பதிவுகள்

மனோ கணேசன், தன்னை ஓர் அரசியல்வாதி என்று அழைப்பதைக் காட்டிலும், மனித உரிமைப் போராளி என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்ட விடயங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும் தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும், சக வேட்பாளர்களினாலும், சொந்த உறவுகளினாலும் தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் பேசும் மக்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அவர், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார். 

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் கூட்டமொன்று இடம்பெற்றது. அதன்போது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் கடிதமொன்று விநியோகிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெப்பம் பெறப்பட்டது. எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் 150க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடனான கடிதம் ஊடகங்களில் வெளியானதும், அவசர அவசரமாக மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையின் பிரதி, அவரது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

துமிந்த சில்வா என்கிற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இன்னொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக மரண தண்டனைக் கைதியாக சிறையில் இருப்பவர். ராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர்களின் அம்பாக செயற்பட்டவர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தவர். ஊடக பின்புலம், ஆட்சியாளர்களின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களினால் குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர். பிரேமச்சந்திர கொலை தொடர்பில் அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுக்கள் இன்னமும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாவார் என்பது, அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடக பின்புலம், அதற்காக கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ராஜபக்ஷக்களின் வெற்றி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது அவரது ஊடக பின்புலத்தினூடாக ஒருவகையிலான இலஞ்சமாக திணிக்கப்பட்டதாக கொள்ள முடியும். ராஜபக்ஷக்களினதும், அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, அவரை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது என்று ராஜக்ஷக்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.

தேர்தல் அரசியலில் கொடுக்கல் வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாமும் தவிர்க்கப்பட்டு, தேர்தல் அரசியல் ஆட்சி அதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல் வாங்கல் என்பது ஒரு அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. அந்தக் கொடுக்கல் வாங்கல் என்பது சகிக்கவே கூடாத அயோக்கியத்தனம். இன்றைக்கு துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள் இந்த கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும்? ஜனநாயகமும், மனித உரிமைகளும் தனது இரு கண்களாக மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் நாளாந்தம் முழங்கும் அவர், எப்படி துமிந்தவின் விடுதலைக்கான பங்காளியானார்?

மனோ கணேசன், துமிந்தவுக்கான விடுதலையின் பங்காளியான விடயத்தை, “… துமிந்த கொலைக் குற்றத்தைப் புரியும் போது மது போதையில் இருந்துள்ளார். தற்போது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கடந்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ வேண்டும். அதன் நோக்கில், அவரருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்துகிறார்.

மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் பொது மன்னிப்பு சார்ந்த கோரிக்கைக் கடிதங்களை கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது? அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா? வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா? மது போதையில் குற்றமிழைத்தவர்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே, அவர்களுக்காக கோரிக்கைக் கடிதங்களை வழங்குவதற்கு மனோ கணேசனும் அவரது அணியினரும் தயாரா?

படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அதனை நியாயப்படுத்துகிறேன் என்று அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான். ஆனால், தன்னை மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாக தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதனை அவர் நியாயப்படுத்துவதற்கான சொல்லியிருக்கும் காரணங்கள் கோமாளித்தனமானவை.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்துவிட்டார் என்று அவரது கூட்டணியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரை உடனடியாக நீக்கி மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே அவர் காட்டியிருக்கிறார். ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை அவர் என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காக கோருகிறார்? என்று அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்புகிறார்.

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயத்தையும், அதற்காக சப்பைக்கட்டு கட்டி வெளியிட்ட அறிக்கையும் மனோ கணேசனின் அரசியல் வாழ்வில் ஒரு பெருங்கறையாக கொள்ள முடியும். அத்தோடு, சப்பைக் கட்டுக் கட்டி வெளியிட்ட அந்த அறிக்கையை பேஸ்புக்கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மனோ கணேசன் என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும், துமிந்த சில்வாவுக்காக எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்.

 

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.