பதிவுகள்

இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் சமூகத்தின் அரசியலும், இருப்பும், இயங்குதலும், குறித்த ஒரு மாற்றுப் பார்வையாக விரிகிறது இக்கட்டுரை. தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் கட்டுரையாளர் ஏ.ஜி. யோகராஜா, இளமைக் காலத்தில் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்டவர்.

சமூக, அரசியல் பரப்பில் புதிய சிந்தனை நோக்கிலான கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதி வருபவர். போருக்குப் பின்னர் சமூகச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். அவரது புதிய சிந்தனையிலான இக் கட்டுரையின் சிறப்புக் கருதி, முதல் வெளியீடு செய்த அகழ்மின்னிதழ் மற்றும் கட்டுரையாளுருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4TamilmediaTeam

சோவித் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் மார்க்ஸிய உலகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன என்பது உலகளாவிய கவனிப்பாக இருந்து வருகிறது. ஆனால் மனித சமூக விடுதலையின் அடிக்குரலாக இன்றும் இருந்து வருவது மார்க்ஸியச் சிந்தனை முறைமை என்பதை நுனித்து நோக்குவோர் விளங்கிக்கொள்வர். அதேவேளை…

“இயற்கையிலும் சமுதாயத்திலுமுள்ள அனைத்து விடயங்களுக்கும் மானுடர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தன்னிடம் விளக்கம் இருப்பதாக மார்க்ஸியம் உரிமை கொண்டாடுவதில்லை. மானிட குலத்தால் வரலாற்றின் போக்கில் கட்டம் கட்டமாகப் பெறப்படும் அறிவு; பேரண்டம், இயற்கை, மனித மனம் முதலியவற்றைப் பற்றிய சார்புநிலை அறிவேயன்றி முழுமுற்றான (absolute) அறிவு அல்ல. மாறாக, முழுமுற்றான அறிவை நோக்கிய இடையறாப் பயணமே. அதேபோல் மானிட சுதந்திரம் என்பது ஒருபோதும் முழு முற்றானதாக இருக்க முடியாது. அது ஓப்பீட்டு அளவிலான சுதந்திரமே…”

எஸ்.வி.இராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும் நூலிலிருந்து

இவ்விதம் மார்க்ஸியம் குறித்த பரந்துபட்ட கருத்தியலையும், பெரியாரதும் அம்பேத்காரதும் மற்றும் மகாத்மா காந்தி அடங்கலாக இன்னும் ஏனைய முன்னோடிகள் பலரதும் வழிமுறைகளையும் உள்வாங்கிக்கொண்டும், உருவாக்கிக்கொண்டும் கடந்தும், இன்றைய உலகமயமாக்கற் சூழலின் தாக்கத்திற்கு ஏற்ப, மேற்குலக நவீன வழிமுறைமைகளையும் கவனத்திற்கு உட்படுத்தவேண்டிய காலகட்டம் இது. அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பரந்துபட்டரீதியில், நடைமுறைக்கு உகந்த வகையில் (ஸ்தூல நிலைமைக்கேற்ப) புதிய கருத்தியல்கள் தோற்றம்பெறவேண்டியது அவசியமாகிறது. சுருங்கக் கூறின் கருத்தியல் வறுமையில் இருந்து ஈழத்தமிழ்த் தேசம் விடுபடவேண்டும்.

தேசியம்:

முதலாளித்துவத்தின் தோற்றத்துடன் கருத்தரித்த ஒன்றுதான் தேசியம். அந்த வகையில் தேசியத்தின் வருகைக்கான வயதை 200 பிளஸ் எனக் குறிப்பிடலாம். அதனால்தான்; அதாவது அன்றைய சூழலில் தேசம் பற்றிய தேசியக் கட்டமைப்பு வலுப்பெற்றிருக்கவில்லை என்பதனால்தான் கங்கை கொண்டு கடாரம்வரை வென்று வந்த தமிழ் மன்னர்கள், தமிழர்க்கான நாடொன்றைத் தக்கவைக்கும் எண்ணக்கருவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டிகளும் அந்நியர்கள் வந்துபுகக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் பார்ப்பனியத்தின் ஆளுமைக்குட்பட்டு பிராமணியத்தின் அடையாளங்களாக ஆங்காங்கே புதிது புதிதாக பாரிய அளவில் கோவில்களைக் கட்டினர். வர்ணாச்சிரம சாதியக் கருத்தியல்களையும் பரப்பினர். எது எப்படியோ அவர்களது தமிழின் மீதான காதலுக்கு தலை வணங்குவோம்.

