பதிவுகள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர். ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களினூடாக பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு – கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவுகள் இதுவரை பெறப்பட்டிருக்கின்றன. 

மரணித்தவர்களை நினைவு கூருதலும், அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒவ்வொரு இனக் கூட்டத்திற்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் உண்டு. அதுபோல, மரணித்தவர்களின் மாண்பை பேணும் உரிமையும் உண்டு. அதில் தலையீடுகளைச் செய்யும் உரிமை எந்தவொரு தரப்புக்கும் இல்லை. ஆனால், இலங்கையில் போராடி உயிரிழந்தர்கள் என்பதற்காக, அவர்களை நினைவுகூர முடியாது என்கிற அடிப்படைத் தார்மீகங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான நிலைப்பாடொன்று நீண்ட காலமாகவே அரச இயந்திரங்களினால் பேணப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ் மக்களுக்கு எதிராக. (ஜே.வி.பி. அந்தத் தடை இல்லை)

எல்லாளனை நேரடி சண்டையில் வீழ்த்திய துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி எழுப்பி, அவருக்கான அஞ்சலியை செலுத்தினான் என்று தென் இலங்கை தொடர்ச்சியாக தன்னுடைய முன்னோர்களின் நற்குணவியல்பு சார்ந்து பெருமை பேசுவதுண்டு. ஆனால், துட்டகைமுனு வழி வந்தவர்களாக தங்களை முன்னிறுத்தும் இன்றைய ஆட்சியாளர்களோ, மரணித்தவர்களை அஞ்சலிப்பதற்கே தடை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அஞ்சலிப்பதற்கான அல்லது நினைவேந்துவதற்கான உரிமை என்பது ஜனநாயக வழிமுறை சார்ந்தது மட்டுமல்ல. கூட்டுக்காயங்களை ஆற்றுவதற்குமான வழிமுறை. அதுதான், நம்பிக்கையான மாற்றங்களை சமூகங்களுக்கு இடையில் ஏற்படுத்துவதற்கு உதவும்.

விடுதலைப் புலிகளிடம் எட்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் கைதியாக இருந்து மீண்ட இலங்கைக் கடற்படையின் முன்னாள் வீரர் கொமாடர் அஜித் பொயாகொட நாட்டின் இன முரண்பாடுகள் பற்றிக் கூறும் போது, “நாட்டின் இனமுரண்பாடு என்பது பல தசாப்த காலங்களாக உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை தீர்ப்பதற்கும் பல தசாப்தங்கள் தேவைப்படும்.” என்கிறார். சுதந்திர இலங்கை இன முரண்பாடுகளுடன்தான் பிறந்தது. அது, இன்னமும் அந்த முரண்பாடுகளை மூர்க்கமாகப் பேணிக் கொண்டிருக்கின்றது. அதன் பேரில் பேரழிவுகளையும் சந்தித்திருக்கின்றது. அப்படியான நிலையில், முரண்பாடுகளைத் தீர்த்து சமாதானத்தை அடைதல் என்பது, ஒவ்வொரு இனக்குழுமத்தினதும் அடிப்படை உரிமைகளையும் பேணுவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால், தென் இலங்கையோ அதனை செய்வதிலிருந்து அகன்று நின்று, முரண்பாடுகளை இன்னும் இன்னும் பெரிதாக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றது. திலீபனுக்கான நினைவேந்தலுக்கான தடையும் அவற்றின் ஒரு கட்டமே.

இந்த இடத்தில், தென் இலங்கையை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழுகின்றது. இனவாதத் தீயை எரிய வைத்து, அதன் மூலம் பாரிய வெற்றியொன்றை பெற்றிருக்கின்ற ராஜபக்ஷக்கள் ஆட்சியிலிருக்கின்ற நிலையில், அவர்களை எதிர்கொள்வது சார்ந்து தமிழ் மக்கள் பெரிய அளவில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அவர்களை நம்பிக்கையின் பக்கம் நகர்த்த வேண்டிய பொறுப்பு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், தரப்புக்களுக்கும் உண்டு. ஆனால், அவ்வாறான நிலைப்பாடுகள் இதயபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்கிற சந்தேகம் நீடிக்கின்றது.

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை அடுத்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜனாதிபதிக்கான கோரிக்கைக் கடிதமொன்றில் கையெழுத்திட்டிருக்கின்றன. அதாவது, நினைவுகூருதலுக்கான உரிமையை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இல்லையேல், சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக. ஆனால், அரசாங்கத்தின் பேச்சாளர் பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று பதிலளித்திருக்கின்றார். நினைவேந்தலுக்கான தடையை பெறுவதற்காக பொலிஸார் நீதிமன்றங்களில், மேற்கண்ட காரணத்தினையும் கூறியிருக்கின்றார்கள். திலீபன் மரணிக்கும் போது, புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை என்கிற வாதத்தோடு தமிழ்க் கட்சிகள் இப்போது நிற்கின்றன. ஆனால், தடை விதிக்கப்பட்ட அமைப்பொன்றின் தலைவரோடு, சமாதான உடன்படிக்கையொன்றை இலங்கையின் பிரதமர் ஒருவர் கடந்த காலங்களில் மேற்கொண்டிருக்கிறார், என்பதை இன்றைய அரசாங்கம் ஏன் நினைவில் கொள்ளவில்லை என்ற விடயமும் மேலெழுகின்றது.

