பதிவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும், காங்கிரஸையும் நோக்கி இந்தப் பத்தியாளரினால் ஏற்கனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, கடந்த திங்கட்கிழமை யாழ். நகரப் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட “...எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு...” என்கிற வார்த்தைப் பிரயோகத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது. 

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரடி அரசியல் விவாத நிகழ்வொன்று நடைபெறவிருந்தது. ஆனாலும், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து ஒதுங்கிக் கொண்டமையால், நிகழ்வு இரத்தாகியது. அது தொடர்பிலான சர்ச்சையில், தருமபுரத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரை நோக்கி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக கருத்து வெளியிடும் போதே, ‘எங்கோ இருக்கும் முழங்காவில்’ என்று கஜேந்திரகுமார் கூறிப்பிட்டிருந்தார். (சுமந்திரன் முழங்காவிலில் உரையாற்றவில்லை. தருமரத்திலேயே உரையாற்றியிருந்தார் என்பது வேறு விடயம்.)

1. கஜேந்திரகுமார் அவர்களே, தாங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறீர்கள். யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. தாங்கள் எங்கோ இருப்பதாகக் குறிப்பிடும், முழங்காவில் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் நிர்வாக ரீதியாகவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முறைகளுக்குள்ளும் உள்ளடங்குகின்றது. அப்படியிருக்க, தாங்கள் போட்டியிடும் தேர்தல் மாவட்டம் குறித்து எந்தவித தெளிவும் இல்லாமல் எப்படி முழங்காவிலை எங்கோ இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள்?

தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியினரை நோக்கி, இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரினாலும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளைத் தாண்டிய அரசியலை செய்வதில்லை என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த விமர்சனம், தங்களது கட்சி யாழ் நிர்வாக மாவட்ட எல்லைக்கு அப்பால் கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளை மாத்திரம் கணக்கிட்டுச் சொல்லப்பட்டதில்லை. மாறாக, ஒரு கட்சியாக அந்தக் கட்டமைப்பு, யாழ் நகரப் பகுதிகளைத் தாண்டி சென்றடைந்திருக்கவில்லை, அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது சார்ந்தும் எழுந்தது.

2. ‘இரு தேசங்கள், ஒரு நாடு’ என்கிற கொள்கையின் அடிப்படையில் முன்னணி என்கிற இயக்கம் செயற்படுவதாக தொடர்ச்சியாக சொல்லிவரும் தாங்கள், தமிழர் தேசத்துக்குள் இருக்கும் முழங்காவில் பிரதேசத்தை எப்படி எங்கோ இருக்கும் முழங்காவில் என்று விளிக்க முடியும்? முழங்காவில் என்ன மாற்றுத் தேசத்துக்குள் இருக்கும் பகுதியா? அந்தத் தோரணை, யாழ்ப்பாணத்தைத் தாண்டியிருக்கும் பகுதிகள் எல்லாமும் ‘தீண்டத்தகாத’ பகுதிகளாக காணும் போக்கிலானதா?

3. ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பிறகு, காலம் தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கிற தலைவன் கஜேந்திரகுமார்’ என்று தங்களது கட்சிக்காரர்களே மேடைகளில் தங்களுக்கு புகழாரம் சூட்டும் போது, கேட்டு மகிழ்கிறீர்கள். அதுபோல, புலிகளுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கொள்கையில் தடம்புரளாத தரப்பாக நீங்கள் உங்களை முன்னிறுத்துகிறீர்கள், அப்படியிருக்க தாயக கனவினை மார்பில் ஏந்தி மாண்ட மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக்கும் துயிலும் இல்லம் இருக்கும் முழங்காவில் எப்படி எங்கோயிருக்கும் ஒன்றாக தங்களினால் கருதப்பட முடியும்? முழங்காவில் சார்ந்த கேள்விகளை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், அதனை ஒரு கட்சியாக பதிவு செய்வது சார்ந்து பல சந்தர்ப்பங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. அதற்கு கஜேந்திரகுமாராகிய தாங்களும், தங்களது சகபாடிகளும் பதிவு தொடர்பில் சாதகமாகப் பதிலளித்து வந்திருக்கிறீர்கள். மக்களின் கேள்விகளுக்கு அப்பால், முன்னணியை ஒரு கட்சியாக பதிவு செய்யும் நிலைப்பாட்டோடு இயங்கிய இளைஞர்களிடமும் பதிவு செய்வது தொடர்பில் சாதகமாகவே பதிலளித்திருக்கிறீர்கள். அதனை, பொது வெளியிலும் செய்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, அதனை கட்சியாக பதிவு செய்யப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தத் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

அது தொடர்பில் சில கேள்விகள்,

4. ஆரம்பம் முதலே, காங்கிரஸ் என்கிற கட்சியை மீட்டெடுப்பதற்காக முன்னணி என்கிற அடையாளத்தை பாவித்திருக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டு எப்படி நிராகரிக்கக் கூடியதாக இருக்கும்?

5. முன்னணி என்பது ஓர் அரசியல் இயக்கம், அதனை கட்சியாக சுருக்க வேண்டிய தேவையில்லை. தேர்தலில் போட்டியிடும் தேவைக்காகவே காங்கிரஸை கையாள்கிறோம் என்று கூறும் தாங்கள், அதனை முன்னணி ஆரம்பிக்கப்பட்ட 2010களிலேயே வெளிப்படுத்தியிருக்கலாம் இல்லையா? ஏன் அதனைச் செய்யவில்லை. அதனைச் செய்யாமல், முன்னணி சுயமுள்ள ஒரு கட்சியாக இருக்கும் என்று நம்பிக் கொண்டு இணைந்து கொண்ட இளைஞர்களுக்கு ஏன் பொய்யான வாக்குறுதி அளித்தீர்? அந்த வாக்குறுதிகளை நம்பி, சமூக ஊடகங்களில் அவர்கள் எவ்வளவு விவாதங்களில் கலந்து கொண்டு வீராப்பு பேச்சுக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். இன்றைக்கு அவர்களின் நிலை என்ன?

