பதிவுகள்

சமூகம் குறித்த அக்கறையோடு செயற்படும் ஊடகவியலாளர்கள் குறித்த பதிவுகள் ஆவணப்படுத்தப்படுவதில்லை எனும் குறைபாடு

பல தளங்களிலும் காணப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்ட களத்தில் செயற்ப்பட்ட ஊடகர்கள் குறித்த பதிவுகளும் அவ்வாறே. அந்தக் குறையினை நிறைவு செய்ய முனையும் ஒரு தொடக்க முயற்சியாக   அமையும் இக் கட்டுரையினை,  வெளியிட்ட அகரம் சஞ்சிகைக்கும்,  கட்டுரையாளர் சண். தவராஜாவிற்குமான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு

மக்கள் மயப்பட்ட விடுதலைப் பயணம் ஒன்றில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பு இருப்பதை அவதானிக்கலாம். அதே போன்றே சமூகத்தின் ஒரு அங்கமாகிய ஊடகர்களின் பங்களிப்பும் அதில் அடங்கும். ஆனாலும் ஊடகர்களின் பங்களிப்பு ஏனைய பலரின் பங்களிப்புக்களை விடவும் சற்று தூக்கலாகத் தெரிவதை மறுத்து விட முடியாது. அது ஊடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மாத்திரம் பொறுத்ததல்ல. மாறாக அவர்கள் பணியாற்றும் தளங்களையும், அவர்களின் பங்களிப்பினால் ஏற்படும் விளைவுகளையும் பொறுத்தது.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திலும் ஊடகர்களின் பங்களிப்பு சிலாகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. பல ஊடகர்கள் தங்கள் உயிர்களை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். பலர் பேனாவை மாத்திரமன்றி துப்பாக்கிகளையும் கூட ஆயதங்களாக ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் மௌனிகளாக ஆக்கப்பட்டுள்ள அதேவேளை பெரும் எண்ணிக்கையானோர் நாட்டைவிட்டே தப்பியோடுமாறும் ஆக்கப்பட்டுள்ளார்கள். போராட்டத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி போராட்டத்திற்கு எதிராகக் கூட ஊடகவியலாளர்கள் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். ஒரு காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாக இருந்து பின்னாளில் போராட்டத்திற்கு எதிரானவர்களாக மாறியவர்களையும் கூட எம்மால் பார்க்க முடிகின்றது.

தமிழீழப் போராட்டம் ஊடகர்களுக்கு ஒரு கதாநாயக அந்தஸ்தை வழங்கியிருக்கின்றது. அத்தகைய அந்தஸ்தை அடைவதற்கு ஒரு சிலர் உயிரைப் பணயம் வைத்துப் பாடுபட்ட போதிலும் மற்றவரின் நிழலில் அந்த அந்தஸ்தைச் சம்பாதித்தவர்களே அதிகம் எனலாம். எனினும், போராட்டத்தில் ஊடகர்களின் பங்களிப்புத் தொடர்பில் ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த வகையில் இதுவே முதலாவது ஆய்வாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். எனினும் இது முழுமையான ஆய்வாக இருக்காது என்பதைத் திடமாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.

வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க தமிழர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைத்து வருகின்ற போதிலும் அதற்கான ஆவணங்களைப் பேணுவதிலோ பதிவுகளை மேற்கொள்வதிலோ அக்கறை காட்டுவதில்லை. அந்தத் தூரதிர்ஸ்டம் ஊடகர்களின் பங்களிப்பு விடயத்திலும் தொடர்கிறது. ஒரு சில விடயங்களை ஓரளவுக்கு மேல் தெரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அறவழிப் போராட்டம் ஆயுத ரீதியிலான போராட்டம் என இரண்டு காலகட்டங்களாக வகுக்க முடியும். தந்தை செல்வா தலைமையிலான இரண்டு தசாப்தகால அறவழிப் போராட்டத்தை தேசிய விடுதலைக்கான போராட்டம் என வரையறை செய்ய முடியாது. இலங்கைத் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் ஆதிக்குடிகளின் மொழியுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை போன்றவற்றைக் கோரியே அன்றைய அறப் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

எனினும், தொடர்ந்து நடைபெற்ற ஆயுதப் போரட்டம் இந்த அறவழிப் போராட்டங்களின் நீட்சியாக அமைந்திருந்தமை மட்டுமன்றி ஆயுதப் போராட்டத்துக்கான நியாயத் தன்மையையும் அதுவே பெற்றுத் தந்தது.

