பதிவுகள்

ம.அருளினியன் எழுதிய ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில் குறித்த நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று நிகழ்வுக்கு முதல் நாள் அக- புற அழுத்தங்களினால் பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்பட்டது மாதிரி, நட்சத்திர விடுதியொன்றில் வரையறுக்கப்பட்ட அளவிலான பங்கெடுப்பாளர்களுடன் நடத்தி முடிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கேரள டயரீஸூம், அதன் எழுத்தாளர் அருளினியனுமே அதிகமாக பேசப்பட்டார்கள். மறைந்த தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலுக்குப் பிறகு ஈழத்தமிழ் சூழலில் அதிக சர்ச்சைகளோடு அணுகப்பட்டு பெரும் கவனம் பெற்றது ‘கேரள டயரீஸாகத்தான்’ இருக்க முடியும். ஈழத்தமிழ் நூல் வெளியீட்டுச் சூழல் என்பது 300- 500 பிரதிகள் என்கிற அளவுக்கு சுருங்கிவிட்ட நிலையில், இரண்டாம் பதிப்பு வரை நூலொன்று நகர்வது என்பது பெரும் வெற்றியாக வெளியீட்டாளர்களும் எழுத்தாளர்களும் கொள்கிறார்கள். ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலுக்குப் பிறகு, அந்த இடத்தை ‘கேரள டயரீஸூம்’ அடையும் என்பதை கடந்த நாட்களின் சர்ச்சைகள் உணர்த்திச் செல்கின்றன.

கேரள டயரீஸ் இவ்வளவு கவனம் பெறுவதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமானவை. முதலாவது, அந்த நூலின் எழுத்தாளர் அருளினியன், 2012ஆம் ஆண்டின் இறுதியில் விகடனில் இருந்த போது, முன்னாள் பெண் போராளியொருவரை பேட்டி கண்டதாக தெரிவிக்கப்பட்டு வெளியான ‘நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி!!’ என்கிற பேட்டி.

இரண்டவாது, கேரள டயரீஸ், யாழ்ப்பாணத்தின் சாதிய நிலையின் சில கட்டங்களை பேசுவதாக உணரப்பட்டமை. குறித்த நூல் வெளிவருவதற்கு முன்னரேயே அதன் உள்ளடங்கங்கள் எழுத்தாளரினால் பேஸ்புக்கில் தொடர்ச்சியாகப் பகிரப்பட்டு வந்திருந்தன. அதில், யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்புக்களிலுள்ள ஏற்றத்தாழ்வுகள், கடந்தகால அடக்குமுறை கட்டங்கள் மற்றும் ஆறுமுகநாவலர் குறித்த சில விமர்சனங்கள் என்பன சில தரப்புக்களினால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில், எழுந்த சர்சைகள்.

‘நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி!!’ என்கிற பேட்டி வெளியாகியதும் அருளினியனுக்கும், விகடனுக்கும் எதிராக ஈழத்தமிழ் சூழலில் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. எந்தவித ஊடக அறமும் இன்றி பேட்டியை வடிவமைத்த விகடன், அந்தப் பேட்டியில் சேர்த்த ஓவியங்கள் கொடூரமானவை. அதுபோல, பேட்டியை எடுத்தவர் என்கிற ரீதியில் அருளினியனிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அன்றைக்கு பதிலளிக்கவில்லை. பேஸ்புக்கில் அவரோடு அந்தக் காலத்தில் நட்பாக இருந்த இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரையும், அந்தப் பேட்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக தடை செய்துவிட்டுச் சென்றார்.

ஆனால், ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவசர அவசரமாக அருளினியன், குறித்த பேட்டி தொடர்பில் விளக்கமளிக்க முன்வந்தார். விளக்கத்தின் போது, குறித்த பேட்டி தன்னுடைய மாணவ ஊடகவியல் தருணத்தில், விகடன் குழுமத்தின் வேண்டுகோளுக்கு அமைய எடுக்கப்பட்டதாகவும், தான் பேட்டியெடுத்த பெண், உண்மையில் முன்னாள் போராளியா என்பது கூட தெரியாது என்றார்.

