பதிவுகள்

அக்ஷய திருதியை! முன்னெப்போதும் கண்டிராத முக்கியத்துவத்தை அன்மித்த சில வருடங்களாகப்

பெற்றிருக்கிறது. அக்ஷய திருதியை பரபரப்பு தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாகவே களை கட்டிவருகிறது. கிறிஸ்மஸ் காலத்தில் சாண்டாகிளசை சிவப்பு வர்ணத்தில் மாற்றியமைத்த மேலைத்தேய வணிகச் சமூகத்தின் பாதிப்பாக, தமிழக்தைத் தாக்கத் தொடங்கியிருக்கும் எண்ணற்ற கலாச்சார மாற்றங்களின் நிகழ் காட்சியாகவே அட்சய திருதியை ஆர்ப்பாட்டங்களைக் காணவேண்டியுள்ளது என மாற்றுச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் கவலை கொள்கின்றார்கள்.

"எங்கள் காலத்தில் சங்கடஹர சதுர்த்தியிலிருந்து, அக்ஷய திருதியை வரை .கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் என்றுதான் கொண்டாட்டங்கள் இருக்கும். கால ஓட்டத்தில் வீட்டிற்கு லக்ஷ்மியை வரவழைக்கும் அக்ஷய திருதியை வழிபாடு, இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்கும் சடங்காக மருவிப்போயிற்று. ஆனாலும் ஒருவகையில் அது வரவேற்க கூடியதாகவே இருக்கிறது..'' என தனது காலத்தின் உண்மை நிலையை நினைவு கூரும் 69 வயதான வேதநாயகி அம்மா, இந்தக் காலத்தையும் விட்டுக் கொடுக்காது பேசுகின்றார்.

அக்ஷய திருதியை என்றால் என்ன..? அது தங்கம் வாங்கும் சடங்கா..? எனப் பிரபல ஜோதிடர் கண்ணன் பட்டாச்சார்யாவிடம் கேட்டோம். ''ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்னல் மூன்றாம் பிறை நாளில் வருவதே அக்ஷய திருதியை நாள்.அக்ஷய என்னும் சொல்லுக்கு வற்றாமல் மேலும் மேலும் வளர்வது என்று பொருள். இந்த அக்ஷய திருதியை மகாலட்சுமிக்கான நாள்.எனவே இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது அபார பலன்களைத் தரும். அக்ஷய திருதியை நாள் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கும் சிறந்த நாள். காரணம் முன்னோர்கள் அருளால், குடும்பத்தில் சாந்தி, ஆரோக்கியம், ஐஸ்வரியம் கிடைக்கும் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்கிறது. மகாலட்சுமி என்றாலே தங்கம், செல்வம், ஐஸ்வரியம் என்று பொருள் தருவதால், மக்களிடம் தங்கம் வாங்கும் நம்பிக்கை அதிகமாகி இருக்கலாம். இதில் தவறொன்றும் இல்லை என்பதே என் கருத்து.'' என்றார். சம்பிரதாயபூர்வமாக அவரது ஆதரவுக் கேட்டறிந்த நாம், பிரபலங்கள் சிலர் இந்த அக்ஷய திருதியை நாளை எப்படிப் பார்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு சுற்று வந்தோம்..

தேசிய விருது பெற்ற பிரபல சினிமா நடிகை சரண்யா பொன்வண்ணன். ''நானெல்லாம் அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்குவதில்லை என்று சொன்னால் அது பொய்..தங்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...அதோடு தங்கம் மாதிரி எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களுக்காகவும் நான் சேமிக்க வேண்டுமே...அதுக்கு அள்ள அள்ள குறையாத மேலும் மேலும் வளரும் அக்ஷய திருதியை நாளில் நிச்சயமாக தங்கம் வாங்குவேன். அன்று முக்கியமான் ஷூட்டிங் என்பதுபோல சூழ்நிலை என்றால் முன்னமேயே வாங்கி வைத்து அக்ஷய திருதியை நாளில் பூஜை செய்துவிடுவேன்...பொதுவாகவே நானும் என் கணவரும் சாஸ்திர சம்பிரதயாங்களை ரொம்பவே மதிப்போம்.அக்ஷய திருதியை நாள் எங்கள் வீட்டில் ரொம்பவே களைக் கட்டும நாளாக இருக்கும் எனப் புன்னகையாய் பொழிந்தார்.

