பதிவுகள்

இலங்கை, மற்றும் தென் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா நோக்கி படகுகளில் செல்ல முற்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

நேற்றும் இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்ததாக திருகோணமலையில் 142 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 107 ஆண்களும், 16 பெண்களும், 23 குழந்தைகளும் என மொத்தம் 142 பேர் இருந்துள்ளனர். கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இவர்கள் தற்சமயம் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்படும் முடிவு எத்தகையக ஆபத்தான விளைவுகளை கொண்டுவரும் என்பதை அறிந்தும் இம்முயற்சியில் இறங்குபவர்கள் பற்றி புருஷோத்தமன் தனது மருதமூரான் வலைப்பதிவில் இவ்வாறு பதிவுட்டுள்ளார். இப்பதிவை மீள்பதிவிட அனுமதித்தமைக்கு அவருக்கு நன்றி கூறி இங்கு மீள்பிரசுரிக்கிறோம்.

- 4தமிழ்மீடியா குழுமம்


சுனாமி வாரிச்சுருட்டிய அடையாளங்களை ஏழு வருடங்களை கடந்தும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிற கிராமமொன்றின் கடற்கரையிலிருந்து ‘அலையோடு அல்லாடும் ஆஸி கனவுகள்’ பற்றி பேச ஆரம்பிக்கிறேன். கடலோடு தலை நீட்டிப் பேசிக்கொண்டிருந்த தென்னை மரங்களின் உயிர் வாங்கப்பட்ட எச்சங்கள், முள்ளியை (இராவணன் மீசை) பூத்திருக்கிற அனல் வீசும் சிறு மணல் குன்றுகள், போரினாலும் சுனாமியாலும் துரத்தியடிக்கப்பட்ட சனக்கூட்டமொன்றின் குடியிருப்புக்களின் அத்திவார சிதிலங்கள், கடலில் சில சிறிய படகுகள், கரையில் கட்டுமரங்களும் மீன்பிடி வலைகளும், எங்காவது சிலரின் நடமாட்டமும், அவற்றுக்கிடையில் துப்பாக்கி தரித்த இலங்கை அரச பணியாளர்களின் முகாங்களுமாக என்னுடைய பார்வை எல்லைக்குள் விரிகின்றன.

2004க்கு முன்னர் வரை மீன்பிடியை பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த கடலோரப்பகுதி இது. சுனாமி பேரழிவுகளுக்குப் பின்னர் ‘சுனாமி பாதுகாப்பு வலயம்’ என்கிற அரச உத்தரவுகளுக்கு அமைய கடலோர குடியிருப்புக்கள் அனைத்தும் 800,(400) மீட்டர்களுக்கு அப்பாலிருந்த பற்றைக்காடுகள் நிரம்பிய பகுதிக்கு 2005களின் நடுப்பகுதியில் இடம்மாற்றப்பட்டுவிட்டது. அழிக்கப்பட்டுவிட்ட குறித்த பற்றைக்காடுகளில் நாவல் மரங்கள் அதிகமிருந்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில நாவல் மரங்கள் தலையசைக்கின்றன. அப்பகுதி சிறுவர்கள் ஒருகாலத்தில் குண்டு குண்டான இனிமையான நாவல் பழங்களை பறித்து உண்டிருப்பார்கள்.

யாழ் மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியான வடமராட்சிக் கிழக்கில் பற்றைக் காடுகளிக்கிடையில் இடம்மாற்றப்பட்ட கிராமங்கள் மணற்காடு தொடக்கம் பூனைத்தொடுவாய் வரை நிறைய உண்டு. இந்தப் பிரதேச மக்களுக்கு ‘அவுஸ்திரேலியாவுக்கான கடற்பயணங்கள் பற்றிய கனவு’ 2007களின் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது. அப்போது இவர்களில் அநேகர் விடுதலைப் புலிகளுக்கும்- அரச படையினருக்குமிடையிலான மோதல்களினால் (இறுதிக்கட்ட மோதல்கள் நடந்த) புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை உள்ளிட்ட முல்லைத்தீவின் கடற்கரையோர கிராமங்களில் இடம்பெயர்ந்து குடியிருந்தனர்.நீண்ட காலமாக பாவிக்கப்பட்ட இரண்டாம் தர மீன்பிடி இயந்திர படகொன்றில் குறிப்பிட்டளவான இளைஞர்களுடன் முல்லைத்தீவின் கடற்பரப்பிலிருந்து 2007இல் ஆரம்பித்த அவுஸ்திரேலியாவை நோக்கிய கடற்பயணம் ஒன்று இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மலேசியாவை அண்மித்த கடற்பரப்பில் நிறைவுக்கு வருகிறது. எப்படியோ வீசாக்கள் உள்ளிட்ட சட்டபூர்வமான குடிவரவு ஆவணங்கள் இன்றி மலேசியாவுக்குள் நுழைந்துவிட்ட இளைஞர்களை சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற முகவர் கண்ணாடி வெட்டுகிற மற்றும் கட்டுமான கூலிகளாக சேர்த்துவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார். சில அடியுள்ள கூடாரங்களுக்குள் வெளியில் உலாவ முடியாத நிலையில் கண்ணாடி வெட்டிக்கொண்டும், சிமெந்தை தலையில் சுமந்து கொண்டும் 2009இன் ஆரம்பம் வரையில் வாழ்ந்திருக்கிறார்கள் நாற்பதிற்கும் அதிகமான இளைஞர்கள். இவர்களில் சிலர் 2009இன் ஆரம்பத்தில் இன்னொரு சட்டவிரோத குடியேற்ற முகவரின் மூலம் அவுஸ்திரேலியாவை மீண்டுமொரு பயங்கரமான கடற்பயணத்தின் மூலம் சென்று சேர்ந்தார்கள்.

