பதிவுகள்
Typography

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்ப்பட்ட வேண்டும்

என்ற கோரிக்கைகள், மனித உரிமை அமைப்புக்களாலும், ஆர்வலர்களாலும், ஐ.நா.மன்றத்தில் நடந்து வரும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன் வைக்கப்பட்டு வருகிறது.

சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரந்த அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உள்நாட்டு நீதிமன்றங்களில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள் இராஜதந்திரச் சிறப்புரிமைகளின் அடிப்படையில் விசாரிக்காது தள்ளுபடி செய்யப்படுகிறது.

எது எவ்வாறாயினும் ஐ.நா. மன்று தமிழர்களுக்கு நியாயம் தரும் என்ற தமிழ்மக்கள் பெருநம்பிக்கையுடன் ஐ.நா மன்றிடம் பேரணியாகச் சென்று மனுக்கொடுக்கிறார்கள் தமிழமக்கள். ஐ.நா.என்ன செய்யப் போகிறது..? எனும் கேள்வி எல்லாவிடத்திலும் எதிர்பார்ப்புடன் எழுந்து நிற்கிறது.

ஐ.நா. என்ன செய்யும்..?. ஊடகவியலாளர், கவிஞர், சமூகஆர்வலர், எனப் பன்முகத் திறமைமிக்க ஈழத்துப் படைப்பாளி கவிஞர் சேரன், 'இலவு காத்த கிளிகள்' என்ற தலைப்பில், குளோபல் தமிழ் செய்திகளுக்காக எழுதியுள்ள இக் கட்டுரையில் ஐ.நா. என்ன செய்யும் என்பது குறித்து ஆய்வு செய்கிறார். அவருக்கான நன்றிகளுடனும், குளோபல் தமிழ்செய்திகளின் அனுமதியுடனும் இங்கு அதனை மீள்பதிவு செய்கின்றோம்.

ஐ.நா.வை நோக்கி நடத்தப்படும் போராட்டங்கள் மீதான விமர்சனங்கள் என்றல்லாது, ஐ.நா.வின் செயற்பாட்டுப் புரிதல் என்பது அதன் மீதான அதீத நம்பிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்களைத் தவிர்க்கும் என்ற நோக்கில் அமைகிறது இம் மீள்பதிவு. -4Tamilmedia Team

இலவு காத்த கிளிகள்

சதுரங்கமும் சூதாட்டமும் ஒரே நேரத்தில் ஆடப்படுகின்ற இடம்தான் ஐக்கிய நாடுகள் அவை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான முக்கியமான, சிறப்பான அனைத்துலக அமைப்பு என்று பலராலும் வர்ணிக்கப்படுகிற ஐ.நா.சபை உருவாகும்போதே கருத்தியலும், விழுமியங்களும் சார்ந்து முரண்பாடுகளுடையதாகவும், பண பலமும், படை பலமும் பெற்ற நாடுகளுக்கு அதிகளவு அதிகாரம தருகிற அடிப்படைக் குறைபாடுடையதாகவும் இருந்தது. ஐ.நா. அவை என்பது “உள்ளவற்றுள் சிறந்த வடிவம்@ எனவே அதனைத் தவிர்த்துவிட முடியாது” என்ற வாதம் மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றிடம் இருந்து எழுவதை நாங்கள் கேட்கலாம். இலட்சியங்களுக்கும் நடைமுறையில் சாத்தியமான யதார்த்த அரசியலுக்கும் இடைப்பட்ட வெளியில் அந்தரித்து உழலும் ஒரு திக்கற்ற நிறுவனமாகிய அதனை அணுகவேண்டும் என்பது இன்னொரு வாதம். இலட்சியங்கள், அடிப்படை மனித உரிமைகள், ஒடுக்கப்படுகிற மக்களின் கூட்டு உரிமைகள் என்பவற்றுக்கும் நாடுகளின் சுயநலன்களுக்கும் இடையே ஐ.நா. அவையில் இடம்பெறும் மோதல்களில் ஒவ்வொரு முறையும் அடிபட்டுச் சுருண்டு விழுபவை முன்னவைதான். சந்தேகமில்லை. இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என யாராவது கனவு காணுகிறார்கள் என்றால் அந்தக் கனவுக்கு எங்களுடைய கண்ணீரால்தான் வண்ணம் தீட்ட வேண்டும்.

இந்த வாரம் ஜெனிவா நகரில் கூடுகிற ஐ.நா.அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு “எதிராக” அமெரிக்காவின் முன்னெடுப்பில் மேலை நாடுகளால் ஒரு தீர்மான முன்மொழிவு கொண்டுவரப்படும் என்றும், இது வெற்றி பெற்றால் தமிழர்களின் விடிவுகாலம் நெருங்கிவிடும் என்பது போன்ற தோற்ற மயக்கங்கள் எங்கும் நிறைந்துள்ளன. தமிழர்களின் உற்ற நண்பனாக அமெர்க்காவை மிகுந்த புளகாங்கிதத்துடன் சித்திரிக்கும் கட்டுரைகளுக்கும் வானொலி அரட்டைகளுக்கும் குறைவு இல்லை.