குறித்த பேட்டி தொடர்பில், ஊடக தார்மீகம் மற்றும் அடிப்படை அறம் சார்ந்து அருளினியன் இயங்கியிருக்கின்றாரா என்றால், இல்லை என்பதுதான் அதிகமானவர்களின் பதிலாக இருக்கும். ஒரு பேட்டி வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு, வெளி அழுத்தங்களின் பேரில்தான் அவர் விளக்கமளிக்க முன்வந்திருக்கின்றார். உண்மையிலேயே அதன் தாற்பரியம் உணர்ந்து அவர் இப்போது விளக்கமளித்திருக்கின்றார் என்று கொள்ள வேண்டியதில்லை. அப்படி அவர் உணர்ந்திருந்தால், விகடனில் இருந்து விலகியதுமே, அவர் அந்தப் பேட்டி தொடர்பில் விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவே இல்லை. அது தொடர்பில் அவர் எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எது எவ்வாறாயினும், அவர் இறுதியில் ஒரு வகையில் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றார். ஆகவே, அந்த இடத்திலிருந்து விரும்பியோ விரும்பாமலோ நகர வேண்டியது அவசியமானது.

இன்னொரு பக்கம், ‘கேளர டயரீஸ்’ நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழை, மாற்றி வடிவமைத்து, ‘நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி!!’ என்கிற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா என்பது மாதிரியான தோரணையோடு சில அரைவேக்காடுகள் பேஸ்புக்கில் செய்த நாசகாரமான வேலையை கடந்த நாட்களில் கண்டோம். உண்மையிலேயே பலரும் அதனை நம்பிக்கொண்டு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கம்பு சுத்திக் கொண்டிருந்தார்கள். அறச்சீற்றம் அடைந்தார்கள். ஒருகட்டத்துக்கு மேல், உண்மையிலேயே, வெளியிடப்படும் நூல் எது என்கிற குழப்பத்தை வெற்றிகரமா உருவாக்கி முடித்தார்கள். இது, ஈழத்தமிழ்ச் சூழல் அடிப்படை அறங்களிலிருந்து குறுகிய நோக்கங்களுக்காக எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி விலகிச் செல்கின்றதோ என்கிற சந்தேகத்தை உருவாக்கிவிட்டுச் சென்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அது தொடர்பிலான கருத்துக்களை கேரள டயரீஸ் முன்வைக்கின்றது என்பதற்காக எதிர்த்தவர்கள், இறுதியில் அம்பலமாகிய சம்பவமும் கடந்த நாட்களில் அரங்கேறியது.

தமிழ்த் தேசியம் என்கிற பெரும் அடையாளத்துக்குள் தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்திருக்கின்றார்கள். அதுதான், தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை 60 ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், பெரும் அடையாளத்துக்கான ஒருங்கிணைவு என்பது, அக முரண்பாடுகளைப் பற்றி உரையாடல்களை மறுத்துரைப்பதற்கான வழியாக கருதப்பட முடியாதது. எந்தவொரு தருணத்திலும் அக முரண்பாடுகளைக் கழையாது கட்டப்படும் பெரும் அடையாளங்கள் காலங்கள் கடந்து நிலைத்து நிற்காது. ஆக, சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட அக முரண்பாடுகள் பற்றிய உரையாடல்கள் மேலெழும் போதெல்லாமல் தமிழ்த் தேசியத்துக்கு அந்த உரையாடல்கள் முரணானவை, அல்லது தமிழ்த் தேசியத்தை சிதைத்துவிடும் என்கிற கருத்துக்களை முன்வைப்பது உண்மையில் போலியானது. அது, ஏற்றத்தாழ்வுகள் பற்றிய உரையாடல்களை மறுதலிப்பதற்கான கட்டங்களாகவே உணரப்பட வேண்டியவை. இப்போதும், குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் பின்னராக கடந்த எட்டு ஆண்டுகளிலும் அவ்வாறானதொரு நிலையை தக்க வைக்க வேண்டும் என்கிற நிலையில் பலரும் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கில் இன்னமும் சாதியப் பாகுபாடுகளுடான கோயில்கள் இருக்கின்றன. தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவர்களின் நுளைவினைத் தடுக்கும் கோயில்கள் உண்டு. குறிப்பாக, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் எத்தனை வழக்குகள் சாதிய ரீதியில் கோயில் பிரச்சினைகள் சார்ந்தது என்று தேடிப்பார்த்துக் கொள்ளுங்கள். ஏன், சாதிய பாகுபாடுகள் பற்றிய அக முரண்பாடுகள் பற்றி தெளிவாகவும் அதிகமாகவே பேசப்பட வேண்டியது அவசியமானது என்பது எல்லோருக்கும் புரியும்.

