பதிவுகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களின் கோரிக்கைகளை, காவல்துறை நடவடிக்கை மூலம்

அடக்கிவிட மத்திய மாநில அரசுகள் முயன்று வருவதாக மக்கள் குற்றசாட்டும் அதேவேளை, இப் போராட்டத்தின் தலைமையாக இருக்கக் கூடிய உதயகுமாரைத் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்து, வரும் 18ந் தேதிக்கு முன்னதாக காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனும் சம்மன் நோட்டிசை, அவரது இல்லத்தில் ஒட்டிச் சென்றிருப்பதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில், "யார் தேடப்படும் குற்றவாளி ? " எனும் தலைப்பில்,  'வினவு' தளத்தில் வெளியான இச் செய்திப் பகிர்வினை, அத்தளத்திற்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

யார் தேடப்படும் குற்றவாளி ?

இன்று காலை 10 மணி முதல் இடிந்தகரையில் தொடங்கி 48 கரையோர கிராமங்களின் மக்கள் அணு மின் நிலையத்துக்கு எதிராகவும், போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

இன்று காலையில் இப்போராட்டம் துவங்குவதை வாழ்த்தி இடிந்த கரை போராட்டப் பந்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் சுருக்கம்:

”இன்றைய தினம் காவல்துறை வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பற்றிப் பரவி வருகிறது. கல்பாக்கம் மக்கள் அங்குள்ள அணு உலை ஊழியர்களை உள்ளே செல்லாதீர்கள் என்று மறித்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று இடிந்த கரையில் மட்டுமல்ல, அனைத்து கிராமங்களிலும் மீனவ மக்கள் போராடி வருகிறார்கள். இது ஏதோ உள்ளூர் பிரச்சினை போல காங்கிரசு அரசு திட்டமிட்டே சித்தரிக்கிறது. இங்கே விபத்து ஏற்பட்டால் ஈழத்திலே மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா, கேரள மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? செர்னோபில் விபத்தின் விளைவுகள் பிரிட்டனிலே ஏற்பட்டதை மறுக்க முடியுமா?

ஏதோ யுரேனியம் நிரப்பி விட்டால் அத்துடன் முடிந்தது என்பது போல பேசுகிறார்கள். ஏன் அதற்கப்புறம் மூட முடியாதா, மூடியதில்லையா? செலவழித்து விட்டோம் மூட முடியாது என்கிறார்கள். 13000 கோடி உன் அப்பன் வீட்டுப் பணம் அல்ல மக்கள் பணம். மக்கள் சொல்கிறோம் மூடு.

திறக்கலாம் என்று கோர்ட் சொல்லிவிட்டதாம். கோர்ட்டைப் பற்றி யார் பேசுவது? முதல்வரா? பெங்களூரு நீதிமன்றத்தை வாய்தா வாங்கியே கேவலப்படுத்துபவர்களா நமக்கு புத்திமதி சொல்வது?

நிலக்கரியும் இரும்பும் பாக்சைட்டும் இயற்கை வளங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தம் என்பதுதான் அரசின் கொள்கை என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன. நீதிமன்றமும் அதையே சொன்னால் பாதிக்கப்படும் மக்கள் அதை எதற்காக ஒப்புக்கொள்ளவேண்டும்? போராடுவது மக்களின் பிறப்புரிமை.

அம்மையாரின் அரசியல் எதிரி திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருக்கிறார். அவர் தேடப்படும் குற்றவாளி இல்லையாம். அமைதி வழி போராட்டம் நடத்திய உதயகுமார் தேடப்படும் குற்றவாளியா?

பத்து போலீசார் சேர்ந்து கொண்டு ஒரு வயதான பெண்மணியை அடித்து வீழ்த்திவிட்டால் அது வீரமா? கீழே விழுந்த பெண் அந்தபோலீசு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதுதான் வீரம். அதுதான் இங்கே நடந்திருக்கிறது. அடி வாங்குவது அவமானமில்லை, அடிபணிவதுதான் அவமானம்.

யார் தேடப்படும் குற்றவாளி? பிரேம்குமார் என்ற போலீசு அதிகாரி எஸ்.பி பதவியில் இருக்கும்போதே இரண்டு ஆண்டு காலம் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவர் மீது பிடி வாரண்டு இருந்தது. இன்னும் எத்தனை உயர் போலீசு அதிகாரிகளின் உதாரணம் வேண்டும்?

உதயகுமார் மீது இருப்பது வெறும் முதல் தகவல் அறிக்கை. அது பல நூறு வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு மக்கள் போராட்டத்தை தேசத்துரோகம் என்று வழக்கு போட்டால் அது தேசத்துரோகம் ஆகிவிடுமா? இது நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினை அல்ல, மக்கள் மன்றத்தில், மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. இது இடிந்தகரைக்கு மட்டுமான போராட்டமல்ல. இந்தியா முழுவதும் அணி உலைகளை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம். நாடு முழுவதும் பரவ வேண்டிய போராட்டம். போராட்டத்தை பரவ வைப்போம்.”

நன்றி  :  'வினவு'

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.