பதிவுகள்

முஸ்லீம்களின் சமகால நிலைகுறித்து ஆராயும், இக் கட்டுரைபேசும் கருத்துக்களின் செறிவு கருதி,

கட்டுரையாளர் இக்பால் செல்வன் அவர்களது அனுமதியுடனும், அவருக்கான நன்றிகளுடனும், இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கின்றோம். இக்கட்டுரை தொடர்பான ஆரோக்கியமான கருத்துப் பகிர்வினை மட்டும், கட்டுரையாளரும், நாமும் வரவேற்கிறோம். பகிரப்படும் கருத்துக்களில் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள்,  காணப்படின் மட்டுறுத்தப்படும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டுகின்றோம். - 4Tamilmedia Team

மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?

நாம் எப்போதும் சொல்லி வரும் ஒரே விடயம் என்னவெனில், எந்தவொரு மனித சமூகப் பிரிவுகளிலும் பலவிதமான உட்குழுக்கள் இருக்கவே செய்யும். ஒரு உட்குழு ஏனைய குழுக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணவே முடியாது என்பது தான். இன்றைய உலகில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் மதவாதமும் ஒன்று என்பதை நாம் மறுக்கவே முடியாது. மதவாதங்கள் பழமைவாதங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், அதிகாரங்களைக் கைப்பற்றவுமே அதிகம் விரும்புகின்றன. மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வரும் முக்கியச் சமயங்கள் கிறித்தவம், இஸ்லாம், இந்து, பௌத்தம் என்பனவாகும். அத்தோடு சிறிய ஆனால் முக்கியம் வாய்ந்த சமயங்களாக யூதம், சீக்கியம் ஆகின விளங்குகின்றது.

உலக மதாவாதங்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகைப் பிரச்சனைகளை உண்டுப் பண்ணி வருகின்றன எனலாம். முக்கியமாக இந்து சமயத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அதன் முக்கியப் பிரச்சனையே சமத்துவமின்மை ஆகும். சாதியம், வர்க்கம் என்ற அடிப்படையிலான எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. அதே போலக் கிறித்தவ மதம் என்பது அதீத செல்வங்களைச் சேர்ப்பதிலும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதிலும் முனைப்புக் காட்டுகின்றது.

இதே வகையில் இஸ்லாமிய மதம் காட்டும் அச்சுறுத்துலோ வேறு வகையிலானவை. இஸ்லாமிய மதத்தின் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அதிகாரங்களை உலக முழுவதும் நிறுவுவதும், மத்திய கிழக்கின் பழமைவாத வாழ்க்கை முறைகளை உலக மக்களிடம் திணிப்பதுமே ஆகும். பனிப்போர் காலங்களுக்குப் பின்னால் ஏற்பட்ட கணனி யுகத்தில் இஸ்லாமியா தீவிரவாதம் பன்மடங்கு அதிகரித்துள்ளன எனலாம்.

மதம் சார்ந்த வன்முறைகளை அளவில் எடுத்துக் கொண்டால் இஸ்லாமிய மதங்களில் இருப்போரே அதிக வன்முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் நிகழ்த்தி வருகின்றனர் என்பதை நாம் அவதானித்துக் கொள்ளலாம். இஸ்லாமிய வன்முறை என்பது இருவகையாக நான் பார்க்கின்றேன். ஒன்று தமக்குள்ளேயே நடத்தப்படும் வன்முறைகள், மற்றொன்று பிறர் மீது நடத்தப்படும் வன்முறைகள்.

