பதிவுகள்
Typography

சிறிலங்காவின் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக் எடுகப்படாத நிலையில்,

அவர்கள் அனைத்து மனித உரிமைகள் அமைப்பிடம் தமது பாதுகாப்பினைக் கருத்திற் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்;

அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தெரியப்படுத்திக் கொள்வது:- தற்போதைய காலச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எமது வழக்குகளை வடக்குக் கிழக்கு நீதி மன்றங்களுக்கு மாற்றம் செய்து பிணையில் செல்வதற்கு தங்கள் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தோடு நேரடியாக யுத்தத்தில் பங்குபற்றிய பலரைப் புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பது போன்று எம்மையும் ஏதேனும் ஒரு நிபந்தனையிலாவது விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டி நிற்கின்றோம்.

எம்மில் பெரும்பாலானோர் குடும்பத் தலைவர்களாகவும் குடும்பப் பொறுப்பு வகிக்க வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் சிறையில் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் எமது பிள்ளைகளின் கல்வி நிலை அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை எமது பிள்ளைகள் உளநலப்பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். எமது சட்டத்தரணிகளும் எமது வழக்குகளை முடிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. எமது வழக்குகள் காலகாலமாய் தொடர்ந்து தவணையிடப்பட்டவண்ணம் உள்ளது.

அத்தோடு நாம் விசாரணையின் போது முகம் கொடுக்கின்ற சில பிரச்சனைகளையும் மற்றும் புலன்விசாரணைகளின் போது அதாவது தடுப்புக் காவலில் இருந்த போது நாம் முகம் கொடுத்தஇ கொடுக்கின்ற பிரச்சனைகளையம் நாம் உங்களுக்கு விபரிக்கின்றோம். விசாரணையின் போது பல்வேறு சித்திரவதைகளால் நாம் துன்புறுகிறோம்.

எம்மீது புரியப்படும் சித்திவதைகளின் தன்மைகள் சிலவற்றை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்:-

பெருவிரல்கள் இரண்டினையம் கயிற்றினால் பின்பக்கமாகக் கட்டி தொங்கவிடுதல், கைவிலங்கிட்டு பின்பக்கமாய் கையைப் பின்ன விடுதல்,முழங்காலில் இருக்கும்படி கூறி உள்ளங்காலில் பலமாக கம்பிகளால், கம்புகளால் தாக்குவது. அதன் வேதனை பலரை வாட்டி வதைக்கின்றது. ஆண் உறுப்பை மேசை இலாச்சிக்குள் போட்டு நசித்து சித்திரவதை செய்தல், அதன் தாக்கம் அதிகமானோருக்கு தற்போது உள்ளது.

பொலித்தீன் பைகளில் பெற்றோல் துளிகளை விட்டு முகத்தை மூடிக் கட்டிஇ உணர்வு அற்றுப் பொகும் வரை தாக்குவது. இதனால் இன்று அநேகமானவர்களுக்கு கண் பார்வை குன்றிப்போயுள்ளது.

இத்தகைய தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் :-

வயர்இ இறப்பர் பைப், விக்கட் கம்புகள், சைக்கிள் செயின்,கறுப்புத் துணி குண்டூசி, மற்றும் பல உபகரணங்கள் எம்மீதான சித்திரவதைகளின் போது பயன்படுத்தப்பட்டுள்ளது பயன்படுத்தப்பகுகிறது.

அதனைவிட கைகளால்இ கால்களால் கம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சித்திரவதை செய்தல். மல வாசலில் பிரஸ் ஒன்றை விட்டு திருப்பவதுஇ ஆணி அடித்த பலகையால் தலையில் அடித்தல்இ கால்கள் கட்டப்பட்டுத் தலைகீழாகத் தொங்கவிடுதல் போன்ற பலவகையான சித்திரவதைகள் செய்தே கடந்த காலங்களில் எம்மீதான புலன்விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இவ் வகையான கொடும் சித்திரவதைகளால் பலர் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனர். கண்பார்வை இழந்தவர்கள்இ முள்ளந்தண்டு நோய்க்குள்ளானவர்கள்இ தீராத தலைவலிஇ கடுமையான அடிகளால் பாதங்கள் கண்டலடைந்து நடக்க முடியாது இருத்தல் எனப் பல்வேறு வகை நோய்களுக்குள்ளாகி மருத்துவ வசதியின்றி சிறையில் தவிக்கின்றனர்.