எப்போதும், மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மனிதனின் ஆதிகாலச் சிந்தனை, அதனை தமிழ்ச் சூழல் முற்றுமுழுதாக விட்டுவிட்டு, சக மனிதனை அணுக ஆரம்பித்துவிட்டது என்று மேலோட்டமாக சொல்லிக் கொண்டிருப்பது, கசடுகளை கொண்டு சுமப்பதற்கு ஒப்பானது. ஆயுதப் போராட்டக் காலத்தில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்த சாதியப்பாகுபாடுகள் கடந்த எட்டு ஆண்டுகளில் அடைந்திருக்கின்ற வீரியம் உண்மையில் அபாயகரமானது. ஆக, அதனைப் பேசவேண்டிய தேவை, விரும்பியோ விரும்பாமலோ இங்கு அனைவருக்கும் உண்டு. அதன் சில கட்டங்களைப் பேசுகின்றது என்பதற்காக கேரள டயரீஸை எதிர்ப்பது என்பது சமூகத்தின் பெரும் தோல்வியாக கருதப்பட வேண்டியது.

ஈழத்தமிழ் சூழல் அரசியல் ரீதியாக அதிக தருணங்களில் சகிப்புத்தன்மையின் அதியுச்ச கட்டங்களை அடைந்து நிற்கின்றது. அல்லது, அதற்குப் பழகிவிட்டது. ஆனால், இன்னொருபுறம் கருத்தியலை அல்லது உரையாடல் வெளியை மறுதலிப்பதற்கான ஜனநாயக விரோதக்கட்டங்களை கையிலெடுப்பது தொடர்பில் எந்தவித யோசனையுமின்றி முன்நிற்கின்றது. கருத்தியலை எதிர்கொள்வதிலுள்ள மனச்சிக்கல்களின் போக்கில், “அடித்து உடைக்க வேண்டும். போட்டுத்தள்ள வேண்டும்” என்கிற தோரணையிலான உரையாடல்களை வளர்ப்பதில் சில தரப்புக்கள் முன்நிற்கின்றன. அது, எந்தவொரு உரையாடல் வெளியையும் நியாயபூர்வமாக அனுமதிக்க மறுக்கின்றது. அதனால், அக- புற முரண்பாடுகள் பற்றிய உரையாடல்களையே அடியோடு மறுதலிக்கின்றது. உண்மையில் அவ்வாறான நிலைமை, தமிழ்த் தேசிய இனத்தின் பெரும் தோல்வியாகவே இறுதியில் முடியும்.

கேரள டயரீஸூக்கான வெளியீட்டினை தடுத்து நிறுத்த முனைந்தவர்களும் அப்படியான மனநிலைக்குச் சொந்தக்காரர்களே. உண்மையான சமூகமொன்றில் வளர்ச்சி, எதையும் எதிர்கொண்டு வெற்றிகொள்வதில் தங்கியிருக்க வேண்டும். அதுதான், நிலையான- உறுதியாக வெற்றிகளைத் தரும். அப்படித்தான், கேரள டயரீஸ் என்கிற நூலும் அணுக்கப்பட வேண்டும். எதிர்வினையாற்றப்பட வேண்டும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (செப்டம்பர் 06, 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)