வழி குழம்பித் தத்தளிப்பவர்களுக்கு எச்சிறு நம்பிக்கைப் பொறியும் ஊன்று கோலாய் அமைந்துவிடாதா என்ற ஆதங்கம் பெருமளவு இருக்குமென்பதை மிகவும் நேசத்துடன் நான் புரிந்துகொள்கிறேன். எனினும் முக்கியமான பல தருக்க நியாயங்களையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் மீதான இறுதிப்போர் அல்லது "பயங்கரவாதத்தை" அழித்தொழிப்பதற்கான போருக்குப் பல்வேறு வகைகளிலும் ஒத்தாசை புரிந்த அமெரிக்கா, இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு இந்தப் போர் இனப்படுகொலையில்தான் முடியும் எனத் தெரிந்தே இருந்தது. ஐக்கிய நாடுகளின் அவையின் அதிகாரிகளில் ஒருவரான ஜோன் ஹோல்ம்ஸ் மனிதப் பேரழிவும் "குருதிக்குளியலும்" நிகழப்போகிறது என இரண்டு தடவைகள் வெளிப்படையாக எச்சரித்திருந்தார். " பாதுகாப்பு வலயங்கள் " எனச் சொல்லப்பட்ட இடங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்காகப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை ஐ.நா.அவைக்குத் தெரிந்திருந்தும் அது பற்றிய பேச்சையே ஐ.நா.அவையும் பான் -கி -மூனும் வெளியே எடுக்கவில்லை. அடிப்படையில் 2009 இல் நடந்தேறிய இனப்படுகொலைக்கு இந்த நாடுகளும் ஒருவகையில் ஐ.நா.வும் உடந்தையாகத்தான் இருந்தன. மகிந்த அரசு இவர்களுடைய தேவையையும் தனது வேட்கையையும் உரிய முறையில் கையாண்டது. இந்தப் பின்னணியில்தான்அமெரிக்காவாலும் மற்றைய மேலை நாடுகளாலும் முன்மொழியப்படவிருப்பதாகக் கருதப்படும் தீர்மானத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கிறபோது எங்களுக்கு உடனடியாகத் தெரியவருவது என்னவெனில், போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றைத் தீர்க்கமாகப் பேசிய ஐ.நா. அவையின் சிறப்பு ஆணைக் குழாமின் அறிக்கை பற்றி எந்த ஒரு சொல்லும் இந்தத் தீர்மானத்தில் கிடையாது.குறிப்பாக, போரின் இறுதிக்காலகட்டத்தின்போது நடந்தவை பற்றி விசாரணை செய்யச் சுதந்திரமான அனைத்துலக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு இடம்பெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டுமென்ற அவசியமான கோரிக்கை அதில் கிடையாது. மாறாக, இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு(LLRC)வின் பரிந்துரைகளே கவனப்படுத்தப்படுகின்றன. மிக முக்கியமான ஐ.நா.சிறப்பு ஆணைக்குழுவின் அறிக்கையைப் புறந்தள்ளிவிட்டு இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முன்னிலைப்படுத்துவதே இலங்கை அரசுக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி என்று கருதப்பட வேண்டும். இதற்காக அரசாங்கம் அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துத்தான் மாபெரும் ஊர்வலங்கள் நடத்தியிருக்க வேண்டும்.

ஐ.நா.வின் சிறப்பு ஆணைக்குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அந்த ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி சுதந்திரமான விசாரணை நடைபெற்றால் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளதும் குருதி படிந்த ரகசியக் கரங்கள் வெளியே தெரியவரும் என்பதும்தான். றுவாண்டாவில் இனப்படுகொலை துவன்குவத்ஹ்ற்கு ஒரு சிலவாரங்கள் முன்புவரை பிரித்தானியா அப்போதைய ஹூட்டு அரசுக்கு ஆய்தங்களை வழங்கி வந்தது. இனப்படுகொலை நடக்கிறது எனத் தெரியவந்தபிற்பாடும் கூட மொந்னம் கடைப்பிடித்தமையையே அமெரிக்காவும் அப்போதைய ஐ.நா.வின் செயலர் கோஃபி அனானும் செய்தது. எல்லாம் முடிந்த பிற்பாடு மன்னிப்புக் கேட்டுவிடுவதில் என்ன இருக்கிறது?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெறும் பரிந்துரைகளில் சில வரவேற்கப்பட வேண்டியவைதான். எனினும் இந்த அறிக்கையின் மையமே இலங்கை இராணுவம் குற்றமற்றது என்று கூறுவதும், இடம்பெற்ற “ஓரிரு மீறல்கள் கட்டுப்பாடு அற்று நடந்துகொண்ட ஓரிருவரால் நிகழ்ந்தது” என்று கூறுவதும் “போரை இலங்கைப் படையினர் நடாத்திய முறை மெச்சத் தகுந்தது” என்று போற்றுவதும்தான். இலங்கை அரசையும் அதன் அதிபரையும் போர்க்குற்றங்களிலிருந்து தப்ப வைப்பதற்கான கபடத்தனமான ஆனால் சாதுரியமான வழிமுறையே நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனது அறிக்கையும். இந்த அறிக்கை முதன்மை பெறுகிறபோது குற்றங்களிருந்து இலங்கை, அரசு, 'சர்வதேச சமூகம்" ஆகிய எல்லோருமே தப்பி விடுவார்கள்.