தமக்குள்ளேயே நடத்தப்படும் வன்முறைகள் என்பது சுன்னி - சியா - அல்லாவி -அல்லேவி - சூபி என ஒவ்வொரு பிரிவும் தலைமைக்குப் போட்டியிட்டுக் கொள்கின்றன. அதன் தாக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மாலி, லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் சூபி இஸ்லாமியர் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்களைக் குறிக்கலாம். அல்லது அல்லாவி பிரிவினர் ஆளும் சிரியாவை வகாபிகள் எதிர்த்துப் போராடுவதைக் கூறலாம். பகரைனில் சுன்னிக்கள் பெரும்பான்மை சியாக்களை அடக்கி வருவதைச் சொல்லலாம். சௌதியில் சியாக்களை ஆளும் சுன்னி முடியரசு அடக்கி வருவதையும் கூறலாம். ரசியாவின் தாதஸ்தானில் இரு பிரிவு முஸ்லிம்கள் அடித்துக் கொள்வது என எங்கெங்கு காணினும் பிரச்சனைகள் மட்டுமே மிச்சம் எனலாம்.

அடுத்து நாம் காணக்கூடியதாக இருப்பது இஸ்லாம் ஏனைய சமூகங்கள் மீது தொடுத்துள்ள போர்களைக் குறிக்கலாம். பாகிஸ்தானில் வஞ்சிக்கப்படும் கிறித்தவர்கள், இந்துக்கள். மலேசியாவில் இரண்டாம் தர மக்கள் ஆக்கப்பட்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், நாத்திகர்கள். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதங்களைக் கூறலாம்.

ஐரோப்பாவில் வந்தேறு இஸ்லாமிய சமூகத்துக்கும் - மதச்சார்ப்பற்ற பூர்வக் குடிகளுக்கும் நிகழும் பெரும் கருத்து வேற்றுமை, அதனால் ஏற்பட்டு வரும் வன்முறைகள் என உலகம் முழுவதும் எதாவது ஒரு சிக்கல்கள் தோற்றுவிக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன எனலாம்.

இப்படியான நிலையில் மேற்கு சமூகங்களில் பல முற்போக்கு மிதவாத இஸ்லாமியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாற்றுக் கருத்துக்களை விதைக்க முற்படுகின்றன. ஆனால் பெரும்பான்மை இஸ்லாமிய சமூகத்தைப் பிரதிபலிப்பது என்னவோ அதன் தீவிரவாத செயல்பாடுகளே ஆகும். அதற்கு முக்கியக் காரணமே, இஸ்லாமிய அடிப்படைவாதங்களைப் பல மிதவாத முஸ்லிம்கள் வெளிப்படையாகக் கண்டிப்பதே இல்லை. ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய சமூகத்தில் எழும் தீவிரவாதங்களை அவர்கள் வெறும் மரபுக்காகக் கண்டிப்பதோடு நின்றுவிடுகின்றது. இஸ்லாமின் மற்றுமொரு பிரச்சனையே அதற்கு ஒரு பெரும் மதக்குரு என்பவை எல்லாம் கிடையாது. ஒவ்வொரு இடத்தில் இருக்கும் இமாம்கள் தத்தமது விருப்பத்துக்கு ஏற்றார் போல இஸ்லாமை வளைக்கமுடியும். ஏனெனில் இஸ்லாம் என்பது வெறும் குரான் என்ற நூலை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமிய மத நிறுவனர் முகம்மதுவின் மரணத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹதீஸ்கள் எனப்படும் சொல்லாடல்கள் சுமார் 700, 000 வரையில் இருக்கின்றன. இவற்றில் எது உண்மையான ஹதீத்கள் என்பதில் ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் சர்ச்சை இருக்கின்றன. ஒரு இமாம் சொல்வார் ஜிகாத் என்பது 7-ம் நூற்றாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பார், இன்னொருவர் சொல்வார் ஜிகாத் என்பது மனித மனதைக் கட்டுப்படுத்தும் போர் என்பார், இன்னொருவர் சொல்வார் ஜிகாத் என்பது ஏனைய முஸ்லிமல்லாதோர் மீது நிகழ்த்தப்படும் போர் என்பார். இதே போல ஒவ்வொரு விடயத்துக்கும் அவர்களுக்குள் சர்ச்சை எழுகின்றன.

