பதிவுகள்
Typography

அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள்  முக்கியமானது.

இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் The Great Mother என்று பாராட்டப்பட்ட அவர், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார். தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும், கண்ணீர்க் கதையையும், நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இது வெறும் நேர்காணல் அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு என்ற அறிமுக உரையோடு, 'சமநிலைச் சமுதாயம்' நவம்பர் மாத இதழில் வெளிவந்துள்ள  இந்த நேர்காணலை, அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்

'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்

சந்திப்பும் உரையாடலும் : அனுஸ்ரீ

­''விசாரணை நடத்திவிட்டு மறுநாளே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்ததன் பேரில், 1991 ஜூன் 11 ஆம் தேதி நீங்களும் அப்பாவும் சேர்ந்துதானே பேரறிவாளனை போலீஸிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால், அதன் பிறகு போலீஸ் அவரைக் கைது செய்ததாக பத்திரிகைச் செய்திகள் வந்தன. உண்மையில் அன்று என்னதான் நடந்தது?

ஜோலார்பேட்டையில் வசிக்கும் மிகச் சாதாரண குடும்பம் எங்களுடையது, எனது கணவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு அன்புமணி, பேரறிவாளன் (அறிவு), அருட்செல்வி என மூன்று பிள்ளைகள்.

1991 இல் எலக்ட்ரானிக்கில் டிப்ளமோ பெற்றபின், பார்ட் டைம் என்ஜினியரிங் படிக்க, அறிவு சென்னை சென்றான். எங்கள் குடும்பம் திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் தி.க.வின் சென்னை அலுவலகத்தில் அவன் தங்கி, விடுதலை நாளிதழில் வேலை பார்த்து வந்தான்.

1991, மே மாதம் 21 ஆம் தேதி நாட்டை உலுக்கிய அந்த துயரச் சம்பவம் நடந்தது. - ராஜீவ்காந்தி படுகொலை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் குடும்பத் திற்கும்கூட அந்த நாள்தான் ஒரு துயர நாள் என்று அன்றுவரை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

1991, ஜூன் பத்தாம் நாள் இரவு 12 மணி இருக்கும்; முதன்முறையாக எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நாங்கள் திறந்து பார்த்தபோது, வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்றிருந்தனர். ''நாங்க சென்னையிலிருந்து வர்றோம். உங்க வீட்டை சோதனையிட வேண்டும்'' என்றனர். இதைக் கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். ''இந்த நடு ராத்திரியில எங்க வீட்டை சோதனை நடத்த வேண்டிய தேவை என்ன?'' என்று கேட்டபோது, உங்க வீடு மட்டுமல்ல; ஈழ ஆதரவாளர்கள் அனைவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறோம்'' என்று பதிலளித்தனர்.

முதலில் அவர்கள் டிவி மேலிருந்த பிரபாகரன் படத்தை எடுத்துப் பார்த்தனர். பிறகு எனது கணவரை விசாரித்தனர். அவருக்கு வந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் பரிசோதித்தனர். அதில் பாக்கியநாதன் என்பவரின் கடிதத்தை நீண்டநேரம் ஆய்வு செய்தனர். பின்னர் ''பாக்கியநாதனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு'' என்று கேட்டனர். திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுக்கவரும் சுபா சுந்தரம் என்பவரது நண்பர் என்ற முறையில் பாக்கியாநாதன் எங்களுக்கு அறிமுகமானார். மேலும், சுபா சுந்தரம் சொல்லி தான் பாக்கியநாதனுக்கு ஓர் அச்சகம் இருக்கிறது என்ற செய்தி எங்களுக்கே தெரியும்'' என்றோம்.

எனது கணவர் கவிதைகள் எழுவார். அந்தக் கவிதைகளை நான் பதிப்பித்து வெளியிடுகிறேன் என்று அவரேதான் எங்களிடம் கேட்டார். அன்றுவரை ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினியின் அண்ணன்தான் இந்த பாக்கியநாதன் என்பது எங்களுக்கே தெரியாது. எனது கணவரின் கவிதைகளைப் பதிப்பிப்பது தொடர்பாக வந்த கடிதங்களைத்தான் அதிகாரிகள் பரிசோதித்தனர். நாங்களும் போலீஸாரிடம் அந்த கடிதங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டோம். வாசித்துப் பார்த்தபோது கடிதத்திலும் அந்த செய்திதான் இருந்தது என்று அவர்களுக்குப் புலப்பட்டது. ''இந்தக் கடிதங்களை நாங்க எடுத்துச் செல்லட்டுமா'' என்று அவர்கள் கேட்டபோது, நாங்களும் சரி என்றோம். ஆனால், இன்று இவ்வளவு பெரிய வழக்குகள் எங்கள் தலையில் இடியாய் வந்து இறங்குமென்றும், இக்கடிதங்களும் அதற்கு ஓர் ஆதாரமாகு மென்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

