பதிவுகள்
Typography

யாழ்ப்பாணத்தை அடிப்படையாக முன்வைத்தே அநேக தரப்பினரால் அன்றைக்கும் இன்றைக்கும் தமிழீழக்கனவு முன்னெடுக்கப்பட்டது/படுகிறது. வடக்கு - கிழக்கு என்பது

தமிழீழ வரைபடத்தின் ஒட்டுமொத்த பிரதேச எல்லைகளாக இருந்தாலும் தீர்மானங்களை எடுக்கிற அல்லது செயற்படுத்த தூண்டுகிற சக்தியாக யாழ்ப்பாணமே அதிகம் இருந்து வந்திருக்கிறது எனத் தொடங்கும் மருதமூரானின் ஹரிகரன் வருகையும்,தொலைந்த தமிழீழக் கனவும் எனும் இக் கட்டுரை பலரும் வாசிக்க வேண்டிய பதிவாகத் தெரிகிறது. இதில் பேசப்படுகின்ற விடயம் இன்னமும் விரிவாக ஆராயப்பட வேண்டியதாகவிருப்பினும், அடிப்படையில் கட்டுரையாளர் சுட்டியுள்ள விடய முக்கியத்துவம் கருதி, அவரது அனுமதியுடனும், நன்றிகளுடனும், இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.-4Tamilmedia Team

ஹரிகரன் வருகையும்; தொலைந்த தமிழீழக் கனவும்(!)

‘தமிழீழக்கனவு’ என்பது யாழ்ப்பாணத்தை அடிப்படையாக முன்வைத்தே அநேக தரப்பினரால் அதிகம் அன்றைக்கும் இன்றைக்கும் முன்னெடுக்கப்பட்டது/படுகிறது. வடக்கு- கிழக்கு என்பது தமிழீழ வரைபடத்தின் ஒட்டுமொத்த பிரதேச எல்லைகளாக இருந்தாலும் தீர்மானங்களை எடுக்கிற அல்லது செயற்படுத்த தூண்டுகிற சக்தியாக யாழ்ப்பாணமே அதிகம் இருந்து வந்திருக்கிறது.

இந்தப் பிரதிபலிப்பின் அடுத்த கட்டம் புலம்பெயர் தேசத்திலும் தொடர்ந்தது. ஆனாலும், காலம் செல்ல யாழ்ப்பாணம் என்பது அந்த கட்டத்திலேயே நிற்க ‘யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்’ தங்களது ஆதிக்கத்தை மெல்ல மெல்ல செலுத்த ஆரம்பித்தார்கள். இன்றுவரை அதுதான் தொடர்கிறது.

இனி இலங்கை அரசு பற்றி கொஞ்சம் பார்க்கலாம். இறுதிக்கட்ட மோதல்கள் முள்ளிவாய்க்காலுக்குள் மே19, 2009இல் முடிவுக்கு வந்த சில மாதங்களுக்குள்ளேயே வடக்கு- கிழக்கை இலக்கு வைத்து (அப்படி கூறப்பட்டாலும், ‘யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து’ என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்) இலங்கை அரசினால் தமிழ்த் தொலைக்காட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டது. அண்மையில் குறித்த தொலைக்காட்சி தன்னுடைய மூன்றாம் வருட நிறைவை யாழ்ப்பாணத்தில் பெரிய இசை- கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு “வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு, ஒத்த சொல்லால” பாடல்களைப் பாடிய தென்னிந்தியாவின் வளர்ந்து வருகிற பாடகர் வேல்முருகனும், இன்னொரு பாடகியும் (பெயர் எனக்கு தெரியவில்லை) வந்திருந்தனர். இதுபோலவே, குறித்த தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டிருந்தது. விஜய்யின் தந்தையார் எஸ்.ஏ.சந்திரசேகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பாரிய தென்னிந்திர நட்சத்திர பட்டாளமே, இலங்கையின் முன்னணி கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர்.

மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டிருக்காத நிலையில் அந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் (துரையப்பா விளையாட்டரங்கு என்று நினைக்கிறேன்) ஆடிப்பாடி ரசித்துப் பார்த்திருந்தனர். குறித்த தொலைக்காட்சியும், அதன் வானொலியும் நடத்துகின்ற இசை- கலை நிகழ்ச்சிகளில் 90 வீதமானவை யாழ்ப்பாணத்திலேயே நடத்தப்படுகின்றன.

இலங்கை அரசும் நம்புகிறது, யாழ்ப்பாணத்து மக்களின் மனநிலையை மெல்ல மெல்ல குலைத்தாலோ அல்லது வென்றாலோ ‘தமிழீழக்கனவு’ என்பதை முற்றாக மறக்கடித்து விடலாம் என்று. ஒருங்கிணைந்த நாடொன்று தன்னுடைய எல்லைகளுக்குள் கோரப்படுகின்ற பிரிவினையை எந்த தருணத்திலும் அனுமதிக்காது. குறித்த பிரிவினை கோரிக்கையை முறியடிக்கிற எல்லா வேலைகளையும் செய்யவே செய்யும். அதை இலங்கை அரசும் செய்கிறது. அதுவும், வேறு வேறு தளங்களிலிருந்து மிகவும் வீரியமாக செய்கிறது. ஓட்டு மொத்தத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழீழ கனவை முன்னிறுத்துவதும்- இலங்கை அரசுக்கு தமிழீழ கனவை முறியடிப்பதும் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கிறது.

இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு நிறைய தேவை இருக்கிறது; மன ஆரோக்கிய மற்றும் பொருளாதார அளவுகளில். என்னுடைய வைத்திய நண்பரொருவர் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சியின் பல பிரதேச வைத்தியசாலைகளிலும் பணிபுரிந்தார். நாளாந்தம் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களில் குறிப்பிட்டளவானோருக்கு உடலளவின் வருத்தங்களே இருப்பதில்லை. ஆனால், மனதளவில் நிறைய அழுத்தங்களும்- ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகளும் இருப்பதாகவும். அதன் வெளிப்பாடே வைத்தியசாலைக்கு வந்து தலையிடி- காய்ச்சல் என்று அவர்களுக்கு இல்லாதவை பற்றி கூறுவதாகவும் சொல்லுவார். குறித்த பிரதேசங்களில் உடனடி தேவைகளில் முக்கியமானது ‘மனஆற்றுப்படுத்தலும்- அதன் சார்பிலான மன ஆரோக்கியமுமே’ என்பார். அது உண்மை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

குறித்த பகுதி மக்களை யார் யாரோவெல்லாம் கைவிட்டு விட்டார்கள். அதுபோலத்தான் அரசும் அவ்வளவுக்கு கண்டு கொள்வதில்லை. அரசுக்கு அந்த மக்களை கண்டு கொள்கிற தேவையும் இருப்பதில்லை. ஏனெனில், இலங்கை தமிழர்கள் பிரச்சினை என்பது சர்வதேச ரீதியிலும் பெரும்பாலும் யாழ்ப்பாணத்து மக்கள் பிரச்சினை என்றே முடிவாகி பல வருடங்களாகிறது. அப்படிப்பட்ட நிலையில், தன்னுடைய பிரச்சார செயற்திட்டத்தை முன்னெடுக்கிற அரசு யாழ்ப்பாணத்தையே முன்னிலைப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மைதான்.

(திருகோணமலை- மட்டக்களப்பு மாவட்டங்கள் ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையிலும், மூவின மக்கள் பரவலாக அந்த பிரதேசங்களில் வாழ்வதாலும் அவை தொடர்பில் அரசு வேறு மாதிரியான அணுகல் போக்கை கடைப்பிடிக்கின்றன. ஆக குறித்த பிரதேசங்களை முன்வைத்தும் அரசு தன்னுடைய பிரசார செயற்திட்டங்களை இப்போது அதிகம் முன்னெடுப்பதில்லை.

சரி, ஹரிகரன் விடயத்துக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர் மனோ உள்ளிட்ட குழுவினர் இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக வந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து திரும்பி போனார் தமிழ்நாட்டு ‘மே 17 இயக்கம்’ உள்ளிட்ட போராட்டகாரர்களின் போராட்டத்தினால். தென்னிந்திய சினிமா பிரபலங்கள் இலங்கையில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முயல்வதும் பின்னர் ‘தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்து மன்னிப்பு கேட்டு ஒதுங்குவதும்’ அடிக்கடி அண்மைய நாட்களில் நடந்தவை. அப்படித்தான் ஹரிகரனின் இலங்கை வருகை நிறுத்தமும்.

