பதிவுகள்

பதவி, பகட்டினை அடைவதற்கான வழியாக அரசியலைத் தேர்வு செய்தவர்கள், அவற்றை அடையும் வரையில் சும்மா இருப்பதில்லை. அதுவும் ஏற்கனவே பதவி, பகட்டோடு இருந்தவர்களினால், அவையின்றி சிறிது காலம் கூட இருக்க முடியாது. எப்படியாவது, குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிட வேண்டும் என்கிற நினைப்பிலேயே அலைந்து கொண்டிருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அரங்கேறும் காட்சிகளைக் காணும் போது, அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது. 

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரமும் கூடிய அரசியல் பிரமுகர்கள் சிலர், தமிழ்த் தேசியப் பேரவை என்கிற பெயரில் தமிழ்த் தேசியக் கட்சிகள், அமைப்புக்கள் அடங்கிய புதிய கூட்டினை அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்திருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சென்று சொல்லப்படும் சீ.வீ.கே.சிவஞானமும் இணைந்து ஊடகங்களிடம் இந்த விடயத்தினை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியப் பேரவை என்கிற பெயரினை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி தேர்தல் கால பரப்புரைக்காக பயன்படுத்தியிருந்தது. 2017 காலப்பகுதியில் தமிழ் மக்கள் பேரவையை முன்னிறுத்தி தேர்தல் கூட்டு சாத்தியப்பட்டிருக்காத சூழ்நிலையில், பேரவையின் பெயரை காங்கிரஸோடு இணைத்து கையாளும் உத்தியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிறுத்தியிருந்தார். அதன்போக்கில்தான், அப்போது தமிழ்த் தேசியப் பேரவை என்கிற ‘லேபிளோடு’ தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால், அதன்பின்னரான நாட்களில் அந்த லேபிளை அவர்கள் பெரிதாக கையிலெடுக்கவில்லை.

அப்படியான நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், தமிழ்த் தேசியப் பேரவை என்கிற பெயரை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடக உரையாடல்களில் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கினார். அதுவும், தாயகம், புலம்பெயர் தேசங்கள், தமிழ்த் தேசிய ஆதரவு தளங்களை உள்ளடக்கிய பரந்துபட்ட அமைப்பினை தமிழ்த் தேசியப் பேரவை எனும் பெயரின் கீழ் ஒருங்கிணைப்பது பற்றி அவர் பேசினார். அதன்கீழ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்களையெல்லாம் உள்ளடக்குவது பற்றியும் குறிப்பிட்டார். ஆனால், ஜஸ்மின் சூகா தமிழ்த் தேசியப் பேரவை பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றும், அதில் இணையும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்திருந்தார். அத்தோடு, அந்த உரையாடல் ஒரு சில மாதங்களாக அமுங்கிப் போயிருந்தது. ஆனால், அது கடந்த வாரம் மீண்டும் எழுந்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சி கிட்டத்தட்ட சுமந்திரன் அணி- மாவை அணியென்று பிரிந்து கிடக்கின்றது. தேர்தலில் வென்றவர்கள் பெரும்பாலும் சுமந்திரன் அணியிலும், தோற்றவர்கள் பெரும்பாலும் மாவை அணியிலும் இருக்கிறார்கள். இந்த இரண்டு அணியிலும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட அடுத்த கட்டத் தேர்தல்களை நோக்கிய எதிர்பார்ப்போடு இருக்கின்றவர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதற்கான தகிடு தித்தங்கள், படங்காட்டுதல்கள் தொடங்கி நாள்தோறும் அரங்கேற்றுகை நிகழ்ந்து வருகின்றது.

தேர்தலை முன்னிறுத்திய அரசியலில் பதவி என்பது பெரிய ஒரு அடையாளம். பதவி இல்லையென்றால், அவர்களை பெரிதாக ஊடகங்கள் சீண்டாது. அப்படியான நிலையில், ஊடகங்களில் தொடர்ச்சியாக வர நினைக்கிறவர்கள் அல்லது தங்களை மக்களிடம் ஒரு தலைவராக பேண நினைக்கிறவர்கள், ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பார்கள். அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளினால் சமூகத்துக்கு பெரும்பாலும் எந்தப் பயனும் இருப்பதில்லை. மாறாக, தங்களின் பதவிகளை நோக்கிய ஓட்டத்துக்கான பிரச்சார உத்தியாக அவற்றை அவர்கள் செய்ய நினைக்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் குறைந்தது 50 தடவைகளாவது கூடிப் பேசியிருக்கும். அரசியலைப்பு யோசனைகளை முன்வைப்பது, ஜெனீவாவைக் கையாள்வது என்று தொடங்கி பல்வேறு தலைப்புக்களில் சந்தித்துப் பேசி, குழுக்களை அமைத்துக் கலைந்திருக்கிறார்கள். அமைக்கப்பட்ட குழுக்கள் ஒவ்வொன்றும் அவற்றின் கடமைகளை ஆற்றியிருந்தால், சிலவேளை ஏதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கும். ஆனால், இந்தச் சந்திப்புக்களில் பெரும்பாலானவை ஊடக வெளிச்சம் வேண்டி ஏட்டிக்குப் போட்டியாக நடத்தப்பட்டவை. அங்கு பேசப்பட்டவை தொடர்பில் பேசியவர்களுக்கும், குழு அமைத்தவர்களுக்கும், குழுவில் இருந்தவர்களுக்கும்கூட தெளிவில்லை.