தமிழ்த் தேசத்திற்கான போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய சூழலிலும் அரசியல் நிலைமைகளிலும் தமிழர்க்கான ஒரு தீர்வுப் பொதியைப் பெற்றுவிடுவது என்பது இலகுவான காரியமாக இல்லை. தொடர்ச்சியான நாடாளுமன்றப் பிரசன்னமும் சிறு கல்லைத்தன்னும் கையில் எடுக்குமளவுக்குக் கைகொடுக்கவில்லை.

இந் நிலைமைகளில், தமிழர்க்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மைத் தேசங்களும் முழுமையான ”தேசிய உருவாக்கம்” பெறவேண்டியமை குறித்து சீரியசாகச் சிந்திக்கவேண்டிய தருணம் இது. பௌதீக முறைமையிலும் பண்பாட்டு வடிவிலும் இது நடந்தேறவேண்டும். அரசின் அனுசரணையின்றி மேற்கொள்கொள்வதற்கான நடவடிக்கை இது. ஒட்டுமொத்த நாட்டுக்கும், சிங்கள தேசத்துக்கும் கூட நன்மை பயப்பதாக அமையும். இதன்பொருட்டு இதுவரை தமிழ்த் தலைமைகள் எண்ணிப்பார்க்காத முறைமையில் எமது வேலை முறைமைகளை “அகநிலைச் செயற்பாடு”,“புறநிலைச் செயற்பாடு” எனும் வகைகளுக்குள் ஆய்வு செய்யவேண்டியதும் அவசியமாகிறது.

முக்கிய அரச தீர்மானங்களை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்கக்கூடிய அரசு என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் மற்றும் அதிகாரத்துவத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பாக விளங்குபவை ‘அஸ்கிரிய’ மற்றும் ‘மல்வத்த’ பௌத்த பீடங்கள். இவற்றுக்குப் பின்னால் பாரிய முதலாளித்துவ சக்திகளும் பிரபுத்துவப் பரம்பரைகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. இவற்றின் அனுசரணையின்றி முக்கிய அரச முடிவுகள் எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை

அகநிலைச் செயற்பாடு:

அகநிலைச் செயற்பாட்டின் முக்கிய அம்சமாக இருப்பது தேசியத்தின் முக்கிய கூறாக விளங்கக்கூடிய முதலாளித்துவக் கட்டமைப்பை நோக்கி தேசத்தை நகர்த்துதல் ஆகும்.

முதலில், தமிழ்த் தேசத்தைக் காப்பாற்றும் பொருட்டு உடனடிக் கடமையாக தமிழர்களின் – இளந்தலைமுறையினரின் – புலப்பெயர்வு தடுக்கப்படவேண்டும். புலப்பெயர்வைத் தடுக்கும் வகையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கவேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, பாரிய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் வேண்டும். இதன் நிமித்தம் தமிழ்ப் பிரதேசங்களில் பேரளவிலான முதலீடுகளைக் குவிக்கும் வகையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் செல்வந்தர்களை ஊக்குவிக்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கும் முறைமையிலும், நவீன தொழில் நுட்பங்களைக் கையாளும் வகையிலும் உள் ஊர்த் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு போதியளவு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். மட்டுமன்றி, மேலும் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், புலம்பெயர்ந்த தேசங்களில் கல்வி கற்றுத் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களாக விளங்கும் இளைய தலைமுறை உறவுகளையும் வரவைத்து தொழிற் கூடங்களை வளப்படுத்த முடியும்.