குறித்த இரண்டு போராட்ட காலகட்டங்களிலும் பின்னையதே தொடர்ச்சியானதாகவும், இடைவிடாததாகவும், பல சாதனைகளையும் வேதனைகளையும் தாங்கியதாகவும் அமைந்திருந்தது. 1956 முதல் 1977 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வரையான அறவழிப் போராட்டக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியம் என்ற ஒரு கருத்துரு முழுமையாக உருவாகியிருக்கவில்லை. தமிழரசுக் கட்சி தலைமை தாங்கி நடாத்திய போராட்டங்களை ஒரு தொடர்ச்சியான இடையறாத போராட்டமாக நோக்க முடியாத நிலையில் அத்தகைய கருத்தை வழிமொழிந்து எழுதிய ஊடகவியலாளர்களின் வகிபாகம் இக்காலத்தில் பெரிதும் வெளிப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான சுதந்திரன், பின்னாளில் வெளியான தீப்பொறி மற்றும் ஒரு தீப்பொறி ஆகியவையே இந்த அறவழிப் போராட்டங்களை ஆதரித்து எழுதி வந்தன. கோவை மகேசன், எம்.கே.அந்தனிசில் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டுவந்த இந்தப் பத்திரிகைகள் செய்திப் பத்திரிகைகளாக அன்றி கட்சிப் பிரசாரப் பத்திரிகைகளாகவே கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, தேசியப் பத்திரிகைகள் என்ற வரையறைக்குள் அடக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுமைக்குமான வாசகர்களைக் கொண்டிருந்த தினகரன், வீரகேசரி, தினபதி ஆகிய தினசரிகள் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டச் செய்திகளை அளிக்கை செய்து வந்தனவே தவிர அந்தச் செய்திகளின் ஊடாகத் தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்தைக் கட்டியெழுப்ப முனையவில்லை. மாறாக, இலங்கைத் தேசியம் என்ற கருத்துருவைக் கட்டி வளர்ப்பதாகவே அந்த எழுத்துக்கள் அமைந்திருந்தன. எனினும், அக்காலகட்டத்தில் வீரகேசரிப் பத்திரிகையின் யாழ் நிருபராகப் பணியாற்றிவந்த செல்லத்துரை என்பவர் வீரகேசரியின் இந்திய சார்பு நிலைப்பாட்டையும் கடந்து தமிழர் சார்புச் செய்திகளையும் கட்டுரைகளையும் பிரசுரித்து வந்ததாக அறிய முடிகின்றது.

1977 பொதுத்தேர்தல் முதல் 1983 யூலை வரையான காலகட்டத்தை தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களதும் நிலைமாறும் காலகட்டம் என வர்ணிக்கலாம். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் மக்களின் அரசியற் தலைமை மிதவாதிகளின் கரங்களில் இருந்து விலகி போராளிகளின் கரங்களைச் சென்றடைந்தது. அத்தோடு தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சிங்கள மக்களோடு இணைந்து வாழமுடியாது என்ற முடிவை நோக்கியும் சென்று கொண்டிருந்தார்கள். அதேவேளை, மிகவும் அதிகமான அரசியற் கருத்தாடல்களும் இக்காலப் பகுதியில்தான் தமிழ் மக்கள் மத்தியில் நடந்து கொண்டிருந்தன. தனிநாடு அமைப்பதொன்றே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழச் சாத்தியமான ஒரேவழி. அதுவும் ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்து தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மேலோங்கிய காலம்.

இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் கூட மக்கள் மத்தியில் பரவலாக நிலவிய இக் கருத்துக்கு உத்வேகம் தரும் வகையில் எந்தவொரு குறித்த ஊடகவியலாளரும் தம்மை வெளிப்படுத்திச் செயற்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, தேசிய எழுச்சி பற்றிப் பேசிவந்த தமிழரசுக் கட்சிப் பத்திரிகைகள் இளைஞர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன.

1983 யூலையில் நடாத்தப்பட்ட தமிழர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்ட இனப்படுகொலை களத்தில் அனைத்தையும் மாற்றியமைத்தது. ஆயத ரீதியிலான தாக்குதல்கள், அரசியல் முனைப்புக்கள், தேசிய எழுச்சி எனப் பல முனைகளிலும் ஏற்பட்ட பாய்ச்சல் ஊடகத் துறையையும் விட்டு வைக்கவில்லை.