பொலிஸ் அத்தியட்சகர்கள்; தமது அடியாட்களைக் கொண்டு சித்திரவதை செய்து சிங்களத்தினால் எழுதுப்பட்ட வாக்குமூலத்தில் பலவந்தமாய் எம்மைக் கையொப்பமிடச் செய்தல். மற்றும் சரியான மொழித்தேர்ச்சி இல்லாதவர்களைக் கொண்டே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் நமது உண்மையான நிலமைகள் மறைக்கப்பட்டு பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பெரும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

பெண் தமிழ் அரசியல் கைதிகள் மீதும் மிகவும் nhடுமையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு சில பெண் கைதிகள் மனநலம் பாதிப்புற்ற நிலமையிலும் உள்ளார்கள். பெண்கள் மீதான தாக்குதல்களின் உச்சமாக மிக இழிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி விசாரணை செய்து துன்பப்படுத்தி மன உளைச்சல் செய்தல் போன்றவற்றால் பல பெண் கைதிகள் உளத்தாக்கங்களுக்கும் உள்ளாகியுள்ள துயர நிலமையில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விளக்க மறியல் சிறையில் தடுத்து வைக்கப்படும் போது நாம் அனுபவிக்கும் துன்பங்கள்:- கடந்த காலங்களில் சித்திரவதை தாங்கமுடியாமல் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிக்கின்ற பலர் சிறையில் உள்ளனர். இவர்களது வழக்குகள் நீதிமன்றத்தின் தவணை நீடிப்புக் காரணமாக வழக்குகளைச் சரிவரச் செய்வதற்கு ஒழுங்குகள் இல்லாத காரணத்தினால் செய்யாத குற்றத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலையில் பலர் இருக்கிறோம். அதனையும் விட சட்டத்தரணிகளுக்குப் பணம் கொடுக்க வசதிகள் இல்லாத காரணத்தினால் குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் (அதிகம் கொழும்பு நீதிமன்றத்துக்குள்) சிறைகளில் சமன் மீன் ரின்னுக்குள் மீன் துண்டுகளை அடுக்கியது போன்று மிக நெருக்கமாத் தடுத்து வைக்கபட்டு உள்ளனர். அதனால் பல்வேறு தொற்றுநோய்களால் பீடிக்கபட்டு பலர் தவிக்கின்றனர்.

சிறையில் உள்ள உங்களின் பிள்ளைகளை விடுதலை செய்வோம் எனப் பல புலன்விசாரணை அதிகாரிகள் பெரும் தொகையான பணத்தைப் பறித்து மோசடி செய்தமையால் பல குடும்பங்கள் அடுத்த நேர உணவுக்கு பிள்ளைகளின் கல்வியையும் இழந்த நிலமையிலும் பல குடும்பங்கள் அவலமுறுகின்றனர்.

நீதிமன்றங்களுக்கு பெண் அரசியல் கைதிகளைக் கொண்டு செல்லும் போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிங்களப் பெரும்பான்மைக் கைதிகளுடன் ஒன்றாகக் கொண்டு செல்வதனால் பலர் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்ற அதேவேளை பாலியல் சேட்டைகளுக்கு ஆளாக்கப்படுகின்ற துயரமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதியினுள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட பெரும்பான்மைக் கைதிகளுடன் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமையால் விடுதியினுள் புகைத்தல் ஹெரோயின்இ கஞ்சா போன்றவற்றைப் பாவிக்கும் பழக்கமுடைய பாவனையாளர்களால் தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

கால் கை கண்பார்வை இழந்தவர்கள்இ முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கீழ் உணர்ச்சி இழந்தவர்கள் யுதத்த காலங்களில் ஏவப்பட்டு எறிகணைத் தாக்குதல் துப்பாக்கிச் சூடுகளில் காயமுற்றவர்கள் பலரது உடலில் இரும்புத் துகள்கள் உடம்பில் இன்னும் இருப்பதால் பல்வேறு வகையான உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கான சரியான சிகிச்சைகளோ கவனிப்போ கிடைக்காத நிலமையில் பலர் ஆதரவின்றிச் சிறையில் தவிக்கின்றனர்.

