பதிவுகள்

ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் அரசியலமைப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு கூறத் தொடங்கினார்கள். அதன் பிரகாரம் ஒரு புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு அரசாங்கம் கேட்டிருக்கிறது. அதற்குரிய காலக்கெடு இந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்த இடத்தில் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண வேண்டும். 

முதலாவது கேள்வி ஒரு புதிய அரசியலமைப்பு ஏன் தேவை? ஏனெனில் பழைய அரசியலமைப்பு அல்லது இப்பொழுது இருக்கின்ற யாப்பு தோல்வி கண்டுவிட்டது என்ற படியால்தானே? இப்போது இருக்கும் அரசியலமைப்பு ஏன் தோல்வி அடைந்தது? ஏனெனில் அது இந்தச் சிறிய தீவை ஒரு தேசமாக கட்டி எழுப்பத் தவறி விட்டது. இப்போதிருக்கும் அரசியலமைப்பு 42 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த 42 ஆண்டுகளில் அது இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது.

இனப் படுகொலையைத் தடுக்கத் தவறியது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் இந்த நாடு இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. அதுமட்டுமல்ல இரண்டாவது சிறிய தேசிய இனமாகிய முஸ்லீம்களுக்கு எதிராகவும் நிலைமைகள் வளர்ந்து செல்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் தோல்வியுற்ற இப்போதுள்ள அரசியலமைப்புக்கு பதிலாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது என்று எடுத்துக்கொண்டால் ஒரு புதிய அரசியலமைப்பை எங்கிருந்து தொடங்க வேண்டும்?

இலங்கைத் தீவை ஏன் ஒரு தேசமாக கட்டி எழுப்ப முடியவில்லை என்ற கேள்விக்கு விடை கண்டு பிடிப்பதிலிருந்தே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். இக்கேள்வியை மறு வளமாகக் கேட்டால் ஒரு புதிய தேசத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் ஒரு புதிய அரசியலமைப்பை குறித்துச் சிந்திக்க வேண்டும். இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் அது ஒரு தேச நிர்மாணம். அது நடைமுறையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படியென்றால் ஒரு புதிய அரசியலமைப்பு எனப்படுவது பிரயோகத்தில் நல்லிணக்கப் பொறிமுறையின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் ராஜபக்சக்களின் அரசாங்கம் எதிர்த் திசையில் அல்லவா செல்கிறது?

தனிச் சிங்கள வாக்குகளால் தான் வெற்றி பெற்றதாக கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் ஏனைய சிறிய இனங்களை இச் சிறிய தீவின் “சக நிர்மாணிகளாக” ஏற்றுக் கொள்ளத் தயாரா?

இல்லை என்பதே துயரம். ஒரு சிறிய தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமையாகிய இறந்த உடல்களை அடக்கம் செய்யும் உரிமையைக் கூட ஏற்றுக் கொள்ளாத ஓர் அரசாங்கம் எப்படி நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியும்? மனித நாகரீகம் எனப்படுவது இறந்த உடல்களை அடக்கம் செய்வதிலிருந்தே தொடங்குகிறது. இறந்தவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையே மனிதனை விலங்குகளிடமிருந்து துலக்கமான விதங்களில் வேறுபடுத்தியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். ஒரு பூதவுடல் மரண ஊர்வலத்தில் போகும்பொழுது அந்த வழியாக பயணம் செய்பவர்கள் வாகனத்தை நிறுத்தி ஏன் மரியாதை செய்கிறார்கள்? அதை மிருகங்கள் செய்வதில்லைத்தானே? எனவே இறந்த உடலை அடக்கம் செய்யும் உரிமை என்பது ஒரு பண்பாட்டு உரிமை. ஒரு கூட்டு உரிமை. முஸ்லிம் மக்களின் கூட்டு உரிமையை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கம் எப்படி நல்லிணக்க பொறிமுறையை ஏற்றுக்கொள்ளும்?