முற்று முழுதான நவீன முதலாளித்துவக் கட்டமைப்பின் அடிக்கட்டுமானமாக இருப்பது (பொருளியல் கட்டுமானமாகிய) பாரிய முதலீடுகளும் தொழில் நிறுவனங்களும் ஆகும். அதேவேளை இக்கட்டுமானம் ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையில் இயங்குவதற்குத் துணைசக்தியாக விளங்குவது மேற்கட்டுமானமாகிய நவீன முதலாளித்துவக் கட்டமைப்பை நோக்கிய பண்பாட்டு உருவாக்கம். எமக்கான அரசியலை ஆணையில் வைப்பதற்கும் இதுவே அடித்தளம்.

(இவ்விடத்தில் எழும் கேள்வி- ஏன் சோசலிசக் கட்டுமானத்தை உருவாக்க முடியாதா என்பது. பதில்: சோசலிசக் கட்டுமானத்தை நோக்கி நகர்வது சிறப்புத்தான். ஆனால் எமது இன்றைய சமூக நிலைமையில் அல்லது சூழலில் அத்தைகைய செயல், வண்டிப் பயணத்தில் மாட்டுக்கு முன்பாக வண்டியைக் கட்டிவிடுவதற்கு ஒப்பானதாகும்.)

தமிழ்ச் சமூகத்தில் பண்பாட்டு உருவாக்கம் என்பது என்ன?

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்ணை அடிமை முறைமையின் மிச்ச சொச்சங்கள் இன்னும் எம்மிடத்தில் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இவற்றில் இருந்து விடுபடுவதையே நவீன பண்பாட்டு உருவாக்கம் என்கிறோம்.

இன்றும் நிலவுகின்ற, சாதிய அதிகாரத்துவப் பண்பாடுகள் தொடங்கி, மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை உண்டு பண்ணும் கலாச்சாரப் பண்புகள் வரை அனைத்தும் பண்ணை அடிமைத்தனத்தின் பிறப்புகள்தாம். குறிப்பாக…

சாதிய அதிகாரத்துவமும் சாதிய ஏற்றத் தாழ்வுகளும்
பெண் ஒடுக்குமுறையும் பெண்களை சுயமரியாதைக் குறைவாக நடத்துதலும்
மூன்றாவது பாலினத்தவர்களை (அரவாணிகள், திருநங்கையர்கள்) சுயமரியாதைக் குறைவாக நோக்குதலும் கீழ்நிலையில் வைத்துப் பார்த்தலும்
மாற்றுத் திறனாளிகளை கீழ்நிலையில் வைத்துப் பார்க்கும் பண்பு
பிரதேசரீயான ஏற்றத்தாழ்வும் பாகுபாடும்
முன்னைய (குறிப்பாக பெண்) போராளிகளை இழிவாகவும் சுயமரியாதைக் குறைவாகவும் வைத்துப் பார்க்கின்ற பண்பு
மனிதர்களை மதம், இனம், மற்றும் நிறரீதியாக நோக்குவதும் சுயமரியாதைக் குறைவாக அணுகுவதுமான பண்புகள்

மேற்படி பண்பாட்டு அசிங்கங்களின் மரிப்பில்தான் புதிய பண்பாட்டு விழுமியங்கள் உருவாக முடியும். இதனால்தான் தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் சமூக விடுதலைக்கான முக்கியத்துவத்தை குறைத்து மதித்துவிட முடியாது. மட்டுமல்ல, சாதிய மற்றும் பெண்ணிய ஒடுக்கு முறைகளுக்குள் தேசிய உள்ளடக்கம் உண்டு என்பதையும் வலியுறுத்துகிறோம். இத்தகைய நிலைமைகளில், தேசிய விடுதலையில் சமூக விடுதலை முன் நிபந்தனை ஆகிறது.

