பதிவுகள்

தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம். அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற கடப்பாடுகளும் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதிகமானவை. ஆனால், கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட காட்சிகள், பெரும் ஏமாற்றத்தினை தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியிருக்கின்றது. 

வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் மற்றும் அருட்தந்தை எழில்ராஜன் தலைமையிலான குழு என நான்கு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை (மே 18) முள்ளிவாய்க்காலில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. இவற்றில் எந்த நிகழ்வுக்கு செல்வது என்று பெரும்பாலான மக்கள் குழப்பி நின்றனர். இன்னும் சிலரோ எல்லா நிகழ்விலும் பங்கெடுப்பது பற்றிய தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இந்த நான்கு நிகழ்வுகளிலும் ஒன்றில்கூட குறைந்தது ஆயிரம் பேர் கூடியிருக்கவில்லை. ஒப்பீட்டளவில் வடக்கு மாகாண சபையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் அதிகளவானோர் பங்கு பற்றியிருந்தார்கள். மற்றைய நிகழ்வுகளில் சில நூறு பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்கள்.

இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆயிரம் பேரையாவது ஒருங்கிணைக்க முடியாத கையாலாகத்தனமொன்று அரங்கேறியது. எண்ணிக்கை மாத்திரம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்பதல்ல. ஆனால், உறவுகளை இழந்து பெரும் வலிகளோடு ஒன்றித்திருக்கின்ற மக்களை ஒரு புள்ளியில் இணைத்து அவர்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தவும் அஞ்சலிக்கவும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க முடியாத நிலை என்பது தோல்விகரமானது. ஆம், அதனை அப்படித்தான் அடையாளப்படுத்த வேண்டியிருக்கின்றது. ஏனெனில், தமிழ்த் தேசியத் தலைமைகள், செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகளுக்கு இடையே காணப்படுகின்ற ஈகோ (தன்முனைப்பு) மனநிலை மற்றும் பொறுப்பற்ற தன்னையே இந்த நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

ஊடகங்களிடம் பேசும் போது மட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்சி- தேர்தல் அரசியல்களுக்கு அப்பாலானது என்று தொண்டை கிழியப் பேசுவதற்கு அரசியல்வாதிகள் எல்லோரும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவிதமான முன்னோக்கிய பயணத்துக்கும் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்காலில் நினைவில்லம் ஒன்றை அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் து.ரவிகரன் கொண்டு வந்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்களாகிறது. வடக்கு மாகாண சபையில் இதுவரை 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல தீர்மானங்கள் உணர்வு ரீதியானவை, அரசியல் ரீதியானவை, அதிகார வலுவற்றவை. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பொதுக் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்பதற்கும், நினைவில்லம் ஒன்றை அமைப்பதற்குமான சூழல் தற்போது நிறையவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கூட்டுணர்வினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய களம். அது, அஞ்சலிப்பதற்கும் அரசியலுக்கும் அவசியமானது. ஒரு இடத்தில் குவிக்கப்படுகின்ற உணர்வுகளை மெல்ல மெல்ல பிரித்தாள முடியாத வகையில் பரவலடையச் செய்யும் போதுதான், அது வலுப்பெற்று வளரும். அப்போதுதான் அதனை தலைமுறைகள் தாண்டி தக்க வைக்கவும் முடியும். மாறாக, தனித்துத் தனித்து நிற்பதால் அவற்றின் மீது ஆக்கிரமிப்பினை செய்வதும் அலைக்கழிப்பதும் இலகுவானது. அதற்கு, அருட்தந்தை எழில்ராஜன் குழு முன்னெடுத்த நினைவேந்தல் நிகழ்வு மீது இலங்கைப் படைத்துறைக் கட்டமைப்பு நிகழ்த்திய அச்சுறுத்தல் பெரும் உதாரணம். நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட தருணத்திலேயே அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார். நிகழ்வுக்கு முதல்நாள் நீதிமன்றத்தினால் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தடையுத்தரவு கோரியவர்கள் குறித்த நிகழ்வு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலானது என்று கூறிய காரணங்கள் தொடர்பில் எந்தவொரு அதிருப்தியையும் தமிழ்த் தரப்பு வெளிக்காட்டவில்லை. அதிகபட்சமாக சமூக ஊடகங்களில் ஒரு சிலர் திரும்பத் திரும்பப் பேசியதோடு விடயம் முடிந்து போனது. நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட நிகழ்வுக்கான தடையுத்தரவு அடுத்தநாள் நீக்கப்பட்டாலும், அந்த நிகழ்வு எமக்கு முன்னால் பெரும் விடயமொன்றை வைக்கின்றது.

