பதிவுகள்
Typography

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நால்வர் அமெரிக்க, கனேடிய, பிரித்தானிய நாடுகளுக்கான

பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.இலங்கைக்குத் துரோகம் செய்துவிட்டுத் திரும்பும் அவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யவேண்டும் என்ற கோசங்கள் சிங்களத் தேசியவாதிகளிடம் இருந்து எழுந்திருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தப் பயணம் சிங்களத் தேசியவாத சக்திகளிடம் கடும் விசனத்தைத் தோற்றுவித்துள்ள நிலையில்,இந்தப் பயணம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்ததா? வெற்றிகரமானதாக அமைந்ததா? என்ற கேள்வி தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணங்களில் இந்தப் பயணத்திற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுவிட்ட மிகப்பெரிய விம்பம். முதலாவது திட்டமிடப்பட்ட சந்திப்புகள் சில நடக்காமல் போனது, இரண்டாவது இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை இதுவரை வெளியிடாதுள்ளமை, மூன்றாவது காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகவே கருதப்பட்டது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்டன் உள்ளிட்ட பலரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் ஹிலாரி கிளின்டனையோ ஐ.நா. பொதுச் செயலரையோ சந்திக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்தத்தகலைக் கசிய விட்டனர். அது அவர்களின் அவசர குடுக்கைத்தனம் என்றுகூடச் சொல்லலாம். உண்மையில் இது ஒரு இராஜதந்திர நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. இராஜதந்திரம் என்பது முற்றிலும் வெளிப்படைத் தன்மை கொண்டதல்ல என்பது முக்கியமானது.

அமெரிக்கச் சந்திப்புகள் சில தடைப்பட்டுப் போனதற்கு இரகசியம் பேணப்படாமையும் ஒரு காரணம். அவசரப்பட்டு நாங்கள் அவர்களைச் சந்திக்கப் போகிறோம், இவர்களைச் சந்திக்கப் போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டது முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகள் கூட்டமைப்பில் உள்ளதையே படம் போட்டுக் காட்டுகின்றது.

ஹிலாரி கிளின்டனைச் சந்திக்கப் போகிறார்கள் என்றதும் அரசாங்கம் தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது. இந்தச் சந்திப்பைத் தடுப்பதற்கு தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

ஆனால் ஒன்று, இலங்கை அரசாங்கத்தினது எதிர்ப்புகளால் மட்டும் ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதாக மட்டும் கருதிவிட முடியாது. அவர் நினைத்திருந்தால் சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் அப்படி நடந்ததாக தகவல் இல்லை.

இந்தத் தருணத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புடைய ஒருவர் தனிப்பட்ட ரீதியில் பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே ஹிலாரி கிளின்டன் இவர்களைச் சந்திப்பார் என்று நம்புவதற்கில்லை.

சில வேளைகளில் அடுத்தடுத்த கட்டங்களிலேயே சந்திப்பு சாத்தியமாகலாம் என்று கூறிய கருத்து கவனத்திற்குரியதாகிறது. எவ்வாறாயினும் சந்திப்பு உறுதியாக முன்னர் ஹிலாரியைச் சந்திக்கப் போகிறோம் என்று காவடி எடுத்தது கூட்டமைப்பிலுள்ள சிலரின் தவறு என்பதில் சந்தேகமேயில்லை.

ஒருமுறை சூடுபட்டு விட்டதால் இன்மேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம். அதேவேளை ஹிலாரியுடனான சந்திப்பு நடக்கவில்லை என்பதற்காக கூட்டமைப்பின் பயணம் தோல்வியானது என்று எடுத்த எடுப்பிலேயே முடிவு கட்டிவிட முடியாது.

அவருடனான சந்திப்பின் ஊடாகத்தான் கூட்டமைப்பின் கருத்துக்கள் அவரைச் சென்றடைய வேண்டும் என்பதும் இல்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் சோ்மனை இவர்கள் சந்தித்திருந்தனர்.

அதுமட்டுமன்றி அங்கு நடந்த சந்திப்புகள், பேசப்பட்ட விடயங்கள் குறித்து அனைத்தையும் ஹிலாரி கிளின்டன் அறிவார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

பேசப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ஹிலாரி கிளின்டன் அறிந்திருந்தார் என்பதால் கூட்டமைப்பு சொல்லவேண்டிய கருத்துகள் அவரைச் சரியாகச் சென்றடைந்துள்ளன என்றே கருத வேண்டும்.

அடுத்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுடனான சந்திப்பும் நடக்கவில்லை. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் ஐ.நா. அதிகாரிகளால் கூட்டமைப்பிற்கு பரிமாறப்பட்டது.

இந்தச் சந்திப்பு கைவிடப்பட்டதற்கும் இலங்கை அரசின் இராஜதந்திர அழுத்தங்களே காரணம் என்று தகவல்கள் வெளியாகின. சந்திப்பு நடக்காது என்று கூறினேன், நான் கூறியபடி சந்திப்பு நடக்கவில்லை பார்த்தீர்களா என்று கேலியாக கூறியிருந்தார் ஐ.நா. வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.

இதுவே தமக்குக் கடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இது அதிகாரபூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிப்படையான ஒரு சந்திப்புக்கான ஏற்பாடு அல்ல.

