பதிவுகள்

அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. 

ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ஜெயநாத் கொலம்பகே ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார் “ஐந்து ஆண்டுகளை நோக்கி அதாவது ஒவ்வொரு கட்சியும் அதன் ஆட்சிக்காலத்தை கருதி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை திட்டமிட்டக் கூடாது” என்ற தொனிப்பட.

ஆனால் இலங்கை போன்ற அடிக்கடி மாறும் வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சிறிய தீவில் வசிக்கும் தமிழர்கள் அதிலும் குறிப்பாக தங்களை ஒரு தேசம் என்று அழைத்துக் கொள்ளும் அதே சமயம் ஒரு தேசத்திற்கு தேவையான வெளியுறவுக் கொள்கையை இன்று வரையிலும் வைத்துக் கொள்ளாத மிகப் பலவீனமான தமிழர்களில் ஒரு பகுதியினர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் வருகையோடு தங்களுடைய அரசியலிலும் ஏதாவது புதிய மலர்ச்சி ஏற்படுமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஜோ பைடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது. அவருடைய வயதும் அப்படி அவர் அவர் அடுத்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அவருடைய வயது இடம் கொடுக்குமா? என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள். அதேசமயம் பதவியேற்றதும் இளமையும் புதுப்பொலிவு கிடைத்து விடும். எனவே அவர் மேலும் ஒரு தடவை பதவிக்குப் போட்டியிட மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது என்று ஒரு மூத்த அரசறிவியலாளர் கூறுகிறார். பைடன் ஒரு தடவை மட்டுந்தான் ஆட்சியில் இருப்பார் என்றால் நான்கு ஆண்டுகளுக்குள் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த முடியாது.

ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கையில் திருப்பகரமான மாற்றங்கள் ஏற்படுவதேன்றால் அதற்கு முழு உலகத்திலும் திருப்திகரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஒன்றில் இயற்கை பேரழிவுகள் அல்லது பெரும் தொற்று நோய்கள் அல்லது உலக மகா யுத்தங்கள் ஏற்பட்டு அதன் மூலம் பூகோள அரசியலில் வலுச் சமநிலை மாறவேண்டும். பொருளாதார வலுச் சமநிலை மாற வேண்டும். இராணுவ வலுச் சமநிலை மாற வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் பொழுது பேரரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் ஏதும் ஏற்படலாம்.

அப்படி என்றால் கோவிட்-19 ஒரு பெரும் தொற்று நோய்தானே? அது ஏற்படுத்திய அழிவு அவ்வாறு திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்த போதுமானது இல்லையா? என்ற கேள்வி எழும்.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கோவிட்-19 க்குப் பின்னர் என்று கூறும் அளவுக்கு கொரோனா தொற்றலை முற்றாக நீங்கி விட வில்லை. உலகம் இப்பொழுதும் வைரசின் பிடிக்குள்தான் இருக்கிறது. அதிலிருந்து முற்றாக விடுபடவில்லை. அப்படி விடுபடும் பொழுதுதான் கோவிட்-19க்குப் பின்னரான உலகம் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.

கோவிட்- 19 பொருளாதார ரீதியாக ஐரோப்பிய அமெரிக்க மற்றும் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது. அதே சமயம் அதன் தாக்கத்திலிருந்து முதலில் விடுபட்ட நாடு என்ற அடிப்படையில் சீனா ஏனைய நாடுகளை விடவும் முதலில் நிமிர்ந்த நாடாகக் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் சந்தைப் போட்டியில் சீனா முந்திக் கொண்டு போகக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாக தெரிகின்றன. இதனால் சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பனிப் போர் தீவிரமடையும்.

ஆனால் அது ஏற்கனவே உருவாகி வந்த ஒரு தோற்றப்பாடுதான். கோவிட்-19க்கு முன்னரே சீனா சந்தைப் போட்டியில் முன்னிலைக்கு வந்துவிட்டது. இது காரணமாகவே சீனாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு நிழல் போர் ஏற்கனவே கொரோனாவுக்கு முன்னரே தொடங்கி விட்டது. கோவிட்-19தையடுத்து அது மேலும் கூர்மையடைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துமா?

ஏற்படுத்தாது. ஏனென்றால் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள வெளியுறவு கொள்கையின் பிரகாரம்தான் இந்த கெடுபிடிப் போர் தொடங்கியது. கோவிட்-19க்குப் பின் அது மேலும் கூர்மை அடையும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உடனடிக்குக் குறைவு.

ஆனால் அந்த வெளியுறவுக் கொள்கையை அமுல்படுத்துவதில் அணுகு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முன்னைய அதிபர் ட்ரம்ப் உணர்ச்சிவசப்படும் ஒருவராகவும் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டும் ஒருவராகவும் பல சமயங்களில் நிதானமற்றவராகவும் வலதுசாரி இயல்பு அதிகமுடைய ஒருவராகவும் காணப்பட்டார். அவரைப் போல புதிய அதிபர் ஜோ பைடன் இருக்க மாட்டார் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இது காரணமாக வெளியுறவுக் கொள்கை அணுகுமுறைகளில் ட்ரம்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் மிதமான போக்கை கடைப் பிடிக்கக்கூடும். இது ஈழத்தமிழர்களுக்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?