இயந்திர மயமாகப்போகும் எமது தேசியக் கட்டுமானத்தின் பிரதான சக்தியாக விளங்கப்போவது விளிம்புநிலைச் சமூகங்களில் தோற்றம் பெற்றிருக்கும் இளந்தலைமுறை உறவுகள்தாம். ஒன்று, இன்று எமது தேசம் பூராவும் பரந்தும் பெரும்பான்மையாகவும் வாழ்பவர்கள் இவர்கள். தமது தொழிற் சக்தியை விற்பதற்கான ஆற்றலும் அறிவும் உள்ளவர்களாகவும் இவர்கள் விளங்குகின்றனர்.

புறநிலைச் செயற்பாடு:

இங்கு புறநிலைச் செயற்பாடுகள் அனைத்துமே தவிர்க்க முடியாதபடி அரசியல் வேலை முறைமைகளுக்குள் அடங்குகின்றன. ஆரம்ப காலந்தொட்டு தமிழ்த் தலைமைகள் புறநிலைச் செயற்பாடுகளில் மட்டுமே பெரும்பான்மைக் காலத்தை விரயம் செய்து வந்தனர், வருகின்றனர். அவ்வகையில் அத்தகைய சரித்திரத்தை மீண்டுமொருமுறை இங்கு பதிவிடவேண்டிய அவசியத்தைத் தவிர்த்துக்கொள்கிறேன். முக்கியமாக நாடாளுமன்ற நுழைவிலும் “அகிம்சை” வழியிலும் இறுதியாக ஆயுதப் போராட்டத்தின் மூலமும் புறநிலைச் செயற்பாடுகள் முனைப்புப் பெற்றிருந்தன.

போராட்டம் முடிவுற்ற காலத்தில் இருந்து, முன்னைய அதே வழிமுறை -நாடாளுமன்ற நுழைவு- இன்றும் தொடர்வது கண்கூடு. உண்மையைக் கூறினால், எமது தலைமைகளைப் பொறுத்தவரை நாடாளுமன்ற நுழைவு என்பது ஒரே செக்கைச் சுற்றி செக்கு மாடுகள் சுற்றிச் சுற்றி வருவதைப்போன்ற ஒரு நிகழ்வுதான். (இலங்கையில் ஜனநாயக ஆட்சி நிகழ்கிறது என்கின்ற ஆதாயத்தை அரசுக்கு வழங்கிவிட்டு) மாடுகளுக்கு எவ்வித ஆதாயமும் அற்ற முறையில் அவை மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கின்றன.

இன்றைய சூழலில் ஓர் அடையாளத்தின் நிமித்தம் நாடாளுமன்ற நுழைவை ஏற்றுக்கொண்டாலும், எமக்கான புறநிலைச் செயல்களுக்குரிய அடிப்படை வேலைகள் வெளியில்தான் குவிந்துள்ளன.

ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களுடன் ஐக்கியப்படுவதற்கான முயற்சிகளை நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் மேற்கொள்ளுதல்.
அரசாங்கத்துக்கு அப்பால், பெரும்பான்மைத் தேசத்தின் விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் எமது நடைமுறைகளை அமைத்தலும் கருத்தியல் சித்தாந்தத்தை உருவாக்குதலும்.
அரசியல் பேச்சுவார்த்தைகளில் கடைப்பிடிக்கவேண்டிய ராஜதந்திரம் மற்றும் நவீன அணுகுமுறை குறித்தும் செலுத்தவேண்டிய அவதானங்கள்
சர்வதேசரீதியாக விளிம்புநிலைச் சமூகங்கள், கட்சிகள், அமைப்புகளுடன் ஐக்கியப்படுவதற்கான வேலைமுறைகளை மேற்கொள்ளுதல்
தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து இனத்தினதும், விளிம்புநிலைச் சமூகங்களின் தேவையின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன்வைத்து, அதனை வென்றெடுப்பதற்கான முயற்சியில் அனைத்து மக்களையும் திரள்நிலையடையச் செய்தல்

