பதிவுகள்

ராகமும் தாளமும் அமெரிக்கரான ஷங்கர் டக்கரை இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த இளம் அமெரிக்க இளைஞரின் ஒவ்வொரு இசையும், நாதமும் அவருடைய பெயர் சங்கர் டக்கர் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. 

14 வருடமாக கிளாரினெட் வாசிக்கும் ஷங்கர் டக்கரிடம் இருப்பது ராகங்களுக்கு பதிலாக கிளாரினெட் ஸ்வரங்களே!

இவருடைய The ShrutiBox யூடியூப் சேனல் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் 8 இலட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றனர்.

23 வயதான ஷங்கர் டக்கரின் பெயரில் ஷங்கர் எப்படி வந்தது என்பது இவரை பற்றி தெரிந்த வட்டாரத்திற்குள் ஆச்சரியமான ஒரு கேள்வி!

'இந்திய ஆன்மீக தலைவர்களில் ஒருவரான மாதா அம்ரிதானந்தமாயி (அம்மா) அமெரிக்காவில் வசித்து வரும் காலங்களில் அவரை எமது குடும்பத்தினர் சென்று பார்ப்பார்கள். அவர் தான் எனக்கு ஷங்கர் என்ற பெயரை வழங்கினார்' என்கிறார்.

கடந்த வருடம் இங்கிலாந்தின் பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்கெஸ்ட்ரா கிளாரினெட் செயல்திறனுக்காக, பட்டம் பெற்ற ஷங்கர், இந்தியாவின் ஃபுளூட் வாத்தியத்தின் மாஸ்ட்ரோ ஹரிபிரசாத் ஷௌராசியாவிடம் இசைப்பயிற்சி பெற புலமைப்பரிசில் (Scholership) மூலம் வாய்ப்பினை பெற்றார்.

'உயர்தர கல்லூரிக்கு வரும் வரையில் இந்திய பாரம்பரிய (Classical) இசைத்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. எனினும் பின்பு தன்னிச்சையாக உந்துதலுக்கு உள்ளானேன். தேர்ச்சி பெறத்தொடங்கினேன். கல்லூரி பட்டம் பெற்ற பிறகு இந்திய பாரம்பரிய இசை கற்க ஒரு தீர்மானம் மேற்கொண்டேன்.

சித்தார் வாத்திய இசைக்கலைஞர் பீட்டர் ரோவிடம் சித்தார் கற்றுக்கொண்டேன். அவர் தான் எனக்கு ராகம் மற்றும் தாளம் கற்றுக்கொடுத்தார். இந்திய பாரம்பரிய இசையின் செயல் திறனையும் கற்றுக்கொடுத்தார். அவருடைய உதவியால் தான் எனக்கு புலமைப்பரிசில் மூலம் இந்தியா செல்ல வாய்ப்பு கிடைத்தது' என்கிறார்.

ஷங்கர், கிளாரினெட்டை விட பியானோ, பாஸ், காஞ்சிரா, தப்ளா போன்ற இசைக்கருவிகளிலும் கைதேர்ந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் The Shruthi Box தொடக்கினார்.

'நான் யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினேன். காரணம் எனது புதிய இசைத்தொகுப்புக்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. கச்சேரிகள் நடத்துவதற்கு எனக்கு வாய்ப்புக்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதாலுமே.

அதனால் சொந்தமாகவே கம்போசிங் செய்ய தொடங்கினேன். அவற்றை வீடியோ பதிவாக்கி ஆன்லைனில் தரவேற்றினேன். இதுவரை 8 வீடியோ பதிவுகளை இவ்வாறு தரவேற்றியுள்ளேன். இசையை பகிர்ந்து கொள்வதற்கு இது தான் சரியான வழிமுறை என அந்நேரத்தில் தான் சிந்தித்தேன்.

