பதிவுகள்
Typography

“என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?“ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடக்கு மாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்த பின் விக்கினேஸ்வரனை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கேட்டு வருகிறார்கள். விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அல்லது அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் போதாது என்ற தொனிப்படவே அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

வடக்கு மாகாண சபை எனப்படுவது அதன் நிர்வாகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஓர் இளைய மாகாண சபை இல்லை என்று ஒரு மூத்த சிவில் அதிகாரி சொன்னார். ஏனெனில் வட-கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பொழுது தெரிந்தெடுக்கப்பட்ட கெட்டிக்காரர்களை வைத்தே அதன் நிர்வாகக் கட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. இப்படிப் பார்த்தால் வடக்கு மாகாண சபை எனப்படுவது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டது. அதை ஒரு வயதால் மிக இளைய மாகாண சபை என்று கூற முடியாது என்றும் அவர் சொன்னார். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வடக்கு மாகாண நிர்வாகம் எனப்படுவது புதியதாக இருக்கலாம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

இவ்வாறாக தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வயதால் மிக இளையதாகக் காணப்படும் ஒரு மாகாண சபையானது ஏனைய எல்லா மாகாண சபைகளுக்கும் முன்னுதாரணம் மிக்க ஒரு விசாரணைக்குழுவை நியமித்திருக்கிறது. அதன் அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. வந்திருப்பது தீர்ப்பு அல்ல. விசாரணைக்குழுவின் அறிக்கைதான். தீர்ப்பை விக்னேஸ்வரனே வழங்குவார்.

இப்படியொரு விசாரணைக்குழுவை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது?

இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அமைச்சர்கள் மெய்யாகவே அதிகார துஸ்பிரயோகங்களையும், மோசடிகளையும் செய்திருக்கலாம். இரண்டாவது விக்கினேஸ்வரனின் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்று இதை எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவருடைய விசுவாசி ஒருவரைத் தாக்குவதன் மூலம் விக்னேஸ்வரனை நெருக்கடிக்குள்ளாக்குவது. இதில் இரண்டாவது காரணம் ஆழமானது. விக்கினேஸ்வரன் மாகாண சபைக்குள்ளும் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார். தனது சொந்தக் கட்சிக்குள்ளும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த அரசியற் களத்திலும் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறார். அனைத்துலக பரிமாணத்திலும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே இப்போது எழுந்திருக்கும் பிரச்சினை வெறுமனே ஊழல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஓர் அரசியல் உண்டு. ஆனால் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் விக்கினேஸ்வரன் ஒரு தலைவராக செயற்படுவதை விடவும் அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே செயற்பட்டு வருகிறார் என்பதே மெய்நிலையாகும். ஒப்பீட்டளவில் அதிக தொகை வாக்குகளைப் பெற்ற ஒருவர் தன்னை குறைந்தளவே ஒரு தலைவராக உணர்கிறார் என்பதும் இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்தான். அவர் அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே உணர்கிறார். தான் இன்று அடைந்திருக்கும் உயர்வுக்கு தன்னுடைய நீதிபதி ஸ்தானம்தான் அடித்தளம் என்றும் அவர் நம்புகிறார். இப்பொழுதும் அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களில் தன்னை ஒரு நீதியரசர் என்றே அழைத்துக் கொள்கிறார். அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட்ட போதும் அவர் ஒரு நீதிபதியைப் போலவே நடந்து கொண்டார்.

