பதிவுகள்
Typography

‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை, அவை ஏன் நிறைவேற்றப்பட்டன? என்று வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கே இப்போது ஞாபகமிருக்குமா தெரியாது. அந்தத் தீர்மானங்களின் அதிகபட்ச ஆயுட்காலம், ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதோடு முடிந்துபோயிருக்கின்றன. 

இப்போது, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் வேறு வகையானது. தவிர்க்க முடியாதது. அது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் பெரும் ஆணைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து சில காலத்துக்குள்ளேயே, அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே முன்வைக்கப்பட்டன. அது தொடர்பிலான பல மாத கால இழுபறிகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் குறித்த விசாரணைக்குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர். விசாரணைக்குழு கடந்த நவம்பர் மாதம் விசாரணைகளை ஆரம்பித்து, கடந்த மே மாதம் 19ஆம் திகதி, 82 பக்கங்களைக் கொண்ட தன்னுடைய விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்திருக்கின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளடங்கலாக ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்த விசாரணைக்குழு, சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருக்கின்றது. முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், அமைச்சர் குழுவின் முதல்வர் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்கிற அடிப்படையில், அமைச்சர்கள் தம்பிராசா குருகுலராஜா மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் இழைத்த குற்றங்கள் அல்லது அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய கடப்பாட்டினையும் அவர் மீது காலம் வழங்கியிருக்கின்றது. இது, மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதும் மறக்கப்படும் தீர்மானங்கள் போன்று இலகுவானவை அல்ல. சற்றுக் கடினமான பணி. நிதானமாக ஆனால், தீர்க்கமாக எடுக்க வேண்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தம்முடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால், சொல்லிக் கொள்ளக் கூடியதான பெரிய நிர்வாகப் பொறுப்புக்களை அல்லது ஆட்சி நடைமுறைகளை தமிழ்த் தேசிய அரசியல் கடந்த எழுபது ஆண்டுகளில் கொண்டிருக்கவில்லை. இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபை தன்னுடைய நிர்வாக காலத்தினை சிறிய காலத்துக்குள்ளேயே முடித்துக் கொண்டது. ஆனால், ஒப்பீட்டளவில் வடக்கு மாகாண சபையே தமிழ்த் தேசிய அரசியலின் போக்கில் அதிக காலம் வகிக்கப்படும் நிர்வாகப் பொறுப்பு (உள்ளூராட்சி முறைமையின் கடைநிலை அமைப்புக்களான பிரதேச சபை, நகர சபைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை). ஏற்கனவே, மிகமிக அதிகார வலு குறைந்த நிர்வாகக் கட்டமைப்பான மாகாண சபை முறைமைக்குள்ளேயே நிர்வாகக் குறைபாடு, மோசடிக் குற்றச்சாட்டுக்கள் என்று பலத்த விமர்சனத்தை விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சரவை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விட, ஆளுங்கட்சி உறுப்பினர்களும், ஊடகங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அதிகம்.

விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்கள், அவரின் நிர்வாகத்தின் மீது விழுவது தேர்தல் அரசியலின் போக்கில் வழமையானது. அது எங்கும் நிகழ்வதுதான். ஆனால், அதனை அவர் புறந்தள்ளுவதற்கான ஏதுகைகளினை, அவர் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையே வழங்கவில்லை. முதலமைச்சரை சற்றுப் பதட்டத்தோடு வைத்துக் கொள்வது தொடர்பில் அவரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்கள் அக்கறையோடு இருந்து வருகின்றார்கள். அது அவருக்கும் தெரியும். ஆனாலும், அவரின் அதிகூடிய உணர்ச்சிவசப்படுகின்ற நிலை, தொடர் சிக்கலுக்குள் அவரை மாட்டி விட்டிருக்கின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பெரியளவில் மேலெழுந்து மக்கள் எரிச்சல் நிலையை அடைந்த தருணத்தில் கூட, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் நற்சான்றிதழ் வழங்குவதில் குறியாக இருந்தார். குறிப்பாக, பொன்னுத்துரை ஐங்கரநேசன், தம்பிராசா குருகுலராஜா ஆகியோர் தொடர்பில் பிணையெடுப்பதில் அதிக நேரம் செலவிட்டு உழைத்திருக்கின்றார். விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அழைத்த இடங்களுக்கெல்லாம் முதலமைச்சர் சென்றார், அவர் சொல்வதெல்லாம் வேதவாக்குப் போன்றும் நடந்து வந்தார். இப்போது, ஐங்கரநேசன் மேற்கொண்டதாகக் கூறப்படும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மோசடிகள் முதலமைச்சரை முகமாக வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்கிற தொனி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுன்னாகம் பகுதியிலுள்ள தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகள், அந்தப் பகுதி நிலத்தடி நீரில் கலந்திருக்கின்றது என்று தெரிவித்து எதிர்ப்புப் போராட்டங்களை மக்கள் 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். அந்த விடயம் தொடர்பில் நிபுணர் குழுவினை நியமித்து, நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவுகள் கலக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பிக்க வைத்தமை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மீது அதிருப்திகள் எழுந்திருந்தன. அண்மையில், மல்லாகம் நீதிமன்றத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சமர்ப்பித்த அறிக்கையில், சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரியில் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களின் குடிநீர்ப் பிரச்சினையில் பொறுப்பற்று செயற்பட்டு யாரோ சிலரின் தேவைகளை நிறைவேற்ற முனைந்தமை தொடர்பில் விக்னேஸ்வரனும், பொன்னுத்துரை ஐங்கரநேசனும் குற்றச்சாட்டுக்களை இப்போதும் சந்தித்து நிற்கின்றனர்.

