பதிவுகள்

ஈழத் தமிழ் மக்களுக்கு, இதுவரையில் வழங்கப்படா  அரசியல் உரிமைகள் குறித்து, தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், பல்வேறு கருத்து நிலைகள் உள்ள நிலையில்,

அம் மண்ணில் வாழும் இளைய தலைமுறையின் சிந்தனையும் கருத்தும் எவ்வாறாக இருக்கிறது,இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுவதாக அமைகிறது தினக்குரல் பத்திரிகையில் புருஜோத்தமன் தங்கமயில் எழுதத் தொடங்கியுள்ள அரசில் தொடர். இத் தொடர்கட்டுரையை அவரது மேலான அனுமதியுடனும், தினக்குரல் பத்திரைக்கான நன்றிகளுடனும், 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இங்கே மீள்பதிவு செய்கின்றோம்.-4Tamilmedia Team

‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா…?’ கவிஞர் கண்ணதாசனின் மிகவும் பிரசித்தமான பாடல் இது. தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்படுகின்ற பாடலும் கூட. பரமசிவனின் கழுத்திலிருக்கிற பாம்பாக அரசியல்வாதிகளும், நொய்ந்து நொடிந்து போய் வாய்ப்புக்காக காத்திருக்கிற கருடனாக மக்களும் இருக்கின்ற காலம் இது. ஆனால், கருத்தியலின்; அடிப்படையில் அது உண்மையாக இருக்க முடியாது. இங்கு பரமசிவனாகவே மக்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், அதை மக்கள் தெரிந்து கொண்டுவிட்டால் பிரச்சினையென்று கருதும் ‘பாம்புகள்’ எம்மை வழியற்ற ‘கருடனாக’ சித்தரித்து நம்பவைத்து விடுகின்றன. திரும்பத்திரும்ப சொல்கிற போது பொய்களும் கூட உண்மையாக தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. அதுவும், அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் சொல்கிற பொய்க்கு உண்மையாகும் வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. இதுதான் இங்கு அதிகம் சாத்தியப்படுத்தப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி கருத்தியல் - கள ரீதியில் இருக்கிற உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மக்களாகிய எங்களுக்குண்டு.

சுயநிர்ணயத்துக்கான எமது நீண்டகால ஆயுதப் போராட்டம் பல வல்லரசுக்கரங்களினால் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து முடக்கப்பட்டுவிட்டது. திரும்பவும் அப்படியொரு போராட்டம் என்பது யதார்த்தத்தில் சாத்தியமே இல்லாதது. அப்படி சாத்தியப்பட்டாலும், இறுதியில் இன்னும் இலட்சக்கணக்கில் உயிர்களைக் பறிகொடுத்து தோல்வியில் முடிந்து போகலாம். இதுதான் வெளிப்படையான உண்மை. ‘நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்’ என்கிற மனநிலைக்குள் எமது போராட்டத்தின் பின்னாலுள்ள தீரமும் சேர்ந்தே இருக்கிறது. நாம் ஒரு அரசினால் மட்டுமே தோற்கடிக்கப்படவில்லை. உலகின் வல்லரசுகள் பல இணைந்துதான் எம்மை தோற்கடித்தன. ஆக, எங்களுடைய போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதற்கான வலிமை மிகப்பெரியது. அந்த இறுமாப்போடு மீண்டும் போராடவேண்டியிருக்கிறது. இனி ஆரம்பிக்கவேண்டிய போராட்டம் நேரடியாக ஒரு அரசுடனோ, அரசாங்கத்துடனோ அல்லது இனக்குழுமம் ஒன்றுடனோ அல்ல. எம்மை கையாளுகிற அரசியல்வாதிகளுடன்.

எம்மை தொடர்ந்தும் தோற்கடித்துக்கொண்டிருக்கிறவர்களாக அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை மக்கள் வெற்றிகொள்கிற சந்தர்ப்பமே இப்போது அவசியமானது. அதுதான் உடனடியான தேவையாகவும் இருக்கிறது. நாங்களே வாரி வழங்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எம்மை ஏதுமற்றவர்கள் போல கையாளுகிற அரசியல்வாதிகளுக்கு இதுதான் முதலாவது அடியாக இருக்கும். அந்த அடி அரசியல்வாதிகளை மக்களின் கையாளுகைக்குள் கொண்டுவரும். அப்போது மக்களின் சேவகர்கள் என்கிற வார்த்தையின் உண்மையை அரசியல்வாதிகள் உணர்வார்கள்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுக்கு வந்து சில மாதங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆசியுடன்(?) ஆட்சியும் அமைத்துவிட்டது. காலம் கடந்துவிட்டாலும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலங்கள் பற்றி பேசவேண்டிய காரணம் இன்னும் அப்படியே இருக்கிறது. எம்மை வழிநடத்துவதாக(?) சொல்லிக்கொள்கிற தமிழர்களின் அதிக ஆதரவைப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மற்றும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையில் கிழக்கில் அரசியல் செய்கிற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன நடந்து கொண்ட முறை பற்றி.