வெற்றிபெற்றவர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள், இராஜதந்திர சந்திப்புக்கள் என்று தங்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள விடயங்கள் உண்டு. ஆனால், தேர்தலில் தோற்றவர்களுக்கு பரபரப்பாக வைத்துக்கொள்வதற்கான நேரமென்பது பெரும்பாலும் குறைவு. அதனால், எதனையாவது பேசிக் கொண்டிருக்க வேண்டிய உந்துதல் ஏற்படுகின்றது. அதாவது, பரபரப்பாக 60, 65 வயது வரையில் வேலைபார்த்துவிட்டு திடீரென ஒருநாள் ஒய்வுபெற்றுச் செல்லும் ஒருவர், அடுத்த நாள் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார். அவர், ஓய்வுக்குப் பின்னரான தன்னுடைய ஒழுங்கினைக் கண்டடைவதற்கு சில காலம் ஆகும். இதன்போது தன்னைப் போன்றவர்களை தேடும் படலம் ஆரம்பிக்கும். ஓய்வூதியர்கள் ஒருங்கிணைவர்கள் தங்களுக்கான நேர அட்டவணையைத் தயாரிப்பார்கள், சந்திப்புக்களை நடத்துவார்கள். அந்தச் சந்திப்புக்கள் கோயில்கள், சனசமூக நிலையங்கள், தேநீர் கடை வீதிகள் என்று தொடங்கி பல்வேறு இடங்களாக இருக்கும். அங்கு, எல்லாவற்றையும் அலசுவார்கள், ஆராய்வார்கள். ஆனால், அவற்றினால் யாருக்கும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. கிட்டத்தட்ட அப்படியான சந்திப்புக்கள் போலவே, இந்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளின் சந்திப்புக்களும் அடிக்கடி நிகழ்கின்றன. பல நேரங்களில் ஓய்வூதியர்களை மையப்படுத்திய யாழ்ப்பாணத்து சிவில் சமூக அமைப்புக்களின் நிலையும் அப்படியானவைதான்.

தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானதும், அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவையிடம் கேள்வியெழுப்பியிருக்கிறார். கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுடன் இணைந்து புதிய அமைப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கட்சியிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறதா, இவ்வாறான நிகழ்ச்சி நிரலின் பின்னணி என்ன? என்றெல்லாம் கேட்டவுடன் மாவை, தனக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்று சமாளித்திருக்கிறார். புதிய பேரவை அமைப்பது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடும் கூட்டத்தில் மாவை கலந்து கொண்டிருக்கவில்லை. அப்போது, அவர் கொழும்பில் இருந்தார். ஆனால், அவரின் அணியிலுள்ள சிவஞானம் முக்கிய பங்காற்றினார். அதுவும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் என்கிற அடையாளத்தோடு. விடயம் சற்று சிக்கலானதும், பேரவையில் இணைவது தொடர்பில் சிவஞானத்தை வைத்து தமிழரசுக் கட்சி மத்திய குழுவிடம் அனுமதி கோரும் கடிதமொன்றை எழுத வைத்திருக்கிறார். விடயம் இந்த அளவில் இப்போது நிற்கிறது.

பலமான அணிகளை உடைப்பது, பலவீனமான பல புதிய கூட்டுக்களை உருவாக்குவது உள்ளிட்ட பலவேலைகளில் எதிரி ஈடுபடுவது இயல்பு. அதுபோல, தன்னுடைய வார்த்தைகளுக்கு இணங்காத தரப்புக்களை பலவீனப்படுத்தும் வகையிலான திட்டங்களை பிராந்திய வல்லரசுகள் தொடங்கி வெளிநாடுகளும் செய்வதுண்டு. அனைத்துத் தரப்பும் தமக்கு இணக்கமானவர்களையே தேடுகின்றன. அப்படியான கட்டத்தில், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பலம் அச்சுறுத்தலாகும் அனைத்துத் தருணத்திலும் பிரிந்தாளும் தந்திரம், பொது எதிரியினாலும், வெளிநாட்டுத் தூதரங்கள் உள்ளிட்ட இராஜதந்திர கட்டமைப்புக்களினாலும் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தப் பிரித்தாளும் தந்திரத்துக்காக அரசியல்வாதிகள், சமூகப் பிரநிதிதிகள், ஊடகவியலாளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினருடனும் அவை சந்திப்பை நடத்துகின்றன. அவற்றில் வெளிப்படையான சந்திப்புக்கள் ஒருசில என்றால், இரகசியமான சந்திப்புக்கள் பல நூற்றுக்கணக்கானவை.

இவ்வாறான சந்திப்புக்களில் தமிழ் மக்களின் நலன் என்ற அடிப்படையில் விடயங்கள் மேலோட்டமாக அணுகப்பட்டாலும், அதன் உண்மையான பின்னணி அந்தந்த நாடுகளில் தேவைகள் பொறுத்ததாக இருக்கும். இந்தச் சந்திப்புக்கள் எப்படி ஆரம்பிக்கும், அங்கு எவை ஊசியாக ஏற்றப்படும், எப்படி முடியும் என்பது சந்திப்புக்களில் பங்கெடுத்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறான சந்திப்புக்களை முழுமையாக உள்வாங்கி அதற்கு ஏற்றாற்போல் செயற்படும் நபர்கள்தான், அதிக தருணங்களில் குட்டையைக் குழப்புகிறார்கள். அவ்வாறான ஒரு கட்டத்தில் நின்றுதான் தமிழ்த் தேசியப் பேரவையின் பின்னணியையும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், பேரவை உருவாக்கத்தின் பின்னணியில் தமிழ் மக்களை இன்னும் பலவீனப்படுத்தும் உத்தி மற்றும் பதவியிழந்த அரசியல்வாதிகள் மீண்டும் பதவியை அடையும் வழி என்கிற இரண்டு விடயங்களைத் தவிர வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.