எனவே, இப்போதைக்கு ஐ.நா. அவைக்கூடாகப் போர்க்குற்றங்கள் பற்றிய மூச்சே எழாது. அப்படியானால், இலங்கை அரசு ஏன் இவ்வளவு கொதிநிலையில் இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். போர்க்குற்றங்கள், பேரழிவுக்கான பொறுப்பு என்பவற்றிலிருந்து நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசை விடுதலை செய்துவிட்டாலும் குழுவின் பரிந்துரைகள் சில இனப்பிரச்சினையின் தீர்வு நோக்கிய பயணத்திற்கு உதவக்கூடிய குறைந்த பட்ச சாத்தியமாவது கொண்டவை. இதுதான் இலங்கை அரசின் பிரச்சினை. இவற்றை நடைமுறைப்படுத்துவது தற்கொலைக்குச் சமனானது என அது கருதுகிறது. "போர், பேரழிவு, எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலைகள் என எல்லாவற்றையும் மறந்து விடலாம்" என்பதில் இலங்கை அரசுக்கும் "சர்வதேச சமூகத்துக்கும்" நல்ல இணக்கம் இருக்கிறது.

ஆனால், துவண்டு போயிருக்கிற தமிழ்ச் சமூகத்துக்கு எதையாவது "தானம்" வழங்க வேண்டும் என்பதில்தான் இணக்கம் கிடையாது.

இலங்கை பற்றிய ஒரு தீர்மான முன்மொழிவு உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படுவதற்கான இறுதிநாள் மார்ச் 15. அதுவரையில் இப்போது சுற்றிலிருக்கும் வரைவு எந்த வகையில் எப்படியெல்லாம நீர்த்துப்போகும் என நாமறியோம். இந்த முன்மொழிவு வாக்கெடுப்பில் தோற்றுவிடும் என்று கருதினால் அமெரிக்காவோ மற்றைய நாடுகளோ இதனை முன்வைக்க மாட்டா.

தப்பித் தவறி ஏதாவது தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அது இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி இலங்கை அரசை நோக்கிய "வேண்டுகோள்"அல்லது எதிர்காலத்தில் “அறிக்கை சமர்ப்பிப்பு” என்பதாக அமையக்கூடிய சாத்தியமே அதிகம் உள்ளது. இந்தச் சிறு சாத்தியப்பாடு கூட, இலங்கையின் "இறைமை"யில் தலையீடு செய்வதாகும் என்பதே இறுமாப்பு மிக்க இந்த அரசின் நிலைப்பாடு.

இந்த நடைமுறை நமக்குத் திருப்பித் திருப்பித் தருகிற பாடம் என்னவெனில் ஐ.நா.அவை உள்ளிட்ட ஏனைய எல்லா உலக நிறுவனங்களுமே நாடுகளுக்கும் அரசுகளுக்கும் மட்டுமே முன்னுரிமை தருபவை; ஒடுக்கப்படுகிற மக்கள் குறித்த அவற்றின் அக்கறை கடுகளவுதான். இரண்டாவதாக இலங்கை அரசு தனது ‘பிரதேச ஒருமைப்பாட்டை’ நிலைநாட்ட எடுத்த போர் நியாயமானது. இலங்கை அரசுக்கு ( state) அவர்கள் அப்போதும் இப்போதும் எப்போதும் முற்றுமுழுதான ஆதரவுதான். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் வெறுப்படைந்திருந்தாலும் இலங்கை அரசு எந்திரத்துக்கு அவர்கள் முற்றுமுழுதான ஆதரவு என்பதை வெளிப்படையாக இவை தெரிவித்து வருகின்றன. தமிழ் மக்களின் ஒடுக்கு முறைக்கும் அதனது தருக்கரீதியான விளைவான இனப்படுகொலைக்கும் மூலவேர் இலங்கை அரசின் அமைப்பும் கொள்கைகளும் அரசியல் வழிமுறைகளும்தான் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மஹிந்த அரசாங்கத்தை மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற போக்கிரித் தனமான எண்ணமே இவர்களுக்கு உள்ளது. தலையிடிக்குத் தலையணையை மாற்றுவது தீர்வாகாது என்பதை நாம் இன்னும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

தமிழ் மக்களுக்கான விடுதலையைப்பற்றிச் சிந்திப்பவர்கள் ஐ.நா.அவையில் இருந்து துவங்கமுடியாது. அப்படித் துவங்குபவர்கள் இலவு காத்த கிளிகளாகத்தான் இருப்பார்கள்.

கட்டுரையாளர் : சேரன்

நன்றி: GTN

BLOG COMMENTS POWERED BY DISQUS