அனைத்தையும் அடிப்படையில் இருந்தே மாற்றியமைக்கும் தன்மை கொண்ட புரட்சி, ஊடகவியலாளர்களின் வரவுக்காகக் காத்திருக்கவில்லை. போராளிகள் மத்தியில் இருந்தே தேசியத்தை ஆதரிக்கும் ஆற்றலுள்ள முதலாவது ஊடகவியலாளர்கள் உருவாகினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் அன்ரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த உணர்வு, குமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய பாதை, ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பினால் (ஈரோஸ்) பாலநடராஜ ஐயரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட தர்க்கீகம், சுந்தர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட சஞ்சிகையான பாலம், தமிழீழ விடுதலை இயக்கத்தினால் (ரெலோ) வெளியிடப்பட்ட எழுச்சி, ஈழ மாணவர் பொது மன்றத்தினால் சிறிதரன் (சுகு) அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஈழ மாணவர் குரல் ஆகிய ஆரம்பகாலப் பத்திரிகைகள், பின்னாளில் வெளிவந்த விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவை, களத்தில் மற்றும் ஈழ புரட்சிகர விடுதலை முன்னணியினால் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பத்மநாபாவை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட ஈழச் செய்திகள், சமகண்ணன் (தாஸ்) அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட கண்ணோட்டம், சிதம்பரப்பிள்ளை சிவகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட புதிய கண்ணோட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட விடுதலைச்சுடர் (1985-1986), தாய்மண், சுதந்திரச்சுடர் (1990-1992) ஆகியவை உட்பட பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் புதிய ஊடகர்களை, கட்டுரையாளர்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகஞ் செய்து வைத்தன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வானொலியை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே அறிமுகஞ் செய்தது. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சிற்றலையில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட இவ் வானொலி 1984, 85 இல் இயங்கியது. இரண்டாவது வானொலியை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆரம்பித்தது. பின்னாளில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட புலிகளின்குரல், நிதர்சனம் தொலைக்காட்சி ஆகியவை தமிழீழ வானொலி, தமிழீழத் தொலைக்காட்சி எனப் பரிணாமம் அடைந்தன. புலிகளின் குரல் வானொலி தற்போதும் இணையத் தளம் ஊடாக ஒலித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தமிழீழப் பொதுவுடமைக் கட்சி என்ற பெயரில் செயற்பட்ட ஒரு அமைப்பும் தனியான ஒரு வானொலியை நடாத்தியதாக அறிய முடிகின்ற போதிலும் அது தொடர்பான செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

இத்தகைய ஊடகங்களில் ஆரம்ப காலங்களில் பணியாற்றிய பல துணிகரமான ஊடகவியலாளர்கள், கட்டுரையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் தமது முகங்களை இறுதிவரை காட்டாமலேயே மறைந்து போனார்கள்.

1983 கறுப்பு யூலை அதுவரை இலங்கைத் தேசியம் பேசிவந்த பல ஊடகர்களை தாமும் பிறப்பால் ஈழத் தமிழரே என்ற யதார்த்தத்தை உணரச் செய்தது. சொந்த ஊர் எதுவெனக் கூடத் தெரியாமல் கொழும்பே கதி எனக் கிடந்த அவர்கள் விரட்டியடிக்கப்பட்ட போதே, வேட்டையாடப்பட்ட போதே தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவாக்கத்துக்காகப் பங்களிப்பு நல்க வேண்டிய கடப்பாடு தமக்கும் உண்டு எனும் புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டது.

ஈழத் தமிழ்ப் பரப்பில் எழுத்துக்கள் ஊடாகத் தமிழ்த் தேசியம் பேசிய முதல்வராக 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரையே கொள்ள முடியும். உரைநடையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவராக அறியப்படும் அவர் நேரடியாகத் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து எழுதியவர் என்ற வரையறைக்குள் அடக்கப்பட முடியாதவர் ஆயினும் கிறிஸ்தவ மயமாக்கத்தை எதிர்த்து சைவசமயத்தை மறுமலர்ச்சி அடைய அவர் மேற்கொண்ட முயற்சிகளே தமிழ்த் தேசியம் என்ற கருத்து பெயரளவுக்கேனும் ஈழத் தமிழ் மக்கள் மனங்களில் தோன்றக் காரணமாயிற்று. 19 வயதில் எழுத ஆரம்பித்த அவர் தனது 56 ஆவது வயதில் இறக்கும் வரை மொத்தம் 97 தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

போராளிகளாக இருந்து ஊடகர்களாக மாறியோரும் ஊடகர்களாக இருந்து போராளிகளாக மாறியோரும் உள்ளனர். ஊடகராக இருந்து போராளியாக மாறியோருள் முதன்மையானவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். 60 களின் ஆரம்பத்தில் கொழும்பில் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றிய அவர் ஊடகராகப் பணியாற்றிக் கொண்டிருக்கையிலே நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளாதவராக இருந்தபோதிலும் ஊடகராகப் பணியாற்றிய பின்னணியுடன் போராட்டத்துக்குள் பிரவேசித்த முதலாவது நபராக அறியப்பட்டவர்.