இஸ்லாமை கட்டுப்படுத்த இன்றைய காலத்தில் இரு பெரும் பிரிவினருக்குள் தான் போட்டியே நிகழ்கின்றன. ஒன்று மேற்கு நாடுகளைச் சார்ந்து இருக்கும் சௌதியின் தலைமையிலான சுன்னிப் வகையினர். மற்றொன்று சீனா, ரசியாவை சார்ந்திருக்கும் இரானின் தலைமையிலான சியா வகையினர். இவ்விரு நாடுகளுக்கும் மூலதனமாக இருப்பது பெற்ரோல் என்பது தான். பனிப்போர் முடிவுற்ற பின்னர்த் தொடரும் நிழல் போர் தான் இன்றைய இஸ்லாமிய போர்களுக்கு ஆணிவேர் எனலாம். இஸ்லாமின் பன்முகத்தன்மை என்பது வெகு வேகமாக அழிந்து வருகின்றது. அத்தோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாடுகளிலும் மண் சார்ந்த கலாச்சாரங்களோடு வாழ்ந்த இஸ்லாமியர்கள் உள் மதமாற்றங்களைச் சந்தித்து வருகின்றனர். அதனால் அவர்கள் தமது கலாச்சாரங்களை விட்டுக் கொடுத்து வருவதால் சொந்த மண்களிலேயே அந்நியப்படுத்தப் படுகின்றார்கள். வந்தேறு சமூகங்களில் வாழும் பல இஸ்லாமியர்களும் தமது கலாச்சாரங்களை இறுக பற்றிக் கொள்வதன் மூலம் மேற்கு சமூகங்களில் ஒன்றிணைய முடியாமல் சிக்கித் தவிக்கின்றார்கள்.

எனது பார்வையில் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதிகளாகவே இருக்கின்றனர் என்பது தான். ஆனால் அவர்கள் பெரும்பாலும் அடிப்படைவாத மதக்குருக்களின் கைப்பாவைகளாக வைக்கப்பட்டு இருப்பது தான். முக்கியமாக மதவாதிகளின் பிரசங்கங்களை உண்மை என நம்பிவிடுகின்றனர் அல்லது அவர்களை எதிர்க்கேள்விக் கேட்க தயங்குகின்றனர். ஏனெனில் பல நாடுகளில் மதக்குருக்கள் அரசுகளின் நேரடியான ஆதரவுகளைப் பெற்றுள்ளனர் என்பதோடு, இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதும் இயலாதக் காரியமாக்கப்பட்டுள்ளது. மதக்குருக்களின் அடாவடித்தனங்களை எதிர்க்கேள்வி கேட்கவே பல மிதவாத முஸ்லிம்கள் தயங்குகின்றார்கள். முழு இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்ல பூரணச் சுதந்திரமுள்ள மதச்சார்ப்பற்ற நாடுகளில் இருப்போரும் கூட அவ்வாறே இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற நிலையில் இருந்து அடாவடி மார்க்கம் என்ற விம்பத்தைப் பெற்று வருகின்றது. மௌனம் சம்மதம் என்பார்கள் - இஸ்லாமிய அடிப்படைவாதங்களை எதிர்க்கேள்விக் கேட்கத் துணியாத எந்தவொரு மிதவாத முஸ்லிம் கூட அதனை மறைமுகமாக ஆதரிக்கின்றார்களோ என்ற அச்சத்தையும், ஐயத்தையுமே பிற சமூகத்தினரிடம் எழச் செய்கின்றது. மிதவாதிகளின் மௌனங்கள் உங்களின் வருங்கால சந்ததியினரின் வாழ்வை ஆபத்துக்களின் கைகளி அடகு வைக்கப்படுவதாகவே நான் கருதுகின்றேன். எந்தவொரு சமூகமும் வாழு, வாழ விடு என்றக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அது மீறப்படும் போது எழும் முரண்கள் தேவையற்ற இழப்புக்களை மட்டுமே கொண்டு வரும்.

சிலர் இஸ்லாமில் பெருவாரியான மக்கள் இணைவதாகப் பிரச்சாரம் செய்வது எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களின் மூளைச்சலவைகள் என்பதை நாம் மறக்க முடியாது.

நன்றி: இக்பால் செல்வன் மற்றும் 'கோடங்கி ' வலைத்தளம்