ஒரு கட்சிக்கு விசுமாசமாக அவர் சிந்தித்திருந்தால் தனக்கு விசுவாசமான ஆட்களை அவர் பாதுகாக்க விளைந்திருப்பார். ஆனால் நீதியை நிலைநாட்டுவதே அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. சில சமயம் விசாரணைக்குழு அறிக்கை இப்படி வந்து முடியும் என்று அவர் ஊகித்திருக்கவில்லையோ என்னவோ? ஒரு கட்சி விசுவாசத்தோடு அவர் முடிவெடுத்திருந்தால் இப்படியொரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கவும் மாட்டார். கட்சி நலன்களைப் பாதுகாக்க விளையும் எல்லாத் தலைவர்களும் பல சமயங்களில் நீதியைப் பலியிட்டே அதைச் செய்வதுண்டு. விக்கினேஸ்வரன் எந்த ஒரு கட்சிப் பாரம்பரியத்தின் ஊடாகவும் வந்தவரல்ல. அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த கட்சியோடு அவர் முரண்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். கட்சியா? நீதியா? என்று வரும் பொழுது அவர் நீதியைத்தான் தெரிவு செய்யக்கூடும் என்பதே கடந்த கிட்டத்தட்ட மூன்றாண்டுகால அனுபவமாகக் காணப்படுகிறது. ஆயின் நீதியை நிலைநாட்ட அவர் ஒரு விசுவாசியை தண்டிப்பாரா? அல்லது மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடுவாரா? அல்லது அமைச்சரவை முழுவதையும் கலைப்பாரா?

விசாரணைக்குழு அறிக்கையை முன்வைத்து அவர் மாகாண சபையில் ஆற்றிய உரையிலும் அதைக்காண முடியும். அவர் பேசும் அறநெறிகளும், நீதியும், நேர்மையும் அவரை அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு அவர் தன்னை அதிகபட்சம் ஒரு நீதிபதியாக உணர்வதுதான் அவரை நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளிடமிருந்தும் தனித்துவமான ஒருவராக பிரித்துக் காட்டுகிறது. அதே சமயம் அதுதான் தமிழ் அரசியலில் நண்பர்கள் மிகக்குறைந்த ஓர் அரசியல்வாதியாகவும் அவரை உருவாக்கியிருக்கிறது. மாகாண சபைக்குள் அவருக்கு விசுவாசமான ஆட்கள் மிகச்சிலரே உண்டு. தன்னைப் பலப்படுத்துவதற்காக ஒரு விசுவாச அணியை உருவாக்க வேண்டும் என்று அவர் என்றைக்குமே சிந்திக்கவில்லை. இதுவும் அவரை ஏனைய அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது.

அவர் நீண்டகாலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். நீதியை நிலைநாட்டுவதென்றால் பெருமளவிற்கு ஒதுங்கி யாருடைய செல்வாக்குக்கும் உட்படாது ஒரு வித தொழில்சார் தனிமையைப் பேண வேண்டும் என்று அவர் நம்பியிருந்திருக்கலாம். தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரைக் கம்பன் கழக மேடைகளில் காண முடிந்தது. அது ஒரு வெகுசன அரங்கு. அவருக்குள்ளிருந்த வெகுசனவாதியை அது வெளிக்காட்டியது. ஆனால் அவருக்குள்ளிருந்த நீதிபதி அவரை கம்பன் கழகத்தோடும் அதிக காலம் ஒட்டியிருக்க விடவில்லை. மாகாண சபையிலும் அவர் அதிகபட்சம் தனியனாகத்தான் தெரிகிறார். சபை உறுப்பினர்களோடு அவருக்கு நெருக்கம் குறைவு. ஒரு நீதிபதி எப்படி நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியபின் எழுந்து சென்று விடுவாரோ ஏறக்குறைய அப்படித்தான் அவருடைய மாகாணசபை அமர்வுகளும் காணப்படுகின்றன. விறைப்பான, மடமடப்பான அவருடைய வேட்டி சால்வையைப் போலவே ஓர் அரசியல்வாதியாகவும் அவர் யாரோடும் நெருங்கிப் போக முடியாத ஒருவராகக் காணப்படுகிறார்.

தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும் அவர் அப்படித்தான். அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வந்தமர்ந்து சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு எழுந்து போய் விடுகிறார். விறைப்பற்ற நெகிழ்வான மனம் விட்டுப் பேசுகின்ற சந்திப்புக்களில் அவர் ஈடுபடுவது குறைவு. ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்குவாரா? இல்லையா? என்பதைக் குறித்து முடிவெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரதான காரணிகளில் இதுவும் ஒன்று. அதாவது விக்கினேஸ்வரன் ஒரு நீதிபதியாக இருக்கவும் ஆசைப்படுகிறார். ஒரு வெகுசனவாதியாக இருக்கவும் ஆசைப்படுகிறார். ஆனால் நகச்சுத்தமாக நீதியைப் பேண விழையும் பொழுது ஒரு கட்டத்திற்கு மேல் வெகுசனவாதியாக நடிக்க முடியாது என்பதே பிரதிநிதித்துவ ஜனநாயகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனமாகும்.

