பதிவுகள்
Typography

தேடுகிறேன். தேடலை பகிர்கிறேன் எனச் சொல்லி,  தன் தேடல்களில் பெற்றவைகளை வலைப்பதிவர் சார்வாகன் பதிவு செய்யும் இடம்,

சமரசம் உலாவும் இடமே. ஆம்! அதுதான் அவரது வலைப்பதிவின் பெயர். தமிழ்சினிமாவின் பிரபலமான தத்துவார்த்தப்பாடலின் வரிகளில் பெயர் கொண்டிருக்கும் அவரது வலைப்பதிவும், அப்பாடலின் மற்றொரு வரியில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் ஆண்டி, அரசன், போகி, ஞானி என எல்லோரும் கூடும் இடமாகவே தெரிகிறது.

 

இதுதான் என்ற எந்த வரைமுறையும் வைத்துக் கொள்ளாமல், எல்லாவற்றையும் குறித்துக் கேட்கின்றார், எல்லாவற்றைக் குறித்தும் தேடுகின்றார் சார்வாகன் என்பது மட்டும் அவர் வலைப்பதிவினைப் பார்க்கையில் தெரிகிறது. இவ்வளவு நாட்கள் எப்படி இந்த வலைப்பதிவைக் கண்டுகொள்ளாமல் போனோம் எண்ணத் தோன்றும் வலைப்பதிவுகளில் இதுவும் ஒன்று.

பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா..? பல பரிமாணங்கள் இருக்க முடியுமா? ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா? அறிவியல் என்பது என்ன‌? எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகும் சார்வாகன் அவற்றுக்கான தனது தேடுதல்களின்போது தாம் கண்டவைகளை,  நம்முடன் அழகாகப் பகிர்ந்து கொள்கின்றார். அதற்காக தனது கருத்துக்களைத் தீர்மானமாக நம் எண்ணங்களில் திணித்து விடாமலும் பதிவு செய்கிற பாங்கு பாராட்டுக்குரியது.

எண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்? மனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்? நம் பூமித்தாயின் கதை என்ன? என்பவை குறித்த அவரது தேடலும், அதன் போது இணையப் பெருவெளியில் புதைந்துகிடங்கும் ஆவணங்களில் இருந்து, அவர் கண்டுகொண்ட விடயங்களும் சுவாரசியமானவை.

இவ்வாறு எல்லாத் திசைகளிலுமான  தேடலுக்கான காரணத்தை அவரது கருத்துப் பகிர்வொன்றில் பகிர்ந்து கொள்ளும் போது;
"கடவுள் மறுப்புக் கோட்பாட்டாளரான புத்தர் ஒரு பகுத்தறிவுவாதிதான், இந்து மதத்தின் சாஸ்திரங்களையும், கடவுள் கோட்பாட்டையும் உதாசீனம் செய்த புத்தர் தன்னுடைய சொந்த முயற்சியில் தன் மன நிலையை உயர்த்தியதாகவே சொல்லப் படுகிறது. ஆனால் அதையும் நாம் நம்ப வேண்டியதில்லை, நாம் என்ன புத்தரின் மனதில் புகுந்து கொண்டு பார்த்தோமா, இல்லையே!

அதே நேரம் நம்முடைய மன நிலையை துன்பங்கள் தாக்காத ஒரு நிலைக்கு உயர்த்த முடியும் என்பது சாத்தியமாக இருக்க கூடுமா என்று ஆராய்வது, முயலுவது தவறில்லை என நினைக்கிறேன், இன்னும் சொல்லப் போனால் அது அவசியமும் கூட. அண்டங்களையும் , கோள்களையும் ஆராய்வது எந்த அளவுக்கு முக்கியத்துவமோ , அதே அளவுக்காவது இதுவும் முக்கியமாகக் கூடும், ஏனெனில் இது நமது சொந்த வாழ்க்கைக்கு மிகவும் உதவக் கூடியதே.

பூமி சூரியனை சுற்றுகிறதா, அல்லது சூரியன் பூமியை சுற்றுகிறதா என்கிற ஆராய்ச்சியால் நம் வாழ்க்கையில் நாம் பெறுகின்ற நன்மையை போல, துன்பங்களால துயர் படாத நிலைக்கு நம் மனதை அடைய செய்வது (அப்படி முடியுமானால்) நம் வாழ்க்கைக்கு பல மடங்கு நன்மையைத் தரும் அல்லவா? " எனப் பகிர்ந்து கொள்ளும் போது நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த வலைப்பதிவு பற்றி இன்னமும் சொல் நிறையவே உள்ளள போதும், இவ்வாறான பல மனிதர்களின் தேடல்களில்தான  உலகம் புதுப்பிக்கப்படுகின்றது. அதே போல் இவ்வாறான மனிதர்களை பிறருக்கு  அறிமுகம் செய்து வைப்பதனால்  நட்பு பெருமிதப்படுகிறது. அத்தகைய பெருமிததத்துடன் இந்த வலைப்பதிவினை எமக்கு அறிமுகம் செய்து வைத்த தேவியர் இல்லலம் வலைப்பதிவர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றிகள்.

இனி ஆற்றல் அரசு எனும் சார்வாகனின் சமரசம் உலாவும் இடத்துக்குச் செல்வோம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்