பதிவுகள்

தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பெர்சே

அமைப்பின் ஆர்ப்பாட்ட பேரணியில் 25,000-30,000 மலேசியர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 10 வருடங்களில் தென்கிழக்கு ஆசிய நாடொன்றில்  நடைபெற்ற மிகப்பெரிய பொதுமக்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்நிகழ்வு பதிவாகியுள்ளது.  

இன்னமும் சில மாதங்களில் மலேசியா தனது 13வது பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. இப் பொது தேர்தல் நேர்மையான முறையிலும், நியாயமானதாகவும் நடைபெறவேண்டும் எனவும் வலியுறுத்தி பெர்சே (Bersih)  அமைப்பினர் குறித்த மாபெரும் பேரணியை ஒழுங்கு செய்தனர்.


இதற்கு ஹிண்ட்ராஃப் அமைப்பு, 75 ற்கு மேற்பட்ட அரசசார்பற்ற பொது அமைப்புக்கள் மற்றும் மலேசிய எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கோலாலம்பூரின் மெர்டேக்கா சுதந்திர சதுக்கத்தில் இப்பேரணியை நடத்துவதற்கு பெர்சே அமைப்பு அனுமதி கோரியிருந்தது.  இப்பகுதி வளாகத்தில் பொது மக்கள் ஒன்று கூட அரசு அனுமதித்திருந்த போதும் மக்கள் ஊர்வலமாக சதுக்கத்தினுள் உட்புகுவதற்கு அனுமதிக்க முடியாது என காவற்துறை தெரிவித்திருந்ததுடன் இன்று காலை தொடக்கம் 48 மணிநேரத்திற்கு மெர்டேக்கா சதுக்கம் மூடப்படுவதாக அறிவித்திருந்தது.

மேலும் சதுக்கத்தில் உள்நுழைவதற்கு முற்றாக அரசு தடைவிதித்திருந்ததுடன், தடையை மீறுபுவர்களுக்கு 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கபப்டும் என முன்னர் அறிவித்திருந்தது. அத்துடன் அப்பகுதியில் முட்கம்பிகள் மற்றும் வழியடைப்புக்களும் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தை அமைதியாக தொடக்கிய ஆர்ப்பாட்ட காரர்கள் பிரதான தெருக்களின் வழியாக மெர்டேகா சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பெரும்பாலானோர் பெர்சே அமைப்பின் அடையாளமாக மஞ்சள் நிற ஆடையணிந்து சென்றதுடன், நாட்டின் தேசிய கீதத்தை பாடியவாறு தமது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்றனர்.  மெர்டேகா சதுக்கத்தை ஊர்வலம் அண்மித்ததும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

பொதுமக்கள் மெர்டேக்கா சதுக்கத்தின் வழியடைப்புக்களை உடைத்து உட்செல்ல முற்பட்டதாக தெரிவித்துள்ள காவற்துறையினர் கண்ணீர் புகை வீசி ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சித்துள்ளனர்.  இதனால் ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியுள்ளது.

'அடுத்த தேர்தலுக்குள் அரசு தேர்தல் முறைகளில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு அழுத்தம் பிரயோகிக்க இதுவே எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம். இப்போதும் அரசு எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிடின் அரசையே மாற்றுவதற்கு முயற்சிப்போம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.


இவ்விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள மலேசிய பிரதமர் நஜிப்பினால் முன்னர் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையில், தேர்தல் முறைமையில் வரையைறைக்குட்பட்ட மாற்றங்களை கொண்டுவருவதற்கு பரிந்துரைத்திருந்தது.

எனினும் மோசடிகள் நிறைந்துள்ள தற்போதைய தேர்தல் முறைமை முழுமையாக செப்பனிடப்பட வேண்டுமெனவும், முற்றுமுழுதான ஓர் புதிய சீரமைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர். அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதாரவாக தற்போதைய தேர்தல் திணைக்களம் செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.மலேசியாவில் கடந்த ஐந்து தசாப்த காலத்திற்கு மேலாக ஆளும் தற்போதைய அரச கூட்டணி ஆட்சி செலுத்தி வருகின்ற போதும் கடந்த 2008ம் ஆண்டு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் ஜூலை மாதமும், பெர்சே அமைப்பு நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் சுமார்  1,600 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மலேசிய பிரதமருக்குப் பிடித்து போன 'ஒய் திஸ் கொலவெறி' பாடல்

இதேவேளை தனுஷ் - ஸ்ருதி ஹாசன் நடித்து வெளியான 3 திரைப்படத்தில் இடம்பெற்ற வை திஸ் கொலவெறிடி பாடல் தம்மை மிகவும் கவர்ந்து விட்டதாக மலேசிய பிரதர் டத்தோ சிறீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார்.

டி.எச்.ஆர்.ராகா வானொலிக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது நஜீப் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேர்காணலின் இறுதி பாடலாக கொலவெறி-டி பாடலை ஒளியேற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு பொது தேர்தலில் நஜீப் தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு, மலேசிய இந்தியர்களின் ஆதரவு இருக்கவில்லை என்பதும் அக்கட்சியின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே ஜூன் மாதம் வரவுள்ள பொதுதேர்தலில் மலேசிய இந்தியர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முகமாக புதிய வடிவில் இவ்வாறான பிரச்சாரங்களை அவர் முன்னெடுப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கலக்கல் காலை எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சுமார் ஒரு மணித்தியால நேர்காணலிலும் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெர்சே பிரமாண்ட பேரணி படங்கள்

Photos : AP/Lai Seng Sin

தொடர்பு பதிவு

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியின் உணர்ச்சிகரமான வீடியோ பதிவு (வீடியோ)