நீதிமன்றங்களில் அதிகம் சிங்கள மொழி மாத்திரமே பயன்படுத்தப்படுவதால் வழங்குகளில் ஏற்படும் பெறுபேறுகளை அறிய முடியாமல் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுடன் சிறையிருக்கும் தாய்மாரின் குழந்தைகள் 3 தொடக்கம் 5 வயது வரையான பலர் சிறைகளில் காலத்தைக் கழிப்பதனால் அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளும் மனரீதியான பாதிப்பகளுக்கு உள்ளாகிற அவலம் நிகழ்கிறது.

சிறைகளில் வாடுகிற எம்மைப் பார்வையிட வருகின்ற உறவினர்கள் சிறை நலன்புரிச் சங்கத்திற்கு சொந்தமான சிற்றுண்டிச்சாலையில் தான் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதால் நிறை குறைவுஇ பொருட்கள் தரமில்லைஇ சுகாதாரமின்மை போன்றவற்றால் எதிர்பார்க்கப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முடிவதில்லை. இதனால் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். வெலிக்கடைப் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவுஇ கொழும்பு விளக்கமறியல்இ மகசீன்இ சிறைகளில் முப்படையினரும் அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்வதுஇ பெண் கைதிகளுக்கு இழிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது போன்ற அவமதிப்புகள் தொடர்ந்து எம்மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிகூடிய காலமாக சிறைவாழ்வை அனுபவித்து வருகிற மட்டக்களப்பைச் சேர்ந்த சிங்கராசா என்பவர் போல் 5 வருடம் தொடக்கம் 18 வருடகாலம் சிறையில் உள்ள பலர் உள்ளனர். சரியான முறையில் குடும்பங்களையும் பிள்ளைகளையும் சந்திக்கக்கூடிய வசதிகள் சிறைச்சாலையில் இல்லை. தூரப்பிரதேசங்களில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டுவரும் பொழுது அவற்றைக் கைதிகளாகிய நாம் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதில்லை. மத நிகழ்வுகள் விசேட தினங்களில் தமிழ்க் கைதிகள் புறக்கணிக்கப்படல் போன்ற புறக்கணிப்புகளையும் எதிர் நோக்கி வருகிறோம்.

பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது இலங்கையில் பல சிறைச்சாலைகளில் அப்படியே நடக்கின்றது. ஒருவர் வியாதிக்கு உள்ளாகும் போது அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையால் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகுதல் போன்ற பல்வேறு வதைகளை அனுபவித்து வருகிறோம்.

எனவே மேற்கண்ட விடங்களில் கவனம் செலுத்தி மனிதநேய அமைப்புகள் மனிதாபிமான விரும்பிகள் அக்கறை காட்ட வேண்டும். நாம் படுகின்ற துன்பங்களில் இருந்து மீள்வதற்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்வதோடு எமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதற்கு உதவுங்கள். நாம் உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ள விடயங்கள் அனைத்தும் நாம் பட்ட துன்பத்தின் அனுபவமே.

இப்படியான மிக நெருக்கடியான சூழ்நிலையிலேயே எமது வாழ்க்கையைக் கழிக்கின்றோம். குறிப்பி;ட்ட விடங்களில் அதிகம் பொறுப்புகூற வேண்டிவர்கள் என்ற அடிப்படையில் அதிகம் அக்கறை காட்டுவீர்கள் என்று நம்புகின்றோம். அத்தோடு எமது வழக்குகளை வடக்குக் கிழக்கு நீதிமன்றுகளுக்கு மாற்றம் செய்தல் பிணையில் செல்ல அனுமதித்தல் (பொதுமன்னிப்பு) போன்னறவற்றை அரசாங்கத்துடன் பேசித் தீர்வு பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.

- இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் –

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகள் கைதிகள் எண்ணிக்கை விபரம் :-

1) அனுராதபுரம் 80

2) வவுனியா 65

3) யாழ்ப்பாணம் 20

4) திருகோணமலை 25

5) மட்டக்களப்பு 35 6) நீர்கொழும்பு 20

7) கொழும்பு விளக்கமறியல் 210

8) வெலிக்கடை பெண்கள் பிரிவு 35

9) வெலிக்கடை ஆண்கள் பிரிவு 3

10) கழுத்துறை ஆண்கள் பிரிவு 262

11) கழுத்துறை பெண்கள் பரிவு 3

12) கண்டி போகம்பரை 36

13) கண்டி றஜவீதிய போகம்பரை பெண்கள் 2

14) பதுளை 10

15) பொலநறுவை 4

இவர்களுடன் குழந்தைகள் 2பேர் உட்பட 810 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் படுகொலைகள் சில பதிவுகள் :-

• 1983ம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடைபெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதலில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

• 1987ம் ஆண்டு பூசா தடுப்பு முகாமில் நடைபெற்ற தாக்குதலில் 9 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதுடன் 4பேர் காயமடைந்தனர்.

• 1997ம் ஆண்டு கழுத்துறை சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதலில் 5 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

• 1997ம் ஆண்டு கொழும்பு மகசீன் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் தற்போது மகசீன் சிறையின் புதிய பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று பொறுப்பு வகிக்கிற திரு.எமில் நிரஞ்சன் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரு.எமில் நிரஞ்சன் பங்கு வகித்த இத்தாக்குதலில் 10 தமிழ் அரசியல் கைதிகள் காயமடைந்தனர்.

• 2000ம் ஆண்டு கழுத்துறை சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதலில் 2 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டும் 100பேர் காமடைந்தும் உள்ளனர்.

• 2001ம் ஆண்டு பிந்துனுவேவ புனர்வாழ்வு முகாம் மீது அம்முகாமைச் சூழவுள்ள சிங்கள மக்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமையான தாக்குதலில் 27பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

• 13.11.2011ம் ஆண்டு மகசீன் சிறைச்சாலை யே பிரிவு தமிழ் அரசியல் கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 10பேர் வரையில் படுகாயமடைந்தனர்.

• 2011ம் ஆண்டு ஆனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

• 2011ம் ஆண்டு போகம்பரை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 தமிழ் அரசியல் கைதிகள் காயமடைந்தனர்.

• 2011ம் ஆண்டு பதுளை சிறைச்சாலையில் நீர்ப்பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடச் சென்ற தமிழ் அரசியல் கைதிகள் மீது கடமையில் இருந்த அதிகாரிகளால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 3பேர் பாதிக்கப்பட்டனர்.

• 13.09.2011திகதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஈபிரிவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 தமிழ் அரசியல் கைதிகள் காயமடைந்தனர்.

• 24.01.2012ம் ஆண்டு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் சிங்களக் கைதிகளுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் சிங்களக் கைதிகளால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட 11 தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தெரியாமல் இருந்து பின்னர் தெரியவந்தது.

திரு.எமில் நிரஞ்சன் எனும் அதிகாரி தற்போது புதிய மகசீன் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்து சில நாட்களிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் எமில் நிரஞ்சனின் அடாவடித்தனங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதால் மகசீன் சிறைச்சாலை இன்னும் பதற்றத்தோடும் பயங்கரத்தோடுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

• இத்தோடு வெளியில் தெரிய வராத படுகொலைகள் நிறைய உண்டு.

இதுவரையில் பதிவில் வெளியாகிய தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைகள் எண்ணிக்கை :-

1) படுகொலை எண்ணிக்கை – 96 2) படுகாயமடைந்தோர் எண்ணிக்கை - 152

செய்தி மூலம்: நன்றி - குளோபல் தமிழ் செய்திகள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்