இந்த அரசாங்கம் மக்களிடம் கேட்டுப் பெற்ற ஆணையே நல்லிணக்கத்துக்கு எதிரானதுதான். தனிச் சிங்கள ஆணை எனப்படுவது இன நல்லிணக்கத்துக்கு எதிரானது. அரசியல் நாகரிகத்துக்கும் எதிரானது. பல்லினத் தன்மை மிக்க பல்சமய தன்மைமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிரான மக்கள் ஆணை அது. இந்த அரசாங்கம் தனிச் சிங்கள வாக்குகளால் மட்டும் வெல்லவில்லை. அந்த வெற்றிக்குள் தமிழ் முஸ்லிம் வாக்குகளும் உண்டு. ஆனாலும் அவர்கள் கணிதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்லின; பல்சமய; பல மொழிப் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் நாகரிகத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இப்பொழுது அவர்கள் அறிவித்திருக்கும் யாப்புருவாக்கம் எனப்படுவது அடிப்படையிலேயே பிழையானது. நல்லிணக்கப் பொறிமுறையில் இருந்து உற்பத்தியாகாத ஒரு யாப்புருவாக்க முயற்சி இது. எனவே கருவிலேயே பிழை.

அடுத்த கேள்வி- மோதலுக்கு பின்னரான சமூகங்களில் ஒரு புதிய தேசத்தைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசியலமைப்புக்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப்படும் அனைத்துலக தராதரங்களை வழமைகளை இந்த அரசாங்கம் ஏன் பின்பற்றவில்லை?

மோதல்களுக்கு பின்னரான சமூகங்களில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பொழுது முதலில் பாராளுமன்றம் சாசனப் பேரவையை மாற்றப்பட்டு அதன் கீழ் நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்படும். அக்குழுக்களே அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை வரைவதுண்டு. அதே சமயம் நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு சமாந்தரமாக குடிமக்களின் அபிப்பிராயங்கள் திரட்டப்படும். அவ்வாறு குடிமக்களின் அபிப்பிராயங்களைத் திரட்டுவதற்கென்று மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும். இவ்விரண்டு பொறிமுறைகளுக்கும் ஊடாகத்தான் ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படும்.

அங்கேயும் பெரும்பான்மை வாதத்துக்கு இடமிருக்கக் கூடாது என்று யாப்பியல் நிபுணர்கள் வற்புறுத்துவார்கள். தலைகளை எண்ணும் பெரும்பான்மை அங்கு முக்கியமல்ல. தலைகளுக்கு இடையிலான சமத்துவமே அங்கு முக்கியம். சம அந்தஸ்தே அங்கு முக்கியம். மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஒரு யாப்பை உருவாக்கத் தேவைதான். ஆனால் அந்தப் பெரும்பான்மை சிறிய தேசிய இனங்களை பயமுறுத்துவதாக; புறக்கணிப்பதாக அவமதிப்பதாக இருக்கக்கூடாது.

சிறுபான்மைகளின் பயங்களைப் போக்கும் விதத்தில் ஒரு அரசியலமைப்பு உருவாக்க பொறிமுறை அமைய வேண்டும். சிறுபான்மையினரின் பயங்களைப் போக்கும் விதத்தில் அங்கே பெரும்பான்மையின வாதம் தலையிடாத ஒரு நிலைமையைக் கட்டாயமாகப் பேணவேண்டும் என்றும் யாப்பியல் நிபுணர்கள் கூறுவார்கள். அதாவது அச்சங்கள்; சந்தேகங்கள்; முற்கற்பிதங்கள்; பொய்கள் போன்றவற்றின் மீது ஒரு புதிய அரசியலமைப்பாகக் கட்டியெழுப்ப முடியாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஆபிரிக்க கிழக்கு ஐரோப்பிய அனுபவங்கள் அப்படித்தான் காணப்படுகின்றன.

தென்னாபிரிக்காவில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பொழுது ஆயிரக்கணக்கான குடிமக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான முன்மொழிவுகள் சேகரிக்கப்பட்டன. மாதக்கணக்காக முன்னெடுக்கப்பட்ட இப்பொறிமுறை ஊடாகவே ஒரு புதிய அரசியலமைப்பு வரையப்பட்டது. கிழக்கு திமோரில் அவ்வாறு மக்கள் கருத்தறிவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாது என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இலங்கைத் தீவு இரு மாத கால அவகாசத்தில் மக்கள் கருத்தைக் கேட்டு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக கூறுகிறது.

