பதிவுகள்

இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும், பதவிக்காகவும் எவ்வளவு மட்டரகமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. சாதிய அணுகுமுறை, பிரதேசவாதம், மதவாதம் என்று தொடங்கி சமூக மேம்பாட்டுக்கு ஒப்பில்லாத அனைத்து கட்டங்களையும் அவர்கள் துணைக்கு அழைப்பார்கள். கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், அதற்குப் பின்னரான நாட்களிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு அதனை அசிங்கமான வழிகளில் பதிவு செய்து வருகின்றது. 

பொதுத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சக வேட்பாளர்களுக்குள் காணப்பட்ட போட்டி என்பது, எல்லாவற்றையும் தாண்டி முன்னுக்கு நின்றது. ஒருவரை ஒருவர் எப்படியாவது வெட்டி வீழ்த்தி தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று செயற்பட்டார்கள். மற்றவர்களை வெட்டி வீழ்த்த நினைத்த பலரும் தோல்வியடைந்து புலம்பும் நிலையும் ஏற்பட்டது.

தமிழ்த் தேசியம், ஒற்றுமை, ஓரணித்திரட்சி என்று தேர்தல் பிரச்சாரக் காலங்களில் கூவிக்கொண்டு திரிந்த கூட்டமைப்பினரின் தேர்தல் கால நடவடிக்கைகள் என்பது எந்தவித சந்தேகங்களுக்கும் அப்பால், பதவிகளுக்கான பெரும் போட்டியாகவே பதிவானது. அவர்களிடத்தில் எந்தவித இன விடுதலை குறித்த அடிப்படையும் இருந்திருக்கவில்லை. அப்படி ஏதாவது நல்ல நோக்கங்கள் இருந்திருந்தால், அவர்கள் வேட்பாளர் தெரிவின் போதும், அதன்பின்னரான பிரச்சாரக் காலங்களிலும் வெளிப்படுத்தியிருப்பார்கள். அத்தோடு, பொதுத் தேர்தலை கட்சியை கைப்பற்றும், அல்லது ஆக்கிரமிக்கும் ஒரு கருவியாகவும் தமிழரசுக் கட்சிக்காரர்கள் கையாண்டார்கள். கட்சிக்குள் ஜனநாயக ரீதியான கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், கட்சி தோற்றுப்போனாலும் பரவாயில்லை, கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக வெளித்தரப்புக்களுடன் இணங்கி சதி முயற்சிகளில் ஈடுபடுவது என்பது மிகவும் ஆபத்தானது.

சொந்தக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் எதிராகவே ஊடக மாபியாக்களுடன் டீல் போட்டவர்களும், அதற்காக பெருந்தொகைப் பணத்தைப் பெற்றவர்களும் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டார்கள். இன விடுதலையைக் கோரும் கட்சியொன்றின் தொண்டர்களும், முக்கியஸ்தர்களும் குடிவெறி – ரவுடிக் கும்பலினால் நிரம்பியிருப்பது என்பது எவ்வளவு சோகமானது. அதுவும், அத்தனை ஊடகங்களும் சூழ்ந்திருக்கின்ற போது, அதன் உணர்வுகூட கொஞ்சமும் இல்லாமல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு நாளில் தூசண வார்த்தைகளை பொது உரையாடல் மொழிபோல கையாண்ட காட்சிகளையெல்லாம் காண முடிந்தது.

ஒரு கட்சி இப்படியென்றால், அதற்கு மாற்று என்று தங்களை தொடர்ச்சியாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திக் கொண்டிருப்பது, அந்தரங்கத்தை பொதுவெளியில் காட்சிப்படுத்தும் அரசியலையாகும். முன்னணியில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த இயக்கத்தின் தலைவர்களும், தொண்டர்களும் பொதுவெளியில் என்ன செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாது என்கிற எந்தவித அடிப்படை அறிவும் இன்றி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்சிக்குள், இயக்கத்துக்குள், அமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எழுவது இயல்பானது. அதுவும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளின் போது, கருத்து மோதல்கள்தான் ஜனநாயகத்தின் உண்மையான வழிகளை உறுதிசெய்வதற்கு உதவுகின்றன. ஆனால், அந்தக் கருத்து மோதல்களை ஒரு குற்றமாகக் காட்டி மற்றவர்களை அகற்றும் அரசியலைச் செய்வது என்பது சிறுபிள்ளைத்தனமானது. முன்னணிக்குள் நடந்து கொண்டிருப்பது அதுதான். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் எதிர் மணிவண்ணன் என்கிற நிலையொன்று பொதுத் தேர்தல் காலத்திலேயே முன்னணிக்குள் உருவாகி வெளிப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் முடியும் வரை காட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பதில் இருதரப்பும், அவர்களின் இணக்கத்தரப்புக்களும் மும்முரமாக இருந்தன.

ஆனால், தேர்தல் வெற்றி கஜன்களை முன்னுக்கு நகர்த்திய போது, மணிவண்ணனை வெட்டிவிடும் முடிவுக்கு எந்தவித தயக்கமும் இன்றி அவர்கள் வந்தார்கள். அதுதான், ஒரு கட்சிக்கான ஜனநாயக அடிப்படைகள் ஏதும் இன்றி, மணிவண்ணன் வெளியேற்றப்படவும் காரணமாகும்.

