றிகளைச் சாதிக்க முடியாது என்ற புள்ளியில், இராமநாதன்கள் புலிப்புராண அரசியலைச் செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள். அது, என்ன நோக்கங்களுக்கானது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பேரினவாதக் கட்சிகளில் பயணிப்பவர்களினால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவமே அச்சுறுத்தலுக்குள்ளாகும். கடந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்காத ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு 3000 வாக்குகளை தமிழ்த் தேசியத்தின் பெயரினால் அந்தக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து, இன்னொரு சமூக வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அதனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் வெற்றி அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

யாழ்ப்பாணத்தில், பேரினவாதக் கட்சிகளில் வந்தாலும் தமிழர் ஒருவரே பாராளுமன்ற உறுப்பினராகுவார் என்கிற சாந்தப்படுத்தல் வசனமொன்று உச்சரிக்கப்படுகின்றது. ஆனால், அந்த வசனம் அச்சுறுத்தலானது. ஏனெனில், வடக்கு கிழக்கில் யாழ். தேர்தல் மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் (வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) தமிழ் மக்களின் வாக்குகள் பேரினவாதக் கட்சிகள் மற்றும் அவர்களின் சிலீப்பர் செல்களுக்கு விழுவதினாலும், தமிழ் மக்களுக்கான பிரதிநித்துவம் இழக்கப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து நான்கு தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு அடிப்படை. ஆனால், அதிக நேரங்களில் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதால் சிதறும் வாக்குகளும், பேரினவாதக் கட்சிகளில் வரும் தமிழ் வேட்பாளர்களுக்காக விழும் வாக்குகளும் கொடுக்கும் விலை அது. பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், மட்டக்களப்பில் வெற்றிபெறுவதில்லை. அவர்கள் பெறும் வாக்குகள் அதிகம் மற்றைய சமூகத்து வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தவே உதவியிருக்கின்றன.

பிள்ளையானின், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வாறு ஹிஸ்புல்லாவின் வெற்றியை ஒரு முறை உறுதி செய்திருந்தது. ஆக, தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையற்ற பிள்ளையானின் கட்சியினர் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தோற்கடிப்பதாக குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் சுதாகரித்துக் கொள்ள வேண்டும். மகேஸ்வரனின் பெயருக்காக விஜயகலாவுக்கு வாக்களிப்பதையோ, சொந்த ஊரை முன்வைத்து அவர்களுக்கு வாக்குக் கேட்பதையோ நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதுபோல, இராமநாதன்களின் புலிப் புராண உள்நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களை குறிவைத்துக் கொண்டு, இந்த பேரினவாதக் கட்சிகளும், அவர்களின் துணைக்குழுக்களும் நாடகங்களை அரங்கேற்றி வாக்கு அபகரிப்பைச் செய்யும். அது, தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் ஆபத்துக்குள் தள்ளும்.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.