பதிவுகள்

கீழ் உள்ள 12 பந்திகளை தொடர்ந்து படியுங்கள்! இடைநடுவில் ஏற்கனவே இச்சம்பவம் பற்றி அறிந்துள்ளீர்கள் என உணர்வீர்களெனில் விலகிச்செல்லலாம். மற்றவர்கள் நிச்சயம் முழுமையாக படியுங்கள்!

Cannibalism என்பதன் அர்த்தம் இக்கட்டுரையின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஆர்வக்கோளாறில் அதை முதலில் படிப்பதை தவிர்க்க.
இக்கட்டுரையை எழுதிய புலோலியூர் கரன் அவர்களுக்கு நன்றி கூறி, தன்னம்பிக்கையை வளர்த்திட உதவும் இப்பதிவினை  மீள்பதிவு செய்கிறோம்!

- 4தமிழ்மீடியா குழுமம்

1

13.10.1972-ஆம் ஆண்டு அமெரிக்கா ´Latine an des´ என்ற இடத்தில் இருந்து சிலி [Chily] நாட்டுக்கு அந்த விமானம் சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 45-பேர்கள். ருப்பீ [Rugbx] விளையாட்டு வீரர்களும், அவர்களின் நெருங்கிய உறவீனர்கள் மட்டுமே இருந்தனர்.

அர்ஜென்டினா நாட்டுக்கும் சில்லிக்கும் இடையில் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென சில குலுக்கல்கள். திடுக்கிட்ட பயணிகள் என்ன ஏதென்று உணருவதற்குள் பயங்கரச் சத்தம். ´நான்ந்தோ´ [Nando] என்ற விளையாட்டு வீரனின் அம்மாவும், தங்கையும் விமானத்தின் பின்புறத்தில் இருந்தனர். ´நான்ந்தோ´ திரும்பி பார்த்த போது விமானத்தின் பிற்பகுதி வெடித்து அதில் இருந்த பயணிகளை ஆக்ரோஷமாக விமான சீட்டுடன் வெளியே இழுத்துத்தள்ளிய காற்று....

"மின்னலைப் போல் மறைந்த தன் அம்மா"…

அதே வேகத்தில் விமானத்தின் முன்பகுதி சில நொடிகளில் கீழ் நோக்கி வேகமாகச் சென்று எதன் மீதோ மோதி நிற்கின்றது.

சம்பவம் நடந்த போது மதியம் நேரமாக இருந்ததால் வெளிச்சத்தில் விமானம் விழுந்த இடம் பனிமலையில் என்பதை உணர முடிந்தது. அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கு நீண்ட நேரமாகியது.

நாற்பத்து ஐந்து பேர்கள் இருந்த விமானத்தின் பிற்பகுதி வேறெங்கோ விழுந்துவிட்டது. அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். விமானத்தின் முற்பகுதியில் பைலட் மற்றும் துணை பைலட் உட்பட இன்னும் சிலர் சீட்டில் இறந்தபடி. இன்னும் சிலருக்கு பலத்தஅடி. 28-பேர் மட்டுமே பிழைத்து இருந்தனர்.

´நான்ந்தோ´வின் தங்கையும் பலத்த அடியில்… காற்றினில் உயிருடன் மறைந்த அம்மாவின் முகம் இன்னும் அவன் கண்களில்….

´மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?´ என்று கேட்ட தாகூரின் கவிதை வரிகளை இச்சம்பவத்துடன் பார்க்கும் போது இவர்களின் பதில்கள் என்னவாக இருக்கும்?

சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இருந்தவர்களுக்கு இருள் சூழ ஆரம்பித்த போது தான் இனி என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டனர். விபத்து நடந்த இடம் பனிமலையில். கண்ணுக்கு எட்டியவரை பனிகளை தவிர வேறொன்றுமில்லை. விமானம் பனிமலையின் பள்ளத்தாக்கில் இருக்கிறது. விமானத்தின் பின்பகுதியில் தான் பயணிகளின் உடைமைகளும் சாப்பாட்டு பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் இருந்தன. கடும் குளிரில் எதுவுமற்ற நிராயுதபாணிகளாகவே இயற்கை வைத்திருந்தது.

