பதிவுகள்
Typography

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது,

திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும்.

அப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா..? எனக் கேட்கிறது  'என்கவுண்டரை எதிர்ப்போம்!' எனும் இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.

தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சென்னையில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஐவர் கொலையை எடுத்துக் கொள்வோம். வங்கிக் கொள்ளைகளுக்குப் பிறகு ‘துப்பு’ கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ‘வீடியோ க்ளிப்’ கிடைக்கிறது. அதில் இருப்பவன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அப்படம் வினியோகிக்கப்படுகிறது. துப்புக் கொடுப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கப்படுகிறது. நடு இரவில் யாரோ ஒரு முக்கிய அதிகாரிக்கு அனாமதேயமாக ஒரு அழைப்பு வருகிறதாம். அந்த அழைப்பு மூலமாக அடையாளம் காட்டப்பட்டவன் மறைந்திருக்கும் இடம் தெரியவருகிறதாம். துப்பாக்கிகளோடு சுற்றி வளைத்தார்களாம். எச்சரிக்கை விடுத்தார்களாம். அங்கிருந்து பொதுமக்களை சுடுவோம் என்று பதில் வந்ததாம். யோசிக்காமல் இவர்கள் சுட்டுத் தள்ளினார்களாம். உள்ளேப் போய் பார்த்தால் ஐவர் மரணமடைந்திருக்கிறார்களாம். இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயமாம்.

அய்யா, அடையாளம் காட்டப்பட்டவன் ஒருவன் தான். மீதியிருக்கும் நான்கு பேரும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதை எப்படி காவல்துறை ’ஸ்பாட்’டிலேயே முடிவுகட்டி, துப்பாக்கிச்சூடு வரை போனது? கொள்ளையடித்தபோதே ’ஏர்கன்’ வைத்து ஏமாற்றியவர்கள், பதுங்கியிருந்தபோது ஒரிஜினல் துப்பாக்கி வாங்கிவிட்டார்களா? சுற்றி வளைக்கப்பட்டவர்கள் அடுத்த ஃப்ளாட்டுகளுக்குப் போய், தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி எப்படி சுடமுடியும்? ஒருவேளை ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் பட்டப்பகல் வேளையில் பொதுமக்களின் தலையில் இவர்கள் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருந்தால் இந்தக் கதை வலுவாக இருந்திருக்கும்.

தமிழகக் காவல்துறை, லாஜிக் மீறாமல் என்கவுண்டர் கதைகள் எழுதக்கூடிய நல்ல புனைவெழுத்தாளர் ஒருவரை உடனடியாக பணிக்கு அமர்த்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் கொள்ளையர்களை உயிரோடு பிடித்து நீதிமன்றம் முன்பாக நிறுத்தியிருந்தால் கூட அவர்களுக்கு சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். காவல்துறை தீர்ப்பில் மரணத்தண்டனை ஐவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அச்சு அசலான சட்டமீறல். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவாக இருப்பின் இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைவழக்கு தொடரப்பட வேண்டும்.

தமிழக மனித உரிமை அமைப்புகள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. கொள்ளை என்பது குற்றம். கொள்ளைக்கு தண்டனை கொலை என்பது அதைவிட பெரிய குற்றம். அதை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்பது அநியாய கொடூரம். சகிப்புத்தன்மை மிகுந்தவர்களாக அறியப்பட்ட தமிழர்கள், சவுதி அரேபியர்களாக பரிணாமம் அடைந்து வருகிறார்கள்.

நன்றி: யுவகிருஷ்ணா

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்