முதலாவதாக சீனாவுடனான உறவுகளில் இப்போது இருக்கும் பதட்டம் சில சமயங்களில் குறையலாம். அதாவது பனிப்போர் சூழல் ஒப்பீட்டளவில் பதட்டம் குறைந்ததாக மாறலாம். இது இலங்கை அரசாங்கத்துக்கு ஒப்பீட்டளவில் சாதகமாக இருக்கலாம். சீனாவை நோக்கி போவதில் இலங்கை தீவுக்கு உள்ள வரையறைகளை உணர்த்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில்தான் பொம்ம்பியோ தேர்தல் காலத்தில் இலங்கைக்கு வந்தார்.

இது விடயத்தில் ராஜபக்சக்கள் ஒரு பிராந்திய வியூகத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதாவது இந்தியா முதலில் என்ற வெளியுறவுக் கொள்கை. அது ஒரு திரி சூல அணுகு முறை. இத்திரிசூல அணுகுமுறை மூலம் மூன்று முனைகளை ஒரே நேரத்தில் கையாளாலாம். இந்தியா- அமெரிக்கா- தமிழர்கள்.

இதன் மூலம் இந்தியாவை அமைதிப்படுத்தலாம். இப்பொழுது அமெரிக்காவும் இந்தியாவும் பூகோளப் பங்காளிகள். எனவே இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு அமெரிக்கா விட்டுக் கொடுக்கும். ஸ்ரீலங்கா இந்தியாவைச் சமாளித்தால் அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓரளவுக்கு அமெரிக்காவையும் சமாளிக்கலாம். இந்தியாவை சமாளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்விலும் மேற்கத்திய தலையீட்டைக் குறைக்கலாம்.

இதில் ஸ்ரீலங்காவுக்கு மூன்று அனுகூலங்கள் உண்டு. முதலாவது – இந்தியாவை பகை நிலைக்குத் தள்ளாத ஓர் அணுகுமுறை. இரண்டாவது- தமிழ் மக்களை 13ஆவது திருத்தத்துக்குள் முடக்கும் ஒரு தீர்வு. மூன்றாவது – தமிழ் மக்களையும் இந்தியாவையும் தொடர்ந்தும் முரண் நிலையில் வைத்திருக்கலாம். எனவே இந்தியா முதலில் என்பது ராஜபக்சக்களைப் பொருத்தவரை மிகவும் சமயோசிதமான தற்காப்பு நோக்கு நிலையுடனான ஓரு திரி சூல அணுகுமுறை. இதன் மூலம் அவர்கள் இந்தியாவையும் சமாளிக்கலாம் தமிழ் மக்களையும் சமாளிக்கலாம் அமெரிக்காவையும் சமாளிக்கலாம்.

டிரம்ப்போடு ஒப்பிடுகையில் ஜோ பைடன் ஐநாவை அதிகமாக நெருங்கி வருவார் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மறுபடியும் நாட்டம் காட்டலாம். அப்படி ஒரு சூழல் உருவானால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுமாறு ராஜபக்சக்களின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் ராஜபக்சக்கள் இந்தியாவோடு நிற்கும் வரை அந்த அழுத்தங்களை அவர்களால் சமாளிக்க முடியும். எனவே ஜோ பைடனின் அணுகு முறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் இறுதியாக இந்தியாவை வெற்றிகரமாக கையாள்வதன் மூலம் தன்னால் கையாளக் கடினமாக உள்ள தமிழ் தரப்பையும் மேற்கு நாடுகளையும் இலங்கை வெற்றிகரமாக வெட்டி ஓட முயற்சிக்கும்.

எனினும் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத் தடை போன்ற விவகாரங்களைக் கையாள்வது என்று சொன்னால் அதற்கு அமெரிக்கா வற்புறுத்தும் அதன் வியூக உடன்படிக்கைகளான எம்.சி.சி. உடன்படிக்கை சோபா உடன்படிக்கை போன்றவை தொடர்பாக முடிவுகளை மாற்ற வேண்டி இருக்கும். சவேந்திர சில்வாவின் விவகாரம் ஒரு குறியீட்டு நடவடிக்கைதான்; அது ஒரு பரந்தளவிலான கொள்கை நிலைப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல என்று ராஜபக்சக்கள் நம்ப இடமுண்டு.

அமெரிக்கா உண்மையாகவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களை தண்டிக்க விரும்பியிருந்திருந்தால் அவர்கள் முதலில் கோதாபயவை அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் துறக்க முன்பு விசாரித்திருந்திருக்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத்துக்குள் வர இருக்கும் பசில் ராஜபக்ச இப்பொழுதும் அமெரிக்கப் பிரஜைதான். எனவே தன் பிரஜைகளாக இருந்த இருக்கின்ற ராஜபக்சக்களின் மீது தனது பிடியை இறுக்காத அமெரிக்கா ஒரு கருவியான சவேந்திர சில்வாவின் மீது என் பிடியை இறுக்கியது?

தவிர பொருளாதார ரீதியாக இலங்கைத் தீவின் ஆடை உற்பத்திகளை அதிகம் இறக்குமதி செய்யும் ஒரு நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. இலங்கை தீவின் மொத்த ஆடை உற்பத்தியில் கிட்டத்தட்ட 45 விகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா அதை என் நிறுத்தவில்லை? அதுபோன்ற தடை நடவடிக்கைகளை எடுக்காமல் ஒரு சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் வரவேண்டாம் என்று தடை விதிப்பது வெறும் குறியீட்டு நடவடிக்கைதான். இது விடயத்தில் அமெரிக்கா கேட்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளுக்கு இலங்கை விட்டுக் கொடுக்குமாக இருந்தால் ஜோ பைடனின் அணுகுமுறை இலங்கைக்குப் பெரிய சோதனையாக அமையுமா?

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.