இரண்டாம் நாள் -40°c கடும் குளிர். ஒருசில உடைகளைத் தவிர கடும் குளிரை தாங்கக் கூடிய அதற்கென அணியும் உடைகள் இல்லை. விமானத்தின் பாதியாக உடைந்த பகுதி வழியாக குளிர் காற்றும், பனியும் விமானத்தினுள் அதிகமாக இருந்தது. இறந்த உடல்களை விமானத்தில் இருந்து வெளியேற்றி அருகில் இருந்த பனிகளில் போட்டு மூடினர். காற்று உள்ளே புகாமல் இருப்பதற்காக விமானத்தில் இருந்த உடைந்த பொருட்களையும், பயணத்திற்கு கொண்டு சென்ற பெட்டிகளையும் அடுக்கி குளிர் உள்ளே வராமல் இருப்பதற்காக தடுப்பாக வைத்தனர். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர்கள் பெட்டிகளை புரட்டி பார்த்த போது எட்டு சாக்லெட்டுகளும், 6- பாட்டில் ஜாம் மட்டுமே கிடைத்தன. அதனால் பனியை சாப்பிட ஆரம்பித்தனர்.

2

நான்காவது நாள்: சாப்பிட ஒன்றுமே இல்லாததாலும் ஐஸ்கட்டிகளை சாப்பிட்டதாலும் உடம்பில் இருந்த சூடு குறைந்து உடல்நலம் கெட ஆரம்பித்தது. பசி, கடும் குளிர் கொடுமை தாங்காமல் அவதிப்பட்டனர். விமானத்தின் சீட்டுக்களை கிழித்து அதில் இருந்த பஞ்சுக்களையும், துணிகளையும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தங்களின் உடைகளுக்குள் திணித்துக் கொண்டனர். அவர்களுக்குள் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அரசாங்கம் நம்மைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும். இன்றோ அல்லது நாளையோ நாம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடக்கூடும் என்று நம்பினார்கள்.

விமானத்தில் பைலட் அறையில் இருந்த ரோடியோவை கண்டுபிடித்து அதை செயல் படுத்த முயன்ற போது பழுதுப்பட்டு கிடந்தது தெரிய அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேரத்திற்கு பிறகே ரேடியோ செயல்பட ஆரம்பித்திருந்தது. "விமானம் விபத்திற்குள்ளானது பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் சடலங்களை மீட்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதாகவும்" சொல்லப்படும் செய்திகளை கேட்கின்றனர். ரேடியோவில் பேட்ரி தீர்ந்து போய்விடுவதால் மீண்டும் வேலை செய்யாமல் போய் விடுகின்றது.


விமானத்தின் மேலும், சுற்றும், எங்கு பார்த்தாலும் பனியாக இருப்பதால் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதாவது அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்று துரிதமாக செயல்பட ஆரம்பிக்கின்றனர். விமானத்தின் சீட்டுத் துணிகளை கிழித்து அனைத்தையும் இணைத்து "ப்ளஸ்" குறி போல் அவர்கள் இருக்கும் இடத்தில் வைக்கின்றனர். அவர்களுக்கு இராணுவத்தினர் நம்மை வந்து மீட்பார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்தது.

3

எட்டாவது நாள்: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ´நான்ந்தோ´வின் தங்கை மரணம் அடைகிறாள். நான்ந்தோ தங்கையின் உடலை பனிக்கட்டிக்கு உள்ளே புதைத்து வைக்கிறான். எட்டு நாட்களாக எந்த உணவும் இல்லாமல் ஐஸ்கட்டிகளை மட்டும் சாப்பிட்டு கொண்டிருந்ததால் அனைவரது உடலும் பலவீனமடைகிறது. ´நான்ந்தோ´வுக்கும், மற்றவர்களுக்கும் கலவரம் ஏற்படுகின்றது. தங்களை தேடி இராணுவத்தினர் வருவார்கள். நம்மை மீட்பார்கள் என்ற நம்பிக்கையை இழக்கின்றனர்.

4


பத்தாவது நாள்: சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. பனிமலையில் ஐஸ்கட்டிகளை தவிர வேறென்ன கிடைக்கும்? உடல் அனைவருக்கும் பலவீனமடைந்திருக்கிறது. இப்படியே போனால் அனைவரும் சாக வேண்டியது தான். நான்ந்தோ மற்றவர்களை பார்த்து பேசுகிறான்.

"நாம் சாப்பிட்டு 10-நாட்களாகிவிட்டன. இப்படியே தொடர்ந்தால் நம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோம். அதனால் இறந்த மனித உடல்களை வெட்டி சாப்பிடுவோம்."