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையுத்தரவொன்றை 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸார் பெற்ற போது, அதற்கு எதிராக யாழ். மாநகர சபை நீதிமன்றத்தை நாடியது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அந்த வழக்கில் மாநகர சபைக்காக ஆஜராகி வாதாடி தடை உத்தரவை மீளப்பெற்றார். நினைவேந்தல் அதன் பின்னர் எந்தவித தடையும் இன்றி முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டும் பிரச்சினைகள் இருக்கவில்லை. ராஜபக்ஷக்கள் ஆட்சி பீடமேறிய பின்னரான மாவீரர் தினத்தின் போதும், பெரிய பிரச்சினைகள் எழுந்திருக்கவில்லை. மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது திலீபனுக்கான நினைவேந்தலை தடுப்பதோடு, நினைவேந்தலுக்கான தடைகளைப் பேடும் ஆட்டத்தினை ராஜபக்ஷக்கள் தொடங்கியிருக்கிறார்கள். இது, 2015ஆம் ஆண்டுக்கு முன்னராக ராஜபக்ஷக்களின் காலத்தை மீளப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றது.

திலீபனின் நினைவேந்தல் தடையுத்தரவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஒவ்வொரு தரப்பும் தனி அடையாளங்களோடு தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கினாலும், பொது விடயங்களில் ஒருங்கிணைவது என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அது தனிப்பட்ட நலன்கள், தேர்தல் இலாப நஷ்டக் கணக்கின் போக்கில் உருவாக்கப்பட்டால், மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், அவற்றுக்கான உதாரணங்கள் எம்மிடையே ஏராளம் உண்டு.

திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராக நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும், நீதிமன்றத்தினூடாகவும் தமிழ்க் கட்சிகளும், அதன் இணக்கத் தரப்புக்களும் முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே, 2018ஆம் ஆண்டில் இவ்வாறான தடையுத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடிப் பெறப்பட்ட தீர்ப்பினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில், தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைந்த மாவை சேனாதிராஜாவை நோக்கிய கேள்வி எழுகின்றது. அதாவது, தமிழரசுக் கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன், கே.வி.தவராசா என்று இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். மற்றவர், கட்சியின் சட்டத்துறைச் செயலாளர் என்கிற பதவியோடு இருக்கிறார். ஆனால், திலீபன் நினைவேந்தல் தொடர்பிலான நீதிமன்ற வழக்குகளில் இவர்கள் இருவரும் இம்முறை எந்த இடத்திலும் ஆஜராகி இருக்கவில்லை. கட்சித் தலைவராக, அல்லது அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த ஒருவராகக் கூட இவர்கள் இருவரில் யாராவது ஒருவரின் சட்ட உதவியை மாவையினால் ஏன் பெறமுடியாமல் போனது. தனிப்பட்ட அரசியல் நலன்கள், மோதல்களைத் தவிர்த்துவிட்டு, பொதுவான ஒருவிடயத்துக்காக இணைக்கும் போது, ஏன் இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளும் அரங்கிற்கு வரவில்லை. சட்டத்துறைச் செயலாளர் என்கிற பதவியோடு இருக்கின்ற தவராசா, இந்த விடயத்தில் ஏதாவது ஆலோசனைகளையாவது, வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு வழங்கியிருக்கிறாரா? அதுபோல, கடந்த காலத்தில் இவ்வாறான தடையுத்தரவுக்கு எதிராக வெற்றியைப் பெற்ற சுமந்திரன், ஏதாவது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறாரா? இவையெல்லாம், இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளையும் நோக்கிய கேள்வி மாத்திரமல்ல, அவர்களின் கட்சித் தலைவரான மாவையும் நோக்கிய கேள்விகள்.

பொதுத் தேர்தல் காலத்தில் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டு, படுதோல்வியைக் கண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சி, இன்னமும் அதேயிடத்தில் நின்று கொண்டிருப்பதான நிலையை, மேற்கண்ட காட்சிகள் மீண்டும் காட்டுகின்றன. மக்கள் ஏற்கனவே, இவ்வாறான அரசியலினால் சலிப்படைந்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், முன்னோக்கி நகர்வது என்பது, ஒரு கட்சியாக மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியலாக, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, சம்பவங்களுக்காக மாத்திரம் ஒன்றிணைவு என்கிற கோசத்தின் வழியாக பெரிய அளவில் சாதனைகளை நிகழ்த்திவிட முடியாது.

திலீபனின் நினைவேந்தலுக்கான தடையுத்தரவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்கிற முடிவு வரவேற்கப்பட வேண்டியது. அதனை பொறுப்போடு முன்னெடுத்த மாவை வரவேற்க வேண்டியவர்தான். ஆனால், அதனை தெளிவான திட்டமிடல்களோடு அரசியல் ரீதியாகவும் நீதிமன்றத்தினூடும் வெற்றிகொள்ளும் பொறிமுறைகளோடு நகர்த்தியிருக்க வேண்டும். மாறாக, ராஜபக்ஷக்களிடம் கோரிக்கைக் கடிதம் மாத்திரமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடும் என்று நம்புவதெல்லாம் அசட்டுத்தனமானது.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.