அதேவேளை ஊடகராகப் பணியாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதலாவது நபராக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதிக்கான வீரகேசரி நிருபராகப் பணியாற்றிய இரட்ணசிங்கம் என்பவரைக் குறிப்பிடலாம். வீரவேங்கை ரிப்போட்டர் என விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இடம்பிடித்த இவர் 1986 யனவரி முதலாந் திகதி நடைபெற்ற விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பின் வீரகேசரி நிருபராகப் பணியாற்றிய நித்தி (இராசையா நித்தியானந்தன்) இந்திய இராணுவம் தமிழீழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணரப் பாடுபட்டார். இவரது மக்கள் பணியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒட்டுக் குழுவினர் 1988 ஆம் ஆண்டின் இறுதியில் இவரைக் கண்டந் துண்டமாக வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இறந்துவிட்டார் என்ற முடிவுடன் அவரை விட்டுச் சென்ற போதிலும் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த நித்தி திரும்பிவந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டார். செல்லப்பா என்ற பெயருடன் செயற்பட்டுவந்த அவர் 1992 ஏப்ரலில் கப்டன் நித்தி என்ற பெயருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

சமகாலத்தில் யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிவந்த எஸ்.எம். கோபாலரத்தினம் (எஸ்.எம்.ஜி. - கோபு) இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிலமாதங்கள் சிறை வைக்கப்பட்டார். தனது அனுபவங்களை இவர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை‚ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார். மூத்த பத்திரிகையாளரான இவர் பின்னாளில் தேசியத் தலைவரின் கரங்களால் தங்க நாணயம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தில் தராக்கி என்ற பெயருடன் அறிமுகமான டி.சிவராம் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை ஆங்கில மொழியில் சிங்கள மக்களுக்குத் தெரிவிக்க ‚தி ஜலண்ட்‘ பத்திரிகையைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதே காலகட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யினால் ஆரம்பிக்கப்பட்ட தினமுரசு என்ற வாராந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய அற்புதராஜா (ரமேஷ் - அற்புதன்) விடுதலைப் புலிகளைச் சிலாகித்து எழுதத் தொடங்கினார். ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை டி.சிவராமின் வருகை ஒரு திருப்புமுனை என்றே கொள்ளப்பட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான இவர் பின்னாளில் அவ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக விளங்கினார். கட்சியைத் துறந்து ஊடகராக மாறிய பின்னர் வன்னி சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர் தனது சிந்தனை, போக்கு என்பவற்றை மாற்றிக் கொண்டது மட்டுமன்றி தன்னோடு ஒத்துப்போகக் கூடிய ஊடக நண்பர்களையும் தனது பக்கம் ஈர்த்துக் கொண்டார். இந்த விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடக நண்பர்களை அவரால் முதலில் வெற்றிகொள்ள முடிந்தது.

இவரது செயற்பாடுகளில் எஸ். ஜெயானந்தமூர்த்தி, ஜி. நடேசன், இரா துரைரெத்தினம், சண் தவராஜா, வி. ஜசிகரன் ஆகியோர் பெரிதும் துணையிருந்தனர். இரா உதயகுமார், பா. அரியநேத்திரன், தா. வேதநாயகம், பா. வேணுகோபால் ஆகியோரும் அவருக்குப் பக்கபலமாக விளங்கினர். அவர்களுள் எஸ். ஜெயானந்தமூர்த்தி (ஈ.பி.ஆர்.எல்.எப்.), சண் தவராஜா (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்), தா.வேதநாயகம் (தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோர் போராட்டப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியத்துக்காக மட்டக்களப்பு மண் பல அளப்பரிய விலைகளைத் தந்துள்ளது. அதைப் போன்றே அந்த மண்ணிலே தோன்றிய ஊடகர்களும் அளப்பரிய விலையைத் தந்துள்ளார்கள். மாமனிதர் டி.சிவராம் (28.04.2005), நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன் (31.05.2004), சுகுணராஜன் (24.01.2006) ஆகியோருடன் சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தினபதி நிருபராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தையும் (25.12.2004) சேர்த்துக் கொள்ள முடியும்.