‘இவர்கள்’ அவுஸ்திரேலியாவின் சிட்னியை அண்மித்த பகுதியொன்றில் அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளின் விசாரணைகள், தடுப்புக்காவல்களுக்குப் பின்னர் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களில் பலரும் இறைச்சிக்காக மாடு வெட்டும் தளங்களில் அல்லது உணவு விடுதிகளில் தொழில் செய்கிறார்கள்.

இலங்கை மதிப்பில் மாதமொன்றுக்கு 80000 இருந்து 120000 ரூபாய் வரையில் சம்பளமாக (ஒரு நாளைக்கு பத்து மணித்தியாங்களுக்கு அதிகமான நேரம் வேலை செய்பவர்கள்) பெறுகிறார்கள். இதில், அவர்களின் மீதான குடியேற்ற வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் சட்டத்தரணிக்கான கொடுப்பனவு, (இவர்களை அழைத்துச் சென்ற) சட்டவிரோத குடியேற்ற முகவருக்குச் செலுத்த வேண்டிய (15 இலிருந்து 35 இலட்சங்கள் வரையான) தொகையின் ஒருபகுதி மற்றும் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அவர்களின் வாழ்க்கைச் செலவு தவிர்ந்து இலங்கையிலுள்ள குடும்பத்தினருக்கு மாதத்துக்கு 20000 இருந்து 30000 ரூபாய்களை அனுப்ப முடிகிறது. இதுதான், 2007இல் அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்து உயிரோடு அவுஸ்திரேலியாவை அடைந்துவிட்ட சாதாரண குடியேற்றவாசி குறித்த பருமட்டான பார்வை. (இந்த தகவல்களில் பெரும்பாலானவை அவுஸ்திரேலியாவில் குடியேறிய நந்தகோபன் மற்றும் தியாகராஜா உள்ளிட்டவர்களுடன் உரையாடியதிலிருந்து பெற்றவை. பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

இனி தற்போதைய அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணங்கள் பற்றி பார்ப்போம். அதுவும், 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்படுகின்ற பயணங்கள் குறித்து. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியிருந்து அதாவது நான் நின்று கொண்டிருக்கிற கடற்பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்ட படகொன்று இயந்திரக்கோளாறு காரணமாக நீரோட்டத்தின் வழி அடித்துச் செல்லப்பட்டு கேரள மாநில கடலெல்லைக்குள் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கடந்த மாதம் மீட்கப்பட்டது.

இந்தப் படகில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நாற்பதிற்கும் அதிகமானோர் பணயம் செய்தனர். இவர்கள் அனைவரும் கேரள நீதிமன்றமொன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இப்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் அவுஸ்திரேலியக்கனவு கேரள சிறைக் கம்பிகளுக்குள் தற்போதைக்கு முடிந்து போனது. இவர்களின் அவுஸ்திரேலியா நோக்கிய கனவு மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனில் இவர்கள் முதலில் இலங்கைக்கு வரவேண்டியிருக்கும். அப்போதும், இலங்கையில் வழக்கு- விசாரணைகளுக்குப் பிறகே தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் கடல் வழியான அவுஸ்திரேலியப் பயணத்தை.