அதன் பிறகு ''உங்கள் மகன் எங்கே'' என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் எங்களுக்குள் ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டது. ''பயப்படாதீங்க! சும்மா சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான்'' என்று அவர்கள் சொன்னதை நாங்கள் நம்பினோம்.

அவன் சென்னையில் உள்ள தி.க. அலுவலகத்தில் இருப்பதாக நாங்கள் கூறினோம். ''நாளை அறிவையும் அழைத்துக்கொண்டு அவன் அம்மா வருவாங்க. எங்கு வரவேண்டும் என்று சொல்லுங்க'' என என் கணவர் கேட்டபோது, 'மல்லிகை' யின் முகவரியைத் தந்தனர். மல்லிகை என்பது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி.யின் தலைமையகம் ஆகும். ''அவனையும் அழைத்துக்கொண்டு நாளை நாங்கள் அங்கு வந்து விடுகிறோம்'' என்று என் கணவர் அதிகாரிகளிடம் கூறினார்.

மறுநாள் காலையிலேயே அறிவை அழைத்து வருவதற்காக நான் சென்னை புறப்பட்டேன். ஆனால், அன்றும் எஸ். ஐ.டி. அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 11 பேர் இருந்தனர். அந்த சமயத்தில் வீட்டில் எனது சிறிய மகள் மட்டுமே இருந்தாள். அவளிடம் எதுவும் கூறாமல் வீட்டை சோதனையிடுவதாகச் சொல்லி மொத்த வீட்டையும் கலைத்துப்போட்டனர்.

அதிகாரிகளுக்கு வீட்டிலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. பயந்துபோன மகள் ஓடிசென்று எனது கணவரை அழைத்து வந்தாள். இதையெல்லாம் கண்டபோது அவருக்கும் ஏதோ ஒருவித அச்சம் ஏற்பட்டது. அப்போதே அதிகாரிகளுடன் அவரும் சென்னை வந்தார். இந்த சமயத்தில் நான் தி.க. அலுவலகத்திற்கு வந்து அறிவிடம் நடந்த விஷயங்களைச் சொன்னேன்.

''நாளை நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்று வந்தால் போதும்'' என்று அலுவலக நண்பர்களும் கருத்துத் தெரிவித்தனர். அப்படியானால் விசாரணை நடத்திவிட்டு அன்று மாலையே அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து நானும் அறிவும் கடைவீதிக்குச் சென்று ஷாப்பிங் பண்ணினோம். நாங்கள் திரும்பி வரும்போது தி.க. அலுவலகத்தில் எனது கணவர் இருந்தார். கூடவே போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

அப்பாதான் அறிவை போலீஸாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே ''நாங்க இன்று அறிவை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவனிடம் சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை காலை நீங்கள் வந்து அவனை அழைத்து செல்லலாம்'' என்று போலீஸார் கூறினர். "இங்கேயே வைத்து விசாரிக்கலாமே'' என்று தி.க. அலுவலகத்தில் உள்ளவர்களும் கேட்டனர்.

ஆனால் அறிவிடம் எந்தவித பயமும் தெரியவில்லை. ''நாளை காலை நீங்கள் அழைத்துச் செல்ல வந்தால் போதும்'' என்று அவன்தான் எங்களைச் சமாதானப்படுத்தினான். இதெல்லாம் நடந்தது, ஜூன் 11 தேதி. பின்னர் ஜூன் 18 ஆம் நாள் அவனைக் கைது செய்திருப்பதாக எஸ்.ஐ.டி. அதிகாரிகள் அறிவித்தனர்.

மறுநாள் நீங்கள் மல்லிகை அலுவலகம் சென்றபோது அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டனர்?