டி.சிவராம் வகுத்த பாதையில் பல ஊடகவியலாளர்கள் பயணத்தைத் தொடர்ந்த போது விடுதலைக்கு ஆதரவாகப் பேசுவதிலும் எழுவதிலும் யார் சிறந்தவர் எனப் போட்டிபோடும் அளவிற்கு ஊடகவியலாளர்கள் மத்தியிலே உற்சாகம் ஏற்பட்டிருந்தமையை அவதனிக்க முடிந்தது.

ஆயுதம் தரிக்காத நிலையில் தமிழ்த் தேசியத்துக்குச் சார்பாக ஊடகப் பணியாற்றி தாக்குதலுக்கு இலக்கான முதலாவது நபராக நித்தியைக் குறிப்பிடும் அதேநேரம் முதன்முதல் கொலையான தமிழ் ஊடகவியலாளராக மயில்வாகனம் நிமலராஜன் கருதப்படுகின்றார். ஆனாலும், இந்திய இராணுவக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு பத்திரிகையின் சுன்னாகம் நிருபராகக் கடமையாற்றிய ஆசிரியரான நவரெட்ணம் 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். அதேபோன்று, 1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கொண்டல் என்ற வாராந்தப் பத்திரிகையின் ஆசிரியரான வர்ணகுலசிங்கம் என்பவர் ஊறணி சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார். ஒரு குறுகிய காலமாயினும் காத்திரமாகப் பணியாற்றிய இவரை எவரும் நினைவு கூர்வதில்லை என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

19.10.2000 இல் நிமலராஜன்; யாழ்ப்பாணத்தில் வைத்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை ஊடகர்கள் மத்தியில் ஆரம்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும் சக ஊடகர்கள் அதனால் துவண்டுவிடவில்லை. மாறாக, அவர்களது ஓர்மம் மேலும் அதிகரிக்கவே செய்தது. அதேநேரம் போராளிகளோடு இணையும் ஊடகர்களின் எண்ணிக்கையும், போராளிகளாக இருந்து ஊடகர்களாக மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்தது. அவர்களைப் பற்றிய சரியான தகவல்களைப் பெறுவது சிரமமாக உள்ள போதிலும் புலிகளின் குரல் பொறுப்பாளராகப் பணியாற்றி மரணமடைந்த கி.தவபாலன் (இறைவன் - 18.05.2009), எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட பு. சத்தியமூர்த்தி (12.02.2009), இசைவிழி செம்பியன் (புலிகளின் குரல் - 27.11.2007), மகேஸ்வரன் (ஈழநாதம் - முல்லைத்தீவு, தமிழ்நெற் - 06.03.2009) இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டுக் கோரமாகக் கொல்லப்பட்ட இசைப்பிரியா (18.05.2009), தற்போதும் உயிரோடு இருக்கும் கு.வீரா, திரு மாஸ்ரர் ஆகியோர் நினைவு கூரத் தக்கவர்கள்.

சமூகத்தின் காவல்நாய்கள் என வர்ணிக்கப்படும் ஊடகர்களைப் பொறுத்தவரை உலகம் தொடரச்சியாக ஒரு ஆபத்தான இடமாக மாறிவருவதை அவதானிக்கலாம். அதிலும் ஆயுத மோதல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளில் இந்த ஆபத்து அதிகமாக இருந்து வருகின்றது. எனினும் மானுடம் விடுதலை பெறவேண்டும் எனப் போராடும் ஊடகர்கள் உயிர் மீதான அச்சத்தைப் புறக்கணித்து இலட்சியத்தைப் பெரிதாக நினைத்து தமது உயிர்களைத் துச்சமென நினைத்துப் பயணித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை ஊடகர்கள் தந்த விலை அதிகம் எனவே கொள்ளப்பட வேண்டும். மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகர்களை, ஊடகப் பணியாளர்களை நாம் இழந்து நிற்கின்றோம்.

வயிற்றுக்காக ஊடகத்தில் பணியாற்றுவதை விடுத்து அறத்துக்காக, தர்மத்துக்காக, கொண்ட கொள்கைக்காகப் பணியாற்றியமையாலேயே அவர்கள் இன்றும் நினைவு கூரப்படுபவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய நினைவே அவர்கள் செய்த சேவைகளை அரத்தமுடையதாக ஆக்குகின்றது எனக் கூறினால் மிகையாகாது.

கட்டுரையாளர் - சண். தவராஜா

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.