சின்னத்திரை நடிகைகள் அக்ஷய திருதியை பற்றி என்ன நினைக்கிறார்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்று ஸ்டுடியோ ரவுன்ட் வந்தபோது..சன் தொலைக்காட்சியில் மதிய நேர சக்கைப் போடு சீரியலான அத்திப் பூக்கள் ஷூட்டிங். சீரியலின் வில்லியான ராணிக்கும், மிக மென்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தியாவுக்கும் சீன். சரி இவர்கள் இருவரிடமும் அக்ஷய திருதியைப் பற்றி கேட்கலாம் என சூட் முடியும்வரை காத்திருந்தோம், சற்று நேரத்தில் இருவரும் வந்தார்கள்.

மிக நட்புடன் தொடங்கிய சந்தியா... ''அத்திப்பூக்களில் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஏழைப்பெண் கேரக்டர்தான்.இதன்னாலேயே எனக்கு நகை மேல் ஆசையில்லாமல் போயிருச்சு போல..அக்ஷய திருதியைக்குன்னு நான் நகை வாங்கினதில்லை..அப்பா கேரளாவில் பிசியான ஜர்னலிஸ்ட்...அம்மா என்கூட பிசியா இருப்பாங்க ..கேரளாவிலும் அக்ஷய திருதியை படு பேமஸ்.. அம்மா அக்ஷய திருதியைக்கு நகை வாங்கின மாதிரி.ஆனா எனக்கு நினைவில்லை. எனக்கு நகைமேல் அவ்வளவு பிரியம் இல்லை என்றாலும் ..நிறைய நகை போட்டு நடிக்கணும்,..மாடர்ன் டிரஸ் போட்டு நடிக்கனும்னு ஆசை..காரணம் நான் சீரியலுக்காக மட்டும்தான் புடவையே கட்டினேன்.ஆனாலும் நீங்க கேட்டதுக்கப்புறம எனக்கும் அக்ஷய திருதியைக்கு நகை வாங்க ஆசை வந்துருச்சு..'' என்கிறார் ராணியின் தோளில் கைபோட்டபடி.

இதென்னடா வம்பாப் போச்சு. சும்மா இருந்த பொண்ண நாமதான் சீண்டிவிட்டிட்டோமோ என எண்ணியவாறு ராணியைப் பார்க்க, ''எனக்கு அத்திப் பூக்களில் நாகரிக பணக்கார யுவதி கேரக்டர்தான்...ஆனால் அதில் பேன்சி நகைகள்தான் அதிகம் போட்டிருப்பேன்..நகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்...பர்டிகுலரா எல்லா அக்ஷய திருதியை நாளிலும் நகை வாங்கினதில்லை.ஆனாலும் வாங்கின வரைக்கும் எல்லாரோட நம்பிக்கை போல என் நம்பிக்கையும் பொய்க்கவில்லை. இந்த அக்ஷய திருதியை நாளில் நகை வாங்க எனக்கும் ஆசை இருக்கிறது..''என்கிறார்.

மாலை நேர சீரியலில் ரொம்பவே ரசிகைகளை தன பக்கம் ஈர்த்திருப்பதில் நாதஸ்வரம் முதலிடம் பிடித்திருக்கிறது. நாதஸ்வரம் சீரியலின் நாயகி ஸ்ருதிகாவின் வீடு அருகில்தான் என்பதால் அவர் வீட்டிலும் ஒரு விசிட்...அட...ஸ்ருதிக்கா வீணை வாசித்துக் கொண்டிருந்தார்...ஆச்சரியப்பட்டு கேட்டபோது ''நான் நன்றாகவே வீணை வாசிப்பேன் '' என்று புன்னகைத்தபடி கூறினார். சரி அக்ஷய திருதியைப்பற்றி சொல்லுங்கள்...இந்தவருடம் என்ன வாங்கப் போறீங்க என்றபோது..''அக்ஷய திருதியையா...நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில் தான்...படிப்பு மியூசிக் கிளாஸ்னே நானும் என் அக்காவும் பொழுதைக் கழிச்சோம்...எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அக்ஷய திருதியை நாளைப்பற்றி நான் இங்கே வந்துதான் கேள்விப் படறேன்...நீங்க இவ்ளோ ஸ்பெசலா கேட்பதை பார்க்கும் போது எனக்கும் அக்ஷய திருதியைக்கு சின்னதா கம்மலும், மிக மெல்லிசான மோதிரமும் வாங்கனும்னு ஆசைப்படறேன்.....நிச்சயமா வாங்குவேன் ''என்கிறார்.