அதிகாரிகள் சொன்னதை நம்பி, மறுநாள் அறிவை அழைப்பதற்காக நாங்கள் மல்லிகை அலுவலகம் சென்றோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. ''இன்னிக்கு விட்டுவிடுவோம் என்று சொல்லித்தானே அவனை அழைத்துச் சென்றீர்கள்'' என்று நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இன்னும் விசாரணை முடியல; நாளைக்கு முடிஞ்சுடும்'' என்று பதில் சொன்னார்கள். மறுநாளும் போனோம். ஆனால், அவனைச் சந்திக்கக் கூட முடியவில்லை.

இறுதியில், போலீஸார் ''நீங்க ஏதாவது வக்கீலை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று சொன்னபோது, நாங்கள் உண்மையிலேயே பலத்த அதிர்ச்சியடைந்தோம். ''விசாரித்துவிட்டு உடனே அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லித்தானே அவர்கள் அறிவை அழைத்துச் சென்றார்கள். இப்போது ஏன் வழக்கறிஞரை அழைத்து வாருங்கள்'' என்று சொல்கிறார்கள் என அப்போது எங்களுக்கும் புரியவில்லை.

எங்களிடம் அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை. எதை எதையோ சொல்லி எங்களை ஏமாற்றினர். ஏமாந்துபோன நாங்கள் பின்னர் பத்திரிகைச் செய்தி வழியாகத்தான் விபரங்களை தெரிந்துகொண்டோம். அதன் பிறகு மல்லிகை அலுவலகம் சென்றபோதெல் லாம் எங்களை உள்ளே விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.

அதன் பிறகு உங்களுக்குக் கிடைத்த சட்ட ஆலோசனைகள் என்னென்ன?

திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமிதான் இந்த வழக்கிற்குப் பொறுப்பேற்றார். அவரைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. தி.க. தலைவர் கி. வீரமணி அப்போது அமெரிக்காவில் இருந்தார். அவர் வரும்வரை காத்திருக்குமாறு வழக்கறிஞர் துரைசாமி எங்களைக் கேட்டுக்கொண்டார். ஒருவாரம் முடிந்தது. கண்ணீரோடும், மன வேதனையோடும் எப்படியோ அந்த வாரத்தைக் கடத்தினோம்.

அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து வீரமணி திரும்பி வந்தார். எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு ''நம்ம பிள்ளை எப்படியும் திரும்பி வந்துவிடுவான்'' என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. கோர்ட்... கேஸ்… வக்கீல் என்று எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே எங்களால் யூகிக்க முடியவில்லை.

அறிவு மீது தடா சட்டம் பாய்ந்திருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தால் கூட எதுவும் செய்ய இயலாது என்றும் துரைசாமி சென்னார். வழக்கறிஞர் சொல்வதையெல்லாம் நம்பி நாங்களும் தலையாட்டிக்கொண்டிருந்தோம். இதை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாதே. எல்லாவற்றையும் வீரமணி பார்த்துக்கொள்வார் என்று நாங்களும் நம்பியிருந்தோம்.

அதேநேரம், மற்றொருபுறம் எங்கள் பிள்ளை கொடிய துன்புறுத்தலுக்கும், சித்தரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தான். அவனைக் கட்டாயப்படுத்தித்தான் அவனிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றனர் என்று அவனது நூலில் எழுதியுள்ளான். அறிவு எழுதிய புத்தகத்தை வாசித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படியானால் அவன் சொல்வதெல்லாம் உண்மை என்றுதானே பொருள்.

உன் குடும்பத்தைப் பற்றி மோசமாக சித்தரிப்போம் என்றும், சகோதரிகளை அவமானப்படுத்துவோம் என்றும் அதிகாரிகள் மிரட்டி வந்தார்களாம். அவன் என்ன செய்வான் பாவம்? 19 வயது சின்னப் பையன் அல்லவா? அங்கு அவனுக்கு போலீஸாரைத் தவிர வேறு யாரும் கண்ணுக்கும் தென்படவில்லை. கூடவே சித்தரவதைகள் வேறு. என் குழந்தை என்னமா கஷ்டப்பட்டிருப்பான் (அழுகிறார்).

''உனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லிவிடு. உன்னை சும்மா விட்டுறோம்'' என்று அவர்கள் சொல்லி வந்தார்களாம். ''எனக்கு எதுவுமே தெரியாது'' என்று அவன் சொல்லும்போதெல்லாம் அவன் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளான். இவ்வாறு மிரட்டியும் அச்சுறுத்தியும், துன்புறுத்தியும்தான் அதிகாரிகள் அவனிடமிருந்து கையொப்பம் வாங்கியுள்ளனர். இவ்வாறு ஒரே இரவில் 17 பேரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் வெற்றுத்தாளில் அதிகாரிகள் கையொப்பம் வாங்கியுள்ளனர். இந்த விஷயங்களையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகுதான் அவன் என்னிடம் சொன்னான்.

அதன் பிறகு எப்போது அறிவைச் சந்தித்தீர்கள்?

சென்னையிலேயே தங்கியிருந்து எந்தப் பயனும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நாங்கள் ஜோலார்பேட்டைக்கே திரும்பினோம். அறிவை முதல் தடவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் என்பதை பத்திரிகை வழியாகத்தான் நாங்கள் அறிந்தோம். எங்கள் வழக்கறிஞருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. இரண்டாவது முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். அவரும் எங்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நாங்கள் ஏராளமான உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்தோம். நீதிமன்றத்தில் வைத்து அறிவைப் பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை. முகத்தில் கறுப்புத் துணி அணிவித்த நிலையில் அவன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். நேராக மேலே உள்ள நீதிமன்ற அறைக்குப் போலீஸார் அவனைக் கொண்டுசென்றனர். வெளியே நின்றிருந்த

நாங்கள் அனைவரும் அறிவு! அறிவு!' என்று சப்தமாக அழைத்தோம். சிலர் கூச்சல் போட்டனர். சிலர் கதறி அழுதனர். ஆனால், போலீஸார் எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அவனை வேகமாக அழைத்துச் சென்றனர். ராபர்ட் பைஸ், அறிவு, கோடிகரை சண்முகம் இவர்கள் மூவரைத்தான் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாங்கள் அறிவு என்று நினைத்து சப்தம் போட்டது, கோடிகரை சண்முகத்தைப் பார்த்துத்தான் என்பதை பின்னர்தான் தெரிந்துகொண்டோம். ஏனெனில், முகத்தில் கறுப்புத் துணி போடப்பட்டிருந்ததால் யார் அறிவு என்று எங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.

எப்படியாவது அறிவைச் சந்திக்க வேண்டும் என்று வழக்கறிஞரிடம் நான் மன்றாடினேன். வக்கீல் சொன்னபடி மல்லிகைக்கு சென்று அவனைப் பார்க்க அனுமதி கிடைத்தது. நாங்கள் மல்லிகை சென்றோம். வாசலிலேயே துப்பாக்கி ஏந்திய போலீஸார் நின்றிருந்தனர். அச்சமூட்டும் சூழல்... திடீரென, ஆக தளர்ந்த நிலையில் எனக்கு முன்னால் அறிவு கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சந்திப்பு அது. நான் அவனது கைகளைப் பிடித்தேன். அந்த ஸ்பரிசம் வழியாக அவனுக்குள் இருந்த பயம், அச்சம், நடுக்கம் அனைத்தையும் நான் உணர்ந்து கொண்டேன்.

அவனுக்கு ஏற்பட்ட சித்தரவதைகள் பற்றி அவன் எங்களிடம் எதையுமே சொல்லவில்லை. ஏனெனில், சுற்றிலும் போலீஸார் நின்றிருந்தனர். அனைத்தையும் அவன் எழுதிய புத்தகம் வழியாகத்தான் நான் அறிந்து கொண்டேன். 'தைரியமா இருங்க' என்று மட்டும்தான் அன்று அவன் என்னிடம் சொன்னான். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் அன்றைய பத்திரிகைகள் மிக மோசமாக எழுதி வந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனைப்பட்டோம். எங்களால் எதிர்க்கவோ, மறுப்புத் தெரிவிக்கவோ முடியவில்லை. ஏனெனில், நாங்கள் எந்த எதிர்ப்பைத் தெரிவித்தாலும் உடனே 'தடா' என்ற வார்த்தையைச் சொல்லி எங்கள் வாயை அடைத்துவிடுவர்.

பிறகு வழக்குகள் எப்படி நடந்தன?

தொடரும்...

'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை!'- அற்புதம் அம்மாள்:நேர்காணல் பகுதி2

BLOG COMMENTS POWERED BY DISQUS