அதாவது, இப்போதுள்ள சிறிய (ஜனநாயக) இடைவெளியைப் பயன்படுத்தி காலத்துக்கும் அத்துமீறல்களைச் செய்ய முடியாத விடயங்களை தமிழ்த் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அப்பாலான நிலையை உருவாக்குவது முதன்மையானது. அதற்கு விரும்பியோ விரும்பாமலோ பொதுக்கட்டமைப்புக்குள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம். ஒரு நிகழ்வினை தடை செய்வதைப் பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தல் என்பது, அடுத்த தடவை அந்தத் தடை தம் மீதே வர முடியும் என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற சிறுமனநிலையாகும். அருட்தந்தை எழில்ராஜன் குழுவினரின் நினைவேந்தல் நிகழ்வு மீதான அச்சுறுத்தல் குறித்தோ, அவரை தொடர் விசாரணைக்கு அழைத்தமை தொடர்பிலோ தமிழ்த் தேசியப் பரப்பில் எந்தவிதமான கண்டனங்களையும் காண முடியவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஆற அமர ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

இந்த இடத்தில் அதிகம் எரிச்சலூட்டிய தரப்பாக தமிழ் மக்கள் பேரவையைக் குறிப்பிட முடியும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒரு அறிக்கை. பிறகு அருட்தந்தை எழில்ராஜன் மீதான அச்சுறுத்தல்களுக்கான கட்டண அறிக்கைக்கு அப்பால், அந்த அமைப்பு என்ன செய்தது என்பது தொடர்பிலானது. தம்மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள், தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய விடயங்களுக்காக முன்னோக்கி வருவது தொடர்பில் பெரும் அர்ப்பணிப்புக் கொண்டதாக காட்டிக் கொள்ளும் தமிழ் மக்கள் பேரவை, ஏன் தூங்கி வழியும் அமைப்பாக இருக்கின்றது?

இன்னொரு விடயம், வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தியவர்கள் சார்ந்தது. உணர்வுபூர்வமாக நினைவேந்தப்படும் ஒரு இடத்தில் அதற்கான தன்மையொன்று பேணப்பட வேண்டும். அங்கு, யாரும் சிறப்புரிமை பெற முடியாது. அது, அரசியல்வாதியாக இருந்தாலும் ஊடகவியலாளராக இருந்தாலும். அதற்கான ஒழுங்கொன்று உண்டு. அதனை, எந்தவொரு தார்மீகமும் இன்றி குழப்பி தனி அடையாளம் பெறுவதற்காக முனைந்தமையும், இன்னொருவரை அவமானப்படுத்துவதாக நினைத்து நிகழ்வின் ஒட்டுமொத்த தன்மையையும் குழப்பியது எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டுமே உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்த நிலையில், ஏற்பாட்டுக்குழு அவரையும் உரையாற்ற அழைத்திருந்தது. அது, உண்மையில் அவசியமற்ற ஒன்று. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது மாதிரியே நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், இரா.சம்பந்தன் வருகிறார், அவர் உரையாற்றப் போகின்றார் என்கிற விடயம் அறிந்ததும் அந்த இடத்தில் தன்னுடைய ஊடகக் கடப்பாட்டினை ஆற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அடிப்படைகளை மீறியது குறித்த ஊடகவியலாளரின் நியாயப்படுத்தல்களை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்துவிட்டது. அதுவொரு திட்டமிட்ட குழப்பத்துக்கான ஏற்பாடு என்கிற குற்றச்சாட்டுகளை கருத்திலெடுக்க வைக்கின்றது. அன்றைக்கு நினைவேந்தல் நிகழ்வுகளைத் தாண்டி குறித்த திட்டமிட்ட குழப்பவாதிகளின் அடாவடி ஊடகங்களில் கவனம்பெற்றது. மக்களை மாத்திரமல்ல, வெளிப் பார்வையாளர்களையும் அதிருப்தியுற வைத்தது.

அடுத்தது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது கட்சி அரசியலுக்கு அப்பாலானது என்று சொல்லிக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வடக்கு மாகாண சபையை முன்னிறுத்தியும், இரா.சம்பந்தன் நினைவேந்தலில் கலந்து கொண்டமை தொடர்பிலும் ஆற்றிய எதிர்வினைகள் அப்பட்டமாக கட்சி அரசியல் சார்ந்ததாகவே இருந்தது. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவையில் இயங்க முடியும் என்று சொல்லிக் கொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை ஏற்றாலோ, அல்லது அவர் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி அமைத்தாலோ அவரின் தலைமையை ஏற்கத் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கின்றார். ஆனால், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுப்பது என்பது, மாகாண சபையை ஏற்றுக்கொள்வதாகிவிடும் என்று சொல்லி நிராகரிப்பது அபத்தமானது. (குறித்த நினைவேந்தல் நிகழ்வில், வடக்கு மாகாண சபை ஒருங்கிணைப்பாளர்கள் அன்றி, வேறு விடயங்களுக்கான உரித்தாளர்கள் அல்ல.)

அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும், சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபை முதலமைச்சராகவே தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்தார். அவரை தனித்து ஏற்றுக்கொள்வது என்பதற்கு அப்பால், அவரை மாகாண சபை ஊடகவே மக்கள் அங்கீகரித்து முன்னிறுத்தியிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் பேரவையிலும், புதிய தலைமையாகவும் அவரைக் கொள்ள முடியும். ஆனால், நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியாது என்கிற வாதம் அடிபடுகின்றது. இதனைக் கருத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்துக்கு முன்னாவது, பொதுக்கட்டமைப்பொன்றை வடக்கு மாகாண சபையும், தமிழ்க் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும், அமைப்புக்களும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான், வடக்கு- கிழக்கு பூராவும் குழப்பங்களின்றி நினைவேந்தல் நிகழ்வுகளை பரந்துபட்ட ரீதியில் ஒழுங்கமைக்கவும் மக்களை ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கும். இல்லையென்றால், தனித்து தனித்து நின்று பலவீனப்பட்டு ஒருநாள் காணாமற்போவோம். அப்போது, கட்சி அரசியல் செய்வதற்கும் எதுவும் மிஞ்சாது.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (மே 24, 2017) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.