இவ்வாறு தனது ஆளுமை காரணமாக ஒரு முழுநிறைவான தலைவராக அவரால் உருவாக முடியவில்லை என்பதைத்தான் கடந்த கிட்டத்தட்ட மூன்றாண்டு கால அவருடைய ஆட்சி நிரூபித்திருக்கிறது. ஒரு தலைவராக மாகாணசபையை தனது இறுக்கக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவரால் முடியவில்லை. அதற்கு வேண்டிய சூழ்ச்சிகளும், தந்திரங்களும் அவரிடம் இல்லை. அவர் பேசும் அறநெறிகளும், நீதி நேர்மைகளும் ஒருவிதத்தில் ‘யூடோப்பிய’ ஆட்சிக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளர்களில் முக்கியமானவராகிய மு.தளையசிங்கம் கூறுவது போல சத்தியம் தன்னை நிறுவிக் கொள்வதற்கு தந்திரங்களை கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. தளையசிங்கம் அதை ‘சத்திய தந்திரம்’ என்று அழைக்கிறார். இது ஏறக்குறைய மகாபாரதத்தில் கிருஷ்ணர் பிரயோகித்த தந்திரங்களை நினைவுபடுத்தும். விக்கினேஸ்வரன் அவ்வாறான சத்திய தந்திரங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் அவருடைய ஆன்மீகக் குரு மீதான சர்ச்சைகள் தொடர்பில் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சுவாமி பிறேமானந்தா இந்திய நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவர். ஆனால் விக்கினேஸ்வரன் அந்தத் தீர்ப்பையும் தாண்டி இப்பொழுதும் பிறேமானந்தாவை வழிபடுகிறார். அதாவது அவர் நகச்சுத்தமாக நீதியைப் பேணவில்லை. அதே சமயம் ஒரு குரு எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரைப் பின்பற்றும் ஒரு சீடர் விசுவாசமாக முழு மனதோடு வழிபட்டால்; அவர் ஆன்ம ஈடேற்றத்தைப் பெறுவார் என்று பெரும்பாலான எல்லா மதங்களும் போதிக்கின்றன. அதாவது மெய்யான உழைப்பும், பூரண விசுவாசமும் ஒரு சீடனை சரியான இடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறப்படுகின்றது. இதுவும் விக்கினேஸ்வரனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள உதவக்கூடியது.

இவ்வாறானதோர் பின்னணிக்குள் விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அவர் அதிகபட்சம் ஒரு நீதிபதியாக நின்று தீர்ப்புக்கூறும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. அவர் வடக்கு மாகாண சபையை ஒரு நீதிமன்றாக மாற்றப் பார்க்கிறார் என்று ஓர் அரசியற்செயற்பாட்டாளர் சொன்னார். விசாரணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்று விக்கினேஸ்வரன் தனது உரையில் கூறியுள்ளார். விசாரணையின் போது விடுபட்ட சாட்சியங்கள் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் ஒரு மறு விசாரணை அல்லது மேலதிக விசாரiணை அல்லது மேன்முறையீட்டு விசாரணைக்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டா? அவ்வாறு மேன்முறையீடு செய்வதென்றால் அதை இப்போதுள்ள விசாரணைக்குழுவிடம் செய்ய முடியாது. அதற்கென்று வேறொரு குழுவை அமைக்கவேண்டி வருமா? அல்லது விக்கினேஸ்வரனே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா? குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமைச்சர்கள் மாகாண சபையின் தீர்ப்பை ஏற்கவில்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். என்று ஒரு மூத்த வழக்கறிஞர் சொன்னார். நீதிமன்றத் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து மேன்முறையீடு செய்வதற்கு நீதி பரிபாலனக் கட்டமைப்பில் ஏற்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு விசாரணைக்குழுவின் முடிவை மேன்முறையீடு செய்வது எங்கே?