தேர்தல் காலங்கள் என்பது அடிப்படையில் அதிகாரத்தை பெறுவது என்ற கோணத்திலேயே அணுகப்படுகின்றன. அது எந்தவகையில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணம்தான் அதிக தருணங்களில் வெற்றிகொள்ள முடியும் என்ற நிலையில் இருக்கிறவர்களையும் தோற்கடித்துவிடுகின்றது. தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கும் இதுவேதான் அடிப்படையில் காரணமாகிப்போனது. ‘தாம்’ என்ன செய்தாலும் தமிழ் மக்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்பும் எண்ணமும், முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றிய எதிர்பார்ப்புகளுடன் கலைந்து போனது.

கிழக்கு மாகாண சபையில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு ஏதோவொரு கட்சியின் ஆதரவு வேண்டுமென்பது வெளிப்படையான உண்மை. ஆனால், அதைத்தாண்டி மக்களிடம் அதிக நெருக்கமாகச் சென்று அதிகளவான வாக்குகளைப் பெற வேண்டிய தேவையே நிறைய இருந்தது. ஆனால், அதை தமிழரசுக் கட்சி செய்யவில்லை. தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள்(?) பிரசாரக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏன் வேட்பாளர்களே கூட குறிப்பிட்டளவான பிரசார திட்டங்களுடன் நிறுத்திக்கொண்டு விட்டனர். 500- 1000 வாக்குகள் உள்ள கிராமங்கள் பல எந்தவித தேர்தல் கூட்டங்களையும் மட்டக்களப்பில் எதிர்கொள்ளவில்லை. வேட்பாளர்கள் கூட செல்லாத கிராமங்கள் இருந்தன. சில துண்டுப்பிரசுரங்கள் மட்டுமே அங்கு சென்று சேர்ந்திருந்தன. இப்படியான கிராமங்களை கணக்கிலேடுக்காமல் தேர்தலை எதிர்கொண்ட தமிழரசுக் கட்சியின் பொறுப்புணர்வைப்பற்றி என்ன சொல்வது…?

தேர்தல்கள் முடிவுகள் வந்த பின்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தொலைபேசியினூடு அழைத்து சந்திப்புக்களுக்காக காத்திருந்து அசிங்கப்பட்டு எதிர்க்கட்சியில் அமர்வதுடன் முடிந்து போனது தமிழரசுக் கட்சியின் அக்கறையற்ற அரசியல். மேலதிகமான 4000 வாக்குகளைப் பெற்றிருந்தால் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை தமிழரசுக் கட்சி இன்னொரு கட்சியின் ஆதரவுடன் பலமாக அமைத்திருக்கும். ஆனால் அது சாத்தியமாகாமல் போனது.

‘தேர்தலில் குளறுபடி- வாக்கு எண்ணும் இடங்களில் குழப்பங்கள் நடந்தது’ என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாமே தேர்தலுக்குப் பின்னரும் கூறப்படுவது. அப்படி நடக்கவில்லை என்றும் கூற முடியாது. ஆனால், மக்களை தேர்தல்களுக்குள் இழுத்து வந்து அவர்களின் உரிமைக்குப் பின்னாலுள்ள அதிகாரத்தை புரியா வைக்க மறுத்தது தமிழரசுக் கட்சியின் மிகப்பெரிய தவறு. இந்த அசண்டையீனத்தை மன்னிக்க முடியாது.

அடுத்தவர் முன்னாள் போராளி, முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டமொன்றில் “நான் வெற்றி பெற்று முதலமைச்சரானாலும் உங்களுக்கு எந்தவித அபிவிருத்தியையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நீங்கள் தமிழரசுக் கட்சிக்குத்தானே (தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத்தானே) வாக்களிப்பீர்கள். அப்படியிருக்கிற போது நான் ஏன் உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்..?” என்ற தொனியில் பேசினார்.

இதுபோக, அவர் இறுதிவரை செய்த பிரச்சாரங்களில் ‘மக்களின் பிரச்சினைகள், அபிவிருத்தித் தேவைகள், உரிமைக்குப் பின்னாலுள்ள அவசியம்’ பற்றி பேசுவதற்குப் பதிலாக ‘யாழ்ப்பாண மேலாதிக்க அரசியல் செய்கின்றவர்கள் துரோகிகள்’ என்ற தோரணையில் தமிழரசுக் கட்சியை நோக்கி ஏசுவதையே பிரதான பணியாகச் செய்தார். தன்னுடைய காலத்தில் தான் மேற்கொண்ட(?) அபிவிருத்தி திட்டங்கள் பற்றியே அவருக்கு மக்களிடம் சொல்ல நேரம் கிடைக்கவில்லை. கிடைத்த நேரத்தைப்பூராவும் தமிழரசுக்கட்சி திட்டுவதற்கும்- யாழ் மேலதிக்கத்தை ஊதி வளர்க்கும் ஊடகங்களை(?) (அப்படித்தான் பிள்ளையான் சொல்லிக்கொண்டார்) விமர்சிப்பதற்குமே பயன்படுத்திக் கொண்டார்.

மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டாலும் பிள்ளையானைத் தவிர வேறொருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து வெற்றி பெறாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். இறுதியில் பிள்ளையானும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆயிரத்தெட்டு ஆலோசகர்களின் ஒருவரானதுடன் அவரதும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் அரசியல் தற்போதைக்கு முடிந்துபோனது.

நிறையக் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்கள் மட்டக்களப்பில் குறிப்பிட்டளவில் இருந்தனர். தேர்தல் காலங்களிலும், அதற்குப் பின்னரும் அப்படியான நிறைய இளைஞர்களை சந்திக்க முடிந்தது. ஆனாலும், அவர்களை வெற்றி கொள்ள முடியாமல் போனதும் கூட பிள்ளையானின் முதிர்ச்சியற்ற அரசியலில் விளைவே. எதிர்காலத்தில் பிள்ளையான் காணாமல் போய்விடுவார் என்றே அந்த இளைஞர்களும் நம்புகிறார்கள்.

ஆனாலும், ‘பிள்ளையான்’ தனக்குத் தெரியாமலேயே கிழக்கு மாகாண தேர்தலில் வகித்த பங்கு:

மட்டக்களப்பில் ஐ.ம.சு.கூ பெற்ற 64190 வாக்குகளில்; 22338 வாக்குகளை பிள்ளையான் பெற்றிருந்தார். (என்று வைத்துக் கொண்டாலும்,) அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 4 ஆசனங்களை மேலதிகமாக பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்திருக்கிறார்.

பிள்ளையானின் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் நிச்சயம் ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கும்; இன்னும் அதிகளவான வாக்குகளுடன். ஏனெனில், மட்டக்களப்பில் 23000 வாக்குகள் அளவில் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப் பெற்றது.

பிள்ளையான் பெற்ற 22000 அளவிலான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இழந்திருந்தால் நிச்சயமாக 2 ஆசனங்கள் அளவில் இழந்திருக்கும். அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையிலும் 20000க்கும் அதிகமான வாக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். அதனால், போனஸ் ஆசனங்களை ஐ.ம.சு.கூட்டமைப்பு பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயிருக்கும். குறித்த ஆசனங்களை இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) பெற்றுக் கொண்டிருக்கும்.

பிள்ளையானின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான இணக்கம்; மட்டக்களப்பில் ஐ.ம.சு.கூ சார்பில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை அதிகமாக பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதுவும், மட்டக்களப்பில் ஐ.ம.சு.கூ சார்பில் போட்டியிட்ட அமீர் அலி உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களின் விருப்பு இலக்கங்கள் முறையே 1, 2, 3. அதிக பிரசார கூட்டங்களில் குறித்த விருப்பு இலக்கங்கள் மாத்திரமே மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகம் முன்னிலைப்படுத்தப்பட்டது.

அத்தோடு, ஐ.ம.சு.கூ போட்டியிட்ட தமிழ் உறுப்பினர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மை மற்றும் குழிபறிப்புக்களும் பிள்ளையான் கட்சிக்கு அல்லது விநாயகமூர்த்தி முரளிதரன் தரப்பில் ஒரு உறுப்பினரை பெற்றுக்கொடுக்க தவறியிருக்கிறது. அப்படியான ஒற்றுமையின்மைகள் இல்லாதபட்சத்தில் ஐ.ம.சு.கூ சார்பில் இன்னொரு தமிழ் உறுப்பினரும் தேர்த்தெடுக்கப்பட்டிருக்க வாய்ப்புக்களும் இருந்தது.

இறுதியாக, பிள்ளையான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட விதத்தில்,

1. பிள்ளையானின் தனிப்பட்ட அரசியலில் பெரிய சறுக்கலையும்,

2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 4 ஆசனங்கள் அளவில் இழப்பையும்,

3. அரசாங்கத்துக்கு 20000 வாக்குகள் உள்ளிட்ட மேலதிக 4 ஆசனங்களையும்,

4. அரச தரப்பில் ஒரு முஸ்லிம் உறுப்பினரின் அதிகரிப்பு என்கிற அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதுவே, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க முடிந்தமைக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

இனி, வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற மிகப்பெரிய சதிராட்டமொன்றுக்கு 2013 தயாராகிறது. இது அதிகாரத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தமிழரசுக் கட்சிக்குமான மிகப்பெரிய போர். கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆயுதப்போர் போன்றது. இந்தப் போரை வெற்றி கொள்வதற்கும் மஹிந்த அரசாங்கம் என்ன முயற்சிகளை வேண்டுமானாலும் எடுக்கும். அதை எதிர்கொள்கிற திடத்தைப்பெற தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) மக்களிடம் நெருக்கமாகச் செல்ல வேண்டும். அது, மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும். பொய் பித்தலாட்டங்களைக் கடந்த நேர்மையான அரசியலாக இருக்க வேண்டும்.

எமது அரசியல் உரிமை பாகம் :  2

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.