பதிவுகள்
Typography

அற்புதம்மாளுடனான இந்த நேர்காணலில், அவர்களது குடும்பம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு கட்சியின் தலைமை அவர்களை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் முக்கியமானது.

இது ஏதோ அந்தக் கட்சியில் மட்டும் நடந்துவிடுவதில்லை. ஏறக்குறைய எல்லா அரசியற் தலைமைகளும் இவ்வாறேயுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டெனலாம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள். எப்படியேனும் தனது மகனை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

தனது பிள்ளை எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உறுதியாக நம்பும் 64 வயதான இந்தத் தாய், கடந்த 20 ஆண்டுகளாக சட்ட ரீதியாகவும், பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வழியாகவும் நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார்.

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் The Great Mother என்று பாராட்டப்பட்ட அவர், பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வாரத்தில் ஒருநாளேனும் தனது மகனைக் காண சிறைக்கூடம் செல்கிறார். தூக்குக் கயிற்றின் நிழலில் வாடும் தனது மகனுக்காக இந்தத் தாய் சந்தித்த வேதனைகளையும், கண்ணீர்க் கதையையும், நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். இது வெறும் நேர்காணல் அல்ல; கடந்த 20 ஆண்டுகளாக மகனுக்காக ஒரு தாய் நடத்திவரும் போராட்டத்தின் வரலாறு என்ற அறிமுக உரையோடு, 'சமநிலைச் சமுதாயம்' நவம்பர் மாத இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணலை, அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள் பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்

'இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை;யாருக்கும் மனசாட்சியுமில்லை!'- அற்புதம் அம்மாள்:நேர்காணல்

பகுதி 2

பிறகு வழக்குகள் எப்படி நடந்தன?

பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. சிறையிலிருந்தே நேரடியாக நீதிமன்றத்திற்கு வர முடியும். பூந்தமல்லி சிறைக்கு உள்ளேயே நீதிமன்றமும் இயங்கி வந்தது. அங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ''அறிவு என்ன தப்பு செய்தான் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகையால் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் காண எங்களை அனுமதிக்க வேண்டும்'' என்று புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமனிடம் நான் கோரிக்கை வைத்தேன். ''அதெல்லாம் நடக்காது. இது தடா கோர்ட். உங்க வக்கீலுக்கு மட்டும்தான் நீதிமன்றத்திற்கு வர அனுமதி கிடைக்கும்'' என்று அவர் மறுத்துவிட்டார்.

ஏறக்குறைய 8 ஆண்டுகள்… விசாரணை நடைபெற்ற ஆரம்ப நாட்களில் அவனைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டோம். ஆனாலும், எப்போதெல்லாம் அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் சிறைக்குச் செல்வேன். பல சந்தர்ப்பங்களில் அவனைச் சந்திக்கவே இயலாது. அவனைப் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்று பிடிவாதமாக நான் அங்கேயே இருப்பேன். சில நாட்களில் கூச்சல் போடுவேன். அடம்பிடிப்பேன். அழுவேன்; அவர்களைத் திட்டுவேன். ஆனால், விசாரணை நடைபெறும் நாட்களில் அவனைக் காண இயலாது. ஜோலார்பேட்டையிலிருந்து புறப்பட்டு, பலமுறை சென்னை வந்தும் அவனைக் காண முடியாமல் மன பாரத்தோடும், கவலையோடும் திரும்பிச் சென்ற சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.

திராவிடர் கழகத்தின் தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லையா?

இந்த விஷயத்தில் தி.க. தரப்பிலிருந்துதான் எங்களுக்கு பலத்த அடி கிடைத்தது. தி.க. எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. பேரறிவாளனுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கி.வீரமணி விடுதலையில் தலையங்கமே எழுதினார்.

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது கணவர் 8 வயது முதல் தி.க.வில் இயங்கிவருகிறார். எங்கள் திருமணத்திற்குப் பிறகு நானும் தி.க.வில் இணைந்து பணியாற்றிவந்தேன். வீரமணியும், அவரது துணைவியார் மோகனாவும்தான் எங்கள் திருமணத்தையே நடத்திவைத்தனர். எனது மூத்த மகளுக்கு அன்புமணி என்று பெயர் சூட்டியதே தந்தை பெரியார்தான்.