இக்கேள்விகளுக்கான விடையை விக்கினேஸ்வரனே கூறவேண்டியிருக்கும். இக்கேள்விகளின் அடிப்படையில்தான் அவர் வடக்கு மாகாண சபையை ஒரு நீதிமன்றமாக மாற்றப் பார்க்கிறாரா? என்றும் கேட்கப்படுகிறது. இக் கேள்விகளின் பின்னணியில்தான் தனிநாட்டைக் கேட்ட நீங்கள் ஒரு மாகாண சபையையே நிர்வகிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களே என்று கேட்கும் ஒரு நிலமையும் வந்தது. ஆனால் இப்படிக் கேட்பவர்களுக்கெல்லாம் தெளிவான இரண்டு பதில்களைக் கூறலாம்.

முதலாவது விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய நெருப்பை ஓரளவுக்கேனும் அணையவிடாமற் பேணுகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மாகாண சபைக்குள்ளும் கட்சிக்குள்ளும், நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் பலமான ஒரு வலைப்பின்னலோடு காணப்படுகிறார்கள். ஒரு மாற்று அணிக்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்குண்டு. அதைத்தடுப்பதென்றால் அவருடைய தலைமைத்துவத்தை சோதனைக்குள்ளாக்குவதே ஒரே வழி. இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே அவர் விமர்சிக்கப்படுகிறார். அதிகபட்சம் தன்னை ஒரு நீதிபதியாக அவர் உணர்வது காரணமாக குறைந்தபட்சமே அவர் ஒரு தலைவராக மிளிர்கிறார். ஆனால் அவருடைய தலைமைத்துவப் பண்பிலுள்ள குறைபாடுகள் பலவீனங்கள் ஒருபுறமிருக்க மிகப்பலமான ஒரு எதிரணியோடு அவர் மோதிக்கொண்டிருக்கிறார். அவருடைய நேரமும் சக்தியும் இந்த மோதலிலேயே விரயமாகிறது. தமிழ் மக்கள் எதற்காகத் தனிநாடு கேட்டார்களோ அந்தக் காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருக்கின்றன. அக்காரணங்களும்தான் வடக்கு மாகாண சபையை முடக்குகின்றன. இது முதலாவது பதில்.

இரண்டாவது பதில் வயதால் மிக இளையது என்ற போதிலும் வடக்கு மாகாண சபை முழு இலங்கைத்தீவிற்கும் ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறது. தனது உரையில் விக்கினேஸ்வரன் கூறியது போல ‘நேர்மை, பக்கச்சார்பின்மை, பொறுப்புக்கூறல்’ ஆகிய விடயங்களில் முன்னுதாரணமிக்க ஓர் அரசியல் நடைமுறையை துணிச்சலோடு பரிசோதித்திருக்கிறது. நிலைமாறுகால நீதி எனப்படுவதே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக் கூறல்தான். ஆனால் ஓர் அரசுடைய தரப்பு பொறுப்புக்கூற மறுக்கும் ஒரு நாட்டில் ஓர் இத்துணூண்டு மாகாண சபை தனது பொறுப்புக்கூறலை எண்பிக்க முற்பட்டிருக்கிறது. தனது எதிரிகளால் கூழப்பட்டிருந்த போதிலும் தான் கூறப்போகும் தீர்ப்பு தனக்கு பாதகமாகத் திருப்பப்படலாம் என்றிருக்கும் ஒரு நிலையிலும் மாகாண சபைக்குள்ளும், தனது கட்சிக்குள்ளும் மிகச் சிலரே தன்னோடு நிற்கும் நிலமையிலும் விக்கினேஸ்வரன் நீதியை நிலைநாட்டத் துணிந்தமை முழு இலங்கைத் தீவிற்குமே முன்னுதாரணமாகும். 2009 மேக்குப் பின்னரான தமிழ் ஜனநாயகம் தனது செழிப்பையும் மாண்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மாகாண நிர்வாகம் தளம்புகிறது என்று கூறப்படுவது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். அதே சமயம் தமிழ் ஜனநாயகத்தின் பொறுப்புக்கூறும் இச்செய்முறைக்கு தென்னிலங்கையில் நிகரேதுமுண்டோ?!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்