´நான்ந்தோ´வின் வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்த மற்றவர்களிடம் மீண்டும் மனிதனின் உடல் கூறுகள் பற்றியும், நாம் வாழ்ந்தாக வேண்டும் இல்லாவிட்டால் அனைவரும் சாக வேண்டியதுதான் என்று சொல்கிறான். சிலர் நான்ந்தோ சொல்வதை ஏற்றுக் கொள்கின்றனர். பலர் மறுப்பு தெரிவிக்கின்றனர். நான்ந்தோவும் மற்றும் சிலரும் விமானத்தில் உடைந்த கண்ணாடித்துண்டுகளை எடுத்துக் கொண்டு புதைக்கப்பட்டிருந்த உடலை வெட்டி எடுத்து சாப்பிடுகின்றனர். அப்படி அவர்கள் முதலில் சாப்பிட்ட மனித உடல் பைலட். அதற்கு அடுத்த நாள் மற்றவர்களும் மனித உடல்களை சாப்பிட ஆரம்பித்தனர்.

5

11–ஆம் நாள் விமான விபத்தில் அனைவரும் இறந்துவிட்டதாக சில்லி நாட்டு இராணுவம் ரேடியோவில் அறிவித்தது. அத்துடன் விபத்து நடந்த விமானத்தையும் இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.

6

17-வது நாள் இரவு நேரம் அனைவரும் தூக்கத்தில் இருந்த போது திடீரென சத்தம். பனிமலையில் இருந்து பனி சருக்கி பள்ளத்தாக்கில் இருந்த விமானத்தின் மீது விழுந்ததில் அந்த இடத்திலேயே 8- பேர்கள் மரணம் அடைகின்றனர். விபத்தில் இருந்து தப்பி மீண்டும் மற்றொரு விபத்தில் சிக்கிய உடல்கள். கடைசியாக மிஞ்சியவர்கள் 17-பேர்கள் மட்டுமே!

7

47-வது நாட்கள் கடந்து விட்ட நிலையில் இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் இதற்கு முடிவு கிடையாது. நாம் ஏதாவது செய்தாக வேண்டும். "இறந்தவர்களின் உடல்களை மட்டுமே இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். அதுவும் இல்லாவிட்டால் நம் நிலைமை என்னவாகும்?" என்ற கேள்வியை நான்ந்தோ எழுப்புகிறான்.

யாராவது இருவர் இங்கிருந்து மலைகளை கடந்து சென்று மக்களைக் கண்டு உதவி கேட்க வேண்டும். இதுதான் நமக்கு இருக்கும் கடைசி தீர்வு என்கிறான். அவனின் பேச்சு மற்றவர்களுக்கு அவநம்பிக்கையை கொடுப்பதாகவே இருந்தது.

"இல்லை நான்ந்தோ, இந்த பனிமலையை கடந்து செல்வது நடக்கும் காரியமா?"

"நாம் அனைவருமே உடல் அளவில் வலிமையற்று இருக்கிறோம். நாம் என்ன செய்துவிட முடியும்?"

"அதுவும் பனிமலையை கடந்து செல்ல தேவையான உபகரணங்கள் கூட இல்லையே"

பலவிதங்களில் பல அபிப்பிராயங்கள் அவநம்பிக்கையில் ஒலித்தன."

இல்லை..! அப்படி சொல்லாதீர்கள். இருப்பதை வைத்து இல்லாததை உருவாக்குவோம். அதற்கான முயற்சியை இப்பவே ஆரம்பிப்போம்."

நான்ந்தோ மற்றும் சிலரை தவிர அனைவரும் நம்பிக்கையற்றே காணப்பட்டனர். நான்ந்தோவும், மற்றொருவனும் மலையை கடந்து ஊருக்கு சென்று உதவிக்கு ஆட்களை அழைத்து வர ஏற்பாடாகியது. உடைந்த கம்பிகளை பனிகளை குத்தி நடப்பதற்கும் மற்றும் குளிர் தாங்க தேவையான உடைகளை தயாரித்துக் கொண்டும், சாப்பிடுவதற்கு இறந்த உடல்களின் துண்டுகளையும் வெட்டி எடுத்துக் கொண்டனர்.

நான்ந்தோ இருந்த வரையில் அவனின் இறந்த தங்கையின் உடலை யாரும் சாப்பிடவில்லை. நான்ந்தோ தன் நண்பர்களைப் பார்த்து சொல்கிறான்...

"இதுவரையில் என் தங்கையின் உடலை சாப்பிடாமல் எனக்காக வைத்திருத்திருந்தீர்கள். நான் சென்ற பின் உங்களுக்கு சாப்பிட உடல்கள் தீர்ந்து போய்விட்டால் என் தங்கையின் உடலை சாப்பிடுங்கள்"

8

47-வது நாளில் மலையை கடந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தபின் அதற்கு தேவையான உபகரணங்களை தயார் செய்ய 19- நாட்கள் ஆனது. 61-வது நாள் தன் நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு நான்ந்தோவும் மற்றவனும் செல்கின்றனர்.