ஆனால் தற்போது இது என்னுடைய முழுநேர தொழிலாக மாறும் என நினைக்கிறேன். எனக்கு வந்து சேரும் கருத்துக்கள் மிகப்பெருமளவில் நேர்மறையாகவும், ஊக்குவிப்பு தருபவையாகவும் உள்ளன.' என்கிறார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்தியாவில் தொடர்ந்து தங்கி வரும் சங்கர் டக்கரை, 'ஸ்வரங்கள் ராகங்கள்' இந்திய இசையுலகை பற்றி சிந்திக்க வைத்துள்ளன.

'நான் இங்கு தங்கி வாழ்வது, எந்த விதத்திலும் என் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்காது. மேற்குலகத்து புறம்பாக ஒரு அனுசரித்து வாழ வேண்டிய வாழ்வாக நான் இதை கருதவில்லை. ஆனால் என் இசை நிலைப்பாட்டில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேற்குலக இசை குறிப்புக்கள் படி 8 அல்லது 16 என எண்ணுவதற்கு பதில், 'தீந்தால்' அல்லது 'ஆதி தாளத்தில்' சிந்திக்கிறேன்.

எனது புலமைப்பரிசில் ஒரு வருடத்திற்கு உரியதே என்றாலும். நான் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கும் இங்கு கல்வி கற்பதற்கும், இந்நாட்டின் கலை கலாச்சார பண்பாடுகளை அறிந்துகொள்வதற்கும், புதிய இசை உருவாக்கத்திற்கும் விரும்புகிறேன்' என தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.

இந்திய கிளாசிக்கல் இசையுடன் உங்களது கிளாரினெட் ஒன்றிபோகிறதா?


'நான் முதன் முதலாக இசையை தொடங்கும் போது தொழில்நுட்ப சவால்களால் அதிருப்தி அடைந்தேன். ஞமகத்தை உருவாக்குவதற்காக இசைக்குறிப்புக்களை வளைக்க வேண்டியிருந்தது.

ஆனால் புதிய இசைக்கருவிக்கு தாவுவதற்கு விரும்பவில்லை. காரணம் கிளாரினெட்டின் ஒலி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் பலவருட பயிற்சியும் மேற்கொண்டிருந்தேன்'.

எதிர்கால திட்டங்கள்?

புதிய புரொடக்ஷன் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளேன். மினி இசை ஆல்பங்களை உருவாக்கி ஆன்லைனில் மாத்திரம் கிடைக்கும் படி தரவேற்றம் செய்யவுள்ளேன். இந்த திட்டத்திற்காக ஐயர் சகோதரிகள், நிராலி கார்த்திக் மற்றும் மேலும் சில இசைக்கலைஞர்களை இணைத்துக்கொள்ளவுள்ளேன்.

வரவிருக்கும் கச்சேரிகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்காக குழு ஒன்றுடன் இணைகிறேன். சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த இசை கலைஞர்களின் கலவையாக இது இருக்கும். நாம் சில புதிய பொலிவுமிக்க இணைவு ஒலிகளை பற்றி ஆராயவுள்ளோம்.' என பதில் அளிக்கிறார்.

மேற்குலக இசை பிரியர்கள், கீழைத்தேய இசைகளில் சட்டென வசப்பட மாட்டார்கள். ஆனால் ஷங்கர் டக்கர் மாறுபட்டு, இந்திய பாரம்பரிய இசையை ஆக்கிரமித்துள்ள ஒரு மேற்குலக கலைஞராக பரிணமிக்க தொடங்கியுள்ளார்!

அவருடைய கிளாரினெட் ஒலி, இந்திய கிளாஸிகலின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லட்டும்!

மேலும் ஷங்கர் டக்கர் பற்றி அறிந்து கொள்ள
www.ShankarTucker.com

அவருடைய வீடியோக்களை பார்வையிட www.youtube.com/TheShrutiBox

 

 

ஆக்கம் : அனுஷா பார்த்தசாரதி (மெட்ரோ பிளஸ்)

தமிழாக்கம் - சாராவின் பக்கங்கள்