அறிவின் தந்தை மட்டுமல்ல; எங்கள் குடும்பமே தி.க.வின் தீவிர தொண்டர்களாக இயங்கிவந்தோம். நாங்கள் கழகத் தலைமையிடம் எங்கள் பிரச்சினைகளையெல்லாம் எடுத்துச்சொன்னோம். ஆனால், அறிவுக்கு ஆதரவாகப் பேசினால் அமைப்பைத் 'தடை' செய்துவிடுவார்கள் என்பதே அவர்களது ஒரே பதிலாக இருந்தது. நாங்கள் மிகுந்த மனவருத்தம டைந்தோம். ஒரு நெருக்கடியான சூழலில் இப்படி தனித்து விடப்பட்டோமே என்று எங்களது கையறு நிலையை எண்ணி வருந்தினோம்.

கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நாங்கள் சென்றுவருவது வழக்கம். கன்னியகுமரி முதல் திருத்தணி வரை தி.க. மேற்கொண்ட பிரச்சார ஊர்வலத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை நானும், கணவரும் பங்கெடுத்திருந்தோம். 'பேரறிவாளன் வழக்கு நிதி' என்ற பெயரில் அவனது வழக்கை நடத்துவதற்காக பலரும் நன்கொடை வழங்கினர். ஆனால், எனது மகனுக்காக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. ஆனாலும், ஒட்டுமொத்த கழகமும் அவனுக்குப் பின்னால் இருப்பதாகவும் அவனுக்கு எதுவும் நேராது என்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். ஆனால், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

அறிவு கைது செய்யப்பட்ட பின்னரும் தொடர்ந்து 4 வருடங்கள் நாங்கள் கழகத்திலேயே தொடர்ந்தோம். ''கழகத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் தேவை அல்லவா? அதனால்தான் இந்த வழக்கில் தலைமை தீவிரமாக ஆர்வம் காட்டுவதில்லை'' என்று எனது கணவர் அடிக்கடி ஆறுதல் சொல்வார். மேலும், ''தந்தை பெரியார் கடும் தியாகங்களைச் சந்தித்து கழகத்தை வளர்த்தார். உங்கள் மகனின் பிரச்சினையால் அவரது முயற்சிகள் வீணாகிவிடக் கூடாதே'' என்று தலைவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, 'ஆமாம்! ஆமாம்!' என்று நாங்கள் தலையாட்டுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

வழக்கு வலுவாக வலுவாக… கழகம் பின்வாங்கிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு அறிவின் அப்பா பற்றியும் அவதூறு பரப்பினர். அவர் கழகத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்பது அவர்களது பிரதான குற்றச்சாட்டு. கடைசியில் நாங்களாகவே கழகத்திலிருந்து வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

இவ்விஷயத்தில் கழகம் எங்களுக்குப் பெரும் துரோகம் இழைத்துவிட்டது. இப்பிரச்சனையில் நாங்கள் தலையிட்டு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்று அவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டி வந்தனர் என்பதே உண்மை.

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்ன தவறுகூட செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்த தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான்.

நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணி. கணவர் மற்றும் குழந்தைகளுக்குச் சமைத்துப்போடுவதை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. இப்படியொரு வழக்கை சந்திக்கும் வரை நான் தனியாக எங்கும் பயணித்ததில்லை. இப்போது தமிழகத்தின் பல இடங்களுக்கும் குறிப்பாக, சென்னையில் வழக்குத் தொடர்பாக தன்னந்தனியாக அலைகிறேன். ஒவ்வொருவரிடமும் வழிகேட்டு அந்தந்த இடங்களுக்குப் போய் சேருகிறேன். பல்வேறு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என எல்லா இடங்களுக்கும் நான் தனியாளாகவே சென்று வருகிறேன். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. நாங்கள் பணக்காரர்கள் அல்லவே? நாங்களும் வாழணும் இல்லையா? அதனால் அறிவின் அப்பா வேலைக்குப் போகிறார். அவரால் விடுப்பு எடுத்து என்னைப்போல் அலைய முடியாது என்பதால், வழக்கு தொடர்பாக நானே தனியாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன். அம்மாவின் இந்த தனிமனிதப் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்கிறீர்கள்?

இந்த 20 வருடங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் விமர்சனங்களையும், தாக்குதல்களையும் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?

திராவிடர் கழகம் தவிர அனைவரும் எங்களுக்கு உதவினர். பொதுமக்களிடமிருந்து நாங்கள் எந்த நிதியுதவியும் பெறுவதில்லை. மற்ற அனைத்து உதவிகளையும் ஏற்றுக்கொண்டோம். பிற வழிகளில் உதவி செய்ப வர்களையும், செய்து கொண்டிருப்பவர்களையும் எங்களால் ஒருபோதும் மறக்க இயலாது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி தவிர உள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, எப்படியாவது என் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் மன்றாடி வருகிறேன். அவர்களில் பலரும் எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர்.