மேற்படி செயற்பாடுகளில் 2, 3, 5 ஆகியன குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

அரசாங்கத்துக்கு அப்பால், பெரும்பான்மைத் தேசத்து விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் எமது கருத்தியல் சித்தாந்தத்தை உருவாக்குதலும் ஐக்கியத்துக்கான நடைமுறைகளை முன்னெடுத்தலும்:

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள இனம் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது உண்மையே. ஆனால் மறுபுறத்தில் அகில உலகைப் பொறுத்தவரை அவர்கள் மிகச் சிறிய சிறுபான்மை இனங்களில் ஒரு பகுதினர் என்ற அச்சத்துடன்தான் இத் தரவை ஏற்றுக்கொள்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூகமாகிய முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மை உலகிற் பெரிய மதமாகிய இஸ்லாத்துடன் சேர்த்து தம்மை பெரும்பான்மையாகவும் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்கள் சிறுபான்மையாக இருப்பினும், மிக அண்மையாக, 18, 20 கிலோ மீற்றருக்கு உட்பட்ட தூரத்தில் வாழ்கின்ற சுமார் 8 கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளாக உள்ளனர். ஏற்கனவே பல நூற்றாண்டுகளுக்கு மேலாக இத் தேசத்தை ஆக்கிரமித்திருந்த வரலாறும் தமிழ் மன்னர்கள் பலருக்கு உண்டு. சிங்கள – தமிழ் முரண்நிலையின் முக்கிய உளவியல் காரணம் இதுவே. சிங்களத் தலைமையினது விட்டுக்கொடுக்காத நிலைப்பாடுகளுக்கான அடிப்படையும் இதுதான். அனைத்துக்கும் மேலாக அவர்களின் மனநிலையில் என்றும் குமுறிக்கொண்டிருக்கும் அச்சமும் இங்கிருந்தே பிறப்பெடுக்கிறது.

இந்நிலைமைகளில், உலகில் பெரிய மதங்களில் ஒன்றான பௌத்த மதத்துடன் பிணைத்த வகையில் இலங்கையைப் பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்தியிருப்பதும் ஒரு இராஜதந்திர வகைப்பட்ட நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. தம்மை உலகின் பெரும்பான்மைச் சமூகங்களுடன் சேர்த்து உணர்வதற்கும் இது வழி சமைக்கிறது.

சிங்கள சமூகத்தின் இத்தகைய உளவியல் புரிந்துகொள்ளபடவேண்டிய ஒன்று. இச்சந்தர்ப்பத்தில்தான் சிங்களத் தேசத்தில் தமிழர் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் பொருட்டு; பேராசிரயர் சிவத்தம்பி இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு “முதலில் நான் ஓர் இலங்கையன், அதன் பின்புதான் நான் தமிழன்” என்று மொழிந்த வார்த்தைகள் சிந்திக்கற்பாலதே.

அரசியல் பேச்சுவார்த்தைகளில் கடைப்பிடிக்கவேண்டிய ராஜதந்திரம் மற்றும் நவீன அணுகுமுறை குறித்தும் செலுத்தவேண்டிய அவதானங்கள் குறித்து:

அரசியற் பேச்சுவார்த்தைகளின்போது கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய மூன்று நவீன அணுகுமுறைகளாவன:

காலமும் வெளியும் (Time and space)
முரண்பாடுகளின் உருமாற்றம் (Conflict transformation)
முற்று முழுதான தீர்வு

இவை பற்றிய விரிவை வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்குவோம்.

இச்சந்தர்ப்பத்தில், எமது தேசிய உரிமைக்காகவும் காணாமல் போன எமது உறவுகளைக் கண்டடடைவதற்காகவும் எதிரியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்திற்கும் எதிரியைப் பழிவாங்குகின்ற வழிமுறைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்திற்கும் இடையிலான கால வெளி குறித்த சாணக்கியத்தை அல்லது ராஜதந்திரத்தை தமிழ்த் தலைமைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது.

தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து விளிம்புநிலைச் சமூகங்களினதும் தேவையின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன்வைத்து, அவற்றை வெற்றிகொள்வதற்கான முயற்சியில் அனைத்து மக்களையும் திரள்நிலையடையச் செய்தல்:

தமிழ்த் தேசத்திற்கான போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து சுமார் 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட இன்றைய சூழலிலும் அரசியல் நிலைமைகளிலும் தமிழர்க்கான ஒரு பொதியைக் கூட பெற்றுவிடுவது என்பது இலகுவான காரியம் அல்ல. தொடர்ச்சியான நாடாளுமன்றப் பிரசன்னமும் சிறு கல்லைத்தன்னும் கையில் எடுக்குமளவுக்குக் கைகொடுக்கவில்லை. இனியுமோர் ஆயுதப் போராட்டத்கிற்கு இடமில்லை என்பதும் தெளிவு.

இத்தகையதோர் நிலைமையில் சர்வதேச எண்ணங்களுக்கு அமைவாகவோ, இந்தியாவின் வற்புறுத்தலுக்கு இசைவாகவோ அல்லது உள் ஊர் அறம்சார் நடவடிக்கைகளின் அடிப்படையிலோ சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளுக்கான எவ்வித தீர்வையும் நோக்கி இந்த அரசோ அல்லது மாறிவரும் எந்த அரசோ ஒரு சிறிய அடியைக்கூட முன்நோக்கி வைப்பதற்கில்லை. முந்தைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா காலத்தில் இருந்து இதுதான் நிலைமை. இந் நிலைமைக்கான அடிப்படை என்ன?

இன்றைக்கு உலகம் பூராவும் சர்வ வியாபகமாக விழித்துப் பார்க்கப்படும் மூன்று வியங்கள் குறித்து நாம் நோக்கவேண்டியிருக்கிறது.

(சமூக) மேலாதிக்கம்
(சமூக) ஆளுமை
அதிகாரத்துவம்

இம் மூன்று கருத்தாளுமை குறித்து இலங்கைச் சமூகத்தை நோக்குவோமாக இருந்தால்;

இலங்கையின் சமூக மேலாதிக்க சக்தியாக விளங்குவது சிங்கள இனம் என்பது எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று.
இன்றைய இலங்கையில் ஆளுமை சக்தியாக வலம் வருபவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். இதுவும் அறியப்பட்ட ஒன்றுதான். இதற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா ஆகியோரையும் அதற்கு முன்பு சந்திரிகா பண்டாரநாயக்காவையும் குறிப்பிடலாம். இவர்களுக்கு முன்பு இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலம் முதல் டட்லி சேனநாயக்கா, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, ஜே. ஆர். ஜயவர்த்தனா ஆகியோருடன் இன்னும் சிலரைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு வெளியில் இன்னும் பல முதலாளித்துவ சக்திகளும் பிரபுத்துவப் பரம்பரைகளும் கூட கண்ணுக்குத் தெரியாத ஆளுமை சக்திகளாக இருப்பர். (இத்தகையவர்கள் பலர் அதிகாரத்துவ சக்திகளாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.) ஆனால் இவர்கள் யாரும் அதிகாரத்துவத்தை, அரசாங்கத்தின் (Government) மீது பிரயோகித்த அளவுக்கு “அரசு” (State) என்ற கட்டமைப்பின் மீது செலுத்தியயிருக்கவில்லை.
அதிகாரத்துவம்: மேற்படி ஆளுமை சக்திகளிடம் அரசுக்கான அதிகாரத்துவம் இருப்பதில்லை. குறிப்பாக தேசிய இனங்களுக்கான அரசியற் தீர்வு குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்கும் தனி அதிகாரத்துவம் இந்த அசாங்கங்கள் எதனிடத்தும் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். இன்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் கூட இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமைவாக ஆயினும் ஒரு தீர்வுக்கு வந்துவிடப்போவதில்லை.

