பதிவுகள்

ஒரே மலேசியா எனும் கோட்பாட்டுடன் செயல்பட்டு வரும் மலேசிய நாட்டில் அண்மையில் மலேசிய பேரரசர் அரியணை ஏறும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை காலையில் (11.04.2012) கோலாம்பூர் டூத்தா சாலையில் உள்ள புதிய இஸ்தான நெகாரா எனும் தேசிய அரண்மனையில் இவ்விழா அரச பராம்பரியத்துடன் தொடங்கப்பட்டது.

முன்பு கேடா மாநில அரசரான ''துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா" மலேசியா நாட்டின் 14வது பேரரசராக இரண்டாவது முறையாக அரியணை அமர்ந்தார். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஐந்தாவது மாமன்னராக 1970ல் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது தனது 84வது வயதில் இரண்டாவது முறையாக பேரரசராக அரியணை ஏறுகின்றார். அரியணை அமரும் சடங்கு நாட்டில் வரலாற்று முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாநில மன்னர்கள் பேரரசர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாரன மன்னராட்சி முறை 1957ம் ஆண்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. அவ்வகையில் இவ்வாண்டு ''துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா" மாமன்னராக பதவியேற்கும் இவ் நிகழ்வு மிக விமர்சையாகவே கொண்டாடப்பட்டது. முழு அரச பாரம்பரியத்துடன் நடைபெற்ற இவ் விழாவில் மலாய் ஆட்சியாளர்கள், மாநில மன்னர்கள், அமைச்சர்கள், அந்நிய அரச மந்திரிகள் மற்றும் பிரதமர் உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

நாட்டின் பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய அரசாங்க சார்பாகவும் மக்கள் சர்பாகவும் கலந்து கொண்டார். அனைவரும் அரச பாரம்பரிய ஆடை, ஆபரணங்களுடன் காணப்பட்டதுடன் பாலாய் ரோங் ஸ்ரீ என அழைக்கப்படும் சிம்மாசன அரியணை மண்டபமும் மிக அழகாக காட்சி அளித்திருந்தது. அரண்மணை வாயிலில் பராம்பரிய இசைக்கருவிகளின் முழக்கங்களுடன் வரவேற்கப்பட்ட அரசரும் அரசியாரும் சிம்மாசன மண்டபத்துக்குள் நுழைந்தனர்.

பல சம்பிரதாய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இச் சடங்கில் அரசர் ''துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா" யங் டி-பெர்துவான் (Yang di-Pertuan Agong) அதாவது நாட்டின் பேரரசராக பதவியேற்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். அதன்பின் எக்காளம் போன்ற பராம்பரிய இசைக்கருவிகள் ஒலிக்கப்பட்டு "டவ்லட் துவாங்கு" அதாவது "மாமன்னர் நீடுழி வாழ்க" என மூம்முறை மொழிந்தார் மகாராஜவின் பெரும் துணையாளர்கள். அதனை தொடர்ந்து 21 முறை துப்பாக்கி மேல்நோக்கி சுடப்பட்டு மரியாதை செலுத்துப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வு உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியா ஒளிபரப்பபட்டதுடன் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் உட்பட்ட முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துரைகளுடன் இச் சடங்கு நிறைவடைந்தது. இஸ்தான நேகராவின் புதிய அரண்மனையில் பேரரசர் ''துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா"வுக்கு அரியணை அமரும் முதலாவது மாமன்னர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இஸ்தான நெகராவில் பழைய அரண்மனையை மக்கள் நேரடியா சென்று காணலாம். இப்போது அவ் அரண்மனை அருங்காட்சியகமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

National Geographic நிறுவனம் பேரரசரின் அரியணை ஏறும் நிகழ்வை பதிவு செய்து அதனை ஆவணப்படமாக வெளியிடவும் உள்ளது. முன்பு 2007ல் 13வது  பேரரசர் அரியணை அமரும் நிகழ்வை முதன்முதலாக "Becoming A King" எனும் பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டதுடன் அதனை 160 நாடுகளை சேர்ந்த மக்கள் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

-4தமிழ்மீடியாவுக்காக:மலேசியாவிலிருந்து ஹரிணி

படங்கள்: The Star Online(malaysia)

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.