நான்ந்தோவுக்கு மலை உச்சியை அடைந்தால் அங்கு ஊர் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. உடன் வந்த நண்பனுக்கு விமானம் விழுந்த போது காலில் அடிப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இருவரும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

9

63-வது நாள் மலை உச்சியை அடைந்த போது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஊர் என்று எதுவும் இல்லை. மீண்டும் மலைத்தொடர் தான் இருந்தது. நான்ந்தோவுக்கும் உடன் வந்த நண்பனுக்கும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான்ந்தோவை பார்த்து நண்பன் கேட்கிறான்

"இல்லை, நான்கோ எனக்கு நம்பிக்கை இல்லை. வா நாம் மீண்டும் அந்த இடத்திற்கே செல்வோம்"

"இல்லை...! இனி என்ன நடந்தாலும் சரி...! நம்முடைய செயல்கள் முன்னோக்கியதாகவே இருக்க வேண்டும். கண்டிப்பாக நாம் நினைத்தபடி ஏதாவது இருக்கக் கூடும்" நம்பிக்கையுடன் நான்ந்தோ பேசினான்.

10

தொடர்ந்து 7-நாட்கள் நடை. கடும் குளிர் அபாயமான பள்ளத்தாக்குகள். சரியான சாப்பாடு இல்லை. இருப்பினும் நான்ந்தோவிடம் தைரியம் மட்டும் இருந்தது. உடல் முடியாத பலவீனமான தன் நண்பன் வழியில் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் இருந்தது.

11

70-வது நாள் அவர்கள் பனிமலையை கடந்து கற்கள் நிரம்பிய பாதையை கண்டார்கள். 70- நாட்களாக வெறும் பனிமலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு கற்கள் கிடந்த பாதைகள் உற்சாகத்தை கொடுத்தன. தூரத்தில் ஆங்காங்கே புற்கள். மெல்ல நடந்து வந்துக் கொண்டிருந்த போது ஓர் நீரோடை தட்டுப்படுகிறது. அதற்கு மறுபக்கத்தில் குதிரை மீது ஒரு மனிதன் அமர்ந்தபடி…. எப்படி இருந்திருக்கும் இருவருக்கும்!

நான்ந்தோ குரலெடுத்து கத்துகிறான். சில நொடிகளுக்கு பின்பே குதிரையில் இருந்த மனிதனுக்கு நான்கோ குரல் கேட்டு திரும்ப….

குதிரையில் இருந்த மனிதன் மற்றவர்களை அழைத்து வர அவர்களிடம் எல்லா விஷயங்களும் சொல்லப்படுகிறது. இராணுவத்தினர், பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் என சில மணிநேரத்திலேயே அங்கே பரபரப்பாகியது.

உலகம் மொத்தமும் திகிலாக இச்சம்பவத்தை பார்க்க ஆரம்பித்தன. 71-வது நாள் இராணுவ விமானத்தில் நான்ந்தோ செல்கிறான். தன் நண்பர்கள் இருப்பிடத்தை அடையாளங்காட்ட…

12

71-வது நாள் பனி மலையில் விமானம் சத்தம் கேட்டதும் அங்கிருந்த நண்பர்கள் புதியதாக அவதரித்த சந்தோஷத்தில்...........


* சிறுகுறிப்பு:


இந்நிகழ்ச்சி பற்றி அந்நாளைய கிறிஸ்தவ மதத்தின் தலைவர் போப்புக்கு தெரிந்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சிலர் மனிதனின் உடலை உண்டு உயிர் வாழ்ந்தது மிக இழிவானது என்றும் அதைவிட இறப்பதே மேல் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிகழ்சி உண்மையில் நடந்தது. 'Andes flight disaster', 'Uruguayan Air Force Flight 571' எனும் பெயரால் இன்றுவரை அழைக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தும் சிறு இணைப்பு

 

´நான்ந்தோ´ தன்னம்பிக்கை மிகுந்த மனிதர். சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது...

"எனக்கு நேற்று என்பது முக்கியமில்லை, நாளை என்பதும் முக்கியமில்லை, இன்று என்பதே எனக்கு முக்கியம்" இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். நான் ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதற்கு பின் பயத்தை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தைரியத்தை துணைக்கு வைத்துக் கொள்வேன் என்கிறார்…

இச்சம்பவம் குறித்து நாந்தோ புத்தமும் எழுதியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள். தன்னம்பிக்கை நமக்கும் வரலாம்.

Cannaibalism : தன்னினத்தையே உண்ணல்

பதிவின் தாயகம் : புலோலி