இந்தப் பொண்ணுகளையும் பொன்னையும் பிரிக்கவே முடியாது போலிருக்கே என்றால், WGC எனப்படும் உலக கோல்ட் கவுன்சிலும் அப்படித்தான் உணர்ந்திருக்கிறது போலும். இந்தியாவில் அக்ஷய திருதியை நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்கி கோலாகலமாக கொண்டாடுவதை அறிந்து இந்திய தபால் துறையுடன் ஒரு tai up வைத்துள்ளது. அதன்படி அக்ஷய திருதியை அன்று தங்கம் வான விரும்புவோர் அந்தந்த ஊர் தபால் அலுவலகத்தில் சுமார் இரண்டு கிராமிலிருந்து தங்க காசுகள் வாங்கிக் கொள்ளலாம்.அதுவும் சுத்தமான தங்கம்..இரண்டு கிராம் தங்க காசு வாங்கினால் 6% டிஸ்கவுன்ட். இந்த திட்டத்திற்கு அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறுகிறார்.உலக தங்க கவுன்சிலின் இந்தியா ,மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவின் மேலாண்மை இயக்குனர் அஜய் மித்ரா.

மேலும், ''தங்க தொழில் துறைக்கான சந்தை மேம்பாட்டு அமைப்பு முதலீடு, ஆபரணம் மற்றும் தொழில நுட்பப் பிரிவுகளில் செயலாற்றுவதுடன் ..அரசுகளுடனும் தொடர்புகளில் ஈடுபட்டு தங்கத்தின் தேவையைத்தூண்டி தங்கத்தின் தலைமைத்துவ நிலையை அளிப்பதே எங்கள் நோக்கம். உலகின் முன்னணி மற்றும் மிக நவீன சிந்தனை கொண்ட, தங்கச் சுரங்க நிறுவனங்களையும் உள்ளடக்கிய, உறுப்பினர்களின் சங்கமாக செயலாற்றும் உலக தங்க கவுன்சில் u .k வைத் தலைமையிடமாக கொண்டு இந்தியா, மற்றும் தூரக் கிழக்கு நாடுகள்..ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தூய்மையான தங்கம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும், இந்த முக்கியமான தினத்தின் போது வாங்கி அணியப் படுகிறத் தங்கம் வற்றாத செல்வம், மற்றும் அதிஷ்டத்தைக் குறிக்கிறது, அதோடு தங்கம் வாங்குவது என்பது நீண்டகால முதலீட்டுக்கான யுக்திகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவேதான் நாங்கள் இந்திய தபால் துறையுடன் டை அப் வைத்துக் கொண்டோம்...இதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே ! என்கிறார் மித்ரா.

இப்போது புரிகிறதா அட்சயதிருதியை முக்கியத்துவம் எந்தப்புள்ளியிலிருந்து தொடங்குகிறது என்று. அட்சய திருதியையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லன தரும், புண்ணிய காரியங்களை மக்கள் செய்து வந்தால் மங்கள் உண்டாகும் என மகான்கள் கூறி வந்த நம்பிக்கை மறக்கப்பட்டு, தங்க நகை வாங்கும் வழக்கத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இதுபோதாதா இந்த வணிகப் பெருஞ்சமூகத்துக்கு, மக்களின் மோகத்தை மேலும் தூண்டுவதைப் போல நகைக்கடை விளம்பரங்கள், அட்சய திருதியைத் தள்ளுபடி, முன்பதிவு என அல்லோலப்படுத்துகிறது.

வசதி படைத்த மக்கள் தாங்கள் விரும் தங்கத்தை வாங்க முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால், முடிகிற காரியமா இது ?. தங்கத்தில் மட்டுமல்ல அமைதியிலும், எளிமையிலும் கூட இலக்சுமியைக் காண முடியும். நம்மை விட ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்கையில், அவர்கள் முகங்களில் காணும் புன்னகை கூட அக்ஷய திருதியைப் பலன் தரும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இல்லாதவர்க்கு உதவாத நாள் எதுவாக இருந்தால் என்ன..?

- 4தமிழ்மீடியாவிற்காக: எழில்செல்வி

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.