அப்படியானால் முக்கிய அரச தீர்மானங்களை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்கக்கூடிய அரசு என்பது என்ன? அது எங்கே இருக்கிறது?

பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் மற்றும் அதிகாரத்துவத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பாக விளங்குபவை ”அஸ்கிரிய” மற்றும் ”மல்வத்த” பௌத்த பீடங்கள். இவற்றுக்குப் பின்னால் பாரிய முதலாளித்துவ சக்திகளும் பிரபுத்துவப் பரம்பரைகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. இவற்றின் அனுசரணையின்றி முக்கிய அரச முடிவுகள் எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. இத்தகைய பீடங்களிலும் குறிப்பிட்ட சமூக சக்திகள்தான் மேலாதிக்கத்திற்கு வர முடியும். இவற்றின் அனுசரணைக்கு அப்பாற்பட்டு தமிழர்க்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததன் விளைவாகத்தான் முந்தைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரினால் நேரடியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இத்தகைய நிலைமைகளில் பௌத்த பீடங்களை வழிக்குக் கொண்டுவரும் வழிமுறைதான் என்ன?

தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என அனைத்து விளிம்புநிலைச் சமூகங்களினதும் தேவையின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன்வைத்து அவற்றை வெற்றிகொள்வதற்கான முயற்சியில் அனைத்து மக்களையும் திரள்நிலையடையச் செய்தல்:

வரப்புயர நீர் உயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடி உயரும்
குடிஉயர கோன் உயரும்

ஆம்! அவ்வையாரின் செய்யுளின் வழியே கீழிருந்து மேல் செல்வதுதான் இன்றைய காலச்சூழலில் சாத்தியமானது. வாழ்வாதாரத்துக்காக ஏங்குகின்ற மக்கள் திரள், பாட்டாளிகள் கிராமங்களில்தான் செறிவாக வாழ்கின்றனர். அதிகாரத்துவத்தின் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டு வாழ்பவர்களும் இந்தப் பாட்டாளிகள்தாம். எமது நாட்டு ஸ்தூல நிலைமையில் மார்க்ஸ் கூறிய பாட்டாளிகளும் இவர்கள்தாம்.

கிராமங்களுக்கான அதிகாரத்தை முன்னிறுத்தி, பெரும்பான்மைச் சிங்களத் தேசம் தொடங்கி, ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகம் வரையான அனைத்துச் சிறுபான்மைத் தேசங்களதும், விளம்புநிலை மக்களையும் ஒன்றிணைப்பதற்கான வேலை முறையில் சகல ஜனநாயக சக்திகளும் இணையவேண்டும்.

இத்தகைய ஒனறிணைவில் உருவாகும் தொடர்ச்சியான எழுச்சிகளும் கட்டமைக்கப்பட்ட கிளர்ச்சிகளும் கிளர்ச்சி வகையிலான போராட்டங்களுமே, பௌத்த பீடங்களின் மீதும் அவற்றுக்குப் பின்பலமாக விளங்கும் மகா சக்திகளினதும் அதிகாரத்துவ மன நிலையிலும் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இவ் வகையிலான தொடர் நடவடிக்கைகளே எதிர்கால அரசியலில் மாற்றத்தை உண்டுபண்ணும் கருவிகளாக அமையும்.

சிறுபான்மைத் தேசங்கள் தமது தேசங்களை ஆளுமைக்குட்படுத்துவதற்கும் இதுவே வழி. “முற்போக்குத் தேசியம்” என்பதன் உள்ளார்ந்த அர்த்தமும் இதுவாகத்தான் இருக்க முடியும். இவற்றுக்கான செயற்திட்டங்களை முன்னிறுத்தி, முன் கை எடுக்கவேண்டியது சகல இடதுசாரிகளினதும் ஜனநாயக சக்திகளினதும் உடனடி வரலாற்றுக் கடமையாகும்.

நன்றி: ஏ.ஜி.யோகராஜா

முதல் வெளியீடு : அகழ் மின்னிதழ்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.