இப்படி கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரங்களிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில் மூன்று அல்லது நான்கு படகுகள் மாத்திரம் கிறிஸ்மஸ் தீவுக்கூட்டங்களை அடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. (அண்மையில் மூழ்கிய நிலையில் ஒரு படகிலிருந்தவர்களை அவுஸ்திரேலிய கடற்படை மீட்டது) மிகுதி படகுகளில் பல திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு கடற்பரப்பில் அல்லது தென்னிலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சில இந்திய கடற்பரப்புக்குள் திசைமாறிச் சென்று இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டிருக்கின்றன. இன்னும் சில படகுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அவை இன்னும் அலைகளோடு அல்லாடிக் கொண்டிருக்கலாம். அல்லது இந்து- பசுபிக் சமுத்திரத்தின் ஆழத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

மோதல்களுக்குப் பின்னரான வாழ்வு வடக்கு- கிழக்கு மக்களை குறிப்பாக நாளாந்தம் தொழில் செய்தால்தான் வாழ்க்கை என்றிருக்கிற சாதாரண (மத்தியதர மற்றும் கீழ்த்தட்டு) மக்களை ரொம்பவே சிரமப்பட வைக்கிறது. அதுபோக, நிலையில்லாத அரசியற் சூழ்நிலைகளை எதிர்கொண்ட மக்கள் எதிர்காலத்திலும் மோதல் சூத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளலாம், உயிர்பலி வாங்கப்படலாம் என்று அஞ்சுகிறார்கள். இவர்களில் குறிப்பிட்டளவானோருக்கு சீரான வருமானமும், மோதல்கள் அற்ற வாழ்வும் தேவைப்படுகிறது. அப்படியான வாழ்வொன்று ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் சாத்தியப்படுமென்று தமிழ் மக்களின் அதிகளவானோர் நம்புகின்றனர்.

அப்படியான வாழ்வைத் தேடிய பயணங்களை பணமுள்ளவர்கள் விமானங்களின் வழி சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஆரம்பிக்கிறார்கள். மிகவும் சாதாரண வாழ்க்கைக்கு தலைப்பட்டவர்கள் யோசிக்கிறார்கள், கத்தி முனையில் நடந்தாவது அமைதியான- பணமுள்ள வாழ்க்கையொன்றை அவுஸ்திரேலியாவில் பெறமுடியும் என்று நம்பி இந்த கடற்பயணங்களை மேற்கொள்கின்றனர். இப்படித்தான் அவுஸ்திரேலியா நோக்கிய கடற்பயணங்களில் அதிகமானவை ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட காலம் பாவிக்கப்பட்ட மிகவும் சிறியரக ரோலர் இயந்திர மீன்பிடிப்படகை சுமார் 35 இலட்சங்களுக்கு கொள்வனவு செய்கின்ற சட்டவிரோத குடியேற்ற முகவர் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரையில் குறித்த படகை மீன்பிடித்தலுக்கு பாவிப்பது போன்று பாவனை செய்கின்றார். அப்புறமாக மிகவும் நுணுக்கமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆட்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். குறிப்பாக ஒருவரிடம் மூன்று இலட்சங்களிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய்கள் வரையில் முன்பணமாகவும், அவுஸ்திரேலியா சென்று சேர்ந்து இரண்டு முதல் சில வருடங்களுக்குள் 15 இலிருந்து 35 இலட்சம் ரூபாய்கள் வரையிலும் அறவிடுகிறார். இது தற்போதைய சந்தை நிலவரம். அவுஸ்திரேலிய கடற்பயணத்தை ஆரம்பிக்கிற சிறிய ரோலர் படகில் நாற்பதிலிருந்து அறுபது பேர் வரையில் பயணிக்கிறார்கள். இவர்களில் அநேகர் தங்களது நகைகளிலிருந்து, தொழில், சொத்துக்கள் வரையில் விற்று பணத்தைச் செலுத்துகிறார்கள். ஆனாலும், கடற்பயணக்காரர்களில் எப்போதாவது சிலர் தான் நான்கு ஐந்து வாரங்களின் பின் அவுஸ்திரேலியாவைச் சென்று சேர்கிறார்கள்.

இதனிடையே, அவுஸ்திரேலிய கடற்பயணங்களை மேற்கொள்கிற படகுகளில் அநேகமானவற்றுக்கு கடலின் தன்மை அறிந்த படகு ஓட்டிகளோ, இயந்திரப் படகின் தன்மை அறிந்த துறை சார்பானவர்களோ இருப்பதில்லை. படகை வாங்கி சில நாட்கள் மீன் பிடித்தலில் ஈடுபட்டுவிட்டு ஆயிரம் கடல் மைல்களைத் தாண்டிய பயணமொன்றை இந்து- பசுபிக் கடலில் ஆரம்பிக்கிறார்கள். கடல் நீரோட்டம், கடல் கொந்தளிப்புக்கள் பற்றிய சிறிய அக்கறையுமின்றியே இந்த பயணங்கள் தொடர்கின்றன. ஆனாலும், ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் கடற்பயணங்கள் அதிகரித்திருப்பதற்கு இந்து சமுத்திரத்தின் காற்று வீசுகின்ற திசையும் காரணமென்கிறார்கள். அவுஸ்திரேலியாவை முப்பதிற்கும் குறைவான நாட்களில் சென்று சேர காற்றின் திசை உதவுகிறதாம்.