அடுத்த கேள்வி கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் ஒரு அரசியலமைப்புருவாக்கப் பொறிமுறை உருவாக்கப்பட்டது. அது அனைத்துலக தராதரங்களை ஓரளவுக்கு பின்பற்றியது. அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு விமர்சனங்கள் உண்டு. எனினும் மூவினத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்புருவாக்கப் பொறிமுறை அது. இலங்கைத் தீவில் இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட எந்த ஒரு அரசியலமைப்பிலும் தமிழ் மக்களின் ஆணை பெறப்படவில்லை.

ஆனால் இது தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படும் ஒரு அரசியலமைப்பு என்று சம்பந்தர் அக்காலங்களில் பெருமையாகக் கூறிக் கொண்டார். கூட்டமைப்பின் ஆதரவோடு பாராளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. அரசியலமைப்புருவாக்கத்துக்கு என்று ஒரு வழி நடத்தற் குழுவும் உப குழுக்களும் உருவாக்கப்பட்டன. அம்முயற்சிகள் ஒரு இடைக்கால அறிக்கை வரை முன்னேறின.

எனினும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன அம்முயற்சிகளை முறியடித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் யாப்புருவாக்க முயற்சிகள் தொடர்பில் கேள்விகள் உண்டு. சந்தேகங்கள் உண்டு. அச்சங்கள் உண்டு. நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியாகவே அவர் புதிய அரசியலமைபை உருவாக்க முயற்சித்தார். நிலைமாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமை- non recurrenc- என்ற பகுதிக்குள் அது வருகிறது. அதன்படி ஒரு நாட்டில் பிரச்சினைக்குக் காரணமாக இருந்த மூல காரணத்தை அகற்றுவதன் மூலம் குறிப்பிட்ட பிரச்சினை மீள நிகழாமல் தடுப்பது. மூல காரணத்தை அகற்றும் விதத்தில் கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்வது. ரணில் விக்கிரமசிங்க அப்படிப்பட்ட துணிச்சலான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் உருவாக்கிய பொதுமக்கள் கருத்தறியும் அமைப்புகள் மூலம் அவர்கள் சேகரித்த கருத்துக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அவை பகிரங்கப்படுத்தப்படவும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் யாப்புருவாக்க முயற்சிகளில் வெளிப்படைத் தன்மை குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. அது ஒரே சமயத்தில் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் வார்த்தைகளால் ஏமாற்ற முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. எனினும் அவர் ஏதோ ஒரு வடிவத்திலாவது அனைத்துலக தராதரத்தை எட்ட முயற்சி செய்தார். ஆனால் அதையும் மைத்திரிபால சிறிசேன குழப்பி விட்டார். இவ்வாறு கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நல்லிணக்கப் பொறி முறையின் ஒரு பகுதியாக அமைந்த அரசியலமைபுருவாக்க முயற்சிகளை ராஜபக்சக்கள் கவனத்தில் எடுக்கவில்லை. ஒரு புதிய அரசியலமைப்புருவாக்க முயற்சியை தொடங்கியதன் மூலம் அவர்கள் முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இடைக்கால வரைபு வரை முன்னேறியிருந்த அரசியலமைப்புருவாக்க முயற்சிகளைப் புறக்கணிக்கிறார்களா?

எனவே மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் அனைத்துலக தராதரத்தையும் மதிக்கவில்லை உள்நாட்டில் ஏற்கனவே தொடக்கப்பட்ட அரசியலமைப்புருவாக்க முயற்சிகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது ரணில்-சம்பந்தரின் ஏக்க ராஜ்ஜிய தீர்வையும் ஏற்கவில்லை. அப்படி என்றால் புதிய அரசியலமைப்பு எந்த அடிப்படையில் உருவாக்கப்படும்? இந்த கேள்வியை இன்னும் திருத்தமாக பின்வருமாறு கேட்கலாம். மெய்யாகவே ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கும் நோக்கம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் உண்டா? அல்லது ஐ.நா.வையும் மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் சமாளிப்பதற்காகத்தான் இந்த அரசாங்கம் அரசியலமைப்புருவாக்கம் என்று கூறிப் பேய் காட்டுகின்றதா?

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.