6. முன்னணியை கட்சியாக சுருக்குவதினால் பலனில்லை. தேர்தலுக்கான கட்சியாக பதிவு பெறும் போது, அதற்கான கட்டுப்பாடுகள் அதிகம் என்று கூறும் தாங்கள், முன்னணி என்கிற கட்டமைப்பின் சட்டப்பாதுகாப்பு எது சார்ந்தது? அதிக சட்டத்தரணிகளை தன்னகத்தே கொண்டிருக்கின்ற முன்னணி அதற்கு பதிலளிக்க வேண்டும் இல்லையா?

7. கடந்த காலங்களில், 2015 பொதுத் தேர்தல் உள்ளிட்ட காலங்களில், முன்னணியின் மேடைகளில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் படங்களைத் தவிர்த்துவிட்டு, குமார் பொன்னம்பலம், தந்தை செல்வா ஆகியோரின் படங்களை முன்னிறுத்தியது ஏன்? காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தாங்கள், அதன் ஸ்தாபகத் தலைவரை அன்றைக்கு தவிர்த்தது ஏன்? அத்தோடு, அவரின் கொள்கை நிலைப்பாட்டோடு முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய தந்தை செல்வாவின் படம் எப்படி காங்கிரஸ் மேடைகளை அலங்கரித்தது? அந்தத் தருணங்களில், முன்னணியின் இளைஞர்கள், ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாக கூறியதை தாங்கள் பார்த்திருக்கவில்லையா?

8. அன்றைக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் நிலைப்பாடுகளை நிராகரித்து, முன்னணி என்பது சுய அடையாளத்துக்கான கட்சி என்று முழங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை, இந்தத் தேர்தலில் தமிழர் தேசத்தின் அபிவிருத்தியின் நாயகனாக முன்னாள் அமைச்சர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இருந்தார் என்று பேச வைத்ததை தங்களதும், தங்களது குடும்பத்தினதும், காங்கிரஸினதும் தனிப்பட்ட வெற்றியாக கொள்கிறீர்களா? ஏனெனில், கடந்த காலங்களில், ஜீ.ஜீ.பொன்னபலம் குறித்து தேர்தல் மேடைகளில் பேசுவதை தாங்கள் தவிர்த்து வந்த போதிலும், இந்தத் தேர்தலில் தாங்கள் தங்களின் பேரனார் குறித்து பேசிக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இடம்பெற்ற கூட்டமொன்றின், ஜீ.ஜீ.பொன்னம்பலம், குமார் பொன்னம்பலம் ஆகியோரின் வாரிசாக தங்களை முன்னிறுத்திப் பேசியதைக் காணக் கூடியதாக இருந்தது. அங்கு, முன்னணிக்கான இடம் இல்லாமற்போய், காங்கிரஸே முன்னிறுத்தப்பட்டது. அது குடும்பக் கட்சியை வளர்க்கும் ஏற்பாடுகள் சார்ந்தது இல்லையா?

இன்னும் நிறையக் கேள்விகள் இருந்தாலும் இறுதியாக, நேர்மை, வெளிப்படை அரசியல் பேசும் தங்களிடம் கடந்த காலத்தில் சி.வி.விக்னேஸ்வரனோடு இருந்த இணக்கமும் முரண்பாடுகளும் பற்றியது.

9. தமிழ் மக்கள் பேரவை, 2016இல் தயாரித்த தீர்வுத் திட்ட யோசனைகளில் ‘தமிழரின் தேசக் கோரிக்கை’ என்கிற விடயத்தை சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தார். அதனை, மின்னஞ்சல் ஆவணங்களின் மூலம், முன்னணி 2019இல் வெளிப்படுத்தியிருந்தது. பேரவை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்த முன்னணி, விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர், அதனை வெளிப்படுத்தியதன் நோக்கம் என்ன? நேர்மையும் வெளிப்படையுமே தாரக மந்திரம் என்று முழங்கும் முன்னணியினர், தேசக் கோரிக்கையை நிராகரித்த விக்னேஸ்வரனை எப்படி ‘தமிழ்த் தேசியத்துக்கு தலைமை ஏற்க வா’ என்று 2017இல் கோரியது? அப்போது, நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் எங்கே போனது?

அரசியல் என்பது வளைவுகளும் சுழிவுகளும் சம்பந்தப்பட்டதுதான். எதற்குமே அசைந்து கொடுக்காத நெடுமரமாக நிற்க முடியாது. அது, சிறிய காற்றுக்கு நிமிர்ந்து நின்றாலும் பெரும் ஊழிகளில் சிக்கினால் பிடுங்கி வீசப்பட்டுவிடும். ஊழிகளுக்குள்ளும் நிலைத்து நிற்பதற்கு வளைதலும் இசைதலும் உதவும். அது அரசியலுக்கும் தேவையான ஒன்று. அதனைச் செய்பவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பி வந்திருக்கிற கஜேந்திரகுமாராகிய தாங்கள், மேற்கண்ட கேள்விகளில் தங்களின் செயற்பாடுகளை எப்படி காண்கிறீர்கள். அவற்றுக்கு தாங்கள் அளிக்கும் பதில்கள் வளைவுகளும், சுழிவுகளும், விட்டுக்கொடுப்புக்களும், நழுவல் போக்கும் இல்லாமல் இருக்க முடியுமா?!

 

 

 

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'