ஆனால், சிறப்பு புலானாய்வுத்துறை அதிகாரிகளோ யாரையும் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அனைத்து உண்மைகளையும் மூடி மறைத்தனர். அவர்கள் எழுதிய திரைக்கதையை ஏற்று நடித்தவர்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 'முன்னாள் பிரதமரை கொலை செய்த குற்றம்… தடா நீதிமன்றம்…' என்று சொல்லிச் சொல்லியே அவர்கள் எல்லோரையும் மிரட்டி வந்தனர்.

இவர்களைப் பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். முன்னாள் பிரதமரின் கொலை வழக்கை ஏன் நீங்கள் ஒரு திறந்தவெளி நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது? இவர்கள் செய்த குற்றம் என்னவென்று அனைவருக்கும் தெரியட்டும். எனது பிள்ளை என்ன தவறு செய்தான் என்பதை அறியும் உரிமை எனக்கும் உண்டல்லவா? திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்துங்கள் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒற்றைக் கோரிக்கை.

அறிவை சந்திக்கவோ, பேசவோ முடியாமல் எத்தனை வருடங்கள் கழித்தீர்கள்? பின்னர் என்று முதல் மீண்டும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது?

விசாரணை முடியும் வரை… அதாவது எட்டு வருடங்கள். இத்தனை வருடங்களில் நாங்கள் எவ்வாறு நாட்களைக் கடத்தினோம் என்று எங்களுக்கே தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவனைக் காண முடியாமல்… நான் சுயநினைவு இழந்தவளைப்போல் நடந்துகொண்டுள்ளேன். அவனைக் காண சிறைக்குச் செல்லும்போதெல்லாம் எவ்வளவோ அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அந்த அவமானங்களையெல்லாம் என் பிள்ளைக்காக நான் சகித்துக்கொண்டேன்.

வரும்போது புத்தகங்கள் மட்டும் கொண்டுவந்தால் போதும் என்பான் அறிவு. ஆனால், நான் பழங்கள், பிஸ்கெட், மாத - வார இதழ்களையும் கொண்டுவருவேன். அதனை இரண்டு மூன்று முறை சோதனை போடுவார்கள். சிலர் கொடுத்து விடுகிறோம் என்பார்கள். சிலர் தர முடியாது என்று மறுத்துவிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் சிறை அதிகாரிகளோடு நான் சண்டை போடுவேன். சிலபோது சப்தமிட்டு அழுவேன். சோதனை முடிந்து, உள்ளே சென்று அறிவைப் பார்த்து விட்டுத் திரும்பி வரும்போது மீண்டும் சோதிப்பார்கள். நான் அப்படியே அவமானத்தால் கூனிக்குறுகிப் போய்விடுவேன்.

கைது செய்தவுடன் அவனை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அங்கேயே அறிவிற்கு சிறைக் கைதிகளுக்கான (convicted prisoners) உடை தந்துவிட்டிருந்தனர் (white and white). முதன் முறையாக அந்த உடையில் அவனைப் பார்த்தபோது என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. என்னையும் அறியாமல் நான் அழுதுவிட்டேன். நான் சொன்ன பிறகுதான் இவ்விஷயம் எங்கள் வக்கீலுக்கே தெரியும். அதற்காக ஒரு வழக்கு தொடர்ந்த பிறகுதான் சாதாரண உடை அணிய அனுமதி கிடைத்தது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நான் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது.

அதன் பிறகு அவன் பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கு அவனைக் காணச் சென்றபோது, பைபர் கிளாஸால் ஒரு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் நின்றுதான் அவனைப் பார்க்க முடியும். முழுசா தெரியாது. நிழல் மட்டும்தான் தெரியும். தொலைபேசி வழியாகத்தான் இருவரும் பேச முடியும். வழக்கறிஞர் கூட தொலைபேசி வழியாகத்தான் பேசுவார். அதற்கும் ஒரு வழக்கு தொடுத்தோம். அப்போது பைபர் கிளாஸ் தடுப்புச் சுவரில் ஒரு சின்ன துவாரம் போட்டார்கள். அது வழியாக ரொம்பவும் சிரமப்பட்டு, அவனது விரலை மட்டுமே என்னால் தொட முடிந்தது. மறுபடியும் கேஸ் கெடுத்தோம். அதன் பிறகு வழக்கறிஞர் மட்டும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி கிடைத்தது.