நான் நின்று கொண்டிருக்கிற கடற்கரையோர கிராமத்திலிருந்து (மொத்தமாகவே மக்களின் எண்ணிக்கை 250க்குள் அடங்கிவிடலாம்) கடற்பயணங்களை இருபதிலிருந்து முப்பது பேர் மேற்கொண்டிருக்கிறார்கள். இது இந்த கிராமத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட பத்து வீதமானது. இவர்களில் அண்மைய நாட்களில் இருவர் மாத்திரமே அவுஸ்திரேலியாவை அடைந்த செய்தியை சொல்கிறார்கள் கிராம மக்கள். சிலர் பயணங்கள் தடைப்பட்டு திரும்பி வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தென்னிலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர்களின் நிலை தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதே நிலவரத்தை வடக்கு- கிழக்கின் ஏதோவொரு கடற்கரைக் கிராமத்திலிருந்து அல்லது நீர்கொழும்பு கடற்கரையிலிருந்து பார்த்தாலும்- கேட்டாலும் உணர முடியும். நாளாந்தம் ‘சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய பயணங்களை மேற்கொண்டவர்கள் கைது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கியது’ என்று செய்திகளை காண முடிகிறது. ஆனாலும், அவுஸ்திரேலியா நோக்கிய பயணங்கள் நிறைவுக்கு வந்தபாடில்லை.

• முல்லைத்தீவு, திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரங்களிலிருந்தே சட்டவிரோத கடற்பயணங்களை மேற்கொள்கின்ற படகுகள் அதிகமாகப் புறப்படுகின்றன.
• இலங்கையில் இந்த வருடம் இதுவரை 700க்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் கடற்படை மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 380க்கும் அதிகமானோர் கடந்த மாதம் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கிறார்.
• ‘அவுஸ்திரேலியா நோக்கிய சட்டவிரோத கடற்பயணங்கள் கடற்படையினரின் ஆதரவுடன் நடைபெறுகின்றது’ என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலத்தில் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அதை இலங்கை அரசு மறுத்திருக்கின்றது.
• 2012ஆம் ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அண்மித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கிறார்கள். இவர்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாட்டவர்கள் அதிகம்.
• எதிர்காலத்தில் சட்ட விரோத குடியேற்றவாசிகளை திருப்பி அனுப்பப்போவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

கடலின் அலைகளுக்கிடையில் வளைந்தோடுகிற சிறிய மீன்களை மாலையை அண்மித்த இந்த நேரத்தில் காண முடிகிறது. ஆழமும், அழகும் கொண்ட இந்து சமுத்திரத்தின் இந்த கரையில் ஒரு காலத்தில் சூழ் விளக்குகள் பொருத்திய படகுகள் மீன்களை அள்ளி வந்தன. மக்களை செழிப்பாக வைத்திருக்க உதவின. பின்னராக காலத்தில் விரைவு படகுகளில் வருகிற ஆயுதம் தாங்கியவர்கள் தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டார்கள். அதற்குள் சிக்கி மீன் பிடிக்கச் சென்றவர்களும் மாண்டு போனார்கள். பின்னொரு மழைநாள் காலையில் கடலின் அடங்காத அலைகள் மக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஆர்ப்பரித்தது ‘சுனாமி’ என்கிற பெயரில். இப்போது இங்கிருந்தும் அவுஸ்திரேலியாவை நோக்கி படகுகள் புறப்படுகின்றன சூனியமான நம்பிக்கைகளுடன்..! நான் என்னுடைய அடியை மெல்ல மெல்ல எடுத்து வைக்கிறேன் ‘திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழனின்’ தலைவிதியை நினைத்துக் கொண்டு. நிஜத்துக்கு அருகிலிருக்கிற தோற்றங்களை வழங்கும் கனவுகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிற வாழ்க்கையாகிப் போனது தமிழனின் வாழ்வு. ஆனாலும், அதன் நிஜம் என்னவோ கோரங்களையும், ஏமாற்றங்களையுமே அதிகமாக தந்து போகின்றன…!!

இப்பதிவின் தாயகம் : மருதமூரான்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.