பதிவுகள்

இலங்கை அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த இலங்கையின் பிரதான ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடரை,

இரகசியமாக விலைக்கு வாங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் ஊடகம் இத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னுடன் மிக நெருக்கமாக உள்ள பிரபல்யமான வர்த்தகரான அசங்க செனிவிரத்ன ஊடாக சண்டே லீடர் பத்திரிகையை வாங்குவதற்காக அணுகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பினாலும், அதனைத் தொடர்ந்த நீதிமன்ற நடவடிக்கைகளினாலும் அது தனது வாசகர்களிடம் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்து விட்டதால் தற்போது கடும் நிதி நெருக்கடியுள் சிக்கியுள்ளது. அது தவிர அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சண்டே லீடர் அலுவலகம் தாக்கப்படப் போகிறது என்று திட்டமிட்டு இட்டுக்கட்டிய செய்தி தவறானது என்று மக்கள் அறிந்து கொண்டதாலும் அது தனது நன்மதிப்பை இழந்துள்ளது.

இவற்றின் காரணமாக நாளாந்தம் 2500 பத்திரிகைகளை விற்பதற்கே அது கஷ்டப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்குக் கூட பத்திரிகை விற்பனை செய்யும் முகவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றே மேற்கொள்ள வேண்டி இருப்பதாகத் தெரிய வருகிறது. அதன் சகோதர சிஙகளப் பத்திரிகையான இருறெசவின் நிலைமையும் அது தான்.

ராஜபக்ச அரசாங்கம் தனது இன்னொரு நண்பரும் வர்த்தகருமான அசங்க செனிவிரத்ன ஊடாக தற்போது சண்டே லீடர் பத்திரிகை எதிர் நோக்கும்; நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அசங்க செனிவிரட்ன பங்குச்சந்தையில் 17 வருட அனுபவம் கொண்ட ஒரு வர்த்தகர். அவர் தற்போது ஆசிய மூலதன முதலீட்டு வங்கியில் பணிப்பாளராகப் பதவி வகிக்கிறார்.

நஷனல் லீசிங் கம்பனி இவ்வாறான ஒரு நெருக்கடியைச் சந்தித்த போது அரச மத்திய வங்கி அதில் தலையிட்டு அதன் உரிமையை அசங்க செனிவிரட்னவிற்கு மாற்றம் செய்திருந்தது. இது அவர் ராஜபக்ச அரசாங்கத்துடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம்.

போர் முடிவடைந்ததும் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப்பகுதிகளை விற்பனை செய்யும் நடவடிக்கை அசங்க செனிவிரட்னவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான கடற்கரைப்பகுதிகளைப் பார்வையிடுவதற்காக போர் முடிவடைந்ததும் ஹெலிகொப்டர் உட்பட எல்லா வசதிகளும் வழங்கப்பட்ட முதலாவது நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவினால் மட்டுமீறிய உதவிகள் இவருக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல ராஜபக்ச அரசாங்கத்துடன் இவர் எவ்வளவு நெருங்கியவர் என்பதனைக்காட்டுவதற்கு வேறு பல உதாரணங்களும் இருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுடைய ரகர் பயிற்றுவிப்பாளரும் இவர் தான். இலங்கையின் ரக்பி மற்றும் உதைபந்தாட்டச் சங்கத்தின் உப தலைவராகவும், இலங்கைக் கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

கிரிக்கெட் பற்றிய சிறப்பான அறிவு எதுவும் இவருக்கு இல்லாதிருக்கின்ற போதும் ஜனாதிபதியின் மகனான நாமல் ராஜபக்சவின் அழுத்தத்தின் காரணமாகவே அவருக்கு அப்ப்பதவி தரப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த வர்த்தகரோ அல்லது ராஜபக்ச அரசாங்கமோ தமது சட்டைப் பையிலிருந்து ஒரு சதத்தையேனும் இப்பத்திரிகையின் 75 வீதப் பங்குகளான 375 மில்லியனை வாங்கச் செலவிடவில்லை. இதற்கான முழுத் தொகையுமே அரச வங்கியால் செலுத்தப்பட்டுள்ளது. ஆச்சரியம் எதற்கும் இடமில்லாத வகையில் நிதியமைச்சராக ஜனாதிபதியே இருப்பதும் வங்கிகள் அனைத்தும் அவருக்குக் கீழேயே வருவதும் இதனைச் சுலபமாக்கியுள்ளது.

சண்டேலீடரின் தற்போதைய பணிப்பாளரான லால் விக்ரமதுங்க தொடர்ந்தும் 25 வீத பங்குகளைக் கொண்டிருப்பார். இது சண்டே லீடர் கைமாறியது தொடர்பான தகவல்கள் வெளிவராதிருக்க உதவும் ஒன்றாய் உள்ளது.

சண்டே லீடரை வாங்கிய பின்னர் தற்போதைய ஆசிரியரான பெரட்றிக்கா ஜான்ஸினால் அதன் பெயர் கெட்டுவிட்டதாகக் கூறப்பட்டு அதன் பெயரையும் ஆசிரியரையும் மாற்றுவதற்கான கலந்துரையடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்துக் கடவுளர் ஒருவரின் பெயரைக் கொண்ட பிரபல்யமான ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இது தொடர்பாகப் பேசப்பட்டிருக்கிறது. இரண்டு லட்ச ரூபாய் சம்பளமும் மற்றும் கொடுப்பனவுகளும் சலுகைகளும் தருவதாக அவருக்கு உறுதியளிக்கப்பட்டு அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சண்டே லீடர் தொடர்பான பணப்பரிமாற்றம் குறித்து அசங்க செனிவிரட்னவிடம் கேட்ட போது அவர் அதனை நிராகித்து விட்டார். தொடர்ந்து வங்கியில் இதற்காக கடன் எடுக்கப்பட்டுள்ளதே என்று வினவிய போது அது உண்மை தான் என்றும் அது தனது வேறு வணிக நடவடிக்கைகளுக்காகப் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை சண்டே லீடர் அலுவலர் ஒருவர் பத்திரிகை கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது உண்மை தான் என்றும் இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரு முதலீட்டாளரை தாம் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கும் சண்டே லீடர்;  பத்திரிகை தொடர்பாக வெளிவந்த செய்தி தவறு என்றும் லால் விக்ரமதுங்கவே தொடர்ந்தும் பணிப்பாளராக இருப்பார் என்றும் ஆங்கில சிங்களப் பத்தரிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே கடமையாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழாக்கம் : குளோபல் தமிழ் செய்திகள்