மணிவண்ணன் வெளியேற்றப்பட்ட நிகழ்வை நேரடியாக சொல்வதாக இருந்தால், ‘முன்னணி என்பது கட்சியல்ல. காங்கிரஸுக்கான முகமூடி. முகமூடியாக இருப்பவர்களிடம் என்றைக்கும் அதிகாரம் இருப்பதில்லை. முகத்திடம்தான் அதிகாரம் இருக்கும். முகமூடியின் தேவை முடிந்ததும், அதனை கழற்றி வீசிவிடுவார்கள். இப்போது, மணிவண்ணன் விசயத்தில் நடத்திருப்பதும் அதுதான். மணிவண்ணன் போன்றவர்கள் காங்கிரஸுக்கான முகமூடியாக ஒரு கட்டம் வரையில் தேவைப்பட்டவர்கள். தேவை முடிந்ததும் தூக்கியெறிந்துவிட்டார்கள். அதுபோக, காங்கிரஸின் வரலாறு என்பது பொன்னம்பலங்களைத் தாண்டியது இல்லை. பொன்னம்பலங்களுக்கு அச்சுறுத்தலாக யார் எழுந்தாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது, நடந்திருப்பதும் அதுதான். மணிவண்ணன் போன்றவர்கள் தாங்கள் முகமூடியாக இருப்பது தெரியாமல் தாங்கள்தான் முகம், அதிகாரம் பெற்றவர்கள் என்று நினைத்து செயற்பட ஆரம்பித்தமை என்பது காங்கிரஸின் அரசியலை கேள்விக்குள்ளாக்கும் செயல். அதனை, பொன்னம்பலங்கள் எப்படி அனுமதிப்பார்கள்?’

இன்னொரு கட்டத்தில், அதனை இன்னும் வெளிப்படையாக பேசுவதானால், அண்மையில் கஜேந்திரகுமாரும் மணிவண்ணனும் பேசிக்கொள்ளும் ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் பெரும் சக்கைபோடு போட்டது. அது, மணிவண்ணனுக்கு எதிரான தரப்பினரால், வெளியிடப்பட்டது. முன்னணியின் தலைவரும், தேசிய அமைப்பாளரும், இன்னும் சில முக்கியஸ்தர்களும் உரையாடியபோது, அதனை யாரோ ஒருவர் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அந்த ஒலிப்பதிவு சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவது தொடர்பில் மணிவண்ணனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது, ஒலிப்பதிவின் பகுதிகளைக் கேட்கும் போது தெரிகின்றது. அவர், கஜேந்திரகுமாரிடம் வெளிப்படையாகவும் முன்னணியின் கடந்த கால விடயங்கள் குறித்தும், முக்கியஸ்தர்கள் குறித்தும் பேசுகிறார். கிட்டத்தட்ட அது கட்சி முக்கியஸ்தர்களுக்கிடையிலான அந்தரங்கமான உரையாடல்.

அப்படிப்பட்ட உரையாடலை ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளும் தேவை ஏன் ஏற்படுகின்றது? அதுவும் அந்த உரையாடலில் சம்பந்தப்படும் மணிவண்ணனுக்கே தெரியாமல் பதிவு செய்யும் தேவை ஏன் வருகின்றது? அதனை பதிவு செய்தவர்களின் நோக்கம் எது? இன்றைக்கு அதனை வெளியிட்டு, அதனை முன்வைத்து அரசியல் பேசலாம் என்று துணிவுபெற வைப்பது எது? என்கிற கேள்விகள் எழுகின்றன.

முன்னணியில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தலாக உணர்ந்துகொண்டுதான், தமிழ்த் தேசிய அரசியலில் தங்களை நம்பிக்கையான அரசியல் தரப்பாக முன்மொழிகிறார்களா? கட்சிக்குள் நடக்கும் அந்தரங்க உரையாடலையே, முரண்பாடுகளுக்கான ஊக்கியாகவும், சாட்சியாகவும், மற்றவர்களை பொது வெளியில் காட்டிக் கொடுக்கும் கருவியாகவும் மாற்றும் அளவுக்கான நடைமுறை என்பது எந்த அரசியல் ஒழுக்கத்தில் இருந்து வருகின்றது என்பதை கஜன்கள் வெளிப்படுத்த வேண்டும். இப்படியான அரசியல் ஒழுக்கம், நாகரீகம், செல்நெறி உள்ளவர்கள்தான், தமிழ்த் தேசிய அரசியலைத் காப்பாற்றும் ஆபத்பாண்டவர்கள் என்று நம்ப வைப்பதற்காக புறப்பட்ட தரப்புக்கள் பல உண்டு. அந்தத் தரப்புக்கள் அதற்காக பொறுப்புக் கூறுவார்களா?

தென் இலங்கையில் ராஜபக்ஷக்கள் பெரும்பலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் இன்றைக்கு கேள்விகளுக்கு அப்பாலான அதிகாரம் சேர்ந்திருக்கின்றது. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது தம்மை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதுவும், தீர்க்கமான சிந்தனைகளும், அதற்கான செல்நெறியும் உள்ளவர்களினால் நிரம்ப வேண்டும். மாறாக, பதவி ஆசை என்கிற வெறியோடு அலையும் கூட்டத்தினால் தமிழர் அரசியல் ஆக்கிரமிக்கப்படுவது என்பது முள்ளிவாய்க்காலைத் தாண்டிய பின்னடைவாகும். ‘அரசியல் அறம், அர்ப்பணிப்பு என்பதெல்லாம் சும்மா வாய் வார்த்தைகள்; பதவியும், அதிகாரமும்தான் ஒற்றை இலக்கு. அதற்காக எவ்வளவு கீழிறங்கியும் செயற்படுவோம்’ என்கிற தோரணையிலான அரசியல் நெறியொன்றுக்குள் தமிழ்த் தேசிய அரசியலை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதலில், அடிப்படை அறத்தினையும், ஒழுக்கத்தையும் தமிழ்த் தேசியத்தின் பேரினால் கட்சி அரசியல் செய்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தமிழரசுக் கட்சியின் தேர்தல் காலமும், முன்னணியின் தேர்தலுக்குப் பின்னரான காலமும் பெரும் சாட்சிகளாகும்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.