செங்கல்பட்டு சிறையில் சிறை அதிகாரியின் அறைக்கு மேல்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பி வழியாக கீழே எட்டிப் பார்த்து என் பிள்ளை என்னிடம் பேசுவான். நான் எக்கி எக்கி மேலே அண்ணாந்து பார்த்து அவனுடன் பேசுவேன்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு...?

விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வந்தது. எல்லா குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிறகு அனைவரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போதுதான் ரிவ்யூ பெட்டிஷன் கொடுத்தோம். தீர்ப்பில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த அதே நீதிபதியிடம்தான் ரிவ்யூ பெட்டிஷனும் கொடுக்கப்பட வேண்டும். வேறொரு நீதிபதியிடம் மனு கொடுத்திருந்தால் ஒருவேளை தீர்ப்பு மாறி வந்திருக்க வாய்ப்பு இருந்தது.

குண்டுவெடிக்கச் செய்ய சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதானே அறிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால், ரவிச்சந்திரன் என்ற மற்றொரு குற்றவாளியும் சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், ''ரவிச்சந்திரனுடையது அல்ல; அறிவு கொடுத்த பேட்டரிதான் குண்டுவெடிக்க பயன்படுத்தப்பட்டது'' என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அது ஏன் அறிவுக்குப் பொருந்தாதா? என்பதே எனது கேள்வி.

ரிவ்யூ பெட்டிஷன் கொடுக்கும்போதும், கருணை மனு கொடுக்கும்போதும் உங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்குமே? எல்லா தீர்ப்புகளும் அறிவுக்கு முற்றிலும் எதிராகத்தானே இருந்தன?

ஆறு முறை… இதுவரை ஆறு முறை அவன் தூக்குமேடைக்குச் சென்று திரும்பியுள்ளான். அவனுடைய மனு பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு முறையும் நான் நம்பிக்கையோடு காத்திருப்பேன். முதன் முறையாக விசாரணை என்ற பெயரில் அவனை அழைத்துச் சென்ற அந்த நாள் முதல் இந்த நிமிடம் வரை நான் அவனுடைய விடுதலைக்காக போராடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தீர்ப்பும் எனக்கான மரண தண்டனைதான்.

இதோ இந்த நிமிடம்வரை நான் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறேன். அறிவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம் நான் பயங்கர மன உளைச்சலிலும், பதற்றத்திலும் தத்தளிப்பேன். ரிவ்யூ பெட்டிஷன் விசாரணைக்கு வரும் நாளில், எங்கள் வழக்கறிஞரின் தொலைபேசி அழைப்புக்காக ஆவலோடு காத்திருப்பேன். கடைசிவரை போன் வரவே இல்லை.

பொறுமையிழந்து நானே அவரை அழைத்தபோது, 'மனு தள்ளுபடி செய்யப்பட்ட'தாகச் சொன்னார். இதை எப்படி என்னிடம் தெரிவிப்பது என்று தயங்கித்தான் வாக்கறிஞர் கூட என்னை அழைக்காமல் இருந்திருக்கிறார். 'அடுத்த முறை பார்க்கலாம் என்று வக்கீல் சொல்லும்போதுதான் இந்த முறை நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்' என்பதே எனக்குத் தெரியும் (அழுகிறார்).

இப்படி எத்தனை முறை…? அந்த வேதனைகளையெல்லாம் என்னால சொல்லிப் புரியவைக்க முடியாதும்மா. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது. அனுப விச்சாதான் அந்த வலியும், வேதனையும் எவ்வளவு கொடூரமானது என்பது தெரியும்.

சமீபத்தில், வேலூர் மத்தியச் சிறையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "செப்டம்பர் 9 ஆம் நாள், உங்கள் மகனைத் தூக்கிலிடப் போகிறோம். உடலை நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று கடிதம் வந்தது. (பேச முடியாமல் அழுகிறார்) "… உன்னைத் தூக்குல போடப் போறோம். உடலை யார் கிட்ட கொடுக்க வேண்டுமென்று'' அதிகாரிகள் அறிவிடம் கேட்டார்களாம். அவன்தான் "எங்க அம்மா கிட்ட கொடுத்துடுங்க'' என்று கையொப்பம் இட்டுள்ளான். (பேச முடியாமல் அழுகிறார்).

அழாதீங்கம்மா... அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. ப்ளீஸ்... அழாதீங்க...

இல்லம்மா… எனக்கு இப்போ எதுலயும் நம்பிக்கை இல்லம்மா. இங்கு நீதியுமில்லை; நியாயமுமில்லை. யாருக்கும் மனசாட்சியும் இல்லை.

நன்றி: 'சமநிலைச் சமுதாயம்'

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்