ஆனால், இந்த போராட்டகாரர்கள் ஒன்றை புரிந்து கொள்வதே இல்லை. அண்மையில் இலங்கை மன்னரின் மூத்தமகனின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரக்பி போட்டியின் இறுதி நிகழ்ச்சிகளில் இந்தியாவின் முன்னணி பாடகரும்- இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தன்னுடைய குழுவினருடன் கலந்து கொண்டு ஆடிப்பாடினார். அவரும் தமிழரே- தமிழக சினிமாவில் இயங்குபவரே. அதுபோக, தமிழக சினிமாவின் முன்னணி நாயகி(?) சமீரா ரெட்டியும் ஆடிப்பாடியிருந்தார். இவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை. அல்லது இது காணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனிடையே யாழ்ப்பாண மக்களை நோக்கிய நடத்தப்படுகின்ற அந்த அரசு தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்ச்சிக்கு ‘வேல்முருகனை’ அழைத்து வருவதை இறுதிவரை தொலைக்காட்சியில் அறிவிக்கவில்லை. ‘தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியென்று’ அறிவித்ததுடன் நிறுத்திக் கொண்டு தன்னுடைய புத்திசாதுரியத்தை காட்டிக்கொண்டது. அரசு தன்னுடைய செயற்திட்டத்தில் மிகவும் திறமையாக செயற்படுகிறது.

ஹரிகரன் பங்கு பெறுகிற நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கானதே. அவரை தடுப்பதன் மூலம் முன்வைக்கிற இலங்கை மீதான அழுத்தம் மிக மிக சிறியது. அதனைவிட எனக்கு புரிபடாத ஒன்று, இலங்கையில் தென்னிந்திய கலைஞர்கள் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகள் நடத்தப்படாக்கூடாது என்கிற ‘மே 17 இயக்கம்’ உள்ளிட்ட போராட்ட குழுவினரின் வாதம் திரைப்படங்கள் தொடர்பில் இருப்பதில்லை. இங்கு மோதல்களுக்கு பின்னர் எந்திரனும், நண்பனும், மங்காத்தாவும் சடுகுடு ஆடினார்கள். இன்னும் ஆடுவார்கள்.

போர் தின்ற பூமியில் வாழ்கிற மக்களுக்கு மன ஆற்றுப்படுத்தல் என்பது அவசியானது. அது இசையின் வழியில் வழக்கப்படலாம். இலங்கை அரசு ஏற்பாடு செய்கிற நிகழ்ச்சிகளை எதிர்ப்பதில் ஓர் நியாயம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், தனியார் நிறுவனங்களும்- நிகழ்ச்சி நடத்துனர்களும் ஏற்பாடு செய்கிற கலை நிகழ்ச்சிகளை நிறுத்துவது அவ்வளவு நியாயமானது இல்லை. ஏனெனில், அந்த நிகழ்ச்சிகள் மக்களை ஓரளவுக்காவது நல்ல நிலையில் வைத்திருக்கும். இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘விளையாடு மங்காத்தா’ என்று சந்தானம் சினேகாவுக்கு பஜ்ஜி போடுகிற நடனத்தை 20, 30 பவுண்கள் கொடுத்துவிட்டு வாய் பிழந்து பார்த்து கைகொட்டி சிரிக்கிற உறவுகளே. அதே சிரிப்பும்- மன இயல்பாக்கலும் இலங்கையில் உள்ளவர்களுக்கும் அவசியமானது. அது, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மிக மிக அவசியமானது. ஏனெனில், தமிழீழ கனவை அவர்கள் கொண்டு சுமக்கிற பொதி கழுதைகள் மட்டுமல்ல; அவர்களும் மனிதர்கள். அவர்களுக்குப் பின்னாலும் மனதும்- வாழ்வும் உண்டு!

நன்றி: மருதமூரான்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்