பொன்னுத்துரை ஐங்கரநேசன் தன்னை சூழலியலாளராக தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருபவர். ஆனால், அது தொடர்பிலான பல செயற்திட்டங்களில் உண்மையாக அவர் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றாரா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆய்வுகள் ஏதுவும் செய்யப்படாத காலப்பகுதியிலேயே அந்தப் பகுதி மக்களை கூட்டி குறித்த திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரினார். அங்கு மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் கூட்டத்திலிருந்து இடைநடுவிலேயே வெளியேறினார். அதுபோல, குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த வடமராட்சிக் கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவரை, அரசியல் காரணங்கள் காட்டி பதவி நீக்கினார். (அமைச்சரால் பதவி நீக்கப்பட்டவரே, தற்போது மீண்டும் அந்தப் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் என்பது வேறு விடயம்.)

பொன்னுத்துரை ஐங்கரநேசன் வடக்கின் இயற்கை வளத்தினைக் காப்பாற்றுவதற்காக மாகாண அதிகார வலுவிற்கு அப்பால் சென்று செயலாற்றியிருக்கின்றார். அது, அரசியல் தலைமையென்கிற அடிப்படையில் சரியானது என்கிற நியாயப்படுத்தல்கள் வைக்கப்படுகின்றன. அப்படியாயின், சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்திலும், மருதங்கேணி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலும் அவர் நடந்து கொண்டமையை எவ்வாறு எடுத்துக் கொள்வது? அதுபோல, அதிபர்கள் நியமனப் பிரச்சினை, ஆசிரியர்கள் இடமாற்றப் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தொடர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வந்திருக்கின்றார். அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

மாகாண அமைப்பு முறை என்பது அதிகார வலு மிகவும் குறைந்தது. அதனை அதிகாரப் பகிர்வின் அங்கமாகவே கொள்ள இயலாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அது, அரசியல் ரீதியான உறுதிப்பாடு சார்ந்தது. ஆனால், அந்த வலுக்குறைந்த அவையினூடு ஆற்றப்படக் கூடிய சில விடயங்களை போருக்குள் முப்பது வருடங்களுக்கும் மேலாக அல்லாடியவர்களாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களில் வழி இலங்கைக்குள் வந்த மாகாண சபை முறைமையால், அதிக பலன்களை இப்போது, தெற்கு பெற்று வருகின்றது. மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த வடமத்திய மாகாணமும், வடமேல் மாகாணமும் மாகாண சபை முறைமையூடு பல வெற்றிகரமான கட்டங்களைத் தொட்டிருக்கின்றன. ஆனால், அதிக தேவைகளோடு இருக்கின்ற வடக்கு மாகாண சபை, கிடைத்துள்ள மிகக்குறைந்த அதிகாரங்களைக் கொண்டே மோசடிகளில் ஈடுபட்டிருக்கின்றது என்பது வேதனையானது. மன்னிக்கவே முடியாதது. இழைத்த குற்றங்களுக்கு தார்மீகக் பொறுப்பை ஏற்று அமைச்சர்கள் இருவரும் பதவி விலகுவார்களா அல்லது பதவி நீக்கப்படுவர்களா என்பதை காலம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்!

(தமிழ்மிரர் பத்திரிகையில் (யூன் 07, 2017) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்