கடந்த முதலாம் திகதி பான் கீ மூன் பல இறுக்கமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருந்தார். அன்று காலை 10.10 மணியளவில் கிறீக், துருக்கிய,  சைப்பிரஸ் தலைவர்களுடனும், 11.00 மணிக்கு கினியா பிசாவோவுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு அறிக்கையாளர் ஜோசப் முடாபாபாவுடனும், மாலை 4.00 மணியளவில் ஹெய்டிப் பிரதமர் கரி கொனிலுடனும் அதிகாரபூர்வ சந்திப்புகள் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

அதைவிட பொதுச்சபையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பான கருத்தரங்கில் பான் கீ மூன் உரையாற்ற வேண்டியிருந்ததுடன், அதுபற்றிய செய்தியாளர் சந்திப்பிற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்ற பகல் முழுவதும் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்த பான் கீ மூன், சில உள்ளகச் சந்திப்புகளுக்கும் நேரம் ஒதுக்கியிருந்தார்.

அவற்றிற்குள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் அடங்கியிருந்தது.ஆனால் அன்றைய தினமே அவர் பிரான்சின் கேன்ஸ் நகருக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டியும் இருந்தது. கேன்ஸில் 3ம் திகதி ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பது அவரது திட்டம்.

இதற்காக 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதி வரை அவர் பிரான்சுக்கான பயணத் திட்டத்தை போட்டிருந்தார். அதற்கிடையில் பான் கீ மூன் திடீரென லிபியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். கடாபியின் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து இடைக்கால அரசுடன் பேசவேண்டியது அவசியமாக இருந்தது.

இதனால் 2ம் திகதி லிபியா செல்வதற்காக பான் கீ மூன் 1ம் திகதி மாலையே புறப்பட வேண்டியிருந்ததால், அத்தனை உள்ளகச் சந்திப்புகளும் ரத்துச் செய்யப்பட்டன. இதற்குள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலும் அகப்பட்டுக் கொண்டது.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஐ.நா. பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் லைன் பாஸ்கோவைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதன்போது ஐ.நா. பொதுச்செயலரிடம் கையளிப்பதற்கான ஆவணம் ஒன்றை கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அவரிடம் கையளித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது குறித்து கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அதிகாரிகளைச் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை, அதிகாரத்தில் உள்ளவரைச் சந்தித்தால் தான் அது வெற்றி. அதிகாரத்தில் இல்லாதவர்களை  சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதே ஐ.நா. பொதுச் செயலருக்குத் தான் நிபுணர் குழுவை நியமிக்கும் விவகாரத்தில் அவருக்கு அதிகாரமில்லை என்று இலங்கை அரசு கூறிவருகிறது என்பது வேறு கதை. கூட்டமைப்பின் ஐ.நா. பொதுச் செயலருடனான சந்திப்பும் பிசுபிசுத்துப் போனதால், இந்தப் பயணம் வெற்றிகரமானது தானா என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

ஆனால் கூட்டமைப்புத் தலைவர்கள் தமது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக வெளிநாடுகளில் கூறியுள்ளனர். தாம் எதிர்பார்த்தது போன்று சந்திப்புகள் திருப்தியாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இன்னமும் இதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழ் கூட்டமைப்பு விளக்கவில்லை.

இராஜாங்கத் திணைக்களச் சந்திப்புகள் முடிந்த பின்னர் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடாமல் மௌனமாக இருக்கிறது.

சில வேளைகளில் அறிக்கைகள் ஏதும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கலாம். சில் சமயங்களில் பேச்சுக்களில் அப்படியும் நடப்பதுண்டு. கூட்டமைப்பின் பயணத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்ட பாரிய விம்பத்திற்கேற்றவாறு விளக்கங்கள் கிடைக்காதது தமிழ் மக்களுக்கு ஒருவகையில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஒரே சந்திப்புடன் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் என்று கருதும் அளவுக்கு மக்கள் மத்தியில் மனோநிலையை உருவாக்கியது தான் தவறு. அரசியல் நகர்வுகளும் இராஜதந்திர முயற்சிகளும் மெல்லமெல்லவே நகர்பவை. இந்தச் சந்திப்புகள் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைந்து விட்டது உண்மை.

இல்லையேல் ஹிலாரியையும், பான் கீ மூனையும் சந்திக்க விடாமல் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இத்தனை முயற்சிகளை எடுத்திருக்காது. இவர்களை தமிழ் மக்களின் ஒரே மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்று ஓலமிட்டிருக்காது.

அரசாங்கத்தின் கடும் அழுத்தங்களும் கூட தமிழ் கூட்டமைப்பின் சந்திப்புகள் சில கைவிடப்பட்டதற்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதுவே முழுமையான காரணமல்ல.

எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணம் இத்தோடு முடிந்துவிடும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அடுத்து மேலும் பல பயணங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் கூட்டமைப்பு அமைதியாக காரியம் சாதிக்க முனைய வேண்டுமே தவிர, தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தால், தலை குனிய வேண்டித் தான் வரும்.

நன்றி : tamilsource (சுபத்திரா)

BLOG COMMENTS POWERED BY DISQUS